மீண்டுமொரு சர்வதேசப் போர் எழக்கூடுமோ என்ற அச்சம் உலகின்மீது கவிழ்ந்துள்ளது. ஈரான் நாட்டின் முக்கிய படைத்தளபதியான மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி கொலைசெய்யப்பட்டிருப்பது சர்வ தேச அளவில் நிலைகுலைவை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருளாதாரத்திலும் படைபலத்திலும் வல்லமைமிக்க நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் தங்கள் நாட்டில் இக்கட்டோ, எதிர்ப்போ மிகும்போது, தேசிய உணர்ச்சியைத் தூண்டி வலிமைகுறைந்த நாடுகளைத் தாக்கி தங்களது புகழையும் ஆட்சியை யும் தக்கவைத்துக்கொள்வது ஒரு வழக்கமாகவே மாறிவருகிறது. அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பதவிவிலகவேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) பிரேரணை நிறைவேற்றியுள்ள நிலை யில், விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான நாள் நெருங்கிவருவதால் அமெரிக்க மக்களின் கவனத்தை ஈர்க்கவே ட்ரம்ப், ஈரானில் பட்டாசுகளைப் பறக்கவிட்டிருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

iraq

புத்தாண்டின் தொடக்கமே ஈரானுக்கு அதிர்ச்சியுடன் தொடங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந் துள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரான் ஆதரவுப் போராளிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். அதற்குப் பதிலடியாக, ட்ரம்பின் உத்தரவின் பேரில் பாக்தாத் விமான நிலையத்தருகே ட்ரோன்மூலம் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் மேஜர் சுலைமானியுடன், துணை ராணுவத் தளபதி அபு மஹதி உள்ளிட்ட ஆறு பேர் இறந்துள்ளனர்.

Advertisment

ஐ.நா. சபைக்கான ஈரான் தூதர் மஜித் ரவான்சி, ""இந்நடவடிக்கை ஈராக் மீது அமெரிக்கா தொடுத் துள்ள போர்'' என கருத்துத் தெரிவித்திருக்கிறார். தகுந்த பதிலடி தரப்படுமென ஈரான் அதிபர் அயத் துல்லா அலி காமெனி மற்றும் இதர ராணுவத் தள பதிகள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

பாக்தாத்திலிருந்து சுலைமானின் உடல் டெஹ்ரான் கொண்டுவரப்பட்டு உரிய இறுதிமரியாதைகள் செலுத்தப்பட்டன. ஈராக்கின் இடைக்கால பிரதமர், முன்னாள் பிரதமர்களோடு ஈரான் அதிபர் அயத்துல்லா அலி காமேனியும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். ஈரான் அதிபரைப் போலவே, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த சுலைமானிக்கு கிட்டத்தட்ட ஈரானே ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்தவந்திருந்தது. கடல்போல் ஒன்று திரண்டிருந்த கூட்ட நெரிசலில் சிக்கிமட்டும் 50 பேர் பலியாகினர்.

rr

Advertisment

சுலைமானின் இறுதிச் சடங்குக்குப் பின், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரும் என எதிர்பார்த்த ட்ரம்ப், "அமெரிக்கர் களையோ, அமெரிக்க சொத்துக்களையோ ஈரான் தாக்கினால் ஈரானின் 52 இலக்குகளைத் தாக்குவோம்' என எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் ஈரான் மக்களின் உணர்ச்சிகளுக்கும் கோபத்துக்கும் பதிலளிக்கும்விதமாக, ஜனவரி 8 ஆம் தேதி அதிகாலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள அமெரிக்க படைத்தளங் களான அன் அல் ஆசாத், இர்பில் கேம்ப் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்காவின் 80 படைவீரர்கள் உயிரிழந்த தாகவும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க, ஈரான் உறவு வெகுகாலமாகவே சுமுகமற்ற முறையில்தான் இருந்துவருகிறது. எண்ணெய்வளமிக்க மத்தியகிழக்கு நாடுகளின் உச்சிக்குடுமி தன்கையில்தான் இருக்கவேண்டுமென எண்ணும் அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளை பெருமளவுக்கு தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது. இழுத்த இழுப்புக்கு வராத ஈராக் மீது, பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம்சாட்டி, 2003-ல் சதாம் உசேனை போர்நடவடிக்கை மூலம் ஒழித்துக்கட்டியது. இத்தனைக்கு நடுவிலும் ஈரான் அமெரிக்காவுக்கு கட்டுப்படாமலே இருந்துவரு கிறது.

1970-க்கு பிந்தைய காலகட்டத்தில், ஈரான் அதிபர் ஷாவை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, ஈரானில் தங்கள் மேலாதிக்கத்தைக் கொண்டுவர முயன்ற அமெரிக்காவுக்கு, காமேனி தலைமையில் திரண்ட மக்கள் மரண அடி கொடுத்தனர். 1979-ல் அமெரிக்க தூதரகத்தினைச் சேர்ந்த 52 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்த புரட்சிக் குழு 444 நாட்களுக்கு அவர்களை விடுவிக்க வில்லை. இது அன் றைய அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டரின் தேர்தல் தோல்வியில் முடிவடைந்தது.

அணு ஆயுத பலமிக்க நாடாக ஈரான் வந்துவிடக்கூடாதென அமெரிக்கா தீவிர முனைப்புக் காட்டிவருகிறது. அதற்காக ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. ஒருகட்டத்தில் ஐ.நா.வின் அணு ஆயுத தடை ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வந்ததுடன் ஒரு உடன்படிக்கையும் செய்து கொண்டது. ஆனால் ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் அந்த உடன்படிக்கையை மீறியதுடன், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஆரம்பித்தார். கடைசியில் அது மேஜர் சுலைமானி கொலையில் மட்டும் வந்துநிற்காமல், "அணு ஆயு தம் தயாரிக்கமாட்டோம் என்ற ஒப்பந்தத்தை தேவைப்பட்டால் மீறுவோம்' என ஈரான் அதிபர் அயதுல்லா காமெனி அறிவிப்பதுவரை நீண்டிருக்கிறது.

eraq

ஈரானின் ராணுவம் 5,23,000 வீரர்களை உடையது. அணு ஆயுதங்களை தயாரிக்கும் வல்லமையுள்ளதாக ஈரானை, உலக நாடுகள் மதிப் பிடுகின்றன. ஆளில்லா ராணுவ விமானங்களை கட்டும் திறனும் அதனிடம் உள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இந்த ஆளில்லா விமானங்களை ஈரான் பயன் படுத்தியது. ஒட்டுமொத்த ராணுவ பலத்தில், அமெரிக்கா பிரம்மாண்டமானது என்றபோதும், ஈராக்கிலுள்ள அமெரிக்கத் துருப்புகளைத் தாக்கினால் அமெரிக்காவுக்குச் சிக்கல்தான். நடுத்தர, நெடுந்தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் ஈரானிடம் கணிசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நடக்கும் போருக்கான சாத்தியக்கூறு பற்றி, இந்திய ராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது, ""போர் நடப்பது சந்தேகம்தான்'' என்கின்றனர். ஏன்?

""அமெரிக்கா ஒரு கிரிமினல் நாடு. காங்கிரஸ் ஆட்சிக்காலத்துல ஒருசமயம் இந்தியாவில் நிறைய குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் மரணமடைவது குறித்து வருத்தம் தெரிவித்த அமெரிக்கா, இந்தியாவுக்கு கோதுமை மாவை இலவசமாகத் தர முன்வந்தது. கோதுமை மாவு கப்பல்களை கொச்சின் துறைமுகத்துலதான் கொண்டுவந்து இறக்குவோம்னு பிடிவாதம் காட்டியது. சரி, நமக்கு கோதுமை மாவு கிடைத் தால் சரிதானென இந்திய அரசும் அனுமதித்தது.

திரும்பிப்போகும்போது, வெறும் கப்பலாகப் போகமுடியாது. பேலன்ஸ் கிடைக்காது. அதனால் கடற்கரையில் கிடைக்கும் மணலை அள்ளிக் கொள்கிறோம் என கூறியது. இந்தியாவும் ஒப்புதல் தர, கொச்சின் பக்கம் ஆலப்புழா கடற்கரையி லிருந்து தோரியம் தயாரிக்க உதவும் கருமணலை கப்பலில் எடுத்துச்சென்றது. அந்த மணல்தான் அணு ஆயுதம் தயாரிக்க உதவும் மூலப்பொருள் என்பதை இந்திய அரசு பின்புதான் உணர்ந்தது.

அமெரிக்காவின் ராணுவ வலிமை அசாதாரணமானது. அதனுடைய ராணுவ ஆயுதங் கள் வலிமையானவை. உலகமே முன்பு பார்த்திராத சாதனங்கள் அதனிடம் இருக்கும். உதாரணமாக சொல்லணும்னா, ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்த அமெரிக்கா, மூன்று ஹெலிகாப்டரில் கிளம்பிவந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் கண் களில் மண்தூவி இந்த மூன்று ஹெலிகாப்டர்கள் எப்படி நாட்டுக்குள் நுழைந்தன? குண்டுபோட்டு எப்படி கிளம்பிச்சென்றன?… இந்த ஆபரேஷனுக்கு அமெரிக்கா பயன்படுத்திய மூன்று ஹெலிகாப்டர்களும் சத்தமே எழுப்பாதவை. ரேடார் கண்காணிப்பை ஏமாற்றக்கூடியவை. மூன்றில் ஒரு ஹெலிகாப்டர் பழுதாகி விழாமல் போயிருந்தால், அந்தத் தாக்குதலை நடத்தியது யாரெனவே பாகிஸ்தானுக்குத் தெரியாமல் போயிருக்கும்.

தொழில்நுட்பம் மற்றும் ராணுவ பலமிக்க அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கில் தங்கியிருக்கும் தளங்கள் மூன்று சுற்று பாதுகாப்பு கொண்டவை. அமெரிக்காவின் அலர்ட் சிஸ்டத்தில் ஒன்று பேட்ரியாட் ஏவுகணை, தாக்கவரும் ஏவுகணைகளை மறித்துத்தாக்குவதில் திறன்மிகுந்தது. அமெரிக்கா வின் ராணுவத் தளங்களைத் தாக்கி 80 பேர் பலி என ஈரான் சொல்லுது. அமெரிக்கா ஜனநாயகப்பூர்வமான நாடு. அப்படி 80 வீரர்கள் செத்திருந்தா அமெரிக்காவுக்கே தெரிஞ்சிருக்கும்.

ஈராக், சிரியாவில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா போரிடுது. அந்தத் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் போவாங்க. அந்த நேரத்துல தாக்குனா எளிதா அழிச்சுடலாம்னு அமெரிக்காவுக் குச் சொன்னதே ஈரான்தான். அதன்படி செயல்பட்டு நிறைய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அமெரிக்கா அழிச்சது.

ஈரான் தளபதி அன்றைக்கு ஏன் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஏர்போர்ட்டுக்கு வரணும்? அவர் ஒரு டபுள் ஏஜெண்ட். அமெரிக்க அழைப்பின்பேரில்தான் அவர் அங்கே வர்றார். அவர் டபுள் ஏஜெண்டுங்கிற விவரம் அமெரிக்கா வுக்கு தெரியவந்ததால், திட்டமிட்டு அழைத்து அவரைக் கொன்றார்கள்'' என இந்திய ராணுவ இன்டலிஜென்டுகள் சொல்கிறார்கள்.

பத்திரிகையாளர் மாத்யு சாமுவேல், “""ஈரான் ராணுவம் அமெரிக்க ராணுவ தளத்தை ஏவுகணையால் அடிப்பதும், அமெரிக்க ராணுவ வீரர்கள் 80 பேர் சாகுறதும் நடக்க வாய்ப்பே இல்லாத கதை. அப்படி நடந்திருந்தா அமெரிக்கா இவ்வளவு நிதானமா இருக்காது கொந்தளிச்சு எழுந் திருக்கும். அதனால்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆல் இஸ் வெல்னு சொல்றார். இப்போ தைக்கு ஈரான் மக்களைத் திருப்திசெய்வதற்கான உத்திகள்தான் இந்தத் தாக்குதல்'' என்கிறார்.

பெரியண்ணன்களுக்கு அடுத்த நாட்டு மேலான தாக்குதல், பதவியில் தொடர்வதற்கான ஒரு சாக்கு. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கோ அது பேரழிவின் அழைப்பு. எல்லா பெரியண்ணன்களுக் கும் சமயங்களில் மூக்குடையும். அமெரிக்காவுக்கு வியட்நாமில் ஒருமுறையும், ஈரான் விவகாரத்தில் ஒருமுறையும் உடைந்திருக்கிறது. உருவத்தில் சிறிய எறும்பு, யானையின் காதில் புகுந்துவிட்டால் யானை கதறவேண்டியிரு க்கும் என்பதையும் நினை வில் கொள்ளவேண்டும்!

கடைசியாக, ""நிபந் தனையற்ற பேச்சுவார்த் தைக்குத் தயார்'' என அமெரிக்கா இறங்கி வந்திருக் கிறது.

-தாமோதரன் பிரகாஷ், க.சுப்பிரமணியன்