பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலை மீது, அவர் கட்சியினரே கடும் கோபத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக, கட்சியின் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள், அண்ணாமலைக்கு எதிராக வரிந்துகட்டி நிற்கிறார்கள். காரணம், பொன்.ராதாகிருஷ்ணன் பற்றி அவர் வைத்த விமர்சனம்தானாம்.
அண்மையில் கன்னியாகுமரியில் நடந்த சுவாமி விவேகானந்தரின் 161-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை, " "துணிவு' பட இயக்குநர் வினோத், அவர் எடுத்த படத்தை, அவரே பார்க்கமாட்டார்.
அவர் கையில் இருப்பதே சாதாரண செல்போன் தான். இப்படி ஓரு மனிதரை நினைக்கும் போது சந்தோஷம் ஏற்படுகிறது'' என்று இயக்குநர் வினோத்தை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை...
அடுத்து... "துணிவு', "வாரிசு' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான ஒருமணி நேரத்தில் 10 லட்சம், 15 லட்சம் பேர்னு பாக்குறாங்க.
அதேநேரத்தில் 9 முறை தேர்த−லில் போட்டியிட்ட நம் பொன்.ராதாகிருஷ்ணன், "ஆன்மீகமாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும், தொடர்ந்து பலமணி நேரம் பேசினாலும், அதை யாரும் கேட்கமாட்டேங்குறாங்க' என்றார் நக்கலாக. இதைக்கேட்டதும், மேடையில் இருந்த பொன்.ராதாகிருஷ்ணனின் முகம் இறுக்கமாக மாறியது.
அண்ணாமலையின் இந்த குதர்க்கப் பேச்சு, பொன்னாருக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மறுநாள், அதே அண்ணாமலை கலந்துகொண்ட அருமனை பொங்கல் விழாவை பொன்.ராதாகிருஷ்ணன் புறக்கணித்து தனது எதிர்ப்பைக் காட்டினார்.
நம்மிடம் மனம் திறந்த ஒரு பா.ஜ.க, நிர்வாகி "சமீப காலமாக பொன்னார் அண்ணாச்சிக் கும், அண்ணாமலைக்கும் இடையே நல்லுறவு இல்லை. சீனியரான பொன்னாரிடம் அண்ணாமலை எதையும் ஆலோசிப்பதே இல்லை. குறிப்பாக, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலரை கட்சியின் துணை அமைப்பு களின் மாநில நிர்வாகிகளாக அண்ணாமலை நியமித்திருக்கிறார். இதுபற்றி கூட அவர் கலந்துபேசவில்லை. கமலாலயம் சென்றா லும் அண்ணாச்சிக்கு அவர் மரியாதை கொடுப்பதில்லை'' என்றார்.
அண்ணாமலை ஆதரவாளர்களோ, "அண்ணாமலை, பொது வாக சினிமாவுக்கு இருக்கும் செல்வாக்கு, அரசியல் பிரச்சாரத்துக்கு இல்லைன்னுதான் சொல்ல வந்தார். ஆனால் அதை பொன்னார் தப்பாகப் புரிந்துகொண்டார். சரி, அதற்காக ஒரு மாநில தலைவர் கலந்துகொள்ளும் பொங்கல் நிகழ்ச்சியை பொன்னார் புறக்கணிக்கலாமா? அது மட்டுமா? சமீபத்தில், அண்ணாமலை நியமித்த பா.ஜ.க. மாநில மீனவர் பிரிவுச் செயலாளர் சகாயம், மாநில சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் சதீஷ்ராஜன், மாநில ஊடகப் பிரிவு செயலாளர் திருக்கடல் உதயம் ஆகியோரை, பொன்னாரின் ஆதரவாளர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ள வில்லை. எந்த ஓரு நிகழ்ச்சிக்கும் அவர்களை அழைக்காமல் புறக்கணித்துக் கொண்டே யிருக்கிறார்கள். பிறகு எப்படி பொன்னார்,
அண்ணாமலையிடம் மரியாதையை எதிர் பார்க்கிறார்?''’என்கிறார்கள் காரமாகவே. அண்ணாமலைக்கும் பொன்னாருக்கும் இடையிலான உரசல், தமிழக பா.ஜ.க.வில் பெரும் தகிப்பை ஏற்படுத்தி வருகிறது.