பா.ஜ.க.வுடனான கூட்டணி உறவை அ.தி.மு.க. துண்டித் துக்கொண்டுவிட்ட நிலை யில், அக்கட்சியுடன் கூட் டணியை புதுப்பித்துக் கொள்ள பகீரத முயற்சியில் குதித்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. இதுகுறித்து பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க.வின் தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவருமான அமித்ஷா,”பா.ஜ.க.வில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன’என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், அமித்ஷாவின் கருத்தை மறுத்துப் பேசிய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியின் மனசாட்சியுமான ஜெயக்குமார், "பா.ஜ.க.வில் கூட்டணிக் கதவுகள் திறந்து வைக்கப் பட்டிருக்கலாம். ஆனால் பா.ஜ.க.வுக்கான கதவுகள் அ.தி.மு.க.வில் எப்போதோ அடைக்கப்பட்டுவிட்டது. இனி எந்தச் சூழலிலும் அக்கட்சியுடன் கூட்டணி இல்லை'ன்னு தீர்மானம் போட்டுள்ளோம்''’என்று பதிலடி தந்திருக்கிறார் ஜெயக்குமார்.

eps

Advertisment

அ.தி.மு.க.வின் இந்த பதிலடி குறித்து தமிழக பா.ஜ.க. தலைவரிடம் கேள்வி எழுந்தபோது, ‘"பா.ஜ.க. தலைமையையேற்று எந்தக் கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம். அதற்காக எங்கள் கதவுகள் திறந்து இருக்கின்றன என்கிற அர்த்தத்தில்தான் அமித்ஷா சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க.வை அவர் சொல்லவில்லை. ஆனாலும், கடைசி நேரத்தில் கூட்டணி மாறலாம்'” என்றிருக்கிறார் அவர்.

பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே இப்படி கருத்து மோதல்கள் நடந்துகொண்டிருந்தாலும், அமித்ஷாவின் பேட்டி அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வலை விரிப்பதாகவே தமிழக அரசியலில் பரவியிருக்கிறது. ஆக, கூட்டணி விவகாரத்தில் என்ன நடக்கிறது என அ.தி.மு.க., பா.ஜ.க. மேல்மட்ட வட்டாரங் களில் விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க.வினர், "தேர்தல் அரசியலில் அதுவும் கூட்டணி விசயத்தில் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். கூட்டணி என்பதே கொடுத்து வாங்குவதுதான். என் செல்வாக்கில் நீயும், உன் செல்வாக்கில் நானும் ஜெயிக்க வேண்டும் என்கிற பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் அது. அந்த வகையில், ஏதோ சில காரணங்களுக்காக பா.ஜ.க. உறவை அ.தி.மு.க. உதறியிருக்கலாம். அதுவே நிலையானதல்ல. அதனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை புதுப் பித்துக்கொள்ள பல வழிகளில் முயற்சித்து வருகிறது எங்கள் கட்சித் தலைமை.

Advertisment

குறிப்பாக, சமீபத்தில் ஜி.கே.வாசன் மூலம் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் பொது எதிரி தி.மு.க.தான். அக்கட்சியை வீழ்த்தவேண்டுமானால் நாம் இருவரும் இணைந்து தேர்தலை சந் தித்தால்தான் சாத்தியம். பிரிந்திருப்பதால் பிரியும் வாக்குகளில் தி.மு.க. ஈஸியாக ஜெயித்துவிடும். அதாவது, தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறினால் அக்கட்சி எளிதாக ஜெயிக்க சான்ஸ் இருக்கிறது. இதனை நீங்கள் உணரவேண்டும்' என்பதை வாசன் மூலம் எடப்பாடிக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

ஆனால், "அ.தி.மு.க.வை கடுமை யாக விமர்சிப்பவரை மாநில தலைவராக பா.ஜ.க. வைத்திருப்பதும், பா.ஜ.க.வின் அதிக எதிர்பார்ப்பும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதால் சிறுபான்மையின ரின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக் காமல் இருப்பதும் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இனி கூட்டணி இல்லை என்பதை அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறோம். அதனால், மீண் டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை' என வாசனிடம் தெரிவித்துவிட்டார் எடப்பாடி.

இந்த பதிலோடு டெல்லிக்கு விரைந்த வாசன், அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி யின் முடிவை தெரிவித்திருக்கிறார். அப்போது, சில புள்ளிவிபர கணக்குகளைப் போட்டு, "இதனை மீண்டும் அவருக்கு (எடப்பாடி பழனிச்சாமி) நினைவூட்டுங்கள்' என வெளிப்படுத்தியுள்ளார் அமித்ஷா. அந்த விபரங்களை வாசன் எடப்பாடிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். அதனால், தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பிறகு கூட கூட்டணிகள் மாறியிருக்கிறது. அதற்காக, சில அஸ்திரங்களை கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வை நோக்கி அமித்ஷா வீசக்கூடும். அதாவது, "எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் முக்கியஸ்தராக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை, அங்கிருந்து வெளியேற்றி, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க என்ன மாதிரி அஸ்திரம் வீசப்பட்டதோ அதே அஸ்திரம் அ.தி. மு.க.வுக்கும் வீசப்படலாம். அப்போது, கூட்டணிகளின் காட்சி கள் மாறக்கூடும்' ‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள் பா.ஜ.க.வினர்.

எடப்பாடிக்கு நெருக்கமான சீனியர் லீடர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ”"ஜி.கே.வாசனிடம் மட்டுமல்ல; அ.தி.மு.க.வின் முன்னாள் மந்திரிகள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மூலமாகவும் பா.ஜ.க. தலைமை சில தகவல்களை தெரிவித்திருக்கிறது. அதில் சில புள்ளிவிபரங்கள் இருக்கின்றன.

அதாவது, "தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு மட்டும் தற்போது 8 சதவீத வாக்குகள் இருக்கிறது. அதேபோல சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு ஒன்னரை சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு ஒன்னரை சதவீதமும் என 3 சதவீத வாக்குகள் இருக்கிறது. அந்த 3 சதவீத வாக்குகளுக்காக 8 சதவீத இந்துக்களின் வாக்குகளை அ.தி.மு.க. புறக்கணிக்கலாமா? அப்படி புறக்கணிப்பது எப்படி சாதுர்யமான தேர்தல் ஞானமாக இருக்க முடியும்? அதனால் இதனைச் சொல்லி எடப்பாடி பழனிச்சாமிக்குப் புரிய வையுங்கள் என பா.ஜ.க. அழுத்தம் தருகிறது. முன்னாள் அமைச்சர்களும் இதனை எடப்பாடியின் கவனத்துக்கு எடுத்து வந்துள்ளனர்''” என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.

முன்னாள் அமைச்சர்களிடம் பா.ஜ.க. இப்படி புள்ளிவிபரங்களைச் சொல்லி எடப்பாடிக்கு மூளைச்சலவை செய்ய நினைப்பதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. குறிப்பாக, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தொகுதிகள் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "காங்கிரசுக்கு 2 தொகுதிகள்தான் தரமுடியும்' என மம்தா சொன்னதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால், மேற்கு வங்கத்தில் காங் கிரசுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டார். கூட் டணியை விட்டு காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்பதற் காகத்தான் இந்த யுக்தியை பயன்படுத்தினார் மம்தா பானர்ஜி.

காரணம், காங்கிரசை கூட்டணியில் வைத்துக்கொண் டால் காங்கிரஸ் மூலம் 2 சதவீத முஸ்லீம் வாக்குகள் கிடைக்கும்; ஆனால், 6 சதவீத இந்துக்களின் வாக்குகளை இழக்க வேண்டியதிருக்கும். இரண்டா அல்லது ஆறா என கணக்கிடும்போது 6-தான் பெரியது என முடிவு செய்து காங்கிரஸை கழட்டிவிட அந்த யுக்தியை மம்தா பயன்படுத்தி னார் என்பதுதான்.

காங்கிரசை மம்தா பானர்ஜி ஏன் கழட்டி விட்டார் என்கிற யுக்தி பா.ஜ.க. தேசிய தலை மைக்குத் தெரியும். அதே அளவுகோலைத்தான் அ.தி.மு.க.வில் பயன்படுத்த திட்டமிட்டு, முன்னாள் அமைச்சர்கள் மூலமும், ஜி.கே.வாசன் மூலமும் அந்த புள்ளிவிபர கணக்குகளை எடப்பாடி பழனிச்சாமிக்குப் போட்டுக் காட்டுகிறது பா.ஜ.க. தலைமை. இப்படி புள்ளிவிபரக் கணக்குகளுடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு மூளைச் சலவை செய்யும் பா.ஜ.க.வின் திட்டத்தை அறியாமலே, அதனை எடப்பாடி யிடம் மாஜி மந்திரிகள் விவரித்த போது, "பா.ஜ.க.வுக்கு தற்போது 8 சதவீத வாக்குகள் அதிகரித்திருப்ப தாக எந்த புள்ளி விபரம் சொல் கிறது? அப்படிச் சொன்னால் அந்த கணக்கு தப்பு. கடந்த 2019 நாடாளு மன்ற தேர்தலில், தமிழகத்தில் 3.66 சதவீத வாக்குகளை மட்டுமே பா.ஜ.க. வாங்கியுள்ளது. அதே, 2021-ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வாங்கிய வாக்குகள் 2.62 சதவீதம் மட்டுமே! இத்தனைக்கும் அ.தி.மு.க. கூட் டணியில் போட்டியிட்டே இந்த சதவீத வாக்குகளைத்தான் பெற்றி ருக்கிறது பா.ஜ.க.

அந்தவகையில், தற்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்கு களைக் கணக்கிட்டுப் பார்ப்போம். அப்போது பா.ஜ.க. பெற்றது 3.66 சதவீத வாக்குகள். அதில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், த.மா.கா. கட்சிகளின் வாக்குகளும் இருக்கத்தானே செய்யும். அப்படிப் பார்த்தால் பா.ஜ.க.வுக்கான ஒரிஜினல் வாக்குசதவீதம் மிக மிகக் குறைவு. அதனால் தற்போது 8 சதவீத வாக்குகள் அதிகரித்திருப்பதாகச் சொல்வது தவறான கணக்கு. அதேபோல, பா.ஜ.க.வை கூட்டணியில் வைத்துக் கொண்டால்தான் இந்துக்களின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் என்பதல்ல!

ஏன்னா, தமிழகத்தில் இந்துக்களுக்கான ஒட்டுமொத்த அத்தாரிட்டி பா.ஜ.க. கிடையாது” என்று தங்கமணி, வேலுமணியிடம் பா.ஜ.க. கணக்கை மறுத்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி மறுத்துப் பேசிய இந்த கூட்டல், கழித்தல் கணக்கு பா.ஜ.க. தலைமைக்கு பாஸ் செய்யப்பட்டிருப்பதாகவும் அ.தி.மு.க தரப்பில் சொல்லப்படுகிறது.

"இனி என்ன செய்யப்போகிறார் அமித்ஷா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

_________________________

ee

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 11-ந் தேதி சென்னைக்கு வருகிறார். இதற்கான புரோக்ராம் வியாழக்கிழமை (8/2/24) தான் உறுதி செய்யப்பட்டது. காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் 39 எம்.பி. தொகுதிகளின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் நட்டா. ஒரு எம்.பி. தொகுதிக்கு 100 பேர் என சுமார் 4,000 பேர் இந்த கூட்டத்துக்கு அழைக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும், கூட்டணி குறித்தும், தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் பற்றியும் விலாவாரியாக பேசவிருக்கிறார் நட்டா. இந்த கூட்டம் முடிந்ததும், நட்டாவும் பா.ஜ.க. தமிழக தலைவரும் இணைந்து சென்னையில் நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு சென்னை காவல்துறை அனுமதிதரவில்லை. இதனால் நடைபயணத் திட்டம் ரத்தானது. இதற்கு பதிலாக அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளிவளாகத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட, அதற்கு அனுமதி தந்துள்ளது போலீஸ். இதற்கிடையே சென்னையில் உள்ள 22 எம்.எல்.ஏ. தொகுதிகளிலும் நடைபயணத்துக்கு அனுமதி இல்லை என்பதால் அதையும் ரத்து செய்துள்ள மாநில தலைவர், அதனை அரங்க மீட்டிங்காக நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.

-இளையர்