அ.தி.மு.க.வில் நீயா,… நானா… அளவுக்கு விவகாரம் வளர்ந்து விட்ட நிலையில் இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரைக்கும் போய் தங்களை நிறுவிக்கொள்ளத் துடிக்கிறார்கள்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரில் கட்சியின் ஒற்றைத் தலைமைக்கு தகுதியானவர் யார்? அந்தக் கட்சித் தொண்டர்களின் மனநிலை என்ன? அவர்கள் யார் பக்கம் என்பதை அறிய விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தொண்டர்கள் பலரைச் சந்தித்துக் கேட்டோம்.

admkfans

Advertisment

பெண்ணாடம் சரவணன், "கட்சிக்குத் தலைமை ஏற்கக்கூடிய தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கே உண்டு. மூன்று முறை தற்காலிக முதல்வராக ஓ.பி.எஸ்.க்கு வாய்ப்பு கிடைத்தும், அவர் கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெறவில்லை'' என்கிறார்.

ஆதிச்சநூர் அரவிந்தோ, “"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சட்ட மன்றத்திலேயே அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தன்னுடன் இருந்த 11 எம்.எல்.ஏ.க்களுடன் செயல்பட்டவர் ஓ.பி.எஸ். இவர் கட்சிக்குத் தலைமை ஏற்றால் கட்சியையும் எங்களைப் போன்ற தொண்டர்களையும் தி.மு.க.விடம் அடமானம் வைத்து அடிமையாக்கி விடுவார்''’என்கிறார்.

Advertisment

"சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார் பன்னீர். ஜெயலலிதா மறைந்தபோது சசிகலாவை எதிர்த்துதான் தர்மயுத்தம் நடத்தினார் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று ஒற்றைத் தலைமைதான் கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும். அதற்கான தகுதி எடப்பாடியா ருக்கு மட்டுமே உண்டு''’ என்கிறார் கொறக்கவாடி மனோகரன்.

தொழுதூர் ஜெயந்தியோ, "அ.தி.மு.க.வின் திட்டங்கள் பலவற்றை ரத்து செய்துள்ள தி.மு.க.வை எதிர்த்துப் போராட எடப்பாடியார்தான் சரியான சாய்ஸ்''’என்கிறார்.

"ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், தி.மு.க. தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு வெளியே வந்து தி.மு.க. நல்லாட்சி நடத்துகிறது என்று நற்சான்று கொடுக்கிறார். ஓ.பி.எஸ். தம்பி ராஜா சசிகலா வுடன் கூட்டு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வுக்கு எதிராகச் செயல் படுகிறார். இப்படி தன் குடும்பத் தினரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாதவர், கட்சியை எப்படி கட்டுப்பாட் டுக்குள் வைப்பார்''’என்கிறார் காந்தி நகர் மனோகரன்.

admkfans

"சாதாரண ஏழை-எளிய மக்களை நேசிக்கக்கூடியவர். கட்சித் தொண்டர்கள் அனை வரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர். திறமையாக ஆட்சி செய்தவர் ஓ.பி.எஸ். கட்சிக்கு தலைமை ஏற்கத் தகுதியானவர்''’என்கிறார் பெறங்கியம் கனகா.

"கட்சியினர் அனைவரை யும் சுலபமாக சந்திக்கக்கூடியவர். வாரிசு அரசியலுக்கு அப்பாற் பட்டவர். அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு பஸ் களை குறைத்துவிட்ட இந்த அரசாங்கத்தின் ஏமாற்றுத் தனத்தை தட்டிக் கேட்கக்கூடிய தகுதி எடப்பாடியாருக்கு மட்டுமே உண்டு''’என்கிறார் சுலையம்மா பீவி

"தர்மயுத்தம் நடத் தியபோது ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த வர்களில் வைத்திலிங்கம் தவிர அனைவரும் எடப்பாடியார் பக்கம் வந்துவிட்டனர்.

சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவரை புகழ்ந்து பேசுகிறார் ஓ.பி.எஸ். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி அவரால் பேச முடியுமா?''’என்கிறார் குணசேகரன்

"எம்.ஜி.ஆர். காலத் திற்குப் பிறகு அ.தி.மு.க. விலிருந்து பல்வேறு காரணங்களால் நெடுஞ் செழியன், எஸ்.டி.எஸ்., ஆர்.எம். வீரப்பன், திருநாவுக்கரசு, காளிமுத்து, இப்படி பலர் வெளியே சென்று தனிக்கட்சி ஆரம்பித்தனர். கட்சித் தொண்டர்கள் மத்தியில் எடுபடவில்லை. நீதிமன் றம், தேர்தல் ஆணையம் மூலம் கட்சியில் ஒட்டிக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார் ஓ.பி.எஸ். கட்சியினர் மத்தியில் நாளுக்கு நாள் அவர் மேல் வெறுப்பு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது''’என்கிறார் அருள்.

இந்த மாவட்டங் களில் இ.பி.எஸ். தரப்புக்கே அதிக குரல்கள் ஆதரவாக ஒலித்தன. எனினும் ஓ.பி. எஸ்.ஸுக்கும் கொஞ்சம் ஆதரவுக் குரல்கள் கேட்காமலில்லை.