லைஞர் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டது, ஆனாலும் ஆளுங்கட்சித் தரப்பிற்கு, கலைஞரின் திருவாரூர் மீதான வெறுப்பு கொஞ்சமும் போகவில்லை என்று குமுறுகிறார்கள் ஏரியாவாசிகள்.

ffs

கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான், மாவட்டமாய் ஆனது திருவாரூர். அதோடு மத்திய பல்கலைக் கழகம், புதிய நீதிமன்றம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாதாள சாக்கடைத் திட்டம், தொழிற்பயிற்சிக் கல்லூரி, புதிய ரயில்நிலையம், மாவட்ட ஆட்சியரகம் என கலைஞரின் ஊர்ப்பற்று திருவாரூரை வெகுவாகத் தரம் உயர்த்தியது. இந்த வகையில் 50 லட்ச ரூபாய் செலவில் கொண்டுவரப்பட்ட மின் மயானத்தைதான், ஆளும்கட்சித் தரப்பு பூட்டியே வைத்திருக்கிறது என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

dadf

Advertisment

இது குறித்து நம்மிடம் பேசிய ரஜினி சின்னா, ""கலைஞரால் சிறப்படைந்த ஊர் இது. அவர் ஆட்சியில்தான் எங்கள் நெய்விளக்குத் தோப்பு இடுகாட்டில் மின்மயானத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் இங்கு இருந்த அ.தி.மு.க. நகராட்சித் தலைவர், மின்மயானத்தைப் பயன்படுத்தவிடாமல் பூட்டிவைத்துவிட்டார். இது பற்றிக் கேட்டபோது, மின்மயானத்தை சிலர் எதிர்ப்பதாகக் கூறினார். மின்மயானம் பூட்டியே கிடப்பதால், வெட்ட வெளியில் சடலங்களை எரிக்கும் நிலை தொடர்கிறது. இது பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்துகிறது''’என்றார் ஆதங்கமாய்.

மின்மயானத்தை எதிர்க்கும் தரப்பு என்று சொல்லப்பட்ட அண்ணா காலனி அப்புவிடமும், குமரனிடமும் இது குறித்துக் கேட்டபோது, ""மின்மயானத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. மயானத்திற்கான வழியைத்தான் மேற்குப் பக்கமாக மாற்றச் சொல்கிறோம். அதைச் செய்யாமல் வெட்டவெளியில் பிணத்தை எரிக்க வைக்கிறார்கள். இதனால் கடும் வாடை எங்களைத் தாக்குகிறது. அதோடு இங்கிருக்கும் குப்பைக் கிடங்கு அடிக்கடி எரிவதால், அருகிலிருக்கும் குடிசைகளும் தீவிபத்தில் சிக்குகின்றன. இதையெல்லாம் சரிசெய்து மின்மயானத்தை உடனடியாகத் திறந்துவிடவேண்டும்''’என்கிறார்கள் உறுதியான குரலில் .

திருவாரூர் வர்த்தக சங்கப் பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது,’""கலைஞர் மறைவுக்குப் பிறகு இங்கு தீவிர அரசியல் செய்யும் அமைச்சர் காமராஜ், மடப்புரம் பாலம் கட்டப்படும், வெளிவட்டச் சாலை அமைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். ஆனால் எதுவும் நடக்கவில்லை''’என்கிறார் எரிச்சலாய்.

Advertisment

மின் மயானம் குறித்து திருவாரூர் நகராட்சி ஆணியர் சங்கரனிடம் கேட்டபோது, ’""கோரிக்கை நியாயமானது. விரைவில் அது திறக்கப்படும்''’என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இதேபோல் திருவாரூர் அருகே இருக்கும் கூத்தாநல்லூரிலும் கலைஞர் கொண்டுவந்த திட்டங்களை முடக்கி வைத்திருக்கிறதாம் ஆளும்தரப்பு. இது குறித்துச் சொல்லும் ஏரியாவாசிகள், ""98-ல் கலைஞரின் பவள விழாவையொட்டி 33 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பேருந்து நிலையம், கவனிப்பாரற்றுக் கிடக்கிறது'' என்கிறார்கள். ஆளும்கட்சியும் அதன் மாவட்ட அமைச்சர் காமராஜும், கட்சி வேறுபாடுகளைக் கைவிட்டுவிட்டு, மக்கள் கோரிக்கைக்கு மனம் இரங்குவார்களா?

-க.செல்வகுமார்