திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியிலுள்ள காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற அ.தி.மு.க. தலைவரான கணேஷ்பிரபு, நிலக்கோட்டை அருகிலுள்ள ஒரு கோவில் நிலத்தை பட்டா போட்டு அபகரித்துக்கொண்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கலெக்டர் பூங்கொடி வரை, கணேஷ்பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, ஊர்மக்களும், பக்தர்களும் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
""நிலக்கோட்டை அருகிலுள்ள எங்க ஒருதட்டு கிராமத்திலிருக்கும் உத்தமநாச்சியப்பன் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தை, கோவில் பூசாரிகள் பெயரில் ஆதியில் பட்டா போடப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தில் வரக்கூடிய வருமானத்தை வைத்து பூஜைகள் மற்றம் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலத்தின் கூட்டுப்பட்டா பூசாரிகளில் ஒருவரான சுப்பையா மூப்பர் மகன் சின்னையா மூப்பர் என்பவர், தனது மகன் செல்லத்துரைக்கு 61 சென்ட் இடத்தை தானமாக பதிவுசெய்து கொடுத்திருக்கிறார். அதை செல்லத்துரையும் அவரது வாரிசுகளும் சேர்ந்து கடந்த 2020ல் காமாட்சிபுரம் ஊராட்சி மன்றத்தலைவரான கணேஷ்பிரபு மற்றும் அவரது மனைவியான ஆசிரியர் செல்விக்கு கிரையம் பேசி பதிவு செய்துள்ளார். இதையடுத்து, கோவில் சொத்தை தலைவர் அபகரித்து விட்டார் என்ற பேச்சு எழுந்ததுமே, தங்கள் பெயரி-ருந்த நிலத்தை தனது தந்தை பழனிச்சாமிக்கு 2022ல் மாற்றி எழுதிக் கொடுத்துவிட்டார். அந்த இடத்தைத்தான் தற்போது வேறொருவருக்கு தலைவர் குடும்பம் விற்க முயற்சிப்பதாகத் தெரியவரவும், முதல்வர் முதல் கலெக்டர்வரை புகார் மனு கொடுத்து, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். அதோடு தலைவர் மனைவி அரசு வேலை பார்ப்பதால் அவர்மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர் ஒருதட்டு கிராமத்து பொதுமக்களில் சிலர்.
ராம-ங்கம்பட்டியைச் சேர்ந்த பா.ஜ.க. கிளைச்செயலாளர் மகேஷிடம் கேட்டபோது, ""இந்த பஞ்சாயத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் நடைபெறும் நூறு நாள் வேலைக்கு தினசரி சுமார் ஐநூறு பேர் வருகிறார்கள் என்றால், தலைவர், துணைத்தலைவர் மற்றும் கிளர்க் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கூட்டு சேர்ந்துகொண்டு, கூடுதலாக நூறு, இருநூறு ஆட்களைக் கணக்குகாட்டி, பல லட்சங்களை சுருட்டி வந்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்தோம். இதைத் தெரிந்துகொண்ட தலைவர், தனது ஆதரவாளர்களைவிட்டு என்னிடம் தகராறு செய்யவைத்தார். இதுகுறித்து போலீஸில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. அதுபோல் புதிதாக வீடு கட்டுதல், தொழிற்சாலை, வீடு, கடைகளுக்கு வரிகள் போடுவதெற்கெல்லாம் ஒரு கணிசமான தொகையை அன்பளிப்பாக கொடுத்தால் தான் ரசீதே போட்டுக் கொடுப்பார்கள். அதுபோல் ஐந்து லட்சம் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. இப்படி கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடத்திற்கு போர் போட்டு தண்ணீர் கொடுக்காததால் கழிப்பிடம் சீரழிந்து முள் புதர்களாகக் காட்சியளிக்கிறது. அதுபோல் பஞ்சாயத்து மூலம் எந்தவொரு அடிப்படை வசதியும் சரிவர செய்து கொடுக்கவில்லை. தலைவரை எதிர்த்து கலெக்டரிடம் மனு கொடுத்ததற்காக எங்க வீட்டிற்கு எதிரே போட்ட பொதுக்குழாயை மாற்றி வேறு இடத்தில் போட்டுவிட்டனர். அதைக் கண்டித்து மனு கொடுத்தும் கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் எனது ரேசன் கார்டையே வேண்டாமென்று கலெக்டரிடம் கொடுத்துவிட்டேன்'' என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் கணேஷ்பிரபுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ""கோவில் நிலம் சம்பந்தமாக கலெக்டரிடம் புகார் கொடுத்ததற்கு, எங்கள் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலெக்டரிடம் பேசிவிட்டார். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுபோல் எனது பகுதிகளில் நடக்கக்கூடிய பணிகளில் எந்தவொரு முறைகேடும் நடக்கவில்லை'' என கூறினார்.
இதைத்தொடர்ந்து நாம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனை தொடர்புகொண்டு தலைவர் சொன்னதைப் பற்றி கேட்டபோது, ""என்னை அவர் தொடர்புகொள்ளவும் இல்லை, என்னிடம் அவர் எதுவும் பேசவுமில்லை. அதனால் இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள ஒன்றியச்செயலாளரான ஆரோக்கியசாமியை தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றார்.
அதைத்தொடர்ந்து மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரான ஆரோக்கியசாமியை தொடர்புகொண்டு கேட்டபோது, ""எங்க அமைச்சர் (நத்தம் விசுவநாதன்) கலெக்டரிடம் எதுவும் பேசவில்லை'' என்றவரிடம், ""அப்பகுதியில் உள்ள கட்சிக்காரர்களை ஊராட்சித்தலைவர் மதிப்பதில்லை என்றும், அவர் முறைகேடுகள் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. அதோடு, கட்சியி-ருந்து தலைவரை நீக்கியதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே?'' என்று கேட்டதற்கு, ""அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தலைவர் கட்சியில்தான் இருக்கிறார்'' என்று கூறினார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நா.பூங்கொடியிடம் கேட்டபோது, ""அந்த புகார் மனு சம்பந்தமாக அதிகாரிகள் மூலம் விசாரணை செய்து அறிக்கை கொடுக்குமாறு கூறியிருக்கிறேன். அதன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக!