அண்மையில் அரங்கேறியிருக்கும் அந்தப் படுகொலை ஆளுங்கட்சி வட்டாரத்திற்குள்ளேயே அதிர்ச்சிப் பேரலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. திருமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டனின் குழந்தைக்கு அது முதலாவது பிறந்தநாள். இதைக் கொண்டாட நினைத்த அவர், ""அம்மா உணவகத்தோட மொத்த டோக்கனையும் வாங்கிட்டு வந்துடறேன். அப்படியே பிரியாணிக்கும் ஆர்டர் கொடுத்திட்டு வந்திடுறேன். வர்றவங்களை அசத்திடனும்'' என்று வீட்டில் சொல்லி விட்டுப்போன அவர், மறுநாள் அதிகாலையில் சிதைந்த சடலமாக மீட்கப்பட்டி ருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட மணிகண்டன் தரப்பு, கதறி அழுதபடியே ‘இதுக்கெல்லாம் காரணம் அவர்தான்’ என்றபடி, மாண்புமிகு வட்டாரத்தைக் கை நீட்டுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister_36.jpg)
திருமங்கலம் அ.தி.மு.க நகரச் செயலாளர் ஜே.டி.விஜயனின் மகள் பெயர் மஞ்சு மாசினி. அவர் வீட்டுக்குத் தெரியாமல் சரத்குமார் என்பவரை ரகசியமாகக் காதல் திருமணம் செய்துகொண்டு, சென்னையில் செட்டிலாகிவிட்டார். அந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விஜயன் தரப்பு, காதல் ஜோடிக்கு உதவிய முகமதுஷாபுரம் மணிகண்டன் மீது கோபப் பார்வையைத் திருப்பியது. அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில்தான்... கடந்த ஜூன் 6-ந் தேதி இப்படியொரு விபரீதம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
இந்தக் கொலை தொடர்பாக விஜயனின் ஆட்களான குண்டாறு சக்திவேல், அட்டாக் பிரகாஷ் மற்றும் ந.செ. ஜே.டி. விஜயன் ஆகியோர் மீது குற்ற எண் 894/2020ன்படி, 109/ 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்த செக்கானூரணி போலீஸ், எஃப்.ஐ.ஆர் போடவே யோசித் தது. அதனால் கைது நடவடிக் கையிலும் அது இறங்கவில்லை.
இதனால் கொதித்துப் போன மணிகண்டனின் உறவினர்களும், நண்பர்களும் ""உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்தால்தான் மணிகண்டனின் உடலை வாங்குவோம்''’என்று சாலை மறியலில் குதித்தனர். இதனால் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆரை.ப் பதிவு செய்த காக்கிகள், கொலைக்குக் காரணமான அ.தி.மு.க நகரச் செயலாளராகப் பதவி வகித்த ஜே.டி.விஜயனை மூன்றாவது குற்றவாளியாக்கினர். அங்கங்கே கண்டனம் கிளம்பியதால் அ.தி. மு.க. தலைமை விஜயனை கட்சியில் இருந்து நீக்காமல், அவரை ந.செ. பதவியில் இருந்து மட்டும் விலக்கியது. காரணம், இந்த விஜயன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர விசுவாசி என்பதாலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister1_7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister2_0.jpg)
லோக்கல் அ.தி.மு.க.வினரோ, ""கடந்த 10 வருடங்களாக நகர செயலாளர் பதவியிலேயே விஜயனை கட்சித் தலைமை உட்கார வைத்திருந் தது. விஜயனின் மனைவி உமா, திருமங்கலம் நகராட்சித் தலைவராக இருந்தவர். தொடக்கத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த விஜயன், பின்னர் ஆர்.பி உதயகுமாரின் தீவிர விசுவாசியாகி விட்டார்''’என்று சொன்னதோடு, ""எப்போதும் அடியாட்கள் புடைசூழ வலம்வரும் விஜயன், அமைச்சர் உதயகுமாருக்கு, சில வேலைகளைச் செய்துகொடுத்து அவரின் அந்தரங்க நண்பராகவே இருந்துவருகிறார். அதனால் அமைச்சர் தரப்பு, விஜயனைக் கொலை வழக்கில் இருந்து காப்பாற்றுவதில் தீவிரம் காட்டுகிறது'' என்றார்கள் எரிச்சலாக.
இந்த நிலையில் மணிகண்டனைக் கொன்றது விஜயன் தரப்புதான் என்பதற்கான ஒரு ஆடியோ ஆதாரம், பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் இருப்பது, மணிகண்டனின் சித்தப்பா மகன் ரமேஷ்பாபுவிடம் விஜயன் பேசிய உரையாடல் ஆகும்.
கொலை குறித்தும் இந்த ஆடியோ குறித்தும் நம்மிடம் பேசிய மணிகண்டனின் பெரியப்பா தில்லைநாதன், ""விஜயனோட கொலை மிரட் டல் அதிகமானதால், தன் இரண்டு வீடுகளையும் வித்துட்டு கோவைப்பக்கம் போய் செட்டிலாயிடலாம்னு மணிகண்டன் நினைச்சான். அதுக்கு முன்பு, அடகில் இருந்த தன் மனைவி நகைகளை மீட்க நினைச்சான். அதற்காக இரட்டைக் குழாய் சிதம்பரம் பைனான்ஸ் கடைக்கு என் மகன் ரமேஷ்பாபுவை அனுப்பி வைச்சான். மணிகண்டனின் நகையை என் மகன் மீட்பதைப் பார்த்து விஜயனுக்கு யாரோ தகவல் கொடுத்திருக்காங்க. அதனால், என் மகன் ரமேஷ் போனுக்கு வந்த விஜயன், உன்னையும் மணி கண்டனையும் கொலை செய்வேன்னு மிரட்டினார். அந்த மிரட்டல் பதிவு எங்கக் கிட்ட இருக்கு. அமைச்சருக்கு தெரியாமல் விஜயன் எதையும் செய்ய மாட்டார். அதனால் மணிகண்டன் கொலை வழக்கில் அமைச்சர் உதயகுமாரை யும் சேர்க் கனும்'' என்கி றார் கலங்கிய விழிகளோடு.
மணிகண்டன் கொலை விவகாரம் விசுவரூபம் எடுப்பதையறிந்து, சமாதானப் படலத்தையும் அமைச்சர் தரப்பு நடத்தியிருப்பதாகவும் வீடியோ ஆதாரத்தை முன் வைத்து சொல்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister3.jpg)
தன் பெயரை வெளிப்படுத்த விரும்பாத மணிகண்டனின் உறவினரான அவர், நம்மிடம்... ""ஜூன் 21 ஆம் தேதி, விஜயனின் மகளைக் காதலித்து அழைத்துச் சென்ற சரத்குமாரின் தங்கை சௌந்தர்யாவின் வீட்டில் வச்சிதான், அமைச்சர் தரப்பு பஞ்சாயத்து பேசுச்சு. மணிகண்டனின் பெரியப்பா தில்லைநாதன், அத்தை இந்தி ராணி, மாமா மகாலிங்கம், மருமகன் கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்ட உறவினர்கள் அங்க இருந்தாங்க. அதேபோல் அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் வெற்றிவேல், இளைஞர்- இளம்பெண் பாசறையின் மதுரை புறநகர் மேற்கு மா.செ. ஆர்யா, வழக்கறிஞர் ராஜசேகர், கொலை யுண்ட மணிகண்டனின் சமூகத் தினை சேர்ந்த சங்கையா மற்றும் ராஜ் குமார் ஆகியோர் அமைச் சர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினாங்க.
அப்ப, மணிகண்டனின் மனைவி தீபிகாவுக்கு ஒரு அரசாங்க வேலையும், இருக்க ஒரு வீடும், ரொக்கமாக ரூ 15 லட்ச ரூபாயும் கொடுத்துடு றோம். அதற்கு ஈடாக, அமைச்சர் பேரை இந்த கொலை விவகாரத்தில் இழுக்கக்கூடாது. அதேபோல் விஜயன் விவகாரத்திலும் அமைதியாய் இருக்கனும்னு பேசுனாங்க. தீபிகா வேலைக்கு மனு எழுதிக்கொடுத்தால், உடனே செஞ்சுடுவோம்னும் சொன்னாங்க. அப்ப, தீபிகாவைக் கூட்டிட்டு வர, அமைச்சர் தரப்பு கார் அனுப்பவும் தயாரா இருந்தது. ஆனால் மணிகண்டன் உறவினர்கள் இதுக்கு ஒத்துக்கலை. விஜயனைக் கைதுசெஞ்சே ஆகணும்னு உறுதியாய் சொன்னாங்க. அதனால், வந்தவங்க, சத்தம் இல்லாமல் கிளம்பிட்டாங்க'' என்றார் அழுத்தமாக.
படுகொலை செய்யப்பட்ட மணிகண்டனின் மனைவியான தீபிகாவையும் நாம் சந்தித்தோம். தேம்பலோடு பேச ஆரம்பித்த அவர்... ""எனக்கும் அவருக்கும் 2018ல் திருமணம் நடந்துச்சு. அடுத்த ஒரு மாசத்தில் என் கணவருக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. அவர் வெளியூர் போயிருந்ததால் நான் மட்டும் அங்கே போனேன். அப்பதான், என் கணவரின் உறவினரான சரத்குமார், விஜயனின் மகள் மஞ்சுமாசினியைக் காதலித்துக் கூட்டிச் சென்ற விஷயமே தெரியவந்தது. இரவுவரை போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைச்சி மிரட்டி அனுப்பினாங்க. இந்த நிலையில் 5.5.2018-ல் என் கணவர் எனக்கு போன் செய்து, சரத்குமாரும், மஞ்சுமாசினியும் திருவள்ளூர் காவல் நிலையத்தில் சரண்டராயிட்டாங்க. இனி பிரச்சனை கிடை யாதுன்னார். இருந்தும் விஜயன், உன் புருஷனைக் கொல்லாமல் விடமாட்டேன்னு மிரட்டினார். அதனால் பயந்து போய், மதுரைக்கு வந்துட்டோம். முதலமைச்சருக்கும், காவல்துறைக்கும் புகார் மனு அனுப்பினேன். இந்த நிலையில், ஜூன் 12-ல் எங்க குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட நாங்க திட்டமிட்டிருந்தோம்.
சம்பவத்தன்னைக்கு திருமங்கலம் போன என் கணவர், தன் நண்பர்களான சபரிநாதன், நாகமலை புதுக்கோட்டை மனோ பாலசந்தர் ஆகியோருடன் மது அருந்த புங்கக்குளம் விக்னேஷ்வரன் தோட்டத்திற்கு போறதாச் சொன்னார். நள்ளிரவு 1 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக மூன்று நண்பர்களும் வெளியே போன நேரத்தில் குண்டாறு சக்திவேல், அட்டாக் பிரகாஷ் ஆகிய இருவரும் மது மயக்கத்திலிருந்த என்னுடைய கணவரை வெட்டிக் கொன்னுட்டாங்கன்னு தகவல் வர, தலையில் இடி விழுந்த மாதிரி ஆயிட்டேன்'' என்று கண்ணீர் வடித்தார் ஆங்கிலப் பட்டதாரியான தீபிகா துயரமாக.
அவரது அப்பா காசிராஜனும், அம்மா சாந்தியும், ""தன் மகள் காணாமல் போனதால் எங்க மருமகன் மணிகண்டனைத் தேடி வந்த விஜயன், எங்களைப் போலீஸ் ஸ்டேஷனில் உட்காரவச்சார். இப்ப விஜயனைத் தேடறதா சாக்கு சொல்லும் போலீஸ், அவர் குடும்பத்தை ஸ்டேஷன்ல வைக்க வேண்டியதுதானே? ஊரில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அங்க போகும் அமைச்சர் உதயகுமார், இதுநாள் வரை ஆறுதல் சொல்ல இங்க வரலையே. குற்றம் உள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்..? அமைச்சர் தலையீடு இல்லாமல் இந்த சம்பவமே நடந்திருக்காது'' என்றார்கள் உறுதியான குரலில்.
டீலிங் பஞ்சாயத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் வெற்றிவேலுவிடம் இதுகுறித்துக் கேட்டபோது... ’""ஆறுதல் கூறத்தான் போனோம். அமைச்சர் எங்களை அனுப்பலை. தீபிகாவுக்கு அரசாங்க வேலை குறித்து பேசியது உண்மை தான். அவங்க குடும்பம் படும் கஷ்டத்தைப் பார்த்துட்டுதான் அமைச்சருக்கு கடிதம் கொடுங்க. வேலைக்குப் பரிந்துரை செய்கிறோம்ன்னு சொன்னோம். வேறு இதில் எவ்வித உள் நோக்கமும் கிடையாது'' என்றார். மற்றொரு அ.தி.மு.க, பிர முகரான ஆர்யாவும் ""மணிகண்டன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறத்தான் சென்றோம்'' எனக் கூறி லைனை கட் செய்தார்.
இந்த நிலையில், ""தங்களுடைய நண்பன் மணிகண்டன் சாவிற்குக் காரணமானவர்களை கொலை செய்யாமல் விடமாட்டோம்''’என்று அவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள் சபதமேற்றது காவல்துறையையும், அரசியல்வாதிகளையும் பீதியடைய வைத்துள்ளது.
கொலை விவகாரத்தில் அமைச்சர் உதயகுமாரின் பெயர் அடிபடுவது, தமிழக அரசியலைப் பரபரப்பாக்கிக் கொண்டு இருக்கிறது.
- நாகேந்திரன்
படங்கள் : விவேக்
________________
அமைச்சரின் விளக்கம்!
மணிகண்டன் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்படுவது குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது... ""பாவம் அவர்கள் உயிரைப் பறி கொடுத்தவர்கள். கூறத்தான் செய்வார்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, சரண்டரான குற்றவாளிகளிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இதில் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்னுடைய குறுக்கீடு என்று எதுவும் இல்லை. விஜயனைப் பொறுத்த வரை கட்சிப் பதவி பறிக்கப்பட்டு விட்டது. இதனால் சுதந்திரமான விசாரணை நடைபெறும். அவர்கள் வீட்டிற்கு கட்சியினர் சென்றது ஆறுதல் கூறத்தான். இதில் என்ன சமாச்சாரம் இருக்கு? கேட்கச் சென்றது குத்தமா..? என்னைப் பற்றி கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி யால்தான். பிரபலமானவரை இழுத்து விட்டால்தான் தங்களுக்குச் சாதகம் இருக்குமென்று, அவர்கள் என்னை இழுத்துவிட்டிருக்கலாமே..?'' என மழுப்பலாக பதில் கூறியவர், இறுதி வரை விஜயனின் கைது பற்றியும், கட்சி உறுப்பினர் நீக்கம் பற்றியும் எதையும் சொல்லவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/minister-t.jpg)