பொய்யான புள்ளிவிபரங்களைத் தந்து இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஏமாற்றி இரண்டு முறை தேசிய விருதுகளை வாங்கி தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள் கடந்தகால ஆட்சியாளர்கள்.
உலகளவில் சாலை விபத்துகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் சாலை விபத்தால் இறப்பவர்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு உள்ளது. கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட விபத்து களின் எண்ணிக்கை, இறந்தவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்ததற்காக சாலை பாதுகாப்பில் சிறந்த மாநிலம் என்கிற விருதை இரண்டு முறை ஒன்றிய அரசிட மிருந்து பெற்றது தமிழ்நாடு.
இந்நிலையில் பொய்யான தகவல் களைத் தந்து விருது வாங்கியுள்ளார்கள் என்கிற தகவல் காவல்துறை தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு அறிக்கை வாயிலாக சொல்லப்பட்டு அந்த விவகாரம் வெளியாகி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்துக்கு தலைகுனிவு என்பதோடு விருதை திரும்பப் பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை கள் என மொத்தம் 62,16,797 கி.மீ தூரத்துக்கு சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விபத்துக்கள், இறப் பவர்கள், காயம்பட்டவர் களின் எண்ணிக்கை தேசிய குற்ற ஆவணக் காப்பக ஆவணங்களின்படி, பதிவு செய்யப்படும்.
அதன்படி இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1.5 லட்சம் பேர் விபத்தால் இறக்கிறார்கள். மாநில அளவில் விபத்துகளில் அதிகம் இறப்பவர்கள் பட்டியலில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம். சிறந்த சாலை கட்டமைப்பால் தமிழ்நாட்டில் வாகன எண்ணிக்கை சுமார் 3 கோடி. வாகனங்கள் அதிகம் என்பதால், விபத்துக்களி லும் தமிழ்நாடு முதல் 3 இடங்களில் உள்ளது. மாநில குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தின்படி, ஒவ்வொர் ஆண்டும் விபத்துக்குள்ளாகி, காயம்பட்ட, இறந்தவர்கள் எண்ணிக்கை கீழே இருப்பது
2017 வரை ஆண்டுக்கு சராசரியாக 16 ஆயிரம் பேர் சாலை விபத்தில் இறந்துள்ளார்கள். 2018 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது உண்மையா?
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் கூறியுள்ளபடி, கடந்த மார்ச் மாதம் சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விபத்துக்களை தடுக்க குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்துத் தரவும் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸை (சிறப்பு அதிரடிப்படை) மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. மாநில குழு, தமிழ்நாடு காவல்துறையின் மாநில குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.ஜி.பி. தலைமையில் செயல்படும். இந்த குழுவில் சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து மற்றும் நிதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவர், ஐ.ஐ.டி. அல்லது அண்ணா பல்கலைக்கழக சாலை கட்டுமான வல்லுநர் ஒருவர் என ஐவர் குழுவில் உள்ளனர். அதேபோல் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், முதன்மைச் செயலாளர் தலைமையில் காவல்துறை ஐ.ஜி. போக்குவரத்து இணை ஆணையர் போன்றவர்கள் உள்ளார்கள். இந்த குழுக்கள்தான் பொய்யான புள்ளிவிவரங்களைத் தந்து விருது வாங்கியுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்தது.
அதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “"மாநில குற்ற ஆவணக் காப்பகத்தில் காவல்துறையில் எப்.ஐ.ஆர். பதிவானதன் அடிப்படையிலான சாலை விபத்துகள், குற்றங்கள், கொலைகள், மரணங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இருக்கும். இதை வைத்து விபத்துக்கள் ஏன் அதிகரித்தது, எப்படி குறைந்தது, விபத்தில் சிக்கியவர்கள் இறந்தது எப்படி என பல்வேறு கோணங் களில் ஆய்வு நடக்கும். கடந்த 2018-ஆம் ஆண்டு 63,920 விபத்துகள் நடந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு 57,228 விபத்துக்கள் நடந்துள்ளது. ஒரே ஆண்டில் 6500 விபத்துகள் எப்படி குறைந்திருக்கும் என்கிற சந்தேகம் கமிட்டிக்கு வந்தது. காப்பீட்டு நிறுவனங்கள், சுகாதாரத் துறை, போக்குவரத்து துறை யிடமிருந்து புள்ளிவிபரங்களை வாங்கி 2017, 2018, 2019, 2020 ஆண்டு புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்ட போது, எதுவும் பொருந்தவில்லை. இதற்கு முன்பும் இப்படி பொருந்தாமல் இருக்கும், அது நூறு என்கிற எண்ணிக்கையில் இருக்கும். இப்போது டிபரன்ஸ் ஆயிரங்களில் இருந்ததால் தீவிரமாக ஆய்வு செய்யப் பட்டதில், 2017 முதல் 2020 வரை சுமார் 22,018 விபத்து மரணங்களை மறைத்திருப்பது தெரியவந்தது.
2017-ஆம் ஆண்டில் 16,157 பேர் இறந்ததாக பதிவுசெய்திருந்தனர், இப்போது 17,926 பேர் இறந்துள்ளதாக ஆவணங்கள் கிடைத்து திருத்தப்பட்டன. அதேபோல் 2018-ஆம் ஆண்டு 12,216 பேர் இறந்ததாக பதிவாகியிருந்ததை 18,394 ஆகவும், 2019ஆம் ஆண்டு 10,525 பேர் என இருந்ததை தற்போது 18,129 பேராகவும், 2020ஆம் ஆண்டு 8060 பேர் இறந்ததாக இருந்ததை 14,527 எனவும் திருத்தியுள்ளோம். அதேபோல் 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த கோர விபத்துகளும் திருத்தப்பட்டுள்ளன. இதேபோல் விபத்துகள் எண்ணிக்கையும் திருத்தப்பட்டு புதிய பட்டியல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது''’என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுக்கோட்டை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா.செ. கவிவர்மன், "உலகம் முழுவதும் கொரோனா போன்ற தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களைவிட சாலை விபத்தில் இறப்பவர்கள்தான் அதிகம். விபத்துகளால் ஏற்படும் மரணங்களைவிட கை, கால் இழப்பு, கோமா போன்றவை மிகவும் கொடூரமானது, விபத்தில் சிக்கியவர்கள் வாழ்க்கை அதன்பின் பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் விபத்து, மரணம், காயமடைந்தவர்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியிடுவதன் நோக்கமே, பொதுமக்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி அதன்மூலமாக பாதுகாப்பான பயணத்துக்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தத்தான். ஆனால் இதற்கு நேரெதிராக விருதுக்காக, அரசியலுக்காக தவறான புள்ளிவிபரங்களை ஒன்றிய அரசிடம் வழங்கி இரண்டுமுறை விருது வாங்கிய கடந்தகால ஆட் சியாளர்களை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகாரிகள், ஆட்சியாளர்களின் தவறுக்கு துணை போயிருப்பது மேலும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது இன்னும் தீர விசாரிக்கப்படவேண்டும். தவறுசெய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்''’ என்றார்.
இதுகுறித்து விருது வாங்கிய போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க. விஜயபாஸ்கரை பலமுறை தொடர்புகொண்டும், அவர் அழைப்பை எடுக்கவில்லை.
தவறுகள் திருத்தப்பட்ட அதேநேரத்தில், திட்டமிட்டு தவறு செய்தவர்களை தண்டிக்கவேண்டும். செய்யுமா அரசு?