ஜூலை 21-ஆம் தேதி 16ஆம் நாள் நிகழ்வு, ஆம்ஸ்ட்ராங் அடக்கம் செய்யப்பட்ட பொத்தூரில் காலையில் 9 மணி முதல் 12 மணி வரை பௌத்த முறைப்படியான "புண்ணியானு மோதனா' எனும் பௌத்த சடங்கு நிகழ்வும் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அங்கே காலை முதல், கானா கச்சேரியும் அன்னதானமும் நடைபெற்றது.
மூன்று மணிக்கு மேல் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே நினைவேந்தல் நடத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நிகழ்வு ஏற்பாட்டாளர் கள் முதல்வரின் உதவியாளர்களை அணுகி அனுமதி கோரினர். அதேசமயம் மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, அமைச்சர் சேகர்பாபு மூலமாக முதல்வரிடம் அனுமதி கோரி கடிதம் தர, அவரும் முதல்வரிடம் பேசி நினைவேந்தலுக்கு அனுமதி பெற்றுத்தந்தார்.
கானா பாலா, அறிவு போன்றவர்கள் நினைவேந்தல் இசைக்கச்சேரியை நடத்தினர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப் பாளர் அசோக் சித்தார்த் (முன்னாள் எம்.பி.) தலைமையில் ஆம்ஸ்ட்ராங் படம் திறந்து வைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு ஆம்ஸ்ட் ராங்கின் அரசியல், சமூகச் செயல்பாடுகள் போன்ற வற்றை காணொலியாக அங்கு ஒளிபரப்பினர். நினைவேந்தல் நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங்கின் மகள் கையில் தந்தையின் புகைப்படத்துடன் நடமாடி யதும், அதைக் கண்டு பலரும் கதறியதும் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அதற்கு முந்தைய தினம் ஜூலை 20-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிவேண்டி நீலம் பண் பாட்டு மையம் சார்பாக நினைவேந்தல் பேரணி நடைபெற்றது.
சென்னை எழும்பூரிலுள்ள ரமணா ஹோட்டல் அருகே தொடங்கிய இந்த பேரணி, கிழக்கு கூவம் ஆறு சாலைவழியாகச் சென்று ராஜரத்தினம் மைதானத்தை வந்தடைந்தது. ஜெய்பீம் முழக்கத்தோடு சுமார் 2 மணிநேரமாக நடைபெற்ற இந்தப் பேரணி யில், இயக்குனர் பா. ரஞ்சித், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, குடியரசுக் கட்சி தலைவர் செ.கு.தமிழர சன், மே-17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். சிவகாமி, கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திரபாபு, நடிகர் மன்சூர்அலிகான், நடிகர் அட்டக்கத்தி தினேஷ், திருநங்கை கிரேஸ்பானு ஆகியோருடன் இன்னும் பல இயக்க தலைவர்களும், இளம் வழக்கறிஞர்களும் கலந்துகொண்டனர்.
நினைவேந்தல் பேரணியின் முடிவில், பதவியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும், தமிழகத்தில் தலித் தலைவர்கள், செயற்பாட்டாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும், தலித்துகள் மீதான தொடர் வன்கொடுமைகளை ஆய்வுசெய்ய பாராளுமன்றக் குழுவை உடனடியாக அமைத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்த நினைவேந்தல் பேரணியில் கலந்துகொண்ட அனைவரின் முக்கிய கோரிக்கையாக, வெளிப்படையான விசாரணை வேண்டும், கொலைக் குற்றவாளியின் பின்புலத்தில் இருப்பவரை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும்போது, “"தமிழ்நாட்டில் இருக்கும் 25 சதவிகித தலித் மக்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை. இங்கே இருக்கக்கூடிய பெரும்பாலான நிலங்களில் தலித் மக்களுக்கான பங்கு எத்தனை சதவிகிதம் இருக்கிறது? இங்கு தலித் மக்களிடம் ஒரு பிடி நிலம்கூட கிடையாது. அதிலும் சென்னையில் பூர்வகுடி மக்களுக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. இன்று ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் என கைதுசெய்துள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. ஆகையால் நியாயமான விசாரணை வேண்டும்''’என்றார்.
இறுதியாகப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "இந்த அமைதிப் பேரணியின் நோக்கமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி தேடுவதுதான். பட்டியலின மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களை நீங்கள் ரவுடி என சித்தரிப்பீர்களானால், நாங்கள் ரவுடிகள்தான். காவல்துறையை நாங்கள் நம்புகிறோம். காவல்துறை விசாரணைமீது நம்பிக்கை இழந்தால் எங்களுடைய முடிவுகள் மாறும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சந்தே கங்கள் உள்ளன. தமிழகத்தில் தனித்தொகுதிகளில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எப்போது குரல் கொடுப்பீர்கள்? குரல் கொடுக்க வில்லை என்றால் பதவிகளை ராஜினாமா செய்துவிடுங்கள். இந்த மக்கள் அரசியல் அதிகாரமடைந் தால், அச்சமூகம் தனக்கான பாது காப்பையும் உறுதிப்படுத்திக்கொள் ளும் என அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் பட்டியலின மக்களை அடிமைகளாக வைத்துக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை. எங்களுக்கு பயமேதும் கிடையாது.
திருமாவளவன் அண்ண னுக்கு எதிராக நான் ஒருபோதும் இருக்கமாட்டேன். அவருடன்தான் இருப்போம். எப்போதும் பா.ஜ.க. வுக்கு நேரெதிரானவர்கள் நாங்கள். எங்களை அவர்களின் பி டீம் என பிம்பம் உருவாக்காதீர்கள். தமிழகத் தில் பல ஆணவக் கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. குடிநீர்த்தொட்டியில் மலம்கலந்த விவகாரத்தில் இன்றுவரை குற்ற வாளிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஏன்? எங்கள் தலைவருக்கு சென்னைக்குள் மணிமண்டபம் கட்ட இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும்''’என கொந்தளித்தார்.
-அருண்