கடலூர் மாவட்டத்தில் 7 பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்ததற்கு இந்திய ஜனாதிபதி இராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி என இந்திய ஆளுமைகள் தொடங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை, பல தலைவர்களும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள அ.குச்சிப்பாளையம் புதுக்காலனி, பழைய காலனி பகுதியின் அருகிலேயே கெடிலம் ஆறு ஓடுகிறது. இப்பகுதி மக்கள் தங்களது இயற்கை உபாதைகளைக் கழிக்கவும், குளிக்கவும் ஆற்றைப் பயன்படுத்திவருகிறார்கள். கிராம ஊராட்சியின் மோட்டார் பழுதடைந்ததால் 2 நாட்களாக தெருக்குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற 7 பெண் பிள்ளைகள் ஆற்றில் கொஞ்சமாய் இருந்த தண்ணீரில் கால் கழுவச் சென்றபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாலாவிடம் பேசினோம், “"எங்க பையன் குணால் (எ) குணாவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த உத்திரவேல் மவ ஹரிப்பிரியாவுக்கும் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கல்யாணம் நடந்தது. குணா பெயிண்டிங் வேலைக்கு போவான். மருமவ பத்தாவது படிச்சிருக்கு. ஆனாலும் புதுசா கல்யாணம் ஆனதால எந்த வேலைக்கும் அனுப்பலை. அயன்குறிஞ்சிப்பாடி யிலுள்ள என் வீட்டுக்காரரோட அக்கா மவ நிலாவும், அவ புருசன் ராஜகுருவும் பிள்ளைங் களோட விடுமுறைக்காக ஒரு வாரத்திற்கு முன்ன இங்க வந்துட்டுப் போனாங்க.
அவங்க பிள்ளைங்க பிரியதர்ஷினியும், திவ்யதர்ஷினியும் இங்கேயே இருந்துதுங்க. அன்னைக்கு (5.6.2022) மதியம் 12 மணி இருக்கும். எங்க மருமவளும், ஊரிலிருந்து வந்திருந்த பசங்களும், வெளிவாசல் போயிட்டு வரோம்னு சொல்லிட்டு போச்சுங்க. அவங்க 3 பேரோட எங்க மக நவநிதா, சின்ன மகன் மோதீன், எம் புருசனோட மச்சான்கள் அமர்நாத் மகள் மோனிஷா, சங்கர் மகள் சங்கவி, எங்க தெரு முத்துராமன் மகள் சுமுதா என 8 பேர் போனாங்க. வெளிவாசல் போயிட்டு கால் கழுவுவதற்காக ஆற்றின் முன்பகுதி யிலிருந்த தண்ணில எம் புருசனோட அக்கா பேத்திகள் இறங்கியிருக்காங்க. அப்ப தடுமாறி புள்ளைங்க ரெண்டும் தண்ணிக்குள்ள விழுந்து, சேத்துல சிக்கியிருக்காங்க. அவங்கள காப் பாத்தறதுக்காக ஒவ்வொருத்தரும் மாறி மாறி சேத்துக்குள்ள சிக்கி, வெளியே வரமுடியாம சத்தம் போட்டுருக்காங்க. உள்ளே சிக்கினவங்க தன்ணீரை குடிச்சி அதிலிருந்து மீளமுடியாம மூழ்கிட்டாங்க.
இத பார்த்துக்கிட்டிருந்த என் கடைசி மவன் மோதீன் ரோட்டுக்கு ஓடிவந்து சம்சா கடையில் சம்சா போட்டுக்கிட்டிருந்த பசங்களிடம், "அண்ணே எங்க அக்காங்க ஆத்துல மூழ்கிட்டாங்க… மூழ்கிட்டாங்க''ன்னு அழுதுகிட்டே சொல்லியிருக்கான். அங்கிருந்தவங்க ஓடிப்போய் மூழ்கினவங்களை காப்பாத்தறக்குள்ள எல்லோரும் இறந்துபோயிருக்கிறார்கள். இங்க இருக்கற பெரும்பாலான வீடுகள்ல பாத்ரூம் வசதியில்லை. அதனால் பெண் பிள்ளைங்க ஒதுங்க இடம்தேடி ஆத்துக்குத்தான் போகணும். இப்படி ஒரேடியாக போயிடுவாங்கன்னு கனவுலகூட நினைச்சிப் பார்க்கலையே''…என்று கதறினார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் கடலூர் பாபு, "கெடிலம் ஆற்றின் குறுக்கே இப்பகுதியில் தடுப்பணை கட்டும்போது அதனைக் கட்டிய ஒப்பந்ததாரர்கள், இப்பகுதியில் ஆற்றுமணல் எடுப்பதற்காக ஜே.சி.பி. மூலம் தோண்டிய பள்ளத்தில் சிக்கிதான் 7 பேர் பலியாகி இருக் கிறார்கள். ஆற்று மணலை அள்ளுவதற்கு நீதிமன்றம் விதித்த விதிகளின்படி அள்ளியிருந்தால் இதுபோன்ற பள்ளமும், சேறும் இருந்திருக்காது. உள்ளூர் அளவிலும் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி வெளியில் விற்பனை செய்கிறார்கள். அதற்கு அரசியல் கட்சியினரும், ஊராட்சிப் பிரதிநிதிகளும் ஆதரவாக இருக்கிறார்கள். காவல்துறையோ கண்டும்காணாமல் அவ்வப்போது சிக்குபவர் களிடம் ‘கறந்து’விட்டு விட்டுவிடுகிறார்கள். ஆற்றை நிர்வகிக்கும் பொதுப்பணித்துறையும் கண்டுகொள் ளாமல் இருப்பதுடன், மணல் அள்ளுவதால் ஏற்படும் பள்ளங்களைச் சரிசெய்வதில்லை. இதனால்தான் ஆற்றுப்படுகைகளி லுள்ள பள்ளங்கள் தெரியாமல் சிக்கி சிறுவர்கள் உயிரிழக்கும் அவலம் அடிக்கடி ஏற்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது மட்டுமே அரசு இயந்திரங்கள் இயங்குவது போல் தெரியும். ஒரு மாதத்தில் அதை மறந்துவிட்டு, ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான். உயிரிழப்புகள் ஏற்படாமலிருக்க தொடர் கண்காணிப்பு தேவை. அலட்சியமாக இருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர், ஊராட்சி பிரதிநிதிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே மற்ற பகுதிகளில் அரசு இயந்திரம் முறையாக இயங்கும்''’என்கிறார்.
இதனிடையே, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பண்ருட்டி எம்.எல்.ஏ.வும் த.வா.க. தலைவருமான தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தனிப்பட்ட முறையில் மூவரும் தலா 25 ஆயிரம் அளித்தனர். அத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.
நடந்தபின் நடவடிக்கை எடுப்பதைவிட இத்தகைய அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க அரசு இயந்திரங்கள் முன்வர வேண்டும்.