நான்கு கோடி ரூபாய் கடத்தல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான பிடி இறுகத்தொடங்கியிருக்கிறது. இதனால் தி.மு.க. தலைமையிடம் சமரசமாகும் ரகசிய முயற்சியில் குதித்திருக்கிறார் நயினார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தின் முக்கிய சூத்திரதாரியான பா.ஜ.க. தொழில்துறை தலைவர் கோவர்த்தனிடம் கிடுக்குப்பிடி விசாரணையை நடத்தியிருக்கிறது தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீஸ். இதனால் பா.ஜ.க. மேலிடத்தில் எப்பவும் பதட்டம் சூழ்ந்தபடியே இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீசா ருக்கு உடனடியாக மாற்றப் பட்டது. நயினாருக்கு எதிரான இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசிக்கும் கோவர்த்த னிடமும், அவரது மகன் களிடமும் விசாரித்துள்ளனர். கொரியன் ரெஸ்டாரண்ட் மற்றும் கிளப்பில் இரண்டு முறை ரெய்டு நடத்தியுள்ளது சி.பி.சி.ஐ.டி.
கோவர்த்தன் மூலம் நயினாருக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை கூடுதலாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டிவரும் சூழலில், இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "பா.ஜ.க.வின் தேர்தல் செலவுகளுக்காக கட்சித் தலைமையிடமிருந்து சென்னைக்கும், கோவைக்கும் 200 கோடி ரூபாய் வந்திருக்கிறது. அந்த கோடிகளை பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளது தமிழக பா.ஜ.க. குறிப்பாக, பண விவகாரங்களை பா.ஜ.க.வின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகமும், பா.ஜ.க.வின் பொருளாளர் எஸ்.ஆர். சேகரும்தான் கையாள்வார்கள். அதேசமயம், எவ்வளவு பணம் அவசரமாகத் தேவைப்பட்டா லும் கோவர்த்தன் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுப்பார்.
சென்னைக்கு வந்த பணத்தை டிஸ்ட்ரிபியூட் பண்ணும் பொறுப்பை கோவர்த்தனிடம் ஒப்படைத்திருக்கிறார் கேசவ விநாயகம். கோவர்த்தனின் கொரியன் ரெஸ்ட்ராடெண்ட்தான் கோடிகள் புழங்கும் கேந்திரமாக இருந்துள்ளது. இது தொடர் பாக நிறைய விபரங்களை எடுத்துள்ளோம்.
சென்னையில் பல்வேறு இடங் களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணத்தை, நயினாரின் உத்தரவின் பேரில் அவரது ஆட்கள் சேகரித்து கோவர்த்தனின் கொரியன் ரெஸ்ட்ராண்டில் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்கள்.
அந்த கோடிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வேட்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி நயினாருக்கான பணத்தை எடுத்துக் கொண்டு ரயிலில் அவரது ஆட்கள் சென்ற போதுதான் பறக்கும் படையினரிடம் பிடிபட்டார்கள். இத்தகைய தகவல்களின் அடிப்படையில் தான், கோவர்த்தனிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், "கொரியன் ரெஸ்ட்ராரெண்ட் என்னுடயதுதான். அங்கு தேர்தல் தொடர்பாக எந்த பண பரிவர்த்தனையும் நடக்கவில்லை. பாரில் பணம் புழங்கியிருக்கலாம். பாரில் புழங்கும் பணத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?' என சாதுர்யமாக பேசியிருக்கிறார் கோவர்த்தன். ஆனால், சில ஆதாரங்களைக் காட்டி அதிகாரிகள் கேள்வி கேட்டபோது, கேசவவிநா யகத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார் கோவர்த்தன். தவிர, பல கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறியிருக்கிறார்.
இதற்கிடையே, சம்பவம் நடந்த நாட்களுக்கு முன்னும் பின்னுமான 10 நாட்கள் கொண்ட சி.டி.டி.வி. பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் எங்கே? நீங்கள் எடுத்துக்கொண்டு போனதாக ரெஸ்டாரெண்ட் ஊழியர்கள் சொல்கிறார்கள் என சி.பி.சி.ஐ.டி.யினர் கேட்டதற்கு, எனக்குத் தெரியாது என மலுப்பலாக பதில் சொன்னார் கோவர்த்தன். தொடர்ந்து நடந்த விசாரணையில், "எனக்கு உடல்நிலை ரொம்பவும் மோசமாக இருக் கிறது; என்னால் முடியவில்லை' என கோவர்த்தன் கெஞ்ச... "உடம்பை கவனிச்சுக்கிங்க; ஓரிரு நாளில் எங்க அலுவலகத்துக்கு வரவேண்டியதிருக்கும்' எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினர் அதிகாரிகள்'' என்று விவரிக்கின்றன சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள்.
ஹார்டு டிஸ்க்கைத் தேடி கொரியன் ரெஸ்டாரெண்ட் மற்றும் பாரில் மீண்டும் அதிரடி சோதனையை நடத்தியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். இதில் சம்மந்தப்பட்ட டிஸ்க்கை தவிர வேறு சில சி.சி.டி.வி. பதிவுகள் கிடைத்துள்ளன. 4 கோடி விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஹார்டு டிஸ்க்கை எப்படியும் கைப்பற்றிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார், "யார் அந்த கோவர்த்தன்? பல கோடி ரூபாய்களை அநாயசமாக கையாளும் அளவுக்கு எப்படி உயர்ந்தார்?' என்பது குறித்தும் புலனாய்வு செய்திருக்கிறார்கள்.
அப்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புதுப்பேட்டையில் மெக்கானிக்காக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கோவர்த்தன், தற்போது உலக அளவில் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய் கார் உட்பட பல்வேறு வகை கார்களையும் பங்களாக்களையும் வைத்திருக்கிறார். புதுப்பேட் டையில் அவர் மெக்கானிக்காக இருந்தபோது, பல்வேறு இல்லீகல் வேலையை பார்த்ததாகவும், அது தொடர்பாக அப்போதே பல கிரிமினல் வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி.க்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த வழக்குகள் என்ன என்பதை தோண்டத் தொடங்கியிருக்கிறது போலீஸ்.
இதுமட்டுமல்ல, கோவர்த்தனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கேசவ விநாயகம் மற்றும் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது சி.பி.சி.ஐ.டி. இந்த நிலையில், தன்னையும் போலீசார் குறிவைப்பதை உணர்ந்து கோவர்த்தன், நயினார் நாகேந்திரன், பால் கணகராஜ் ஆகியோரிடம் ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கிறார் கேசவ விநாயகம்.
இந்த ஆலோசனையை பா.ஜ.க.வின் தலைமையகமான கமலாலயத்தில் வைத்தால் லீக் ஆகிவிடும் என்பதால், கமலாலயத்துக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஹெஸ்ட்ஹவுசில் நடத்தியிருக்கிறார்கள். அந்த ஆலோசனையில், இந்த 4 கோடி விவகாரத்தை வைத்து நயினார் மட்டுமல்ல பா.ஜ.க.வின் முக்கியஸ்தர்களை வளைக்கத் துடிக்கிறது தி.மு.க. அரசு. அதனால், இதிலிருந்து தப்பிக்க, மாநில தலைவர் மூலம் அமித்ஷாவின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவர் மூலம் சபரீசனிடம் பேசலாம். சபரீசன் நினைத்தால் எல்லாம் சரியாகும். மாநில தலைவரிடம் நீங்கள் பேசுங்கள் என கேசவ விநாயகத்திடம் நயினார் நாகேந்திரன் சொல்லியிருக்கிறார்.
ஆனால், மாநில தலைவரை அமித்ஷா மதிக்கமாட்டார். அவர்மூலமாக அமித்ஷாவிடம் போனால் காரியம் கெட்டுவிடும். அதனால் நாமே சபரீசனை தொடர்புகொள்ள வேறு ரூட்டில் முயற்சிக்கலாம் என கேசவவிநாயகம் தெரிவிக்க, இதற்கு மற்றவர்களும் ஆமோதித் துள்ளனர். சபரீசனை அணுகும் ரகசிய முயற்சி பா.ஜ.க.வில் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ”கேசவவிநாயகத்துக்கு நெருக்கமான பா.ஜ.க. அரசு தொடர்புத்துறை பிரிவின் மாநில துணைத்தலைவர் சூரி என்பவர், "எனக்கு 100 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தெரியும், 100 ஐ.பி.எஸ். அதிகாரிகளைத் தெரியும், சி.பி.சி.ஐ.டி அன்பு எனக்கு நெருக்கமானவர் என சொல்லிக்கொண்டே, இந்த 4 கோடி விவகாரத்தை நான் முடித்துத் தருகிறேன்' என கேசவ விநாயகத்திடமும் நயினாரிடமும் உதார் விட்டுக் கொண்டிருக்கிறார். அவர் உதார் விடுவது கமலாலயத்தையே கதிகலக்கிக்கொண்டிருக் கிறது''’என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
சபரீசனை அணுக தனி ரூட்டில் கேசவ விநாயகம் முயற்சிக்கும் அதேசமயம், தி.மு.க.விடம் சமரசமாவதற்கு முதல்வர் ஸ்டாலினிடம் பேசுவதற்காக முக்கிய அமைச்சர்கள், உளவுத் துறை உயரதிகாரி ஒருவர் ஆகியோரின் உதவியை நாடியிருக்கிறார் நயினார் நாகேந்திரன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அப்செட்டாகியுள்ள நயினார், ஜூன் 4-க்கு பிறகு சட்டமன்றம் கூடும்போது முதல்வரை தனிப் பட்ட முறையில் சந்தித்து பேசும் திட்டத்தில் இருக்கிறார். ஆக, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவருக்கு தெரியாமல் 4 கோடி விவகாரத்தில் தி.மு.க.விடம் சமரசமாக பா.ஜ.க. வெள்ளைக் கொடி ஏந்துகிறது!