உள்நாட்டுக் குழப்பத்துக்கு பஞ்ச மில்லாத நாடு பாகிஸ்தான். அந்நாட்டை எந்தத் தலைவரும் நிம்மதியாக, முழுமையாக ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்சி செய்ததாக சரித்திரமில்லை. இந்த சரித்திரத்தில் தற்போது இம்ரான்கானும் இணைந்துள்ளார். 1992ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பெருமை பெற்ற இம்ரான்கான், தனது ஓய்வுக்குப் பின் அரசியலில் இறங்கி, பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ -இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கி, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தானின் பிரதமராகத் தேர்வுபெற்று அசத்தினார். இவரைத்தான் தற்போது பாகிஸ்தான் அரசியல் படுத்தியெடுத்துக் கொண்டிருக்கிறது.
இம்ரான்கானின் தற்போதைய நிலையைப் பார்க்கும் முன்பாக, அவரது கிரிக்கெட் சாதனைகள், அதையொட்டிய ப்ளேபாய் வாழ்க்கையைப் பார்க்கலாம்.
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் இம்ரான்கான், 1992ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமையை இப்போதுவரை தக்கவைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக ஜொலித்ததோடு, நிறைய கிரிக்கெட்டர்களை உருவாக்கினார். கிரிக்கெட் பவுலிங்கில் ரிவர்ஸ் ஸ்விங் என்ற முறையை அறிமுகப்படுத்தியவர் இம்ரான்கான். இம்ரான்கானின் வாழ்க்கையில், புற்றுநோயால் மரணித்த அவரது தாயார் நினைவாகத் தொடங்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அவருக்கு நற்பெயரைத் தந்துள்ளது. இவ்வளவு பெருமைக்குரிய கிரிக்கெட்டராகத் திகழ்ந்த இம்ரான்கானுக்கு அந்தப் புகழ் வெளிச்சமே தனிப்பட்ட வாழ்க்கையில் ப்ளேபாய் என்ற பெயரையும் கொடுத்தது.
அவர் பிரபல கிரிக்கெட்டராக ஜொலித்த காலகட்டங்களில் பெரிய காதல் மன்னனாகவும் அறியப்பட்டார். அவருக்கு இந்தியாவில் 1970, 80களில் பிரபலமாக இருந்த பாலிவுட் நடிகைகள் பலரோடு தொடர்பு இருந்திருக்கிறது. ப்ளேபாய் என்றே அவரைக் குறிப்பிட்டு எழுதும் அளவிற்கு அவரது டேட்டிங் கதைகள் இருந்திருக்கின்றன.
1970களில் பாலிவுட்டில் பிரபல கவர்ச்சி கதாநாயகியாக அறியப்பட்ட ஜீனத் அமனுடன் இம்ரான்கான் இணைத்துப் பேசப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1979ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது இம்ரானின் 27வது பிறந்த நாள் கொண் டாட்டத்தில் மும்பையில் நடந்த விருந்தில் ஜீனத்தை இம்ரான்கான் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் இருவருக்கிடையே காதல் எழுந்ததாகக் கூறப்பட்ட செய்தியை இருவருமே மறுக்கவில்லை. இரு நாடுகளிலும் அவர்களுக்கிடைப்பட்ட தொடர்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. இம்ரான்கான் அப்போது கிரிக்கெட்டராக மட்டுமல்லாது, செக்ஸியான ஆண் மாடல் போலவும் தன்னை வெளிப்படுத்தினார். பின்னர் அவர்களுக் கிடைப்பட்ட காதல் முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது.
இதேபோல் தமிழ்நாட்டிலிருந்து மும்பை சென்று பாலிவுட்டைக் கலக்கிய நடிகை ரேகாவுடன் இம்ரான்கான் இணைத்துப் பேசப்பட்டார். கிட்டத்தட்ட நடிகை ரேகாவை இம்ரான்கான் திருமணம் செய்து விட்டதாகவே பத்திரிகைகளில் செய்திகள் வெளி யாகின. எனினும் எதுவும் உறுதிப்படுத் தப்படவில்லை. ரேகாவுடன் ஒருமாத காலத்துக்கு இணைந்து வாழ்ந்ததாகவும், கடற்கரைகளில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்ததாகவும் கூட அப்போது செய்தி கள் கசிந்தன. அதேபோல் மும்பைக்கு வரும் போதெல்லாம் ரேகாவோடு இம்ரான் டேட்டிங் சென்றதாகவும் கூறப்பட்டது. பாலிவுட் நடிகை ஷப்னா ஆஸ்மியுடனும்கூட இம்ரான்கான் இணைத்துப் பேசப்பட்டார். ஆனால் அவர்களுக்கிடைப்பட்ட உறவு குறித்து இருவரும் வெளியே பேசிக்கொள்ள வில்லை. அதேபோல், இம்ரான்கானுக்கும் பெங்காலி நடிகை மூன்மூன் சென்னுக் கும் இடையிலான காதலும் பர பரப்பாகப் பேசப்பட்டது. இம்ரான் கானின் காதல் வலையில் சிக்காத பிரபல நடிகைகளே இல்லையென்ற அளவுக்கு, கிரிக்கெட்டில் அதிரடி ப்ளேயராகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் ரொமான்டிக் ப்ளேபாயாகவும் வாழ்ந்திருக்கிறார். இம்ரான்கானைப் பொறுத்தவரை, இந்திய சினிமா நடிகைகளோடு டேட்டிங் என்று ஊர்சுற்றித் திரிவதிலேயே ஆர்வமாக இருந்திருக்கிறார். அவர்களோடு திருமண வாழ்க்கை என்பதை அவர் விரும்பவில்லை.
இவற்றைத்தாண்டி, இவரது திருமண வாழ்க்கையும் பல்வேறு சர்ச்சைகளோடே அமைந்தது. பிரிட்டிஷ் திரைக்கதை எழுத்தாளரும் தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் விளையாடுவதற்காக லண்டன் சென்றபோது அவரைச் சந்தித்த இம்ரான், அவரைக் காதலித்தார். அவர்கள் இருவருக்கும் 1995ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஜெமிமா லண்டனைச் சேர்ந்தவர் என்பதால், ஆண்டுக்கு நான்கு மாதங்கள் லண்டனிலும், மீதியுள்ள மாதங்கள் லாகூரிலும் இருப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் சுலைமான் ஈசாகான் மற்றும் காசிம்கான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இம்ரான்கானுக்கும் சீதாவைட் என்ற பெண்ணுக்குமிடையே காதல் இருந்ததாகவும், சீதாவைட்டுக்கு டைரியன் வைட் என்ற மகள் இருப்பதாக வும், அவளுக்கு இம்ரான்கான்தான் தந்தை என்றும் சர்ச்சை கிளம்பியது. அதை இம்ரான்கான் மறுத்தார். பிரச்சனை நீதிமன்றத்துக்கு சென்றது. அரசியல் கட்சிகளும் அவரை விமர்சனம் செய்தன. இறுதியில் தனது மகள் என்பதை இம்ரான் ஒப்புக்கொண்டார். அப்போது சீதாவைட் மரணிக்கவும், அவரது மகளுக்கு தன் மனைவி ஜெமிமாவை கார்டியனாக நியமித்தார்.
ஜெமிமாவுடனான வாழ்க்கையும் 2004ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இம்ரான்கானின் குணம் சரியில்லையெனக் குற்றம் சுமத்திவிட்டு ஜெமிமா விவாகரத்து பெற்றார். அடுத்ததாக, 2015ஆம் ஆண்டு ஜனவரியில், பிரிட்டிஷ் -பாகிஸ்தானி பத்திரிகையாளரான ரெஹாம்கான் என்பவரை இம்ரான் மணந்தார். அந்தத் திருமண வாழ்க்கை ஓராண்டுகூட நீடிக்கவில்லை. 2015, அக்டோபர் மாதத்திலேயே அவர் இம்ரானைவிட்டுப் பிரிந்தார். இம்ரான்கானின் குணம் சரியில்லையென ரெஹாம்கான் குற்றம்சாட்டினார். இம்ரான்கானைக் போலவே ரெஹாம்கானும் ஏற்கனவே திருமணமானவர் தான். இம்ரானை இரண்டாவதாக திருமணம் செய்தார். இம்ரான்கானை பிரிந்த பிறகு மூன்றாவதாக ஒரு தொழிலதிபரை மணந்துகொண்டார். அதற்கடுத்ததாக, புஷ்ராபீபி என்ற பெண்ணை 2018, பிப்ரவரி 18ஆம் தேதி இம்ரான்கான் மணந்தார். புஷ்ராபீபிக்கு ஏற்கெனவே இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உண்டு. இம்ரான் கானை இரண்டாவதாகத் திருமணம் செய்தார். தற்போது வரை இவர்களின் திருமண வாழ்க்கை தொடர்ந்தபோதும் அடுத்தடுத்த வழக்குகளால் இனிவரும் காலத்தை சிறைக்குள் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்!
இம்ரான்கானின் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல், விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை விற்று, அதன்மூலம் கிடைத்த பணத்தில் மோசடி செய்ததாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராபீபி ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதையடுத்து 2022ஆம் ஆண்டில் இம்ரான்கான் பதவி விலகினார்.
அடுத்ததாக, அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அரசின் ரகசியங்களைக் கசியவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், இம்ரான்கானுக்கு 10 ஆண்டு கள் சிறைத்தண்டனை விதித்து ஜனவரி 30, செவ்வாயன்று கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, அதற்கடுத்த நாளில், தோஷகானா பரிசுப்பொருள் ஊழல் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைகளின் முடிவில், இம்ரான்கானும் அவரது மனைவியும் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டு, இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இம்ரான்கானும் அவரது மனைவியும், 10 ஆண்டுகளுக்கு அரசு பதவிகள் வகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் அபராதமாக 787 மில்லியன் அமெரிக்க டாலர் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்படுமென்றும் இம்ரான்கானின் தெஹ்ரீக் -இ -இன்சாப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இம்ரானின் மூன்றாவது மனைவி புஷ்ராபீபியை திருமணம் செய்தது சட்டவிரோதமானது என்று புஷ்ராபீபியின் முன்னாள் கணவர் காவர்மனேகா தொடர்ந்த வழக்கிலும் இம்ரானுக்கு எதிராகத் தீர்ப்பு வந்ததில், இம்ரான்கானுக்கும் அவரது மனைவி புஷ்ராபீவிக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இம்ரான்கானுக்கு 31 ஆண்டுகளும், இம்ரானின் மூன்றாவது மனைவிக்கு 21 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெதிராக மேல்முறையீட்டுக்குச் சென்றாலும் எந்த அளவுக்கு சாதகமாக இருக்குமென்பது கேள்விக்குறியே! ஆக, ஒரு காலத்தில் பிரபல கிரிக்கெட் பிளேயராகவும், ப்ளேபாயாகவும் வாழ்ந்த இம்ரான்கானின் ஒட்டுமொத்த பொதுவாழ்க்கையும் க்ளீன்போல்டாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுவரை மொத்தம் 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு அடியாலா சிறையில் உயர்மட்டக் கைதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிறையில் அவருக்கு பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. எனினும், சாதாரண கைதிகளைப்போல் இம்ரான்கான் சிறைச்சாலையில் தரப்படும் வேலைகளைச் செய்ய வேண்டுமென்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.