தமிழகத்தில் பழம்பெருமை வாய்ந்த புகழ்பெற்ற ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயத்திற்கென்று தனித்த வரலாறும் புகழும் உண்டு. தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர், பல்லவர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயங்களுக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான அசையும், அசையா சொத்துக்கள் இருக்கின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovilproperty.jpg)
அவைகளை பாதுக்காப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்து சமய அறநிலையத் துறை. ஆனால், அதற்கு பதிலாக சொத்துக்கள் கொள்ளை போவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள் துறையின் அதிகாரிகள். அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டிருக்கும் விவகாரம் தற்போது பூதாகரமாகியிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குப் போட்டுள்ள அமல்ராஜிடம் பேசியபோது, ""இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 1959-லிருந்து இயங்கி வருகிறது நுங்கம்பாக்கத்திலுள்ள அகஸ்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீபிரசன்ன வெங்கடேஷ்வர பெருமாள் கோவில். இந்த கோவிலுக்குச் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட சர்வே எண்களில் சுமார் 300 ஏக்கர் நிலசொத்துக்கள் உண்டு. இதில், சர்வே எண்கள் 451/1, 452/1 மட்டும் 14 ஏக்கர் (ஒரு ஏக்கர் என்பது 18 கிரவுண்ட்). அந்த நிலத்தில் தற்போது பெரிய பெரிய வணிக நிறுவனங்களும், வீடுகளும் உள்ளன. இவைகளில் பெரும்பாலான மனைகள், கட்டிடங்கள் போலி ஆவணங் கள் மூலம் விற்கப்பட்டும், பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலும் கொள்ளை போயிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovilproperty1.jpg)
கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த ராஜாபாதரின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி வள்ளியம்மாள் என்பவர் 1960-ல் அறங்காவலராக வருகிறார். பரம்பரை அறங்காவலராக பெண்கள் இருக்கக் கூடாது என்பது விதி. அதன்படி அந்தம்மாவை சஸ்பெண்ட் செய்கிறது இந்துசமய அறநிலையத்துறை. அவர் உயர்நீதிமன்றத்தை அணுக, சட்டப்பிரிவுகளை ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்றம் அந்தம்மாவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுகிறது.
ஆனால், துறையின் இணைக் கமிஷனர்களை கைக்குள் வைத்துக் கொண்டு கோர்ட்டின் டிஸ்மிஸ் ஆர்டரை துறையின் கோப்புகளில் பதிவு செய்யாமல் பார்த்துக் கொள்கிறார் வள்ளியம்மாள். இதனால் அந்தம்மாவே ட்ரஸ்டியாக தொடர்வதற்கு அறநிலையத் துறையின் இணை-துணை அதிகாரிகள் அனுமதித்துள்ள னர். இப்படி நடந்த தவறுகளால் கடந்த 40 ஆண்டுகளில் இந்த கோவில் சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் அறநிலையத்துறை அதிகாரிகள் துணையுடன் விற்கப் பட்டுள்ளன. இப்படி கொள்ளை போயிருக்கும் கோவில் சொத்துக்களின் தற்போதைய மதிப்பு சுமார் 25,000 கோடி ரூபாய்.
இதனையெல்லாம் கண்டுபிடித்து, கோவில் சொத்துக்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கின் விசாரணையில், கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், சம்மந்தப்பட்ட கோவில் சொத்துக்கள் பல பெரிய மனிதர்களிடம் இருப்பதாலும், இத்தகைய கொள்ளைகளுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாலும் நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அக்கறை காட்டவில்லை. இதனால், கோர்ட் அவமதிப்பு வழக்கும் போட்டுள்ளேன்'' என்கிறார்.
கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக நீண்டகாலமாக போராடிவரும் ஹரிஹரனிடம் நாம் பேசியபோது, ""கோவிலுக்குச் சொந்தமான 90 சதவீத சொத்துக்கள் விற்கப்பட்டு வெறும் 10 சதவீத சொத்துக்கள் மட்டுமே இப்போது உள்ளது. அவையும் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்கள் அரசாணைகளுக்கு மாறாக கிரையம் செய்யப்பட்டிருக்கிறது. மாற்று மதங்களைச் சேர்ந்த பலருக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளின் துணையுடன் கோவில் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovilproperty2.jpg)
மேலும், அகஸ்தீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டிலான 9 உபகோயில்கள் இப்போது எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை. கோவில் இடங்களுக்கான வாடகை, ஒப்பந்தம் போன்ற விபரங்கள் எதுவும் அறநிலையத்துறையிடம் இல்லை. ஆனால், இதன்மூலம் போக வேண்டிய கமிஷன் மட்டும் சரியாக போய்க்கொண்டிருக்கிறது. கோர்ட் உத்தரவிட்டாலும் நடவடிக்கை இல்லை. கொள்ளை போயிருக்கும் கோவில் சொத்துக்களை மீட்கும் வரை சட்டரீதியான எங்கள் போராட்டம் ஓயாது'' என்கிறார் ஆவேசமாக.
இந்து அறநிலையத்துறையின் ஆணையராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த பணீந்தர்ரெட்டி ஐ.ஏ.எஸ்., தமிழகம் முழுவதும் கொள்ளை போயுள்ள கோவில் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டிய நிலையில், திடீரென அவர் மாற்றப்பட்டு, கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.சை துறையின் ஆணையராக கடந்த மாதம் நியமித்தது எடப்பாடி அரசு. ஆணையராக பொறுப்பேற்ற பிரபாகர், நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துகள் மீதான கோர்ட் உத்தரவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவரை திசைதிருப்பி வருகிறார்கள் அறநிலையத் துறையினர். இந்த விவகாரங்கள் குறித்து பிரபாகரைத் தொடர்பு கொண்ட போது, ""கோர்ட் உத்தரவை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.
""தமிழக கோவில் சிலைகள் கடத்தப்பட்ட விவகாரம் கடந்த வருடங்களில் பூதாகரமானது போல, பெரிய மனிதர்கள் பிடியில் இருக்கும் கோவில் சொத்துக்களை மீட்கும் விவகாரமும் விரைவில் பூதாகரமாக வெடிக்கும்'' என்கிறார்கள் பக்தர்கள்.
-இரா.இளையசெல்வன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/kovilproperty-t.jpg)