தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா இருக்கும்போதே ஓ.பன்னீர்செவமும் தங்க தமிழ்ச்செல்வனும் ஜென்ம வைரிகளாக இருந்தவர்கள். ஜெ. மறைவுக்குப் பின் சசிகலாவின் ஆளுமையை விரும்பாத ஓ.பி.எஸ்., ஜெ. சமாதியில் தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். சசிகலாவின் ஆசிபெற்ற எடப்பாடியை ஏற்றுக்கொள்ள முடியாத தினகரனோ அ.ம.மு.க.வை ஆரம்பித்தார்.
தினகரனுக்கு அப்போது பக்கபலமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனோ, முன்னிலும் மூர்க்கமாக ஓ.பி.எஸ்.சை எதிர்க்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் டி.டி.வி.யின் போக்கும் வரத்தும் பிடிக்காமல் தி.மு.க.வுக்கு ஜம்பானார் தங்க தமிழ்ச்செல்வன் (டி.டி.எஸ்). போடியில் ஓ.பி.எஸ்.சை தோற்கடித்தே ஆகவேண்டும் என்ற ஒரே அஜெண்டாவுடன் தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து டி.டி. எஸ்.சை வடக்கு மா.செ.வாக நியமித்து, போடி, பெரியகுளம் தொகுதிகளை ஒப்படைத்தது தி.மு.க. தலைமை.
மாவட்ட உ.பி.க்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு சுறுசுறுப்புக் காட்டினார் டி.டி.எஸ். சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி. எஸ்.சின் மகன் எம்.பி. ரவீந்திரநாத், தனது நண்பர்களுடன் தனி விமானத்தில் மாலத் தீவுக்கும் மொரிஷீயஸ் நாட்டுக்கும் சென்று வந்தார். அப்போதே இதுகுறித்து அதிரடி தகவல்களை வெளியிட்டார் டி.டி.எஸ்.
மோடி சர்க்காரின் அமலாக்கத்துறையும் ரவீந்திரநாத் மீது கண் வைத்தது. அந்த சமாச்சாரம் என்ன ஆனது என்ற நிலையில்தான் சமீபத்தில் கேரள பத்திரிகை ஒன்றில், ஓ.பி.எஸ்.சுக்கு 2 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக பகீர் தகவல் வெளியானது. எதற்கெடுத்தாலும் எகிறிக் குதிக்கும் அப்பாவும் மகனும் இந்தச் செய்திக்கு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. சந்தர்ப்பத்திற்கு காத்திருந்த டி.டி.எஸ்.சும், ‘""ஓ.பி.எஸ். மறுப்பு தெரிவிக்காததிலிருந்து என்ன தெரியுது, 2 ஆயிரம் கோடிக்கு சொத்து இருக்குன்னு தெரியுது''’என மீடியாக்களிடம் அதிரடி கிளப்பினார்.
இப்பதான் உஷாரானார் ஓ.பிஎஸ். தனது ஆதரவாளரான கூடலூர் அ.தி.மு.க. ந.செ. அருண்குமாருக்கு கண் ஜாடை காட்டியதும், மீடியாவைக் கூட்டி னார் அருண்குமார். “""அண்ணன் ஓ.பி.எஸ். மீது அவதூறு பரப் பும் தங்க தமிழ்ச் செல்வன் மட்டும் யோக்கியமா? இரண்டு முறை எம்.எல்.ஏ., ஒருமுறை எம்.பி.யாக இருந்த டி.டி .எஸ்.சுக்கு சென்னையிலும் கம்பத்திலும் வீடுகள், கடைகள் ஏராளமா இருக்கு. இவ்வளவு ஏன் மேகமலையில் அவருக்கு சொந்தமான நூற்றுக்கணக் கான ஏக்கர் நிலம் எனது பெயரில்தான் இருந்தது. நான் அதிமுகவுக்கு வந்த போது, அவரது நண்பர் பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்து விட்டுத் தான் வந்தேன். டிடிஎஸ்.சுக்கு மொத்தம் 100 கோடி சொத்து இருக்கு''’என பொளந்து கட்டினார் அருண்குமார்.
இருதரப்பும் மாறி மாறி உண்மையைச் சொல்லியதால், முதலில் தங்க தமிழ்ச் செல்வனை தொடர்புகொண்டோம். ""தே.மு.தி.க. சார்பில் ஜெயித்து கூடலூர் நகராட்சி சேர்மனாக இருந்த அந்த அருண்குமாரை நான்தான் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்த்தேன். இனிமேலும் என்னைப் பற்றிப் பேசினால் சட்டரீதியாக அவர் மீது கேஸ் போடுவேன்.
இப்ப மேட்டர் என்னன்னா, எங்க கட்சியின் சார்பில் போடியில் நடந்த மக்கள்சபைக் கூட்டத்தில் கேரள பத்திரிகை செய்தியை மட்டுமல்ல, இந்த மாவட்டத்தில் லாபத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆலைகளை நட்டக்கணக்கு காட்டி மூடச்சொல்லி, அதுக் கப்புறம் அதே ஆலைகளை ஓ.பி.எஸ். வாங்கிய கதை, லட்சுமிபுரம் கிணறு விவகாரம் கிளம்பிய பின் வாங்கிய ஆயிரம் ஏக்கர், ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா வாங்கிக் குவித்துள்ள 10 ஆயிரம் ஏக்கர் இதைப் பத்தியெல்லாம் பேசினேன். எதற்கும் மறுப்பு சொல்ல தில் இல்லாத ஓ.பி.எஸ்., அருண்குமாரைத் தூண்டிவிடுகிறார். தளபதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஓ.பி.எஸ். சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்'' என சரமாரியாக பொளந்து கட்டினார் தங்க தமிழ்ச்செல்வன்.
இன்னொரு தரப்பான ஓபிஎஸ்.சிடமும் ரவீந்திர நாத்திடமும் விளக்கம் பெற பலமுறை முயற்சித்தும் பலனில்லை. அவர்களின் விளக்கத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
தேனி மாவட்டத்தில் இப்பவே தேர்தல் கிறுகிறுப்பும் விறுவிறுப்பும் ஆரம்பமாகிருச்சு.
-சக்தி
_______________
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிப்பு!
ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் இலங்கையின் ஆட்சியை மொத்தமாகக் கையில் எடுத்தபிறகு, அரசியல் சாசனத் திருத்தங்கள் மூலம் ஜனநாயகத்தின் பேரிலேயே சர்வாதிகார ஆட்சியை மேற்கொள் கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு மிச்சமிருந்த உரிமையும் பறிக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை பலம் ராஜபக்சே சகோதரர்களை ஆட்டம் போட வைத்துவரும் நிலையில்... யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குமுன் அமைத்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளது இலங்கை அரசு. தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தினை உலகிற்கு காட்டும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தை இடிப்பதை எதிர்த்து, இரவிலும் மாணவர்கள் கூடி நின்று போர்க்குரல் எழுப்பினர். இதயம் இல்லாத இலங்கை அரசு இடித்துப் போட்டுவிட்டது.
-கீரன்