ந்திய அளவில் மஹாராஷ்ட்ரா, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சி.பி.ஐ. விசாரணை, அதிரடி கைதுகள், நீதிமன்ற வழக்குகள், போராட்டங்கள் எனச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில், விடைத்தாள்களை மாற்றி மோசடியில் ஈடுபட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்பட 9 பேரை கடந்த 27ஆம் தேதி மதுரையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

xx

தமிழகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தப்பட்டபோது, மதுரை பழங்காநத்தத்திலுள்ள டி.வி.எஸ். லெட்சுமி தனியார் பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களின் விடைத்தாள்களின் கையெழுத்துகள் ஒரே மாதிரியாக இருந்ததை சிவகங்கையில் விடைத்தாள் திருத்தும்போது கண்டுபிடித்தனர். அந்த இரண்டு மாணவர்களும், இயற்பியல் உள்பட 3 பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மதுரையில் நடந்த விடைத்தாள்கள் திருத்தும் முகாமில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை கல்வித்துறை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான இளஞ்செழியன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், மகனின் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, இந்த புகார் குறித்து அரசுத் தேர்வு இணை இயக்குனர், மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்க வேண்டும் எனவும், பின்னர் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

Advertisment

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்தனர். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்திலுள்ள, மதுரை மாவட்ட கல்வி அலுவலகத்திலும் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னர், அங்குள்ள முதுகலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் பிரபாகரன், இளநிலை உதவியாளர் கண்ணன், ஆய்வக உதவியாளர் கார்த்திக்ராஜா, கணினி ஆசிரியர் பரமசிவம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதுபோல், இந்த வழக்கில் தொடர்புடைய மாணவர்களின் பெற்றோர் களான, இளஞ்செழியன், அவரது மனைவி வனிதா, டி.வி.எஸ். நகரை சேர்ந்த விநாயகமூர்த்தி அவரது மனைவி கார்த்திகா ஆகிய 4 பேர் மற்றும் ஒரு மாணவர் என 9 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். dasfமற்றொரு மாணவர் குறித்தும் விசாரிக்கின்றனர். இதில் இளஞ்செழியன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளராக பணியாற்றி வருவதாகத் தெரிகிறது. கைது செய்யப் பட்டவர்களில் 8 பேரை மதுரை மத்திய சிறையிலும், மாணவரை காமராஜர் சாலையிலுள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த விடைத்தாள் முறைகேட்டுக்காக கல்வித்துறை அதிகாரிகள் பல லட்சம் வரை பேரம் பேசி பணத்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த முறைகேடு தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை நடத்த இருக்கிறோம்'' என்றனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட கல்வி இயக்குனர் கார்த்திகாவிடம் பேசினோம். "சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணையின் அடிப்படையில் மதுரை மாவட்ட கல்வி அலு வலகத்தில் பணிபுரியும் நான்கு அரசு ஊழியர்களை கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளோம். மேலும் மாநில தேர்வாணையத்திலிருந்து சம்பந்தப்பட்ட பள்ளி குறித்தும், விடைத்தாள் திருத்திய முகாம்களில் வேறு ஏதாவது முறைகேடுகள் நடந்துள்ளனவா என்றும் முழுவீச்சில் விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.

Advertisment

தமிழ்நாடு கல்வி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி கூறுகையில், "தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும். இதில் என்ன கொடுமையென்றால், ஒரு மாணவனின் தந்தையான இளஞ்செழியன், ஒரு முக்கிய அரசு அதிகாரியாக இருந்துகொண்டு விடைத்தாளை மாற்றுவதற்கு லஞ்சம் கொடுத்தது மட்டுமல்லாமல், தேர்வுக்கான ரிசல்ட்டை கல்வித்துறை நிறுத்திவைத்ததை எதிர்த்து நீதிமன்றத்துக்கும் சென்றது அதைவிட கொடுமை. கொஞ்சம்கூட மனசாட்சி உறுத்தாமல் தவறுக்குமேல் தவறு செய்ததுதான் வேதனை. மேலும், தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி தேர்ச்சி விகிதத்தை கூட்டிக் காண்பிக்க சப்போர்ட்டாக இறங்கி யிருக்கின்றன. தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட பள்ளியையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால்தான் இதுமாதிரியான தவறுகள் நடப்பதைத் தடுக்க முடியும்'' என்றார்.

கல்வியின் தரம் கேள்விக்குறியாகாமல் தடுப்பது அரசின் கைகளில்தான் உள்ளது!