கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேமாளூர் கிராமத்திலுள்ள பழமையான ஏரிக்கு நீர்வரத்துக் கால்வாய் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய் பகுதி யிலுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் உடனடி யாக அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த ஒன்பதாம் தேதி, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 144 வீடு களையும் வருவாய்த்துறையினர் பொக்லைன் உதவியோடு அகற்றினர். அப்போது பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதமாக, தகவலறிந்த ரிஷிவந்தியம் தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்தார். அவர் கள் அனைவரையும் ஓரிடத்தில் அமரவைத்து, நீதிமன்ற உத்தரவு குறித்தும், அதைத் தடுப்பது தவறென்றும் எடுத்துக் கூறியவர், "அந்த இடத்தில் பல்லாண்டுகளாக வாழ்ந்துள்ள உங்க ளின் வேதனையை நான் உணர்கிறேன். வீடிழந்த 144 குடும்பத்தினருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இப்பகுதியிலேயே தற்காலிகமாகக் கழிப்பறையுடன்கூடிய வீடுகள் அமைத்துத் தரப்படும். மூன்று வேளையும் ஆட்களை வைத்து அனைவருக்கும் உணவு சமைத்துத் தரப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும்.
மூன்று மாத காலத்திற்குள், வீடிழந்த 144 குடும்பத்தில், யார் யாருக்கு சொந்த நிலம், வீட்டு மனை உள்ளது, வீட்டு மனை இல்லாதவர்கள் யார்? யாரென் பதை அதிகாரிகள் கணக்கெடுப் பார்கள். சொந்த வீட்டுமனை உள்ளவர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத் தில் வீடு ஒதுக்கீடு செய்து தரப்படும். வீட்டு மனை இல்லாதவர் களுக்கு இதே பகுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்கப் பட்டு, அங்கே கலைஞர் வீடு வழங்கப்படும். பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதி யளித்தார். அதோடு, 144 குடும்பங்களுக்கும் தலா பத்தாயிரம் என 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கினார்.
இதுபோன்று பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களின் துன்பங்களை அதிகார மட்டத்திலிருப்பவர்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்ற மாட்டார்கள். ஆனால் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உறுதியளித்தபடி பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும், அதில் கலைஞர் வீடும் கட்டுவதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். அவரது ஆறுதலான செயல்பாடு, அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக அங்குள்ள வர்கள் தெரிவித்தனர்.
-எஸ்.பி.எஸ்.