அண்மையில் ஒரு காணொலி வெளியிடப்பட்டது. அதில், ஈஷா யோக மையத்தை நடத்திக்கொண்டிருக்கிற ஜக்கி வாசுதேவ், இந்த சம காலத்தில் வாழும் ஒரு நல்லவர். அவரைப் போல ஒரு நல்லவர், இயற்கையைப் பாதுகாக்கிற ஒரு உத்தமர் இங்கே யாருமேயில்லை என்று பெருமைப்படுத்தப்பட்டது. ஈஷாவின் வன ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்திய நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் மீது வன்மம் கக்கப்பட்டிருந்தது.
அதோடு லதா, கீதா என்ற தங்களது இரு மகள்களையும் மொட்டையடித்து சந்நியாசம் கொள்ள வைத்த ஈஷா யோகா மைய தலைவர் ஜக்கியிடமிருந்து மீட்க போராடிக் கொண்டிருக்கும் பெற்றோர் பேராசிரியர் காமராஜும் சத்யஜோதியும் சொல்வது பொய் என்றும், ஈஷாவுக்கும் தங்களுக்குமுள்ள பிரச்சினையால் பழி சுமத்துகிறார்கள் என்றும், அவர்களுக்கு ஆதரவாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் முத்தம்மாளும் கம்யூனிஸ்ட் கட்சியிட மிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு போராடுகிறார் என்றும், உலகத்தில் ஜக்கியைத் தவிர எல்லாரும அயோக்கியர்கள் என்பதுபோல, வாங்கிய காசுக்கு மேலே கூவியிருந்தது அந்த காணொலி.
இந்த நிலையில் பேராசிரியர் காமராஜையும், சத்யஜோதியையும் சந்தித்து பேசினோம்.
"ஒரு யூ டியூப் சேனல் ஒன்றில் பேசுபவன் எங்களைப் பற்றி பொய் சொல்லியிருக்கிறான். உண்மையில் அவன்தான் அயோக்கியன். எங்களைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நக்கீரன் பத்திரிகைதான் ஆதரவு குரல் கொடுக்கிறது. மக்களுக்கான இயக்கங்கள் துணை நிற்கின்றன. எங்களது மகள் பிரச்சனைகளை, ஜக்கியின் மோசடித்தனத்தை முதலாவதாக வெளிக்கொண்டு வந்ததும் நக்கீரன்தான். பெத்த புள்ளைகளை 5 வருஷமா பாக்காம, பேசாம துடிச்சுட்டு இருக்கறோம். இந்த ஜக்கியப் போயி நல்லவரு, வல்லவருன்னு யூடியூப் சேனல்ல ஒருத்தன் பேசுறான்.
புள்ளைகளைப் பிரிச்சு வச்சு இருக்கற இந்த ஜக்கி என்னென்ன பண்றாருனு சொல்றேன் பாருங்க . சரோஜினி, மடக்காடு வெள்ளச்சி, முள்ளங்காடு சண்முகம், சசிகலா, காயத்ரிகிட்ட ஈஷாவுக்கு ஆதரவா பேசவச்சு, வெளியிட வச்சிருக்காங்க. இவங்க எல்லாருமே ஈஷாவுல வேலை செய்யறவங்க. அந்த உண்மைய வீடியோவுல மறைச்சுட் டாங்க. நாங்க எங்க புள்ளைகளைப் பாக்கத்தான் போராடுறோம். என் புள்ளைகளை நாங்க பார்த்தா, புள்ளைக எங்களோடேயே வந்துரும்னு தெரிஞ்சுதான் என் புள்ளைகளைப் பாக்கவிடமாட்டேங்குறாங்க.
ஹைகோர்ட்ல போய் புள்ளைகள பாக்க அனுமதிங்கன்னு சொல்லி கேட்டபோது, அனுமதி கொடுக்கணும்னு ஆர்டரோட போனா... "இப்போ பாக்க முடியாது, பிஸியா இருக்காங்க. உடம்புக்கு சரியில்லை அப்படி, இப்படி'ன்னு இப்ப வரைக்கும் பார்க்க விடமாங்டேங்குது ஈஷா நிர்வாகம். அது மட்டுமில்லாம இந்த கொரோனா சமயத்துல மளிகை சாமான், அரிசி எல்லாம் கொண்டு போய் ஆதிவாசி மக்களுக்கு நாங்க கொடுத்தோம் . அதைப் பொறுக்க முடியாம ஆளவச்சு அடிக்கவிட்டாரு ஜக்கி சாமியார். "அவரு மட்டும்தான் நிவாரணப் பொருட்களைக் கொடுக்கணும். நீங்க யாரு கொடுக்கறதுக்கு'ன்னு சைக்கிள் செயின், கத்தி எல்லாம் வச்சு மிரட்டினாங்க. அங்க போன் பண்ணி, இங்க போன் பண்ணி அங்கிருந்து மீண்டு வந்தோம்.
நாங்க இப்போ வந்துதான் அந்த மக்களை மாத்துறோமாம்னு சொல்றானுங்க. "டேய்... நீங்க இந்த இடத்துக்கு வர்றதுக்கு முன்னால இருந்தே நாங்க 40 வருஷத்துக்கு முன்னால இந்த மக்க ளுக்கு சமூக சேவை செஞ்சுட்டு இருக்க றோம்டா. இது ஜக்கிக்கும் தெரியும். அந்தாளே எங்ககிட்ட கேட்டாரு, "நீங்க சொன்னதைத்தான் இந்த மக்கள் கேட்கறாங்க, நான் சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க. என்னோட இணைஞ்சு செயல்படுங்க. நீங்க என்னோட ஆசிரமத்துக்கு வந்து தங்கிக்குங்க'ன்னு சொன்னது மறந்திருக்காது.
அதுக்கு நாங்க, "ஏன் சாமியார்? உங்க நிறுவனம் வேற. என் நிறுவனம் வேற. நாங்க எல்லாம் இணைக்கமாட்டோம். ஆஸ்ரமத்துக்கு நாங்க எதுக்கு வரணும்'னு சொல்லிட்டோம். அப்ப இருந்தே பிரச்சினைதான். அதுக்கப் புறம்தான் என் புள்ளைகளை சந்திச்சு... "உங்க அப்பா ஒரு லட்சம் பேரைத்தான் காப்பாத்துறாரு. நீங்க எங்கூட வந்துட்டா இந்த உலகத்தையே காப்பாத்தலாம். இந்த உலகத்துல அரசியல்வாதிகள் மோசம், அதிகாரிகள் மோசம், நீதித்துறையில ஊழல், நீங்க கல்யாணம் பண்ணிக்காதீங்க. நாமதான் இந்த நாட்டை காப்பாத்தணும். நான் ஒருத்தன்தான் நல்லவன்'னு மூளைச்சலவை பண்ணி ஆசிரமத்துக்கு கொண்டு போயிட்டாரு.
இப்போ அந்த யூடியூப் சேனல்காரன் முத்தம்மாளோட பொண்ணு காயத்ரிகிட்ட... "உங்ககிட்ட இருந்து ஈஷா, நிலத்தை எழுதி வாங்கிட்டாங்களா?'ன்னு கேட்கறான். அதுக்கு அந்தப் பொண்ணு, "அதெல்லாம் பொய். எங்க அம்மாவுக்கு லஞ்சம் கொடுத்து சொல்ல வச்சு இருக்காங்க'ன்னு சொல்லுது. கேஸ் என்னன்னு கூடத் தெரியாம ஒருத்தன் கேள்வி கேட்குறான். கேஸ் என்னான்னு தெரியாத அந்தப் பொண்ணு பதில் சொல்றதை போட்டு, ஈஷாகாரனுங்க யோக்கியனுங்கன்னு சொல்றான்.
கேஸ் என்னன்னா, ஆதிவாசி மக்களுக்காக பூமி தானமா யாரோ கொடுத்த 44 ஏக்கர் நிலத்தை முஸ்லீம் பேரு, கிறிஸ்டின் பேரெல்லாம் எழுதி நிலத்தை ஆட்டையப் போட்டுட்டாங்க. அதைய கேட்கப்போன சமூக ஆர்வலரான ராஜேஷ்குமாரை அடிச்சு கொன்னுட்டானுங்க . இப்பவரைக்கும் அந்த கொலையை கண்டே புடிக்கலை.
அப்புறம் அந்த வீடியோவுல இன்னொன்னு சொல்றான். இந்த வனப்பகுதியில மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாம். அதையே ஈஷாதான் தடுக்குதாம். ஈஷாவைவிட யாருமே மோசமானவங்க கிடையாது. பெத்தப் புள்ளைகளை பாக்க விடாம பண்ற நீயெல்லாம் ஒரு பிறவியா?
புள்ளைகளுக்கு சோம பானம், போதை மாத்திரை எல்லாம் கொடுக்குறாங்க. பெத்தவங்க மேல பாசம் வந்துறக்கூடாதுங்கறதுக்காக... வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, எலுமிச்சம் பழம் சாப்பிடக்கூடாது. பூண்டு, புளி எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சத்து உள்ளதை எல்லாம் சாப்பிட விடாம ஒரு ஜடம் மாதிரி வச்சிருக்காங்க . எல்லா புள்ளைகளுக்கும் பெத்தவங்களோட முழு சம்மதத்துலதான் மொட்டை அடிக்கி றோம்னு வாய் கூசாம பொய் சொல்லுறானுங்க.
அனுமதிச்சிருந்தா... அப்புறம் நாங்க எதுக்கு அழுதுட்டு இருக்கறோம்.? உலகத்தைக் காப்பாத்தணும்ங்கிறதுக்காக, 1000 புள்ளைகளுக்கும் மொட்டை அடிச்சு, கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டு, எதுக்குடா உன் புள்ள ராதேவுக்கு கல்யாணம் பண்ணி , அமெரிக்காவுல வாழ வச்சிருக்கே? சொத்தை காப்பாத்தவா?
இப்போ சினிமா வேற எடுத்துட்டு இருக்கானுங்களாம். அதுனாலதான் ஈஷா முழுக்க நடிகைகள் கூட்டம் களை கட்டுது. இப்படியெல்லாம் ஒரு சாமியாரு என கொதிக்கிறார் பேராசிரியர் காமராஜ்.
அவரது மனைவி சத்யஜோதியோ, "எங்க ரெண்டு பொண்ணுகளும் சாமி கும்பிடறதுக்கு தானே போனாங்க . அது நல்லதுதானேன்னு நினைச்சுத்தான் அனுப்பினேன். ஆனா வாத்தியார் புள்ளைய மக்காக்கி அங்கேயே வச்சுக்கிட்டாங்க. அய்யா முதமைச்சர் தளபதி அவர்களே... ஈஷா ஜக்கி வாசுதேவின் முகத்திரையை தொடர்ந்து கிழித்துவரும் இந்த நக்கீரன் பத்திரிகையின் வாயிலாக கை கூப்பி கேட்கிறோம். எங்கள் இரண்டு குழந்தைகளை ஈஷாவில் இருந்து மீட்டுத் தாருங்கள்'' என அழுகிறார் உடல் நிலை முடியாமல்.
44 ஏக்கர் நிலத்தை மீட்க ஹைகோர்ட்டில் சட்டரீதியாக போராடிவரும் முத்தம்மாளோ, "ஈஷாவிடம் எங்கள் நிலம் குறித்து கேட்க வில்லை, அரசாங்கத்திடம்தான் கேட்கிறோம். என் மகள்தான் காயத்ரி. அவளே என் மீது லஞ்ச குற்றச்சாட்டு வைக்கிறார். அவள் ஈஷாவில் வேலை செய்வதால் அவளை அப்படி சொல்ல வைத்திருக் கிறார்கள். நான் யாரிடம் லஞ்சம் வாங்கியிருக் கிறேன் என்பதை அவள் நிரூபிப்பாளா? இல்லை அவள் யாரிடமாவது லஞ்சம் வாங்கி எனக்கு கொடுத்துவிட்டு அப்படிச் சொல்கிறாளா? உண்மை யை சொன்னால்... எனக்கும், அவளுக்கும் 4 வருடமாகப் பேச்சு வார்த்தையே இல்லை.
பேராசிரியர் காமராஜ் சார 40 வருசத்துக்கு முன்னாலேயே எங்க மக்களுக்குத் தெரியும். அவர்தான் மகளிர் சுய உதவிக்குழு ஒன்றை உருவாக்கி, அது என்னவென்று சொல்லிக் கொடுத்து, அப்பவே 53,250 ரூபாயை லோன் கொடுத்து சிறு தொழில் செய்ய வைத்தார். அந்தப் பணம் இப்போது பல லட்சங்கள் மதிப்பு கொண்டது.
என் பொண்ணே எனக்கு எதிராய் பேசும்போது வீட்டை விட்டு வெளியே வர்றதுக்கே கூசுது .இந்த 44 ஏக்கர் நிலம் எங்கள் மக்களது நிலம். அது எங்கே என்று அரசைக் கேட்கிறோம்.
அந்த நிலம் எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை. நான் உண்மையாக இருந்து, இதற்காகப் போராடிக் கொண்டிருக்கேன். எனது உயிருக்கு எப்ப வேண்டுமானாலும் ஈஷாவால் ஆபத்து வரலாம்'' என்கிறார் அழுதபடியே.
அரசு நிர்வாகம் -அதிகாரிகள் -பிரபலங் கள் -பணபலம் என எல்லா வகையிலும் செல்வாக்கு பெற்றுள்ள ஈஷாவிடம் சிக்கி சின்னாபின்னமாகும் மக்களின் கடைசி நம்பிக்கை தமிழ்நாடு அரசும், நீதிமன்றமும்தான். அவர் களின் நியாயக் குரலை நக்கீரன் தொடர்ந்து எதிரொலிக்கும்.