பிரபஞ்சங்கள னைத்தையும் படைத்த இறைவனை வழிபட ஒரு சிறிய இலையே போதுமானது என்பது சான்றோர் கூற்று. ஒவ்வொரு தெய்வத்துக்கும் உகந்த இலைகள் என்று உள்ளன. விநாயகப் பெருமானுக்குகந்த இலை களாக வன்னியும் மந்தாரையும் கருதப்படுகின்றன. இவை தோன்றியதற்கான சுவையான வரலாறு புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
நந்தி கோத்திரர் என்ற முனிவரின் மகன் அவுரவர். அவரது மனைவி சுமேதை. இந்த தம்பதியரின் மகள் சமி. தௌமிய முனிவரின் மகனான மந்தாரனுக்கு சமியை மணம் செய்துவைத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vani_3.jpg)
திருமணம் முடிந்து மந்தாரன் சமியுடன் தங்கள் ஆசிரமத் துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, விநாயகரின் சாரூபத்தைப் பெற்றிருந்த புருசுண்டி முனிவர் எதிரே வந்தார். மந்தாரனும், சமியும் முனிவரது உருவத்தைக் கண்டு நகைத்தனர். இதனால் கோபம்கொண்ட புருசுண்டி முனிவர், "என்னைக் கண்டு நகைத்த நீங்கள் இருவரும் மரங்களாகக் கடவது'' என்று சபித்தார்.
முனிவரின் சாபத்தைக் கேட்டு வருந்திய இருவரும், தாங்கள் அறியாமையினால் செய்த பிழை யைப் பொறுத்தருளும்படி முனிவரிடம் வேண்டினர். அவர்கள் வேண்டுதலுக்கிரங்கிய முனிவர், "விநாயகர் உங்களிடம் எழுந் தருளும் போது நீங்கள் சாபநிவர்த்தி பெறுவீர்கள். விநாயகர் அருளால் மரவுருவம் நீங்காமலே நீங்கள் பெருமையுடையவர்களாவீர்கள். உலகம் உள்ளளவும் இந்த வனத் திலேயே வசித்திருங்கள். முடிவில் முக்திபெறுவீர்கள்'' என்று கூறினார்.
முனிவரின் சாபப்படி மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் மாறினர். அதனால் அவர்களால் ஆசிரமத் துக்குச் செல்லமுடியவில்லை. அவர் கள் திரும்பி வராததால் மனக் கலக்கமடைந்த தௌமியர் அவரவரிடம் தூதுவர் களை அனுப்பினார்.
தூதுவர்கள் அவரி டம் சென்று கேட்ட போது, சமியும் மந்தாரனும் பல நாட்களுக்கு முன்பே புறப் பட்டுச் சென்றுவிட்டதாகக் கூறினார்.
அவர்கள் இருவரையும் பல இடங்களில் தேடியும் அவர்களைக் காண முடியவில்லை. தௌமியர் தன் ஞான திருஷ்டி யால் அவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிந்து கொண்டார்.
வருத்தம்கொண்ட தௌமியர், சமியின் தந்தை அவுரவரிடம் சென்று, மந்தாரனும் சமியும் மரமாகும்படி சபிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கூறி, அவர்களை சாபத்திலிருந்து விடுவிக்க தாங்கள் இருவருமாகச் சேர்ந்து ஏதாவது முயற்சி செய்யவேண்டுமென்ற கருத்தையும் கூறினார்.
இருவரும் 12 ஆண்டுகாலம் விநாயக மந்திரத்தை ஜெபித்து விநாயகரை தியானம் செய்தனர். அவர் களது தவத்தில் திருப்தியுற்ற விநாயகர் பத்து கரங்கள் உடையவராய், யானை முகத்துடன் சிங்க வாகனத்தில் அமர்ந்த நிலையில் அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
முனிவர்கள் இருவரும், தங்கள் மக்கள் சாபத்தின் காரணமாக மரமாகிவிட்டதைக் கூறி, அவர்களுக்கு சாபவிமோசனம் அருளுமாறு வேண்டினர்.
விநாயகர், "புருசுண்டி எனது அம்சமாக விளங்குபவர். அவர் கொடுத்த சாபத்தை யாராலும் மாற்றமுடியாது. அதனால் அவர்கள் இருவரும் மரமாகவே இருப்பார்கள். என்றாலும் நீங்கள் இருவரும் கேட்டுக்கொண்டதால் அவர்கள் சிறப்பு பெறுவதற்கு நான் அருளுகிறேன். வன்னி, மந்தாரை ஆகியவற்றின் இலைகளைக்கொண்டு என்னை வழிபடுவோர், நேரடியாக என்னையே பூஜித்த பலனைப் பெற்று தங்கள் துன்பங்கள் நீங்கப்பெறுவர். மந்தாரை, வன்னி ஆகிய இரண்டு பத்திரங்களால் எம்மை பூஜிப்பவர் அறுகம்புல் சாற்றி பூஜித்த பலனைப் பெறுவர்'' என்று அருளினார்.
அவர்களுக்கு காட்சிதந்த விநாயகர் அந்த வன்னி, மந்தார மர நிழல்களில் எழுந்தருளினார்.
அதுமுதல் தௌமியர், அவுரவர், தேவர்கள் மற்றும் முனிவர்கள் எல்லாரும் வன்னி, மந்தாரை இலைகளால் விநாயகரை வழிபட்டனர்.
அறுகம்புல் இல்லாத குறையை மந்தாரை மலர் நிரப்புவதாலும், அறுகும் மந்தாரையும் இல்லாத குறையை வன்னி இலை நிரப்புவதாலும், உலகிலுள்ள இலைகள் எல்லாவற்றிலும் வன்னி இலை விசேஷமானது என்பதாலும், சிவபெருமான் வன்னி இலையை தமது சடாமகுடத்தில் அணிந்திருக்கிறார்.
விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபங்களை விளக்கும் ஐந்து வகை மரங்களில் வன்னி மரம் அக்னி சொரூபம். யாகாக்கினியானது எப்போ தும் வன்னியில் வாசம் செய்கிறது.
பாண்டவர்கள் அக்ஞாத வாசத்தின் போது சகாதேவனின் யோசனைப்படி தங்கள் ஆயுதங்களை வன்னிமரப் பொந்து ஒன்றில் மறைத்துவைத்தனர். போருக்குச் செல்லும்போது அவற்றை எடுத்துச் சென்று வெற்றிபெற்றார்கள் என மகாபாரதம் கூறுகிறது.
வன்னி மரம் வெற்றி தேவதையின் வடிவமாக வழிபடப்படுகிறது. வன்னி வெற்றியைத் தரும் மரம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/vani-t.jpg)