மது பாரத தேசம் பலவித மான பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கிருஷ்ண பகவான் பிறந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி என்றும், இராமபிரான் பிறந்தநாளை ராம நவமி என்றும் வணங்கிப் போற்றுகிறோம். இவ்விதம் தெய்வம் மனித உருவில் அவதரித்த தினத்தை, மங்களகரமாகக் கொண்டாடுவது இயல்பு தான்.

ஆனால் ஒருவன் இறந்துபோன நாளைக் கொண்டாடுவதும் நடக் கிறது. அந்த நன்னாள் தீபாவளிப் பண்டிகைதான். ஒருவன் மரண மடைந்த நாளை மகிழ்வாகக் கொண்டாடவேண்டுமென்றால், அவன் எத்தனைக் கொடூரமானவனாக இருந்திருக்கவேண்டும்?

அவன் பெயர் நரகாசுரன்.

பகவான் மகாவிஷ்ணு வராக அவதாரமெடுத்த காலத்தில், அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்த வன்தான் நரகாசுரன்.

Advertisment

இவன் பிராக்ஜோதிஷபுரம் என்னும் நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டுவந்தான். அந்நகரினுள் யாரும் நுழையாதபடி, பெரிய மதில் சுவர்களை அமைத்திருந்தான். மேலும் ஆயுதங்கள், நீர், அக்கினி, காற்று போன்றவற்றால் அமைக்கப்பட்ட பல கோட்டைகள் அந்நகரைக் காத்துவந்தன. இது மட்டுமின்றி முராசுரன் என்பவன் தன் ஐந்து தலைகளுடன் அந்நகரைக் காவல் காத்துவந்தான்.

நரகாசுரன், பகவானுக்கும் பூமாதேவிக்கும் பிறந்த மகனென்றாலும், அசுர குணத்துடன் வளர்ந்தான். வருணனுடைய குடையையும், இந்திரன் தாயாரான அதிதியின் குண்டலங் களையும், அவனுடைய நாடான மணி பர்வத்தையும் கவர்ந்துகொண்டான்.

ஒருசமயம் கிருஷ்ணன், சத்யபாமாவின் வீட்டில் தங்கியிருந்தார். அவரைக் காணும் பொருட்டு அங்குவந்த இந்திரன், நரகாசுர னால் தானும் பிறரும் படும் துன்பங்களைக்கூறி, காப்பாற்றும்படி வேண்டினான்.

Advertisment

உடனே கிருஷ்ணன் சத்யபாமாவுடன் கருடன்மீது ஏறிக்கொண்டு, பிராக்ஜோதிஷம் சென்றார். தனது கதாயுதத்தால் மலைகளைப் போன்ற மதில் சுவர்களைத் தகர்த்தெறிந் தார். அக்னி, நீர், வாயு போன்றவற்றைத் தனது சக்கரத்தால் அறுத்தெரிந்தார். பின்னர் பாஞ்சஜன்யம் என்ற தன் சங்கை முழங்க ஆரம்பித்தார். இந்த சங்கின் முழக் கத்தைக்கேட்டு, முராசுரன் நடுநடுங்கிப் போனான். அவன் கூர்மையான முனைகள் கொண்ட சூலத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனைக் கொல்லும் பொருட்டு ஓடிவந்தான்.

முராசுரனின் ஐந்து முகங்களும் கோபத் தால் சிரித்து அட்டகாசம் செய்தன. கிருஷ்ணன் தன் பாணங்களால் சூலத்தை மூன்று துண்டுகளாக வெட்டினார். பின் தன் சக்கராயுதத்தை அனுப்பி, முராசுரனுடைய தலைகளைக் கொய்தார்.

ss

முராசுரனுக்கு தாமிரன், அந்தரீட்சன், சிரவணன், விபாவசு, வசு, நபஸ்வான், அருணன் என்று ஏழு புதல்வர்கள் இருந்தனர்.

இவர்கள் தங்களது தந்தையைக் கொன்ற கிருஷ்ணனைக் கொல்லும் பொருட்டு கோபத்துடன் ஓடிவந்தனர். கிருஷ்ணன் தன் ஆயுதங்களைக்கொண்டு அவர்களைக் கொன்றார். அவர்களுடைய சேனாதிபதி யான பூடன் என்பவரையும் கொன்றார்.

இதைக் கேள்விப்பட்டு நரகாசுரன் பெரும்படையுடன் கிருஷ்ணனுடன் யுத்தம்செய்ய வந்தான். கருடன் அவனது படையைத் தன்னுடைய மூக்கினாலும், நகத்தினாலும் ஒழித்துக் கட்டினார். தனித்து நின்ற நரகாசுரனை, கிருஷ்ணர். சூலாயுதத்தை அனுப்பி, அவனுடைய தலையைத் தனியாகத் துண்டித்து விழச் செய்தார். நரகன் மாண்ட செய்திகேட்ட தேவர்கள், பூமாரி பொழிந்து பகவானைத் துதித்தனர்.

அப்பொழுது நரகாசுரனின் தாயான பூமாதேவி அங்குவந்து, அசுரன் கவர்ந்து வைத்திருந்த அதிதியின் குண்ட லங்களையும், வருணனின் வெண்கொற்றக் குடையையும் ஒப்படைத்தாள்.

அசுரனுக்கு "பகதத்தன்' எனும் பெயரு டைய மகன் இருந்தான். அவனை அழைத்துவந்து, "தேவதேவா, சங்கு சக்கர கதாதரனே. நரகனின் புதல்வனான இந்த பகதத்தனுக்கு உங்கள் அருளாசியை வழங்குங்கள்'' என்று பணிவுடன் சேவித்தாள். பகவானும் அவனுக்கு ஆசிகள் வழங்கி. அந்நாட்டின் மன்னனாக்கி னார்.

முன்னர் பூமாதேவி கிருஷ்ணனிடம், தனது மகனான நரகாசுரனுக்கு மரணம் ஏற்படக்கூடாது என வரம் கேட்டாள். ஆனால் பகவான், அத்தகைய வரத்தைத் தரமுடியாது. வேண்டுமானால், பிறரால் மரணம் நேராது. தன்னால் மட்டுமே நேரும் என்றும், அவனை சம்ஹரிக்கின்ற நேரத்தில், பூமாதேவியையும் அருகில் வைத்துக்கொள்வதாகவும் வரமளித்தார். எனவேதான் பூமாதேவியின் அம்சமாகத் தோன்றிய சத்யபாமாவுடன் வந்து, நரகாசுரனை வதம்செய்தார்.

பின் கிருஷ்ணன், நரகாசுரனின் அரண் மனைக்குச் சென்று, அங்கு சிறைப் பட்டிருந்த பதினாறாயிரம் ராஜகுமாரிகளை மிட்டார். பின் இந்திரனின் தாயான அதிதியைச் சந்தித்து, அவளுடைய குண்டலங்களையும், வருணனை சந்தித்து குடையையும், மணிபர்வதத்தையும் கொடுத்தார்.

நரகாசுரன் இறந்தவுடன், அவன் தாயான பூமாதேவி, தன் மகன் இறந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் எனக் கேட்டதாகவும், அதுவே பின்னாளில் தீபாவளி எனும் பண்டிகையாகத் தொடர்கிறது எனவும் கூறப்படுகிறது. இறக்கும் தறுவாயில் நரகாசுரனே இவ்வரத்தை கிருஷ்ணரிடம் கேட்டதாகவும் சொல்வார்கள்.

மேலும் தீபாவளியன்று கண்டிப்பாக எண்ணெய்யை மிளகு, சீரகம் போட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்து, சீயக்காய் பயன்படுத்தி வெந்நீரில் குளிக்கவேண்டும் எனும் சாஸ்திரம் உள்ளது.

அன்று மகாலட்சுமியை வணங்குவது அவசியம். நிறைய இனிப்பு, காரங்கள் செய்து பூஜை செய்வர். அதோடு புதுத் துணிகளும் வாங்கி அணிந்து மகிழ்வர். பட்டாசுகளும் மகிழ்வு தரும்.

எல்லா பண்டிகைகளையும்விட, தீபாவளி பண்டிகை என்பது மிக மகிழ்ச்சியான நிகழ்வாகும். இனிப்புகள் சிறுவர்- சிறுமிகளை மகிழ்விக்க, புத்தாடைகள் மகிழ்ச்சிதர, பரிசுகள் முகங்களில் பூரிப்பு பெருகச் செய்ய என, அனைவரையும் ஒரேநாளில் சந்தோஷப்படுத்தும் பண்டிகை தீபாவளிதான். பெரியவர்களின் ஆசீர்வாதமும் மகாலட்சுமித் தாயாரின் பூரண அருளாசியும் அனைவருக்கும் கிடைக்கும் நன்னாள் தீபாவளிப் பண்டிகையாகும்.