"தங்கள்தேகம் நோய்பெறின்
தனைப் பிடாரி கோவிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழி
பூசைப் பலியை யிட்டிட
நங்கச்சொல்லும் நலிமிகுந்து
நாளும்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத் தெய்வமுங்க ளுருக்
குலைப்ப துண்மையே.'
(சிவவாக்கியர்)
கருவூரார்: தமிழர்களின் முதல்வனே, தமிழ்தந்த ஆசானே, இந்த பூமியில் மண், நீர், நெருப்பு ஆகிய மூன்றின் கூட்டுசக்தியால் உடல் உருவாகிறது; அந்த உடல் காற்று சக்தியால் உயிர்பெற்று அசையும் நிலையை அடைகிறது என்றும்; அந்த உடலை இளமை குறையாமல் வைத்துக்கொள்ள காயகற்ப மூலிகைகளைப் பற்றிய விவரங்களையும், உடலைவிட்டு உயிர்க்காற்று வெளியேறாமல் தடுத்து நீண்ட ஆயுளுடன் வாழ சூட்சும ரகசியங்களையும் எங்கள் அனைவருக்கும் கூறினீர்கள்.
ஆசானே, இதேபோன்று உயிரினங்களின் உடலில் மறைந்திருந்து ரகசியமாகச் செயல்படும் ஆன்மாவின் நிலைபற்றி இன்றைய தமிழ்ச்சங்கத்தில் எங்களுக்குக் கூறவேண்டும்.
அகத்தியர்: இந்த தென்பாண்டி நாட்டில் பிறந்து வளர்ந்து, தளராமல் முயற்சித்து செயல்பட்டு, உங்களுள்ளே மறைந் திருக்கும் அளப்பரிய ஆற்றலை உங்கள் பகுத்தறிவால் அறிந்து, அதை நடைமுறை வாழ்வில் செயல்படுத்தி எட்டுவிதமான சித்த சக்திகளையும் அடைந்து, மரணத்தை வென்றுவாழும் தமிழ்ச் சித்தர்கள் நீங்கள்.
சித்தர் பெருமக்களே, உங்களுக்கு நான் வழங்கியுள்ள பொறுப்பான பணியை நீங்கள் கவனமாகச் செய்துவரவேண்டும். இந்த மண்ணில் வாழும் மக்களிடையே தமிழர் அல்லாத சில மாற்றினத்தவர் உட்புகுந்து, தாங்கள் மட்டுமே உயர்வாக வாழவேண்டும் என்னும் எண்ணம்கொண்டு, தங்கள் சுயநல ஆசையால் மதம், இனம், ஆண்டான்- அடிமை, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்று பலவிதமான வழிமுறைகளில் ஆரவாரக் கூச்சலிட்டு, அகத்தியன் யான் அருளிய சைவ சித்தாந்தக் கருத்துகளுக்கு முரணாக, தமிழர்களின் நாகரிகத்துக்கு, பண்பாட்டிற்கு எதிரான சமயக் கருத்துகளைக் கூறி, மக்களின் மனதை மாற்றி தமிழர்களின் அடையாளத்தையும் தமிழ்மொழியையும் அழித்துவிட முயற்சிப்பார்கள்.
நம் தமிழ் மக்களிடையே மதம், இனம் என்ற பேதமில்லை. எனது வழிகாட்டுதலால் அனைத்து ஞானத்தையும் சித்த சக்தியையும் பெற்ற நீங்கள், ஒவ்வொரு மனிதரும் அவரவர் முற்பிறவிப் பாவ- சாபப் பதிவுகளை அறிந்து, அறிவுப்பூர்வமான வழியில் அதை நிவர்த்திசெய்து உயர்வான வாழ்வையடைய வழிகாட்டுங்கள். மனதின் மாயையை விலக்கி பகுத்தறிவு, ஞானம், ஆற்றல், வீரம், விவேகம் பெற்று, தன்னை அறிந்தவராக வாழ்ந்திட உண்மைக் கருத்துகளைக் கூறி மக்களின் சித்தம் தெளிவுபெறச் செய்யுங்கள். யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். அவர்கள் வாழ்வில் வளமும் நலமும் பெற சரியான வாழ்வியல் வழிமுறைகளைக் கூறுங்கள். உங்கள் சித்தர் பணி சரியான வழியில் தொடரட்டும்.
சித்தர் பெருமக்களே, இதுவரை யான் அறிந்த அனைத்தையும் உங்களுக்குக் கூறினேன். அவற்றையறிந்த நீங்கள், உங்கள் சுய அறிவு, சுய அனுபவத்தால் அதற்கும்மேல் வேறு என்னவெல்லாம் அறிந்துள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். கருவூர்சித்தர் கேட்ட ஆன்மா பற்றிய கேள்விக்கு உங்களில் ஒருவர் நீங்கள் அறிந்ததைக் கூறலாம். பதில் கூறப்போவது யார்?
ஒரு சித்தர்: ஆசானே, ஆன்மா பற்றிய சூட்சும ரகசியத்தை இங்குள்ள அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்துவைத்துள்ளனர்.
இருந்தபோதும் அகத்தியப் பெருமான் தலைமையில் நடைபெறும் இந்த தமிழ்ச் சங்கத்தில் அதைக் கூறி சித்தர் பெருமக்கள் மக்களின் ஒப்புதலைப் பெற விரும்புகிறேன். தலைமைச் சித்தர் அகத்தியர் எனக்கு ஆசிகூறி அனுமதி தாருங்கள்.
அகத்தியர்: யார், தேரையரா? மனித உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் முழுமையாக அறிந்து, மனிதனின் உடலுக்குவரும் நோய்களையும், அவை உருவாகும் காரணங்களையும், அந்த நோய்க்குரிய குறிகளையும், அதனால் ஏற்படும் துன்பங்களையும் அறிந்து, அந்த அனைத்து நோய்களையும் நீக்கும் மூலிகைகளையும் அறிந்து, அவற்றைக்கொண்டு மக்களைக் காப்பாற்றும் தேரையர், ஆன்மா பற்றிய உண்மைகளையும் அதன் செயல் களையும் நாம் அனைவரும் அறியும் வண்ணம் விளக்கிக்கூற தகுதியானவர் தான். இந்த தமிழ்ச் சங்கத்திலுள்ள அனைவருக் கும் இதில் மாற்றுக்கருத்து இருக்காது.
தேரையரே, எமது ஆசி உங்களுக்கு மட்டுமல்ல; இங்குள்ள அனைவருக்கும் எப்போதும் உண்டு. மேலும் யான் கூறும் வாழ்வியல் வழிமுறைகளை யும், சைவத்தமிழ்ச் சித்தாந்தக் கொள்கை களையும் கடைப்பிடித்து வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் எனது பூரண நல்லாசிகள் எப்போதும் உண்டு. அகத்தியன் யான் கூறிய பகுத்தறிவுக் கருத்துக்களையும், வாழ்வியல் நடைமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்பவர்களின் அகத்திலும், அனைத்து செயல்களிலும் யான் உடனிருந்து அருள்புரிவேன். என்னை வணங்குவதற்காக பணம் செலவழித்து, கால்நடைகள்போல் காடு, மலை தேடித் திரிபவர்களுக்கு நான் வசப்படமாட்டேன். அவர்களுக்கு என்னருள் கிடைக்காது. தேரையரே, இனி ஆன்மா பற்றிய உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.
தேரையர்: தமிழ்ச் சங்கத்தின் தலைமை ஆசான் அகத்தியருக்கும், தமிழ்மக்களிடம் மாயை, மடைமை குணம் உண்டாகாமல், அந்த குணம் இருந்தாலும் அதை நீக்கப் பாடுபடும் சித்தர்களுக்கும், இந்த தமிழ்ச் சபைக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மாவைப் பற்றி நானறிந்த உண்மைகளைக் கூறுகிறேன். இதைக் கேட்டு தங்களுக்குத் தோன்றும் அறிவுப் பூர்வமான கேள்வி களைக் கேளுங்கள். உங்கள் கேள்வி களைக் கொண்டு தான் நானறிந்த உண்மைகளை என் னால் முழுமையாகக் கூறமுடியும். மேலும் நான் இன்னும் அறியாதவற்றையும் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இப்போது நீங்கள் எனக்குத் தேர்வு வைத்துள்ள ஆசான்கள்.
இந்த பூமியில் மனிதன், விலங்கு, பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், ஊர்வன, பறப்பன, ஈ, எறும்பு வகை என அனைத்து உயிரினங்களுக்கும் உருவ அமைப்பு வெவ்வேறுவிதமாக இருந்தாலும், அவற்றின் உடலில் அக உறுப்புகளும் புற உறுப்புகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன.
போகர்: தேரையர் சித்தரே, உடலின் அக உறுப்புகள், புற உறுப்புகள் பற்றி விளக்கமாகக் கூறுங்கள்.
தேரையர்: மனித உடலில் கண்களுக்குத் தெரியாத மூளை, எலும்பு, நரம்பு, உணவுக் குழாய், ரத்தக்குழாய், இதயம், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, இரைப்பை, குடல், சிறுநீரகம், விந்துப்பை, கர்ப்பப்பை மற்றும் இந்த பூமியில் தண்ணீர் சுரக்கும் ஊற்றுகள் இருப்பதுபோல் உடம்பினுள்ளே இருக்கும் சுரப்பிகள் என இன்னும் பல உறுப்புகள் உள்ளன. இவை அக உறுப்புகளாகும்.
கண், காது, வாய், நாக்கு, பற்கள், மூக்கு, கைகள், கால்கள், ஆண்குறி, பெண்குறி, தோல், நகம் என நம் கண்களால் பார்க்கப்படும் அனைத்தும் புற உறுப்புகளாகும்.
அக உறுப்புகள், புற உறுப்புகள் ஆகியவை அனைத்து உயிரினங்களுக்கும் ஒன்று போலவே அமைந்துள்ளன. ஆனால் உணவைப் பிடித்து உண்ணமுடியாத பறவை களுக்குக் கைகள் இல்லை. மீன், பாம்பு போன்ற உயிரினங்களுக்கு கைகள், கால்கள் இல்லை. மனிதன் முதலான அனைத்து உயிரினங் களுக்கும் இயங்கும் உறுப்புகள், இயக்கும் உறுப்புகள், இயக்கப்படும் உறுப்புகள் என உடலுறுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதே போன்று அனைத்து உயிரினங்களுக்கும் ஆன்மாவின் நிலையும் ஒன்றுபோலவே உள்ளது.
போகர்: தேரையரே, அந்த உறுப்புகளைப் பற்றிய விவரங்களை விளக்கமாகக் கூறுங்கள்.
இயக்கும் உறுப்புகள்
மனிதன், விலங்கு என அனைத்து உயிரினங் களுக்கும் அவரவர் தலைப்பகுதியே முதன்மை யானது. தலைப்பகுதியில் மூளை, கண்கள், காதுகள், வாய், மூக்கு என்ற ஐந்து உறுப்புகள் உள்ளன. இந்த உறுப்புகள்தான் உடலின் அனைத்து உறுப்புகளையும் இயக்கி செயல்பட வைக்கின்றன. அதனால் தான் இவற்றை இயக்கும் உறுப்புகள் என்று சித்தர்முறை வைத்தியத்தில் கூறபடுகிறது.
வெளிப்புறத்திலுள்ள காட்சிகள், நிகழ்வுகள், பிம்பங்கள் என அனைத்தையும் மூளைக்குச் செலுத்தி, நாம் பார்த்ததன் தன்மைகளை நம்மை அறியச்செய்வது கண்கள்தான். நமது பார்வையால் நம்முள் ஒரு செயலை நாம் உருவாக்கிக்கொள்கிறோம்.
இந்த கண்கள்தான் ஒளியின்மூலம் (வெளிச் சம்) உண்டாகும் செயலைச் செய்யவைக்கிறது. எனவே கண்கள் இயக்கும் சக்தியாகும்.
காதுகள் ஒலியைக் கேட்கின்றன. அந்த சப்தம் நமது மூளைக்குச்சென்று அதுபற்றிய ஒரு செயல்பாட்டை நம்முள் உருவாக்குகிறது. காதுகள் ஒலி சம்பந்தமானவற்றால் நம்மை இயக்குகிறது.
மூக்கின் வழியாக உயிர்மூச்சுக்காற்று உடலினுள் சென்று, இதயத்தை இயங்க வைத்து இந்த உடலை அசையச்செய்து இயங்கச் செய்கிறது. எனவே மூக்கு இந்த உடலை இயக்கும் சக்தியாக உள்ளது.
வாயின் வழியாகதான் நமது உடல் வலுப்பெறத் தேவையான உணவு, நீர் போன்ற வற்றை உடலுக்குள் சென்று, வயிற்றுப் பகுதியை அடைந்து வயிறு, குடல் பகுதியிலுள்ள ஜீரண உறுப்புகளை இயங்கச் செய்கிறது. எனவே வாய், வயிற்றுப் பகுதியை இயக்கும் சக்தியாக உள்ளது.
கண்களும் காதுகளும் மூளையை இயக்கும் சக்தியாகவும், மூக்கானது இதயத்தை இயக்கும் சக்தியாகவும், வாயானது வயிறு, குடலை இயக்கும் சக்தியாகவும் உள்ளன.
உடலின் அனைத்து உறுப்புகளையும் இயக்கும் சக்தியாக மூளை அமைந்துள்ளது. சித்தர் பெருமக்களே, நாளைய தமிழ்ச் சபையில் மற்ற சக்திகளைப் பற்றி அறிவோம்.
"மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி
மகத்தான ஞானமெல்லாம் வந்ததென் பான்
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்
சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்
தியங்குவான் நோய்வரின் பூரணமே யென்பான்
செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து
முயங்குவான் சமாதிவிட் டேனையோ
யென்பான்
மூடனின் ஞானமெல்லா முலகில் பாரே.'
(சட்டைமுனிச் சித்தர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)