"ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது வாமே.'

Advertisment

(கூற்றுவன்- எமன்) (திருமூலர்)

சுந்தரானந்தர்: ஆசானே, மனிதர்கள் தன் அன்றாடச் செயல்களால் நட்டமாகும் உயிர்க்காற்றின் அளவை மூச்சுப் பயிற்சியின் மூலம் சமன்செய்து கொண்டால், இப்பிறவி யில் அவரவர் தங்களுக்கு நிர்ணயிக்கப் பட்ட ஆயுட்காலத்தை அவரவரே நீட்டித்துக் கொணடு நீண்டகாலம் வாழலாமென்று கூறினீர்கள். இந்த பூமியில் பிறக்கும் மனிதர்கள் நீண்ட ஆயுளுடன் வாழும் வழிமுறைகளை எங்களுக்குத் தெளிவாகக் கூறுங்கள்.

ss

Advertisment

அகத்தியர்: சுந்தரா, எதனையும் பகுத்தறிந்து செயல்பட்டு வாழும் பகுத்தறிவுச் சித்தர்களாகிய உங்களுக்கு, மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழும் வழிமுறைகளை இந்தத் தமிழ்ச் சபையில் கூறுகிறேன்; அறிந்துகொள்ளுங்கள்.

இந்த பூமியில், மனிதர்களைத் தவிர, விலங்கு, பறவையினம், நீர்வாழும் பிராணிகள், எறும்பு, பாம்பு, வண்டு, பூச்சி என அனைத்து உயிரினங்களும் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு என்ற ஐந்துவிதமான அறிவு நிலையில் பிறந்து வாழ்கின்றன.

இவை தங்கள் ஆயுட்காலம் முழுவதும் அன்றாடம் தன் பசிக்கு உணவைத் தேடுவதும், தன் இனத்துடன் இணைந்து இனவிருந்தி செய்துகொள்வதையும் தவிர, வேறெத னையும் செய்வதில்லை. அதனால் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்கால நாட்கள்வரை மட்டுமே பூமியில் வாழ்ந்து மடிந்துவிடுகின்றன.

மனிதர்கள் மட்டுமே ஆறறிவுள்ளவர் களாகப் பிறக்கிறோம். மனிதர்கள் உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இருப்பி டம் ஆகியவற்றை இயற்கை உருவாக்கித் தந்த பொருட்களைக்கொண்டு, வாழ்வை சுகமாக அமைத்துக்கொள்வது; பாவ- சாப- புண்ணியப் பதிவுகளை யறிந்து நன்மை- தீமைகளை உருவாக்கிக் கொள்வது; சரீரத்தை நோயின்றி பாதுகாத்துக் கொள்வது; எதிர்கால வாழ்வுக்கும், தன் சந்ததிகளுக்கும் தேவையான செல்வத்தைத் தேடி சேமித்து வைத்துக்கொள்வது போன்ற அனைத்தையும் செய்ய வைப்பது, மனிதர்களுக்கு மட்டுமே உள்ள ஆறாவது அறிவுதான்.

இந்த ஆறாவது அறிவினை மனிதர்கள் சரியாகப் பயன்படுத்தி, இயற்கையின் செயலைப் புரிந்து, இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நல்வாழ்வை அடையலாம். மேலும், பஞ்சபூதங்கள், கோள்கள், பிறப்பு- இறப்பு போன்ற அனைத்தின் உண்மைத் தன்மைகளை அறியச்செய்வதும், மனிதனின் மனமாயையை நீக்குவதும் இந்த ஆறாவது அறிவாகிய பகுத்தறிவேயாகும். அறிவை வாழ்வின் நடைமுறைச் செயல்களில் பயன் படுத்தி வாழ்பவன்தான் பகுத்தறிவாளன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என கூறுவார்கள். இது பொதுவான கருத்தாகும். ஒவ்வொருவருக்கும் மூச்சுக்காற்றின் ஆயுள் கணக்கு எவ்வளவு உள்ளதோ, அவ்வளவு ஆண்டுகள்தான் வாழ்வான். மனிதன் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலின்மூலமும் அவனது மூச்சுக்காற்றின் அளவு விரயமாகிக் குறைந்து கொண்டே வந்து, ஆயுளின் கடைசி மூச்சுக்காற்று அவன் உடம்பைவிட்டு வெளியேறி அது மீண்டும் வந்து உடலுக்குள் நுழையாமல், உயிர்க் காற்றின் சக்தி இல்லாத நிலையில் அவன் மரணமடைந்துவிடுகிறான். இதனை "விதி' என்று கூறுவார்கள்.

சுந்தரா, விதியால் உண்டாகும் மரணத்தை மனிதன் தன் மதியால்- அவனது ஆறாவது அறிவால் தடுத்துக்கொண்டு நீண்ட ஆயுளுடன் வாழமுடியும். இந்த உண்மைக்கு தமிழ்ச் சித்தர்களாகிய நாம் சாட்சியாக இருக்கிறோம். இந்த பூமியில் மனிதர்களாகிய நாம் தாய்- தந்தையின் இணைவால் உருவாக்கப்பட்டுப் பிறக்கிறோம்.

ஆனால், மரணம் அவரவரால் தீர்மானிக்கப் பட்டுதான் இறக்கிறோம். மரணமடைவதும், மரணிக்காமல் இருப்பதும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதும் அவரவர் கையில். சித்தர் பெருமக்களே, மூச்சுப் பயிற்சி (வாசியோகம்) செய்து, சுவாசக் காற்றைக் கட்டி, ஆயுளை நீட்டித்துக்கொள்ளும் வழிமுறையை அகத்தியனாகிய யான், எனது ஆறாவது அறிவான பகுத்தறிவால் அறிந்து, அதனை முறையாகப் பயிற்சி செய்து, அனுபவத்தில் சித்தி பெற்று சித்தர்கள் சபையில் உங்களுக்கு போதித்தேன். அதை முறையாகக் கடைப்பிடித்து பயிற்சி செய்து நீங்களும் மரணத்தை வென்று வாழ்கிறீர்கள். சித்தர்களாகிய நாம் மட்டும்தான் இந்த வாசியோகம்மூலம் பல யுகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

வாசி என்றால் காற்று என்று பொருளாகும்; யோகம் என்பது நாமடையும் நன்மை. வாசியோகம் என்பது மூச்சுக்காற்றின்மூலம் நன்மை யடைவதாகும்.

இன்று யான் அறிந்துகொண்ட வாசியோக, சித்த ரகசிய முறையை உன் வேண்டுகோளுக்கிணங்கி அனைத்து மக்களும் அறிந்துகொள்ளக்கூறுகிறேன். ஆறாவது அறிவான பகுத்தறிவால் வாழ்பவர்களுக்கும், அகத்தியன் முதலான சித்தர்கள் கூறிய சித்தர் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்களுக்கும் மட்டுமே இந்த வாசியோக மூச்சுப்பயிற்சி கிடைக்கப்பெற்று, தன் ஆயுளை நீட்டித்துக்கொண்டு பல நன்மைகளை அடைந்து வாழ்வார்கள்.

மனிதர்கள் தினமும் தாங்கள் செய்யும் வேலைகள்மூலம் குறைந்துகொண்டே வரும் உயிர்க்காற்றின் அளவை, ஓய்வாக இருக்கும்போது, மூச்சுப்பயிற்சி செய்து, குறைந்துவிட்ட மூச்சுக்காற்றினை சமன்செய்து ஆயுளை நீட்டித்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் 60 வினாடியில் (ஒரு நிமிடம்) 15 முறை சுவாசிக்கிறான் என்று கூறினேன். ஓய்வு நேரங்களில் ஒரு நிமிடத்திற்குப் பத்துமுறை, ஏழுமுறை, ஐந்துமுறை என சுவாசிக்கும் அளவினைப் படிப்படியாகக் குறைத்துத்கொண்டே வந்து, மூச்சுக் காற்றை சேமிக்கவேண்டும்.

வாசியோகம் செய்பவர்கள், தங்கள் மூக்கின் இடப்பக்கத் துவாரத்தை வலக்கை யின் சுட்டு விரலால் அடைத்துக்கொண்டு, வலப்பக்கத் துவாரத்தின் வழியாக ஐந்து விநாடி நேரம் மூச்சுக் காற்றை வேகமாக உள்ளே இழுக்க வேண்டும். உள்ளிழுத்த அந்தக் காற்றை ஐந்து விநாடிக்கு வெளி விடாமல், உடம்பினுள்ளேயே அடக்கி நிறுத்தவேண்டும். அதன்பிறகு வலக்கையின் கட்டைவிரலால் மூக்கின் வலப்பக்கத் துவாரத்தினை அடைத்துக்கொண்டு, இடப்பக்கத் துவாரத்தின்வழியாக உள்ளிருக்கும் காற்றினை மெதுவாக பத்து விநாடி நேரம் வெளிவிடவேண்டும். உள்ளிருக்கும் காற்றினை வெளிவிடும்போது வேகமாக விடக்கூடாது.

இதுபோன்று செய்வதால் ஒருமுறை மூச்சுக்காற்றினை உள்ளிழுத்து வெளிவிடும் காலஅளவு இருபது விநாடிகள்தான்.

அதாவது, காற்றை உள்ளே இழுப்பது ஐந்து விநாடிகள்; உடம்பினுள் அடக்கி நிறுத்துவது ஐந்து வினாடிகள்; வெளியிடுவது பத்து விநாடிகள்.

60 விநாடிகளில் 15 முறை சுவாசிக்கும் நாம் இப்போது இருபது விநாடிகளில் ஒருமுறை சுவாசித்து, ஒரு நிமிடத்தில் மூன்றுமுறை மட்டுமே காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். இதுபோன்று செய்வதால் 60 விநாடிகளில் 12 முறை அளவிலான சுவாசக்காற்றை சேமிக்கிறோம். அதாவது, ஒரு நிமிடத்தில் 40 விநாடிகள் நம் ஆயுளை சேமித்துக் கொள்கிறோம். ஒரு நாளில் நீங்கள் இதுபோன்று எவ்வளவு நேரம் காற்றினை சேமிக்கிறீர்களோ, அந்த அளவு உங்கள் ஆயுட்காலத்தை நீங்களே நீட்டித்துக்கொள்கிறீர்கள். விதியால் உண்டான உங்கள் மரணத்தை நீங்களே வாசியோகம் மூலம் தடுத்துக் கொள்கிறீர்கள்.

தினமும் மூச்சுக் காற்றினை உள்ளிழுத்து அடக்கி, பின் வெளியிடும் நேரத்தை எவ்வளவு நேரம் கூட்டிச்செய்ய முடியுமோ, அவ்வளவு நேரம் வாசியோகம் செய்யலாம்.

ஒருவன் உழைத்து சம்பாதித்த பணத்தை, தேவையற்ற செலவுகளைச் செய்து விரயமாக்காமல் சேமிப்பவன் பணக்காரனா வான். செல்வத்தை சேர்ப்பவனே செல்வந்தனா வான்.

தனக்கு நன்மைதராத செயல்களைச் செய்து பணத்தை செலவு செய்பவன் சொத்துகளை இழந்து ஏழையாகி வறுமை யும் துயரமும் அடைவான்.

பணத்தைப் பாதுகாத்து சேமிப்பது போல, தன் உயிர்க்காற்றை சேமித்து வைத்துக்கொள்பவன் தன் ஆயுளை சேமித்துக்கொள்வான்.

காற்றை விரயம் செய்பவன் அற்பாயுளில் மரணமடைவான். இவன் "விதியறியா மாந்தன்' ஆவான்.

ஒருவன் தன் பசிக்கு அவனேதான் உணவை சாப்பிட்டுக் கொள்ளவேண்டும்.

தாகத்திற்கு அவனேதான் தண்ணீர் குடித்துக்கொள்ளவேண்டும்.

தன் நோய்க்கு அவனேதான் மருந்து சாப்பிட்டு பத்தியமாக இருக்கவேண்டும்.

இதுபோன்றுதான் அவரவர் தன் மூச்சுக்காற்றை சேமித்து நீண்ட ஆயுளை அடைந்து கொள்ளவேண்டும்.

சரியை, கிரியை, தானம், தர்மம், பக்தி, பிரார்த்தனை போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களைச் செய்து, தன் ஆயுளை நீட்டித்து நீண்டகாலம் வாழமுடியாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சுந்தரா, வாசியோகத்தால் இன்னும் பல நன்மைகளை அடையலாம். அதைப்பற்றி நாளை சித்தர் சபையில் கூறுகிறேன். இன்று சபை கலையலாம்.

"வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்

வானில்வரும் ரவிமதியும் வாசி யாகும்

சிந்தைதெளிந் திருப்பானெவனோ யவனே சித்தன்

செகமெல்லாஞ் சிவமென்று யறிந்தோன் சித்தன்

நந்தியென்ற வாகனமே தூல தேகம்

நான்முகனே கண்மூக்குச் செவிநாக் காகும்

தந்திமுகன் சிவசத்தி உயிர் மூச்சாகும்

தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே.'

(வால்மீகி சித்தர்)

மனிதனின் உடல்- நந்திதேவர். மனிதனின் கண், மூக்கு, காது, நாக்கு- பிரம்ம தேவன். விநாயகர், சிவன், சக்தி- வடகலை, தென்கலை, கும்பகம் எனும் உயிர் சுவாசக்காற்று. பெற்ற தாய்- தந்தை- சூரியன், சந்திரன் ஆகும். எல்லா கடவுள்களும் மனிதனின் உடம்பிலும் உயிர்மூச்சுக்காற்றிலும்தான் உள்ளனர் என்பது வால்மீகிச் சித்தரின் கூற்றாகும்.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)