மாவாராஹி தேவி மந்திர்...
இந்த ஆலயம் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறது. தர்பாஸ்கஞ்ச் தாலுக்காவில்...கோண்டா மாவட்டத்தில் இது இருக்கிறது.
இந்த ஆலயத்திற்கு "உத்தரி பவானி மந்திர்' என்றொரு பெயரும் இருக்கிறது.
வருடத்தில் நான்கு நவராத்திரி களுமே இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
சித்திரை நவராத்திரி மிகவும் கோலாகலமாக பக்தர்களால் கொண்டாடப்படும் காட்சியைப் பார்ப்பதே ஒரு ஆனந்த அனுபவத்தைத் தரக்கூடியது.
அந்தச் சமயத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்டுவந்து அன்னையை வழிபடுவார்கள்.
தன்னைத் தேடிவரும் பக்தர்களின் வேண்டுகோளை வாராஹி தேவி நிறைவேற்றி வைப்பாள்.
கண்ணில் நோய் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அன்னை வாராஹியை வழிபட்டால், அந்தக் குறை நீங்கும் என்பது பொதுவான நம்பிக்கை.
இந்த ஆலயத்தின் வளாகத்தில் 1,800 வருடங்கள் பழமையான ஒரு ஆலமரம் இருக்கிறது. அந்த ஆலமரத்தின் பாலை கண்ணில் படும்படி செய்தால், கண்ணிலுள்ள நோய் சரியாகிவிடும் என பக்தர்கள் நம்புகிறார்கள். அந்த ஆலமரம் 500 மீட்டர் பரப்பளவில் இருக்கிறது.
கண்களில் நோய் இருப்பவர்கள் ஏராளமாக இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்.
திங்கட்கிழமையும், வெள்ளிக் கிழமையும் இங்கு அதிகமான கூட்டம் இருக்கும்.
இந்த ஆலயத்தைப் பற்றிய ஒரு கதை இது...
சரயூ நதியும் காக்ரா நதியும் ஒன்றுசேரும் இடத்தில் பாஸ்கா சுக்ரா கேத்தா என்ற இடமிருக்கிறது.
அங்கு வராஹ சுவாமி என்ற கடவுளுக்கு ஆலயம் இருக்கிறது. அந்த கடவுளை வழிபட வரும் பக்தர்கள் வாராஹி அன்னையையும் வழிபடுவார்கள்.
புராண காலத்தில் பகவான் விஷ்ணு வராஹ வடிவத்தில் (பன்றி) பூலோகத்தில் அவதாரம் எடுத்தார். அந்த இடம்தான் இது என்று கூறப்படுகிறது.
அந்த பகுதியில் இரண்ய காசியப் என்றொரு அரக்கன் இருந்திருக்கிறான்.
அவனுடைய தம்பியின் பெயர் இரண்யாச். அவனும் அரக்கன்தான். அவன் பூமியை கடலுக்குள் மூழ்கச் செய்கிறான்.
அப்போது பகவான் பிரம்மாவின் நாசியிலிருந்து பகவான் வராஹர் கட்டைவிரல் அளவில் வெளியே வருகிறார். வெளியே வந்து தன் உருவத்தை பிரம்மாண்டமாக ஆக்குகிறார். அவர் பூமியை கடலுக்குள்ளிருந்து வெளியே கொண்டுவருகிறார். அந்த இடத்தின் பெயர் அவத். வராஹர் தன் பற்களால் பூமியைத் தோண்டுகிறார். அந்த இடத்தில்தான் காக்ரா நதி ஆரம்பிக்கிறது. அப்போது தேவர்கள் அங்குவந்து அவரை வழிபடுகிறார்கள். மக்களும் வழிபடுகிறார்கள்.
"பசக்... பசக்...' என்று அவர்கள் கூறுகின்றனர். அதனால், அந்த இடம் "பாஸ்கா' என்று அழைக்கப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/varagi_8.jpg)
வராஹர் வேண்டிக்கொள்ள, சற்று தூரத்திலிருந்த முகுந்தபூர் என்ற கிராமத் தில் வராஹதேவி என்ற பெண் அவதரிக்கிறாள்.
அப்போது பிரம்மாவும் விஷ்ணுவும் "பவானி பிறந்துவிட்டாள்' என்று உரத்த குரலில் கூறுகின்றனர். தொடர்ந்து "அன்னை ஜெகதாம்பாள் பிறந்து விட்டாள்' என்றும் கூறுகின்றனர்.
மனநோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகின்றனர்.
பாகவத புராணத்தின் மூன்றாவது காண்டத்தில் வராஹர், வாராஹி...இருவரைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடத்தைப் பற்றியும் அதில் இருக்கிறது.
இந்த ஆலயத்திற்கு வந்து வழி பட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பொதுவான நம்பிக்கை.
"துர்க்கா ஸ்துதி'யின் 12-ஆவது சுலோகத்தில் "நான் என் பக்தர்களின் கஷ்டங்களை நீக்கி, அவர்களுக்கு செல்வம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை அளிப்பேன்' என்று அன்னை வாராஹி கூறுவதாக வருகிறது.
இந்த ஆலயம் கோண்டாவிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
சென்னையிலிருந்து கோண்டா 2,194 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. பயண நேரம் 37 மணி.
அருகிலிருக்கும் விமானத் தளம் லக்னோ. அங்கிருந்து கோண்டா 117 கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-12/varagi-t.jpg)