சித்தர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் பலவற்றை நாம் படித்திருக்கிறோம். ஆனால் அதற்கு சான்றாக இருப்பவை பழைய சுவடி கள்தானே தவிர, நிரூபிக்கப்பட்ட ஆதாரங் கள் இல்லை. ஆனால் மின்சாரம், போக்கு வரத்து, தகவல்தொடர்பு, புகைப் படம் போன்ற வசதிகள் வந்தபிறகு சில மகான் களின் அதிசய செயல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக ராம கிருஷ்ண பரமஹம்சர், ரமணர், சீரடி சாய்பாபா போன்றவர்களைச் சொல்லலாம். அது போல சில சந்நியாசிகள் செய்த சித்து களும் செவிவழியாகவும் நூல் வடிவிலும் அறியக் கிடைக்கின்றன.
என்னுடைய மாமனார் 1964-ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் கேள்விப் பட்ட நிகழ்ச்சியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக கல்லூரிக்கு ரெயிலில் செல்லும் மாணவர்கள் அரட்டை அடிப் பது, மற்ற பயணிகளைக் கிண்டல் செய்வது போன்றவற்றைப் பார்த்திருப்போம்.
அப்படி ஒருமுறை கல்லூரி மாணவர் கள் சிலர் ரெயில் பயணம் செய்யும்போது, அவர்கள் இருந்த பெட்டியில் காவியாடை உடுத்திய சந்நியாசி ஒருவரும் பயணித்தார். அன்றைக்கு மாணவர்களுக்குக் கிடைத்த முக்கியமான கதாபாத்திரமாக அவர் மாறி விட்டார்.
அந்த மாணவர்கள் தமிழிலும், ஆங்கிலத் திலும் சில மறைமுகமான வார்த்தைகள் கலந்த நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளி வீசியிருக்கின்றனர். மாணவர்களில் ஒருவன், நகைச்சுவைத் துணுக்குகளை அதிகமாக அள்ளி வீசி கதாநாயகனாகத் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறான்.
இந்த நகைச்சுவையெல்லாம் தன்மீது தான் வீசப்படுகின்றன என்பதைப் புரிந்தும் அந்த சந்நியாசி மிகவும் மௌனமாக பயணம் செய்துகொண்டிருக்கிறார். மாணவர்கள்மேல் எந்தவிதமான கோபமும் காட்டவில்லை. இறங்கவேண்டிய நிலையம் வந்ததும் சந்நியாசி ரெயிலைவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார்.
அடுத்த நிலையம் வந்ததும் மாணவர்கள் இறங்கினர். நகைச்சுவையின் நாயகன் மட்டும் இறங்கவில்லை. வண்டியைவிட்டு இறங்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதும்கூட இல்லாமல் இருந்தான். மற்ற மாணவர்கள் அவனை பிளாட்பாரத்தில் தேடிவிட்டு, ஒருவேளை அவன் தூங்கிவிட்டானோ என்று மீண்டும் ரெயில் பெட்டிக்குள் வந்து பார்த்தால், உட்கார்ந்த இடத்திலேயே மௌனமாக இருந்திருக்கிறான்.
அனைவரும் அவனை அழைத்திருக் கின்றனர். அவனோ எந்தவித சலனமும் இல்லாமல் சிலையாக அமர்ந்திருக்கிறான்.
"டேய், நாம இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்தாச்சு. இறங்குடா...'' என்று சத்தம் போட்டிருக்கிறார்கள். அவன் காது கேளாத வனைப்போல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். சில மாணவர்கள் உலுக்கி, "டேய், எழுந்திருடா'' என்றிருக்கிறார்கள். அப்போதும் அவன் அசையவே இல்லை.
அவன் வேடிக்கையாக நடிக்கிறான் என மாணவர்கள் நினைத்தனர். அதற்குள் ரெயில் புறப்படுவதற்கான விசில் சப்தம் கேட்கவே, அவனை குண்டுக் கட்டாகத் தூக்கிக்கொண்டு இறங்கி விட்டனர். இவ்வளவு களேப ரம் நடந்தும் அவன் எதுவுமே தெரியாததுமாதிரி, ஏதோ சித்தபிரமை பிடித்ததைப் போல் இருந்தான். அவனை மறுபடியும் தூக்கி, ஸ்டேஷனுக்கு வெளியே போய் ஒரு டாக்ஸியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டுசென்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajesh_19.jpg)
மகனைப் பார்த்த அவனுடைய பெற்றோர் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவனுடைய தகப்பனார், "என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறான்? கீழே விழுந்துவிட்டானா? அல்லது வேறு யாரும் இவனை அடித்துவிட்டார்களா?'' என்று சரமாரியாகக் கேட்டிருக்கிறார்.
மாணவர்களுக்கு அதற்கான காரணம் புலப்படவில்லை. அந்தப் பையனின் தகப்பனார் பல கேள்விகளைக் கேட்டபிறகு தான் சந்நியாசியின் நினைவு வந்திருக்கிறது. மாணவர்கள் நடந்ததை விளக்கமாகக் கூறியிருக்கின்றனர். அனைத்தையும் கேட்ட அவனுடைய பெற்றோர், அந்த சந்நியாசியை சந்தித்து மன்னிப்புக் கேட்டால்தான் தங்களுடைய பையனுக்கு விடிவுகாலம் பிறக் கும் என்பதாக உணர்ந்தனர். உடனே அவரைப் பார்க்க பையனுடன் புறப் பட்டனர்.
சந்நியாசி எங்கு இறங்கினாரோ அந்த ஸ்டேஷன் மாஸ்டர் மற்றுமுள்ள சிப்பந்தி களிடம் விசாரித்திருக்கின்றனர். அவர்கள் கூறிய தகவலின்படி தேடி, ஒருவழியாக சந்நியாசியைக் கண்டுபிடித்தனர். அதன் பிறகு அவரிடம் ரெயிலில் நடந்ததற்கு மன்றாடி மன்னிப்பு கேட்டனர்.
அதற்கு அவர், "இவன் உங்களுடைய மகனா? நல்ல அறிவுரைகளைக் கூறி அழைத்துச்செல்லுங்கள். நன்றாகப் படிக்கச் சொல்லுங் கள். இனிமேல் இதுபோல் யாரையும் ஏளனமாகக் கிண்டல் செய்யவேண்டாம்'' என்று கூறியிருக்கிறார்.
ஆனால், தன் மகனிடம் எந்தவித மாற்றமும் இல்லாததைக் கண்ட அவனு டைய தகப்பனார், "தயவு செய்து அவனைக் சுகப் படுத்துங்கள்'' என்று கெஞ்சியிருக்கிறார்.
அதற்கு அந்த சந்நியாசி, "நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். வீட்டுக்குச் சென்றவுடன் பழைய நிலையை அடைவான். தைரியமாகச் செல்லுங்கள்'' என உறுதியளித்திருக்கிறார்.
அதன்பிறகு அவனை அழைத்துக்கொண்டு சென்ற சில மணி நேரங்களில் பழைய நிலையை அடைந்துவிட்டான். அவனிடம் அவனது பெற்றோர் மற்றும் உடன்வந்த மாணவர்கள் அனைவரும் கேட்ட கேள்வி கள் ஒன்றுமே அவனுக்குப் புரியவில்லை. "நடந்தது எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. அந்த சந்நியாசியைக் கிண்டல் செய்தது மட்டும் நினைவிருக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை'' என்று கூறியிருக்கிறான். என்ன நடந்தது என்பதை சக மாணவர்கள் அவனுக்கு எடுத் துக் கூறினர். அனைத்தையும் கேட்டபிறகு அவன், "ஏதோ தூக்கத்திலிருந்து எழுந்தமாதிரி தான் எனக்கு இருக்கிறது'' என்றான்.
அந்த கல்லூரி மாணவனை சித்தபிரமை பிடித்ததுபோல் சந்நியாசியால் எப்படி மாற்றமுடிந்தது?
மாணவனைத் தொடாமலே சந்நியாசி யால் எப்படி அப்படி ஆக்க முடிந்தது? மாணவர்கள் அந்தப் பருவத்தில் செய்த தவறை சந்நியாசியால் ஏன் மன்னிக்க முடியவில்லை?
பிறரை மன்னிக்கும் மனப்பக்குவதை அந்த சந்நியாசி அதுவரை அடையவில்லையோ?
இதுபோன்ற சித்து வேலைகளைச் செய்தால் சக்தி போய்விடும் என்று சொல் வார்கள். அப்படியிருந்தும் அந்த சந்நியாசி ஏன் அப்படிச் செய்தார்?
இதுபோன்ற கேள்விகள் நம்மிடம் எழுகின்றன. ஆனால் இத்தகைய செயல்கள் பலவும் பேசப்பட்டேவருகின்றன.
அடுத்து ஆவியுலகம் சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
தேனி மாவட்டம், சின்னமனூரில் நெல் மற்றும் மாவு அரைக்கும் ஆலை ஒன்றுண்டு. அதன் பின்புறத்தில் கிணறு. அதன் குறுக்கே நீண்ட கல் ஒன்று பாலம்போல போடப் பட்டிருந்தது.
அந்த கல்மீது ஏறி சிறுவர்கள் விளையாடு வது வாடிக்கையான நிகழ்ச்சி. அப்படி ஒருநாள் பெண் பிள்ளைகள் நான்கைந்து பேர் விளையாடிக் கொண்டிருக்கும்போது சிறுமி ஒருத்தி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள். மற்ற பிள்ளைகள் பதற்றத்துடன் எட்டிப் பார்த்திருக்கின்றனர்.
தவறி விழுந்த சிறுமியின் தலையில் பலத்த அடிபட்டு, ரத்தப் பெருக்கெடுத்து கிணற்றுக் குள் அவள் மூழ்குவதைப் பார்த்திருக்கின்றனர்.
அதிர்ச்சியில் பயந்துபோய் யாரிடமும் சொல்லாமல் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
கிணற்றுக்குள் சிறுமி விழும்போது மாலை 5.30 மணியிருக்கும். பொழுது சாயந்தும் அவள் வீட்டுக்கு வராத காரணத்தால் இரவு 7.00 மணியளவில் தேடியிருக்கின்றனர்.
அவளைக் காணவில்லை. இதனால், ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரித்திருக்கின்றனர். ஒரு தகவலும் இல்லை.
கடைசியில், அன்று மாலையில் கிணற்றில் விளையாடிய அத்தனை பெண்களையும் தீவிரமாக விசாரித்த பின்புதான், அவள் கிணற் றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டாள் என்கிற உண்மை தெரியவந்தது.
திகைத்த எல்லாரும் கிணற்றுக்குச் சென்று பார்த்தனர். உள்ளே இறங்கி உடலை மீட்டனர்.
அதன்பிறகு ஆறு மாதங்கள் சென்றபின்பு, அதேபோல் சில பெண் பிள்ளைகள் அதே இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அதில் ஒரு பெண் திடீரென்று மயங்கி விழுந்தாள். சிறிதுநேரம் கழித்து எழுந்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.
தோழிகள் அவளுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். வீட்டாரிடமும் எதுவும் பேசவில்லை. சித்தபிரமை பிடித்த தைப்போல சிறிது நேரம் இருந்தாள். அவளு டைய பெற்றோர் எவ்வளவோ பேசியும் கேள்விகள் கேட்டும் பதில் எதுவும் சொல்ல வில்லை.
சிறிது நேரம் கழித்து அவள் பஸ் நிலையத் துக்கு அருகிலுள்ள தெருவின் பெயரைச் சொல்லி, "என்னை அங்கு கொண்டுபோய் விடுங்கள்'' என்று கிணற்றில் விழுந்து இறந்து போன சிறுமியின் குரலில் கூறினாள். திடீரென குரல் மாறி பேசுவதைப் பார்த்துத் திகைத்த பெற்றோர்கள், "அங்கு எதற்காக போகவேண்டும்?'' என்று கேட்டனர்.
"அந்தத் தெருவில்தான் என் அப்பா, அம்மா, அண்ணன் எல்லாம் இருக்கிறார் கள்'' என்று விவரமாக சொல்லியிருக்கிறாள்.
அந்தக் குரலைக்கேட்டு இவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிறகுதான், "உன்னுடைய பெயர் என்னம்மா? நீ யார்?'' என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அவள், ஆறு மாதங்களுக்குமுன்பு இறந்துபோன சிறுமியின் பெயரைச் சொல்லியுள்ளாள். இந்தப் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவள். இறந்து போனவள் வேறு மதத்தைச் சேர்ந்தவள்.
அவர்கள், "வாம்மா, உங்க வீட்டுக்கு போகலாம்'' என்று அழைத்துச் சென்றனர்.
அந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன், இறந்த சிறுமியின் அப்பா, அம்மா மற்றும் உள்ளவர்களை பெயர், முறை சொல்லி அழைத்ததோடு கட்டிப்பிடித்து அழுதிருக் கிறாள்.
இறந்துபோன தன்னுடைய மகளின் குரலைக் கேட்டவுடன் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதிர்வீட்டில் உள்ளவரை மாமா என்று அன்புடன் அழைத்திருக்கிறாள்.
இறந்துபோன சிறுமி அடிக்கடி அந்த வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டி ருப்பாளாம். அவரும் அவளது குரலைக் கேட்டவுடன் அதிர்ந்துவிட்டார். இவளை அழைத்து வந்தவர்கள் நடந்த முழு விவரத்தையும், இறந்த சிறுமியின் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லியுள்ளனர்.
அதன்பிறகு, "நீ எதற்காக அம்மா இப்பொழுது இங்கு வந்தாய்? அதுவும் இவளுக்குள் ஏன் வந்தாய்? நாங்களும் பயப்படுகிறோம். இவளின் வீட்டில் உள்ளவர்களும் அழுகின்றனர்'' என்று கூறினர்.
இதைக்கேட்டதும் இறந்துபோன சிறுமியின் ஆவி, "உங்களையெல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆசையிலும், பாசத்திலும்தான் இவளின் உடலுக்குள் வந்தேன். நான் விழுந்த அதே கிணற்றுப் பக்கத்தில், அதுவும் தண்ணீர் மூழ்கி இறந்த அதே நேரத்தில் விளையாடிக்கொண்டி ருந்தாள். எனவேதான் இவளுக்குள் வந்தேன்'' என்று விளக்கம் சொன்னது.
அதைக்கேட்டதும், "சரியம்மா... இனிமேல் நீ எங்களையெல்லாம் பார்க்கவர வேண்டாம். பயமாக இருக்கிறது'' என்று கெஞ்சிக் கேட்டுவிட்டு, "இந்த ஆறு மாதகாலம் நீ எங்கம்மா இருந்தாய்? இப்போது அடுத்த மதத்துப் பிள்ளையிடம் வந்துள்ளாயே?'' என்று இறந்துபோன சிறுமியின் பெற்றோர் கேட்டனர்.
அந்தக் குடும்பம் எந்த மதத்தைச் சேர்ந்ததோ, அதே மதத்திற்குரிய தெய்வத்தின் பெயரைச் சொல்லி, "அவர் என்னை பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றச் சொன்னார்'' என்று கூறியிருக்கிறாள். அதைக்கேட்ட அங்கிருந்த அனைவரும் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். பிறகு, எல்லாரையும் கட்டிப்பிடித்து விடைபெற்று வந்தாளாம்.
வீடு திரும்பிய சிறிது நேரம் கழித்து, எப்போழுதும்போல அவள் சாதாரணமாக- இயல்பாக ஆகிவிட்டாளாம்.
இறந்த சிறுமியின் மதத்தைச் சேர்ந்தவர்கள், "எங்களது மதத்தின் பெயரைச் சொல்லவேண்டாம்' என்று கேட்டுக்கொண்டனர். எனவேதான் நான் அதைக் குறிப்பிடவில்லை.
நடந்த இந்த முழு விவரத்தையும் இறந்த பெண்பிள்ளையின் உடன்பிறந்த மூத்த அண்ணன்தான் கூறினார். அந்த ஊரில் அக்காட்சியைப் பார்த்த சிலரிடம் இதுபற்றி நானும் விசாரித்தேன். அனைவரும் ஒரே மாதிரியாக பதில் சொன்னார் கள்.
ஜோதிடம்போல, ஆவிகளும் அமானுஷ் யங்களும் புதிர்தானா?
(அதிசயங்கள் தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/rajesh-t.jpg)