விடிவெள்ளி வானத்தின் கீழ்த்திசையில் பிரகாசமாக உதித்தது. பயணக்குழுவில் வந்துசேர்ந்த பயணியர்களின் விவரங்
களைக் கண்காணியர்கள் ஒளவையிடம் ஒப்படைத்தனர். சந்தையூரிலிருந்துபுதிதாக வந்துசேர்ந்தவர்களை பயணத்தின்போது ஒளவைக்கு அருகாமையில் வரவியலாதவாறும், மிகுந்த கண்காணிப்புடன் பயணக்குழுவின் இறுதிவரிசையில் வரும்படியும், கண்காணியர்கள் வகைப் படுத்தியிருந்தனர்.
இதேவேளையில், பயம்பியர்களின் யானைப் படைகளும் பாண்டிய நாட்டுத்தலைநகரை நோக்கி பயணத்திற்குத் தயாராயினர். பெரிய பெரிய மரச்சக்கரங்கள் பூட்டப்பட்ட மிகப்பெரிய வண்டி கள், யானைகளுக்கும் வீரர்களுக்கும் சமைத்து, கவளங்களாகக் கொடுப்பதற்குத் தேவையான உணவு தானியங்கள் நிரப்பப்பட்டு, நான்கு நான்கு யானைகள் பூட்டப்பட்டு முதல்வரிசையில் நிறுத்தப் பட்டிருந்தன. அவற்றையடுத்து, வீரர் களுக்குத் தேவையான போர்க்கருவிகளும், பாசறைகளுக்குத் தேவையான கூடாரத் துணிகளும், சமையல் பாத்திரங்களும் நிரப்பப்பட்ட வண்டிகள் வரிசையாக யானைகள் பூட்டப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
யானைகள் இழுக்கும் வண்டிகளில் திறமையான யானைப் பாகர்களும், வீரர்களும், ஒவ்வொரு யானையின்மீதும் இருவர் இருவராக அமர்ந்திருந்தனர். இவற்றைத் தொடர்ந்து ஐங்களிற்றுப்படை யானைகள் பயணிப்பதற்கு ஆயத்தமாயிருந்தன. இதேதருணத்தில் பாண்டிய இளவரசனுக்கு இணையாளாகப்போகும் மணப் பெண்ணின் அரண்மனையில் அவளது தோழியர்களும் குடும்ப முதுமகளிர்களும், செவிலித் தாயவர்களும் "திருக்காமக்கோட்டத்து நாச்சியார்' வழிபாட்டிற்குத் தேவையான பணிகளைச் செய்வதற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு கன்னிப் பெண் மணமகளாவதற்கு, அவளிடமுள்ள "பயிர்ப்பு' எனும் குணத்தை நீக்குவதற்கு, ஆற்றங்கரையில் செய்த மஞ்சள் குத்திப் பூசும் சடங்கு முந்தைய வாரம் நடந்து முடிந்திருந்தது. மேற்சொன்ன சடங்கு நடத்தும்பழக்கம் சங்ககால நகர்ப் புறத் தமிழர்களிடம் இருந்துவந்துள்ளது. இச்சடங்கிற்காக இளவரசியை அதிகாலைவேளையில் நீராடச் செய்வார்கள். நீராட்டுவதற்கு முன்பு, அவளது நீண்ட கூந்த-ல் ஐம்பால் ஒப்பனை செய்வதற்கு ஏற்றார்போல், "மயிர்குறை குழைச்சை' எனப்
படும் கத்திரிப்பானை கொண்டு சுருள் உண்டாக்கி குழல், அகம், கொண்டை, பளிச்சை,துஞ்சை போன்ற ஐவகை கூந்தல் ஒப்பனை செய்வதற்கு ஏற்றார்போல், அரண்மனை அலங்காரகைகள்இளவரசிக்கு முடி திருத்திவிடுவார்கள்.
பின் கூந்தலிலுள்ள எண்ணெய்ப் பசையை நீங்குவதற்கு துவர்ப்பொடி கொண்டு, இளவரசியை புனலாட்டு மன்றத்திற்கு அழைத்துச்சென்று புனலாட்டுவிப்பார்கள். புனலாட்டு மன்றம் என்பதுஅரண்மனையின் அந்தப்புரத்தில் தாழ்வான அழகிய நீர் பீய்ச்சும் மீன் வாய் கண்ணல்கள் பொருத்தப்பட்ட நீச்சல் குளமாகும். ஆற்றிலிருந்து கல்லால் செதுக்கப்பட்ட நீர்க்குழாய்கள் வழியாக ஆற்றுநீர் வந்து கொட்டுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.
இளவரசிக்கு புனலாட்டு நடந்தபின் அவளது கூந்தலை உலர்த்தி, அகில் புகையூட்டி விரல்களால் கோதிவிட்டு, மணம்கமழும் தகரச்சாந்து பூசிவிடுவார்கள். இங்கு தகரச்சாந்து என்பது ஆற்றுப் படுகைகளில் ஞாழல் போன்ற ஒரு இனிமையான மணமுடைய புல்லிருந்து எடுக்கப்பட்ட கூந்தல் மணத்திற்காகப் பூசப்படும் மணம்மிகுந்த சாந்து ஆகும். இதனையடுத்து, கூந்தல் தைலம் தேய்த்து "மான்மதக் கொழுஞ்சேறு' எனும் கத்தூரிக் குழம்பை கூந்தல் முழுவதும் தடவுவார்கள். அரண்மனை முழுவதும் இதன் நறுமணம் வீசும். இச்சாந்துகள் அனைத்தும் கருமையான அடர்ந்தகூந்தலை வளர்க்கும் இயல்புடையவை. இதன்பின்பே, சிகை அலங்காரமான கதுப்பு, பின்னல், கொண்டை,அளகம், குழல் போன்ற ஐவகை வடிவங்களால் அலங்கரிக்கப்படும்.இச்சிகையலங்காரத்துக்குப்பின் இளவரசியின் குளிர்ந்த வெண்நுத-லும் (நெற்றியிலும்), முகத்திலும், உடம்பிலும் முறையாக விதிகளின்படி செய்யப்பட்ட "மெய்க்கலவை' பூசப்படும். இதில் அகில், சந்தனச்சாந்துகள் சேர்க்கப்பட்டிருக்கும்.
அதன்பிறகு, சிறந்த முறைகளில் புருவம் மற்றும் இமை முடிகளுக்கு குளிர்ந்த கருமை தீட்டப்பட்டு, கண்டால் மயக்கும் கந்தர்வக் கண்களாக மாற்றப்படும். மேலும், அழகிய நிலவுப்பிறை திலகமிட்டு, அதன்மீது அசைந்தாடும்படி தலைமாலை எனப்படும் நெற்றிச்சூடி சூட்டப்படும்.
மெய்க்கலவை நிறத்தைக் கூட்டும்வண்ணம் அடர்த்தியான நிறமுடைய ஈரணி அணிவிப்பார்கள். ஈரணி என்பது மார்க்கச்சையும் இடைக்கச்சையுமாகும். அதன்மேல் பருவ அழகு மிளிருமாறு அழகிய பூவேலைப்பாடு நிறைந்தமென்மையான புட்டகம் அணிவிப் பார்கள். அதற்கடுத்தாற்போல் ஆளுயர "ஆடிப்பாவை' எனப்படும் நிலைக்கண்ணாடியைக் கொண்டுவந்து நிறுத்துவார்கள். ஒளிச்சுடர்விடும் பெரிய தீபச்சுடர்களை அவள் இருபுறங்களிலும் சுழற்றிக் காட்டுவார்கள்.
தீப ஒளியில், அகக்கண்ணாடியில் பேரழகைக் காணும்படி செய்து, தனது பேரழகில் மனம் நிறைந்து, இல்லறஅகவாழ்விற்கு அவள் தகுதியாகிவிட்டதை உணர்த்துவார்கள். இப்போதுதான்அவள் காமக் கோட்டத்து நாச்சியாராகிப் பரிமளிப்பாள். அப்போது அழகிய மணங்கமலும் மலர்களையும், வெட்டி வேர்களையும் சேர்த்துப் பின்னப்பட்ட நிலைமாலை அவளது கழுத்தில் அணிவிக்கப்படும். இவ்வாறு இளவரசிக்கு திருக்காமக்கோட்ட நாச்சியார் சடங்கு கள் தொடங்கும் அதேவேளையில், பயம்பியர்கள் தங்கள் படை நகர்வுக்குத் தயாராகினர். தங்கள் குலவழக்கப்படி காற்று ஏரி எனப்படும் காட்டேறி, பச்சையம்மன், இடும்பன் போன்ற தெய்வங்களுக்கு கருஞ்சேவலையும், கருங்கிடாயையும் வெட்டிப் பலியிட்டு வழிபாடு செய்து, அவற்றின் இரத்தத்தை யானைகள் பூட்டப்பட்ட முதல் வண்டிச் சக்கரங்களில் தடவி, கொம்பிசைத்துப் பயணத்தைத் தொடங்கினர்.
அதே கணத்தில் சந்தையூரில் ஒளவை யுடன் பெருவழிப் பயணத்தைத் தொடங்குபவர்கள், தாங்கள்தூக்கிச் செல்லவிருக்கும் பொருட்களுள்ள காவடிச் சுமைகளை ஓரிடத்தில் வைத்து, அதற்கருகில் பெருவழிப் பயணியர்களுக்குக் காவலாக வருகின்ற வீரர்களின் வேல் ஆயுதங்களை வைத்து, இவற்றைச் சூழ்ந்து, தீவெட்டிகள் ஏந்தி கண்காணியர்கள் நிற்பார்கள். ஏழ்நரம்புகள் பூட்டப்பட்ட சீறியாழ்களை தங்கள் இடக்கையில் ஏந்தி, யாழ்ப்பாணர்கள் முருகப்பெருமானை வேண்டி, எங்கள் பயணம்
முழுவதற்கும் நீ காவலாக வரவேண்டும் என குறிஞ்சிப் பண்ணிலும் மருதப்பண்ணிலும் பாடுவது வழக்கம். இதேபோல் யாழ்ப்பாணர்கள் பாடும்போது, ஒளவையாரும் மடவைப் பெண்களும் தாங்கள் ஏற்றுவந்த பெரும்பணி இனிதே நிறைவடைய வேண்டுமென முருகனை மனமுருகி வேண்டிக்கொண்டனர். அப்போதுசந்தையூரில் வேலனாட்டம் ஆடும் வேலனிடம் செஞ்சேவலும், ஆட்டுக்கிடாயும், தேனும், தினைமாவும் கொடுத்து முருகனுக்குப் பலியிடச் செய்து, சங்குகள் முழக்கி, தங்களிடம் இருந்த அகில், சாவக நாட்டுக் கற்பூரத்தைக் கொளுத்தி, தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
சங்க காலத்தில் காட்டு யானைகள் சென்ற வலசைப் பாதைகளும்யானைப் படைகள்சென்றபோர்த்தடங் களுமே பின்னாளில் பெருவழிப் பாதைகளாகவும், இருநாட்டுத் தலைநகரங்களை இணைக்கும் இராஜபாட்டை சாலைகளாகவும் மாறின. யானைப்படை நகரத் தொடங்கியபோது, யானைகளின் பிளிறல் ஓசை காடு முழுவதும் எதிரொலித்தது.
இளவரசியின் அரண்மனையில் செம்மிளகி என்று அழைக்கப்பட்ட சங்க கால நெல்லைக் குத்தி அரிசியாக்கி, கரும்புக் காட்டில் அடிபருத்த கரும்புகளை வெட்டிப் பிளந்தெடுத்த கரும்புச்சாற்றினை ஒரு பெரும்பானையிலிட்டு உலையேற்றி பொங்கி வரும்போது அதில்அரிசியிடுவதற்காக, அரண்மனையே அதிரும் வண்ணம் பெண்கள் அனைவரும் குழகையிட்டு மகிழ்ந்தனர். அப்போது "நீர் பொங்க, செல்வ நிறை பொங்க, சீர் பொங்க, பொங்கும் பொங்கல் காண, எம் திருமகளே வருக! வருக!' என இளவரசியை, மைய மண்டபத்தில் அவளது வலது காலை அடியெடுத்து வைக்கச்சொல்-, தோழியர் அவளது இருகரம் பிடித்துஅழைத்துவந்தனர்.
ஒளவை பயணத்தின் சங்க நாதமும், பயம்பியர்களின் கொம்பு முழக்கமும், அரண்மனையின் குழகை ஒ-யும் ஒரே நேரத்
தில் நடந்தேறின. இளவரசி காமக்கோட்டத்து நாச்சியாராவதற்கு நடத்தப்படும்சடங்கினில், அவளது செவிலித்தாயாரும், முது மகளிர்களும், முழுமையான பெண்மையை அவள்உணரும்வண்ணம், பசுவுடன் பால் நுகரும் கன்றினையும் வைத்து, நலுங்குகள் எனப்படும் சில ரகசியப்பாடங்களைப் பாடி குறிப்பால் உணர்த்துவார்கள். இல்லற வாழ்விலுள்ள ஐயங்கள், அவள் கேட்காமலேயே தீர்க்கப்படும். இது ஒரு அவசியமானபண்பாட்டு வழக்கமாக சங்ககாலத்தில் திகழ்ந்தது. இந்நிகழ்வு நடந்து முடிந்தபின்புதான் ஒளவையின் பாடங்கள் இளவரசிக்கு ஆரம்பமாகும்.
அவை நிறைவுபெற்ற பின்புதான் ஒரு பட்டத்து அரசிக்குரிய குணநலன்கள் பெற்ற "திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியாராக' இளவரசி மாறுவாள்.
தோழியர் புடைசூழ மைய மண்டபத்தை நோக்கி, வலது கால் எடுத்துவைத்து இளவரசியாள் நடந்துவரும் வேகத்தைவிட பத்து மடங்குவேகத்துடன், பயணியர்களுடன் சங்க முழக்கத்தோடுஒளவை நடந்துவந்தார். பயம்பியர்களின் யானைப்படை, அதைவிட ஐம்பது மடங்கு வேகத்துடன், யானைகளின் பிளிறல் களோடு பாண்டியன் தலைநகரை நோக்கி விரைந்தன. பாண்டிய இளவலின் அம்மான், அதைவிட நூறுமடங்கு வேகத்தில், கடற்கரை நகரை நோக்கி குதிரையில் சென்று கொண்டிருந்தான். இவர்களைக் காட்டிலும் ஒளவையால் அனுப்பப்பட்ட மூன்று ஒற்றர்களில், குரு மடத்தி-ருந்து நூற்றைம்பது மடங்கு வேகத்துடன் பாண்டியனின் அரண்மனை நோக்கி ஒருவனும், இளவரசியின் அரண்மனையை நோக்கி ஒருவனும், இளவலின்அம்மான் இளந்திரையனை நோக்கி ஒருவனும் தங்களது குதிரைகளில் விரைந்துகொண்டிருந்தனர்.
நாமும் பின் தொடர்வோம் வரும் இதழில்...
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு:சி.என். இராமகிருஷ்ணன்