"அரியணை அனுமன் தாங்க

அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன் வெண்குடை கவிக்க

இருவரும் கவரி வீச

Advertisment

விரைசெறி குழலி ஓங்க

வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி

Advertisment

வசிட்டனே புனைந்தான் மௌலி.'

வால்மீகி முனிவர் வடமொழியில் அருளிய இராம காவியத்தை மூலமாகக் கொண்டு தமிழில் மாபெரும் காவியம் படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பர், இராமபிரான் அயோத்தி மன்னனாக முடிசூட்டிக்கொள்ளும் காட்சியை மேற்குறிப்பிட்ட பாடல்மூலம் வடித்து காவியத்தை மிக அழகாக நிறைவு செய்கிறார்.

இராமாயண காவியத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு பிரிவுகளைக் கம்பர் எழுதினார். ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டத்தை அவர் எழுத வில்லை. (அவரது சம காலத்தவராகிய ஒட்டக்கூத்தர் எழுதினார் என்பர்.) காப்பியத்தை மங்களகரமாக நிறைவுசெய்ய வேண்டுமென்பது கம்பரது எண்ணமாக இருந்திருக் கலாம். பொதுவாக தமிழகத்தில் இராமர் பட்டாபி ஷேகம் வரையிலான நிகழ்வுகள் பலருக்கும் தெரிந்திருக்கும். அதன்பிறகு அவரது வரலாறான உத்தர காண்டம் தெலுங்கு உட்பட வடமொழிகளில் பிரசித்தம். இராமாயணக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் அல்லது அதற்கு நேரெதிரான விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

24,000 பாடல்கள் கொண்ட வால்மீகி இராமாயணத்தை முழுமையாகப் பாராயணம் செய்வதே சிறப்பென் பர். அவை உத்தர காண்ட சுலோகங் களையும் கொண்டவைதான். உத்தர காண்டத்தில் பல நிகழ்வுகள் உள்ளன. குறிப்பாக, சீதாபிராட்டி நிலமகளோடு இணைவது, ஸ்ரீராமபிரான் சரயூ நதியில் ஜலசமாதியாவது உள்ளிட்ட நிகழ்வுகள். ஆனால் அவற்றுக்கிடையே நிகழும் மானுட மனநுட்பத் தகவல்கள் ஏராளம். அவற்றையும் அறிந்தால்தான் நாம் காவிய நுகற்ச்சியை முழுமையாகப் பெறமுடியும். இது காவிய நுகர்ச்சி என்பது மட்டுமல்ல; மிகப்பெரிய வாழ்வியல் அனுபவம் எனலாம்.

அத்தகைய சிறப்புவாய்ந்த ஸ்ரீ இராமாயண உத்தர காண்டத்தை "ஓம்' இதழில் வெளியிடுவதைப் பெரும்பேறாகக் கருதுகிறோம். இதற்கு வழிகாட்டிய அனைத்து பெரியோர்களுக்கும், குறிப்பாக கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பகத்தாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். அவர்களுக்கு இராமபிரானின் திருவருள் நிறைந்து பெருகட்டும். இனி இராமாயண உத்தர காண்டம்- உள்ளது உள்ளபடி...

முதலாம் சர்க்கம்

இராமபிரானின் கேள்விகள்

இராவணேஸ்வரன் முதலான அரக்கர்களை அழித்த இராம பிரான், கோசலை திரும்பி நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரைக்காண நாட்டின் நான்கு திசைகளிலிருக்கும் முனிவர்களும் அகத்தியர் தலைமையில் இராமபிரானின் அரண்மனை வாயிலுக்கு வந்தனர்.

முனிவர்களில் சிறந்தவரும் அறநெறியாளருமான அகத்தியர் வாயிற்காப்போனிடம், ""நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோமென்று தசரதன் குமாரனிடம் தெரிவிப்பாயாக'' என்று கூறினார்.

அவரது சொற்களைக் கேட்ட வாயிற்காவலன் மகாத்மாவான ஸ்ரீ இராமபிரானின் இடத்திற்குச் சென்றான்.

அரசுப்பணி முறைகள் அறிந்தவன், அடுத்தவர் மனநிலையை அறிந்து செயல்படுபவன், நன்னடத்தை உள்ளவன், திறமை மிக்கவன் உட்பட்ட குணச்சிறப்பு மிகுந்த வாயிற்காப்போன், முழுநிலவுபோல் ஒளிவீசும் இராமபிரானைப் பார்த்து, பல முனிவர்களுடன் அகத்திய முனிவர் வந்திருப்பதாக வணங்கிக் கூறினான்.

வைகறைப் பொழுதில் எழும் கதிரவனைப்போன்ற முனிவர்கள் வந்திருக்கிறார்கள் எனும் செய்தியைக் கேட்டதும், ""இனிய சொற்களால் அவர்களை வரவேற்று அழைத்து வா'' என்றார் இராமன்.

ram

சபைக்குள் முனிவர்கள் வந்தனர். அவர்களைக் கண்டதும் இராமபிரான் எழுந்து கைகூப்பி வரவேற்றார். பாத்தியம், அர்க்கியம் முதலான உபசாரங்களைச் செய்து, அவர்களின் வருகையைச் சிறப்பிக்கும் முறையில் மிகுந்த மகிழ்வுடன் பசுதானம் செய்தார். முனிவர்களைப் பணிவுடன் வணங்கிய இராமபிரான் அவர்கள் அமர ஆசனங்களையும் வழங்கினார்.

பொன்னால் பொலிவூட்டப்பட்டிருந்த அந்த இருக்கைகள் அகன்றதாகவும் இனிதானதாகவும் இருந்தன. தர்ப்பையாலான ஆசனங்கள் பரப்பப்பட்டு, அதன்மீது மான்தோல்கள் விரிக்கப் பட்டிருந்தன. உத்தம முனிவர்களான அவர்கள் தங்களது தகுதிக்கேற்றபடி ஆசனங் களைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தனர்.

சீடர்களோடும் குருமார் களோடும் வந்திருந்த அவர்கள் அனைவரையும் பார்த்த இராம பிரான், அவர்களது நலம் விசாரித் தார். அதன்பின் வேத விற்பன்னர் கள், முனிவர்கள் இராமபிரானை நோக்கிக் கூறினார்கள்:

""தோள்வலிமை மிக்க ரகு நந்தனே! நாங்கள் எல்லாவகையிலும் நலமாக இருக்கிறோம். எதிரி களை அழித்து, தெய்வாதீனமாக நல்ல முறையில் உயிருடன் திரும்பவந்திருக் கும் உங்களைக் காண்கிறோம்.

மன்னரே, உலகைக் கலங்கவைத்த இராவணன் இறைவனின் திருவருளால் உங்களால் கொல்லப்பட்டான். வீரமிக்க புதல்வர்களுடனும் பேரன்களுடனும் இருந்த இராவணனைக் கொல்வது உங்களுக்கு பெரும் கடினமான செயலாக இருக்கவில்லை. மிக எளிதாகவே அவனைக் கொன்றீர்கள்.

நீங்கள் வில்லைக் கையில் ஏந்திவிட்டால் மூவுலகங்களையும் வெல்லக்கூடியவர் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அரக்கர் களின் தலைவனான இராவணன் அதிர்ஷ்ட வசமாக உங்களால் அழிக்கப்பட்டான்.

அறநெறி என்பதை உயிர்மூச்சாகக் கொண்டவரே, சீதா தேவியோடும் உங்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்ட தம்பி லட்சுமணனுடனும் திரும்பி, வெற்றிப் பொலிவுடன், திருவுடன் திகழும் தங்களை இறையருளால் இப்போது கண்களால் காண்கிறோம். தங்கள் அன்னையர்களோடும் பரதன், சத்துருக்னன் ஆகியோரோடும் உங்களைக் காணும் பேறுபெற்றோம்.

பிரஹஸ்தன், விகடன், விரூபாக்ஷன், மகோதரன் எவராலும் வெற்றிகொள்ள முடியாத அசும்பனன் ஆகிய அரக்கப் பெரும்வீரர்கள் இறையருளால் உங்களால் கொல்லப்பட்டார்கள்.

இராமபிரானே, எவனுடைய பெருத்த உடல் வேறெவருக்கும் இல்லையோ, அப்படிப்பட்ட கும்பகர்ணனும் உங்களால் மாய்க்கப்பட்டான் என்பது எங்களது நல்லதிர்ஷ்டமே.

அளவிடமுடியாத வீரம்கொண்ட அரக்கர்களான திரிசிரஸ், அதிகாயன், தேவாந்தகன், நராந்தகன் ஆகியோர் எங்கள் நல்லூழால் உங்களால் கொல்லப்பட்டார்கள்.

கும்பகர்ணனின் மகன்களும், கொடூரமான தோற்றம் கொண்டவர்களுமான கும்ப நிகுபர் கள் எங்கள் நல்விதி காரணமாக போர்க் களத்தில் உங்களால் மாய்க்கப்பட்டார்கள்.

எமன் போன்ற யுத்யோத்மத்தமன், மத்தன், யக்ஞகோபன், பலம் பொருந்திய தூம்ராக்ஷன் ஆகிய அஸ்திர, சஸ்திரக் கலைகளில் நிபுணர்களான அரக்கர்கள், உலகில் பெரும் அழிவைச் செய்துகொண்டி ருந்தவர்கள், பிரளய காலத்தில் அனைத் துயிர்களையும் குடித்துப் பேரழிவு செய்யும் அந்தகன் போன்ற பானங்களாலும் தெய்வ சங்கல்பத்தாலும் உங்களால் கொல்லப்பட்டார்கள்.

தேவர்களாலும் வெல்லமுடியாத அரக்கத் தலைவனுடன் தனியாக நின்று போர் நிகழ்த்தி, தெய்வ அருளால் வெற்றிபெற்றீர்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. உங்கள் கட்டளைப்படி இலட்சுமணன் நிகழ்த்திய தனிப்போரில், இராவணனனது மகன் கொல்லப்பட்டான் என்பதுடன் இதை ஒப்பிடும்போது, போரில் இராவணன் அவமானமடைந்தான் என்பது சாதாரண விஷயமே. பெருந்தோளுடைய வீரரே, எமனைப் போல எதிர்த்துவந்த அவனால் ஏவப்பட்ட நாகபாச வலையிலிருந்து விடுபட்டு, இறையருளால் நீங்கள் வெற்றிபெற்றீர்கள்.

இந்திரஜித் மாய்க்கப்பட்டான் என்னும் செய்திகேட்டு நாங்கள் அனைவரும் உங்களைப் பாராட்டுகிறோம். போரில் மாயாஜாலங்களை நிகழ்த்தும் அவன் எவராலும் வெல்லமுடியாதவனாக இருந்தான். எனவேதான் அவன் கொல்லப் பட்ட செய்திகேட்டு நாங்கள் பேராச்சரியம் அடைந்தோம்.

ரகு வம்சத்தின் பெருமையை வளர்ப்பவரே, மேற்குறிப்பிட்ட அவர்களும், நினைத்த உருவம் எடுக்கக்கூடிய வேறுபல அரக்கர்களும் மக்களின் நல்வினை காரணமாக உங்களால் அழிக்கப்பட்டார்கள்.

வீரரே, காகுத்தரே, எதிரிகளைக் கசக்கிப் பிழிபவரே, இவ்வுலகத்திற்கு மிகவும் தேவையான- போற்றுதலுக்குரிய அபயதா னம் செய்துள்ள உங்களுக்கு இறைவன் மேன்மேலும் பெருமையை அளிப்பாராக.''

மெய்யுணர்வு கொண்ட அந்த முனிவர் பெருமக்களின் உரையைக் கேட்டு மிகவும் வியப்படைந்த இராமபிரான், இரு கரங்களை யும் கூப்பிக்கொண்டு இவ்வாறு கேட்டார்:

""அளவற்ற ஆற்றல்கொண்ட அரக்கர் களான கும்பகர்ணன், இராவணன் ஆகியோரைத் தள்ளிவிட்டு, இராவணனின் மகனான இந்திரஜித்தை ஏன் பாராட்டு கிறீர்கள்? மகோதரன் முதலான பிறரால் எதிர்த்து நிற்கமுடியாத பல மாவீரர்களை விட்டுவிட்டு இந்திரஜித்தை மட்டும் ஏன் புகழ்கிறீர்கள்? அதிகாயன் முதலிய பெரும் வீரர்களைத் தள்ளிவிட்டு இந்திரஜித்தை ஏன் பாராட்டுகிறீர்கள்?

அவ்வாறானால் அவனுடைய பிரபாவம் எப்படிப்பட்டது? அவனது பலம் என்ன? எவராலும் வெற்றிகொள்ள முடியாத தனித்த பேராற்றல் எவ்வாறு வந்தது? எந்த காரணத்தால் அவன் இராவணனை விடவும் மேம்பட்ட வனாக விளங்கினான்? இதுபற்றி நான் கேட்கத் தகுந்தவன் என்றால், சொல்லக்கூடாத ரகசியம் இல்லை யென்றால் கேட்க விரும்புகிறேன். கூறும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்; ஆணையிட வில்லை.

இந்திரனையும் அவன் வெற்றி கொண்டான் என்றால் அத்தகைய வரத்தை இந்திரஜித் எவ்வாறு பெற்றான்? தந்தையான இராவணனைக் காட்டிலும் மகன் அதிக ஆற்றலுடையவனாக இருந்தது எப்படி? மாமுனிவரே, அரக்கனான இந்திரஜித் போர்க்களத்தில் இராவணனைவிட வலிமை மிக்கவனாக வும், இந்திரனை வெற்றிகொண்டதும் எப்படி? அருள்கூர்ந்து இதுகுறித்த எல்லா செய்திகளையும் கூறவேண்டும்.''

இரண்டாவது சர்க்கம்

புலஸ்தியர் உற்பத்தி மகாத்மாவான இராம பிரான் கூறியதைக் கேட்டு தவப் பொலிவு மிக்க அகத்தியர் அவரிடம் கூறினார்:

""இராமா, இந்திரஜித் எவ்வித சக்தி மற்றும் பராக்கிரமத்தினால் எதிரிகளைக் கொன்று வீழ்த்தி னானோ, எதன்காரணமாக அவன் எதிரிகளால் கொல்லமுடியாதவ னாக இருந்தானோ, அதற்கான காரணத்தைக் கூறுகிறேன்; கேளுங்கள்.

இராகவனே, உங்களது கேள்விகளுக்கு விடைசொல்வதற்குமுன், இராவணனுடைய குலம், பிறப்பு, வரங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறேன்.

முன்னொரு கிருத யுகத்தில், பிரஜாபதிபதியான பிரம்மாவின் மானச புத்திரனாக புலத்தியர் (புலஸ்தியர்) தோன்றினார்.

பிரம்மரிஷியான அவர், அந்த படைக்கும் கடவுளான பிரம்மா வைப்போலவே ஆற்றல் கொண்ட வராக இருந்தார். அறம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த அவருடைய நற்குணங்களை சொற்களால் விவரிக்க முடியாது. பிரஜா பதியின் மகன் என்பதே அவருடைய சிறப்பை உணர்த்தப் போதுமானது. பிரம்மாவின் மகனென்பதால் தேவர்கள் அனைவரும் அவரிடம் மதிப்பு வைத்திருந்தனர். பேரறிவுகொண்ட அவர் தன் உயர் குணங்களாலும் நன்னடத்தை யாலும் அனைவராலும் விரும்பத்தக்கவராக இருந்தார்.

அவர் ஒருசமயம் தவம் மேற்கொள்ளும் பொருட்டு, மேருமலையின் அருகிலிருந்த 'த்ருணபிந்து' என்ற முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று வசிக்கத் தொடங்கினார். அறத்தையே உயிராகக் கொண்ட அவர் ஐம்புலன்களையும் அடக்கி வேதங்களை ஓதிக்கொண்டு தவமியற்றி வந்தார். அச்சமயம் சில இளம்பெண்கள் அவர் ஆசிரமத்திற்குச் சென்று அவருக்கு இடையூறு செய்தார்கள். தேவ- நாக- ராஜரிஷிகளின் பெண்களும், அப்சரப் பெண்களும் வேடிக்கையாக விளையாடிக்கொண்டே அவர் இருப் பிடத்தை அடைந்தார்கள்.

அந்த கானகப் பிரதேசமானது எல்லா பருவ காலங்களிலும் இன்பத்தைக் கொடுப்பதாகவும், கண்ணுக்கினியதாகவும் இருந்ததால், அந்த இளம்பெண்கள் தினந் தோறும் அங்குசென்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் இடையூறு காரணமாக சினம்கொண்ட பெரும் தேஜஸ்வியான முனிவர், "எந்தப் பெண் என் கண்களில் தென்படுகிறாளோ அவள் கருத்தரிப்பாளாக' என்று பெரும் குரலில் கூறினார்.

தவப்புதல்வரான அவரது சொற்களைக் கேட்ட அந்த மங்கையர் அனைவரும் பிரம்மரிஷியின் சாபத்திற்கு அஞ்சி, அவர் இருந்த இடத்திற்குச் செல்லாமலிருந்தனர். ஆனால் ராஜரிஷியான த்ருணபிந்துவின் மகளுக்கு முனிவரின் சொற்கள் கேட்கவில்லை. அதனால் அவள் வழக்கம்போல் அங்குசென்று விருப்பப்படி விளையாடிக்கொண்டிருந்தாள். அதேசமயம் அங்கு ஒரு தோழியும் வராததையும் கண்டாள்.

அந்தசமயத்தில் பிரஜாபதியின் மகனும் தபோதருமான புலத்திய மாமுனிவர் அங்கு வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார்.

த்ருணபிந்துவின் மகளான அவள் வேத ஒலியைக் கேட்டாள். தபஸ்வியான புலத்தியரைக் கண்டாள். உடனே அவள் உடல் வெளுத்தது. கருவுற்றதன் உடல் அடையாளங்களைப் பெற்றாள். தனக் கேற்பட்ட மாற்றங்களைக் கண்டு அவள் அஞ்சினாள். இது எவ்வாறு நிகழ்ந்ததென்று சிந்தித்தவாறே தந்தையின் ஆசிரமத்திற்குச் சென்றான்.

கருவுற்றவளாக வந்து நிற்கும் மகளைப் பார்த்து, ""உனக்கு ஏற்றதல்லாத இந்த நிலையை அடைந்தும் உன் உடலை சுமந்துகொண்டிருப்பதேன்?"" என்று வெறுப்புடன் கேட்டார்.

இரங்கத்தக்க நிலையிலிருந்த அப்பெண் தன் இரு கரங்களைக் கூப்பிக்கொண்டு, தவசீலரான தனது தந்தையைப் பார்த்து, "தந்தையே, எதனால் என் உடல் இவ்வாறு மாறியது என்னும் காரணத்தை நான் அறியேன். சற்று நேரத்திற்குமுன், பரம்பொருளிடம் நிலைத்த மனமுடைய மாமுனிவர் புலத்தியருடைய ஆசிரமத்திற்கருகே என் தோழிகளைத் தேடிக்கொண்டு தனியே சென்றேன். அங்கு ஒரு தோழியையும் காணவில்லை. ஆனால் என் உருவம் மாற்றம் கொண்டது. அதனால் அஞ்சி இங்கு வந்துவிட்டேன்' என்றாள்.

ராஜரிஷியான த்ருணபிந்து தவத்தில் சிறந்தவர். அவர் கண்களை மூடி தியானம் செய்தார். அப்போது தன் மகளின் உடல்மாற்றமானது புலத்திய மகரிஷியால் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொண்டார். பரம்பொருளிடம் ஆழ்ந்த மனமுடைய மாமுனிவரின் சாபத்தின் விளைவே இதுவென்பதை உணர்ந்து, தன் மகளுடன் சென்று அவரைக் கண்டார்.

"ஐயனே, என் மகள் அனைத்து நற்குணங்களும் கொண்டவள். தாங்கள் இவளைத் தானாகவே தேடிவந்த பிச்சையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தாங்கள் எப்போதும் தவமியற்றி அதிலேயே ஈடுபட்டிருக்கிறீர்கள். ஐம்புலன்களையும் அடக்கி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு இவள் எப்போதும் பணிவிடை செய்துகொண்டிருப்பாள் என்பதில் ஐயமில்லை' என்றார்.

அறம் தவறாத ராஜரிஷியான அவருடைய சொற்களைக் கேட்ட புலத்தியர், அவளை ஏற்றுக்கொள்ளும் விருப்பம் கொண்டு ஆமோதித்தார்.

த்ருணபிந்து முறைப்படி தன் மகளைக் கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட்டுத் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். அந்தப் பெண் தன் இனிய குணங்களால் கணவரை மகிழ்வித்து அவருடன் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளுடைய நல்ல குணம், நடத்தை ஆகியவற்றால் மிகவும் மகிழ்ந்த மாமுனிவர் புலத்தியர், "பெண்மணியே, உன் சிறப்புகண்டு மகிழ்கிறேன்; அதனால் எனக்கு நிகரான ஒரு மகனை உனக் குத் தருகிறேன். அவன் நம் இரு குலங்களையும் விளங்கச் செய்பவனாக இருப்பான். பௌலஸ்த்யன் என்று புகழ் பெறுவான். நான் வேதம் ஓதிக்கொண்டிருந்தபோது நீ வந்து அதைக் கேட்டாய். அதனால் அவனுக்கு "விச்ரவஸ்' (வேதத்தை நன்கு கேட்டவன்) என்று பெயர் ஏற்படப்போகிறது' என்றார். இதைக்கேட்டு மனம் மகிழ்ந்த அவள் விரைவிலேயே விச்ரவஸ் என்னும் மகனைப் பெற்றாள். அந்தக் குழந்தை முனிவராகி, தன் ஒழுக்கத்தால் மூவுலகங்களிலும் பெயர்பெற்று விளங்கி னார். நல்ல கேள்விஞானம் உடையவராகத் திகழ்ந்தார். சமநோக்கு கொண்டவர். விரத அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.''