adhishankarar

அட்சய திருதியை பொன்னான நாளில் தானம், ஜபம், சிறப்பு வழிபாடு செய்வது நம் வழக்கம். அட்சய திருதியை சமீபத்தில் கொண்டாடி னோம். இந்த மகத்துவமான நாளில்தான் முற்காலத்தில் சில முக்கிய தெய்வீக சம்பவங்கள் நடந்தன. இவற்றில் குறிப்பாக அந் நாளில்தான் மணிமேகலை அட்சய பாத்திரம் (அமுதசுரபி) பெற்றாள் என்பதை "பாத்திரம் பெற்ற காதை'அத்தியாயத்தில் கூலவாணிகன் சாத்தனார் என்கிற புலவர்-பாத்திரம் பெற்ற பைந்கொடி மடவாள் மாத்திரை யின்றி மனமகிழ் வெய்தி (68)எனப் பாடியுள்ளார்.

Advertisment

அதேநாளில்தான் ஏழ்மை நிலையில் இருந்த ஓர் பெண்மணியின் துயரத்தை நீக்க பாலகனான ஸ்ரீ ஆதிசங்கரர் மகாலட்சுமி தேவியைத் துதித்து "அங்கம் ஹரே புலகபூஷண மாஸ்ரயந்தீ' எனத் தொடங்கும் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார்.

கேரள மாநிலம் காலடியில் சிவகுரு, ஆர்யாம்பிகை என்கிற திவ்ய தம்பதியினருக்கு மகனாக அவதரித்தவர்தான் ஸ்ரீ ஆதிசங்கரர். உபநிஷத்து களில் கூறப்பட்ட அத்வைத சித்தாந்தத்தை போதித்து நம்முடைய மதத்திற்கு புத்துணர்வு தந்தார். இந்த தர்ம பிரச்சாரம் என்றென்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையில் பாரத நாட்டில் நான்கு திசை களில் மடங்களை ஸ்தாபித்தார்.

Advertisment

நம்முடைய தர்மநெறியின் தத்துவத்தை பாரத தேசத்தைத் தாண்டி கடல்கடந்து மேலை நாடுகளிலும் பரப்பிய பெருமை சுவாமி விவேகானந்தர், சுவாமி சிவானந்தர் சமீபகாலத்தில் சுவாமி சின்மயானந்தா, சுவாமி தயானந்த சரஸ்வதி, புட்டபர்த்தி சாய்பாபா, மாதா அமிர்தானந்தமயி போன்ற ஆன்மிக குருமார்களையும், அருளாளர்களையும் சொல்-க்கொண்டே போகலாம். இவர்கள் தங்களுக்கென ஓர்அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் பல நல்ல ஆன்மிக திருப்பணிகளைச் செய்துவருகின்றனர்.

கடல்கடந்து மலேசியா நாட்டில் "மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடம்' எனும் பெயரில் ஓர் ஆன்மிக அமைப்பை பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் வாழும் மலேசியாவில் சிறப்பான முறையில், வைதீக நெறியுடன் நடத்திவரும் சுவாமி மகேந்திரர் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார்.

அவரை நம் இதழுக்காக சிறப்பு பேட்டி கண்டோம்.

கேள்வி: உங்களின் ஆன்மிக அமைப்பைப் பற்றி சொல்லுங்கள்.

சுவாமிஜி: எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை. சிறிய வயதில் திருசெந்தூரில் ஆகம பாடசாலையில் அர்ச்சகர் பயிற்சி பெற்றேன். மலேசியாவில் அம்பாங் பகுதியில் அமைந் துள்ள விநாயகர் கோவி-ல் எனக்கு அர்ச்சகராகப் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அந்தசமயம் இராமகிருஷ்ணா மிஷின் தலைவர் ஸ்ரீ பரமஹம்சதாகர் சுவாமிஜியின் நட்பு கிடைத்தது. அவர் மூலம் ஆன்மிக சம்பந்தமான பல விஷயங்களைக் கேட்டறிந்தேன். அவரது போதனை யில் அடிக்கடி ஸ்ரீஆதிசங்கரரைப் பற்றி மிகப்பெருமையாகச் சொல்வார். இதனால்என் மனதில் ஸ்ரீஆதிசங்கரரைப் பற்றி ஓர் உயர்ந்த எண்ணம் தோன்றவே, அவரையே எனது மானசீக குருவாக ஏற்று அவரது அத்வைத சித்தாந்தத்தைப் பற்றியும், அவர் எழுதிய நூல்களையும் படிக்கத் தொடங்கினேன்.

அவர் அவதரித்த கேரள மாநிலம் காலடிக்குச் செல்லவேண்டும் என்கிற மன உந்துதலால், காலடிக்குச் சென்றேன். அங்குள்ள பூர்ணாநதியில் குளிக்கும் சமயத்தில், ஓர் அந் தண சிறியவன் என்னிடம் பேசினான். ஒருசில நிமிடங்கள் குளித்து கரைக்கு வரும்போது அந்த சிறுவன் அங்கில்லை. பாலகன் வடிவில்ஸ்ரீ ஆதிசங்கரரேஎனக்கு காட்சியளித்த தாக மனதில் பட்டது. அதன்பிறகு எனதுமனதில் ஓர் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன்.

காலடியிலிருந்து நேராக சிருங்கேரிக்குச் சென்றேன். அங்கு ஸ்ரீ பாரதி தீர்த்த சங்கராச்சார்ய ஸ்வாமிகளைத் தரிசனம் செய்து அவரின் ஆசியைப் பெற்றேன். மலேசியா திரும்பிய பின்பும் என் மனம்ஸ்ரீ ஆதிசங்கரரையே சுற்றிவந்ததால், பெரும் சிரமத்திற்கு இடையே மலேசியாவில் நிலம் வாங்கி, பெர்மாயில் பகுதியில் 2001-ஆம் ஆண்டு இந்த மடம் கட்டப்பட்டது. அங்கு ஸ்ரீ ஆதிசங்கரருக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டது.

கேள்வி: உங்கள் அமைப்பின் மூலம் செய்துவரும் திருப்பணியின் என்ன?

சுவாமிஜி: நம்முடைய இந்து மதத்தின் அறக் கேட்பாடுகளை இங்குள்ள மக்களுக்கு எடுத்துக்காட்டவே இந்த திருமடம் பாடுபடுகிறது. அதிலும் குறிப்பாக ஸ்ரீ ஆதிசங்கரர் வழிகாட்டிய வழிபாட்டு முறையும் அவரது சித்தாந் தத்தையும் பரப்புவது, இங்கு வாழும் இந்து குழந்தைகளுக்கு அடிப்படையான தெய்வீக வழிபாடுமுறை, திருமந்திரம், திருமுறைகள், சமஸ்கிருத ஸ்லோகங்கள் போன்றவற்றை இலவசமாக கற்றுத்தருவது போன்ற திருப்பணிகளை செய்துவருகிறோம்.

இதுதவிர வேத பாடசாலை நடத்துகிறோம். கோவில் அர்ச்சகர் பயிற்சி, சங்கீத, நடனப் பயிற்சி, நன்நெறி வகுப்புகள் போன்றவற்றை இலவசமாக நடத்திவருகிறோம்.

கேள்வி: இந்து மதத்தில் பல ஆன்மிக செம்மல்கள் இருந்தபோதும் தாங்கள் ஸ்ரீ ஆதி சங்கரர் பெயரில் திருமடம் வைக்கக் காரணம் என்ன?

சுவாமிஜி: கலியுகத்தில், நம்முடைய இந்து மதத்தைக் காப்பாற்றி, அதற்கு முதலில் மறுமலர்ச்சி தந்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர் ஒருவர்தான். மிகச்சிறிய வயதிலேயே சகல சாஸ்திரங்களை குருவின்மூலம் கற்று பகவத்கீதை, வேத வியாசரின் பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகளுக்கு விளக்க விரிவுரைகளை (பாஷ்யம்) எழுதினார். வேத மார்க்கமாகிய அத்வைத தத்துவத்தை உபதேசித்து, பாரத தேசம் முழுவதும் விஜய யாத்திரையாகச் சென்று பல பண்டிதர்களை தம்முடைய வாதத்திறமையால் வென்று தம்முடைய தத்துவத்தை நிலை நிறுத்தினார்.

நம்முடைய இந்து மதத்திலுள்ள எல்லா தேவதா மூர்த்திகள் பெயரில் தினமும் துதிக்க ஸ்தோத்திரங்களை அருளியுள்ளார். முன்பு பலவிதமான வழிபாட்டுமுறைகள் இருந்ததை எல்லாம் திருத்தி, ஆறுவகை சமய வழிபாட்டு முறையைக் கொண்டுவந்தார். சிவபெருமானின் அவதாரமாக பூவுலகில் ஸ்ரீ ஆதிசங்கரர் தோன்றியதால் நம்முடைய இந்து மதம் உலகம் எங்கும் இன்று பரவ காரணமாக இருந்தது. எங்களின் திருமடம்மூலம் ஸ்ரீ ஆதிசங்கரரின் உபதேசங்களை எடுத்துக்கூறும்போது இங்கு வாழும் மக்கள் விரும்பிக்கேட்டு, அதன்மூலம் மன நிம்மதியும், பயனும் அடைந்துவருகிறார்கள். முஸ்லீம்கள், சீனர்கள் பலரும் இங்கு அடிக்கடி வருகைதருவது உண்டு. எங்கள் திருமடத்தில் 108 சிவ-ங்களை பிரதிஷ்டை செய்துள்ளோம். அவற்றை உள்ளூர் மக்கள் தாங்களே அபிஷேகம், பூஜை செய்து வருகிறார்கள். இங்கு சாதி, இன, மத, நாடு என்கிற பாகுபாடு இன்றி அனைவரும்ஸ்ரீ ஆதிசங்கரரை வழிபட்டு செல்வார்கள். எனவேதான் ஸ்ரீ ஆதிசங்கரரை "ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர்' என அழைப்பதுண்டு.ஜகத்குரு என்றால் உலகமக்களின் ஒப்பற்ற குரு எனப்பொருள்.

கேள்வி: மனிதனின் வாழ்க்கைக்கு முக்கியமானதுஎது என்று சொல்லுங்கள்?

சுவாமிஜி: மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது ஞானம்தான் என பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளதால் ஆத்ம ஞானத்தைத்தான் நாம் சம்பாதிக்க வேண்டுமே தவிர பணம், ஐஸ்வரீயம் போன்றவற்றை சம்பாதித்தால் அவை என்றும் நம்முடன் வராது. மனித உடல் (சரீரம்) வேறு, ஆன்மா வேறு என முத-ல் உணரவேண்டும். உடல் அழியக்கூடியது; ஆன்மா நிலையானது.மனித வாழ்வில் நாம் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக புண்ணியத்தை சம்பாதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அதுவே நமக்கு அடுத்த பிறவியிலும் நிச்சயம் உதவும். ஆத்ம ஞானத்தைப் பெற தகுந்த சத்குருவை நாடிச் செல்வதுதான் நம் பண்பாடு. அவர் மூலம்தான் ஞானத்தைப் பெறமுடியும்.

கேள்வி: நம்முடைய இந்து மதத்தின் போதனையை சுருக்கமாகச் சொல்லமுடியுமா?

சுவாமிஜி: நம்முடைய இந்து தர்மம் என்றும்அழிவற்ற ஓர் தர்ம மார்க்கம். கடலை சுருக்க முடியுமா? அதுபோலத்தான் நம்முடைய மத கோட்பாடுகள், தத்துவங்கள்! சில வழிபாட்டு முறைகள், சடங்குகள் சைவ# வைணவ பிரிவுகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் பொதுவான சித்தாந்தத்தில் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதான். மனித வாழ்க்கைக்குத் தேவையான பரோபகாரம், தர்மசிந்தனை, சத்யநெறியுடன் வாழ்க்கை முறை முத-யவற்றைத்தான் நம் மதம் போதிக்கிறது. "லோகஹ் சமஸ்தா சுகினோ பவந்து'. அதாவது உலகில் வாழும் அனைவரும் சுகத்துடன், நலமுடன் வாழவேண்டும் என்றுதான் தினமும் நித்ய கர்மா அனுஷ் டானம் போதும், பூஜையின் முடிவிலும் சொல்கிறோம். எல்லாரும் இன்புற்று இருக்கவேண்டும் என்கிற பொதுநோக்கு இந்து மதத்தில்தான் சொல்லப்பட்டுள்ளது.

அறம் என்கிற தர்ம நெறியைக் கடைப்பிடித்தல் அவசியம் என்பதால் "அறம் செய்ய விரும்பு' என தமிழ்ப்புலவர் ஒளவையார் நமக்கு ஒரு வரியில் நம்முடைய மதத்தின் முக்கிய தத்துவத்தை உணர்த்தி

னார்.

கேள்வி: மலேசியாவில் அரசும், மக்களும் உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறார்களா?

சுவாமிஜி: இங்கு முஸ்லீம்கள், சீனர்கள்அதிகம் வாழ்கிறார்கள். அதற்கு அடுத்தப் படியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் முஸ்லீம் என்பதால் ஆட்சி பொறுப்பிலுள்ள அமைச்சர்கள் மத வேறுபாடு இன்றி இறை நம்பிக்கையை மையமாகக்கொண்டுஅதற்கேற்ப சட்ட விதிமுறைகளை இயற்றி நல்லமுறையில் அரசாங்கத்தை நடத்திவருகிறார்கள். நம்முடைய திருமடத்தின் தேவைக்கேற்ப அரசின்மூலம் மானியம், உதவிகளை உடனுக்கு உடன் செய்து தருகிறார்கள்.

பள்ளி, கல்லூரி போன்றவற்றில் மாணவர்களுக்கு நீதிபோதனை, நன்நெறி வகுப்புகளை நடத்த நம்முடைய திருமடத்திற்கு சிறப்பு அனுமதி தந்துள்ளனர்.

இதுவே ஓர் அங்கீகாரம் என்றே கூறலாம். இங்கு இருக்கும் தமிழ் பள்ளிகளில் நம்முடைய தேவாரம், திருவாசகம், திருமுறைகளை திருமடம் சார்பாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நேரில்சென்று வாரம்தோறும் ஒவ்வொரு பள்ளியாக சென்று வகுப்புகளை எடுப்பார்கள். மேலும் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு நன்நெறியை போதிக்க எங்கள் ஆசிரியர்கள் செல்வதுண்டு.

மலேசியாவில் தைபூசம் என்பது மிகபெரிய தமிழர்களின் பண்டிகை. அதைஒட்டி இங்கு இருக்கும் எல்லா கோவில்களிலும் சிறப்பு வழிபாடு, பொது நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக தொன்றுத்தொட்டு கொண்டாடப்படுகிறது.

சிறப்பான முறையில் ஆன்மிக சேவைகளை செய்துவரும் சுவாமி மகேந்திரருக்கு நம் இதழ் சார்பாக வாழ்த்து சொல்லிவிடைபெற்றோம்.தமிழ்நாட்டிலிருந்து ஆன்மிக சுற்றுலா செல்பவர்கள் மலேசியா ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்திற்கும் ஒருமுறை சென்று வழிபட்டுவரலாம். இங்கு பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு இலவசமாக வசதிகளை செய்துதருவது என்பது கூடுதல் தகவல்.

ஸ்ருதி ஸ்ம்ருதி புராணாநாமலயம் கருணாலயம்

நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

தொடர்புக்கு தொலைபேசி:

019-3205265, 012-3702503.