ஒரு ஆட்டோ ஓட்டுபவருக்கு இருக்கும் உணர்வு "ஆடி' கார் வைத்திருப்பவருக்கு இருப்ப தில்லை. இதுதான் எதார்த்த நிலை. இப்போதுள்ள மக்களின் வாழ்வாதாரம் கொரோனா எனும் நோயின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும் கூட இன்னும் பெரும்பாலான வசதி படைத்தவர்கள், 'இந்த நோய் நமக்கானதல்ல; நம்மிடம் பணம் இருக்கிறது; பார்த்துக்கொள்ளலாம்' என்று சற்றும் இரக்கமில்லாமல் சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டும் பெண்மணி ஒருவர், இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்ட சுமார் 500 நோயாளிகளை, மருத்துவ மனைக்கு தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச்சென்று, இன்னும் இந்த மண்ணில் அன்பும் கருணையும் ஆதரவும் இறந்துவிட வில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.
இந்தியாவில் சில பணக்காரர்கள் ஆசியாவிலேயே முத-ரண்டு இடங்களில் இருக்கின்றனர். இவர்களுள் ஒருவர் நினைத் தால்கூட போதும்; இந்தியாவில் ஏழை- பணக்காரர் என்னும் வித்தியாசமின்றி, அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக விநியோகிக்க முடியும். இத்தகைய ஒரு இக்கட்டான- நெருக்கடியான சூழலில், கடந்த ஒன்றரை வருடங்களில் இவர்களது நிறுவனங்களின் வரி வருமானம் 2.5 லட்சம் கோடியைக் கடந்துள்ளதாக செய்தித்தாள்கள்மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இதைப் பார்க்கும்போது, 'பணமிருக்கும் மனிதனிடம் மனமிருப்பதில்லை; மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை' என்னும் கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் இறுதி நாட்கள் மருத்துவமனையில் ஐ.சி.யூவில் கழிந்தது. எப்படி வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. கருணையுடனும் அன்புடனும் அறச் சிந்தனையுடனும் வாழ்ந்தோமா என்பதுதான் முக்கியமாகும். அறத்தைப் பற்றி வாழ்வியல் ஞானி திருவள்ளுவர்-
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா றியன்றது அறம்'
என்று கூறுகிறார். பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் ஒரு மனிதனிடம் இருக்கக்கூடாதவையாகும். இந்த நான்கு துர்குணங்களையும் தன்னிடம் இல்லாமல் விலக்கி நடப்பதே சிறந்த அறமாகும்.
அறத்தின் சிறப்பைப்பற்றிக் கூறிய திருவள்ளுவர் ஈகையின் சிறப்பை-
"ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க னவர்'
என்று கூறுகிறார். அதாவது தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்கு ஈயாமல் வைத்திருந்து, பின்பு அதை இழந்து விடும் கல்நெஞ்சம் கொண்டவர்கள், வறியவர் களுக்கு கொடுத்து மகிழும் அறமாகிய இன்பத்தை அறிந்திருக்கமாட்டார்கள் என்கிறார்.
எனவே மனித உடலெனும் கூட்டில் இறைவன் எனும் உயிர் இருக்கும்போதே அறச் செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, நாமும் மகிழ்ந்து நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்விப்பதே நிறைவான வாழ்க்கையாக அமையும். அது சிவபெருமானுக்குச் செய்யும் நிவேதனமாகும். இவ்வாறு நடந்துகொள்வது சாத்தியமா என்னும் கேள்வி சிலருக்கு எழலாம். நம்பிக்கை யோடு செயல்பட்டு நம் எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். ஒருவரது எண்ணம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை திருவள்ளுவர்-
"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து'
என்கிறார். ஒருவன் தன் மனதால் எண்ணுவதெல்லாம் உயர்வான விஷயங் களாக இருக்கவேண்டும். அத்தகைய உயர்வான எண்ணங்கள் எக்காலத்திலும் தவறாத தன்மை உடையவையாக இருக்கும்.
இங்கே நம் மானிட உடலின் முக்கியத் துவத்தைப் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். ஒருவரது உடலும் மனமும் நூறு சதவிகித நேர்மறை ஆற்றலுடன், ஆரோக்கியத்துடன் இருந்தால் அவரை எந்த நோய்க் கிருமி களாலும் எதுவும் செய்யமுடியாது. இங்கே ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறும் வசனத்தை நினைவுகூரலாம். "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்; இவன் ரொம்பவும் நல்லவன்னு சொல்லிட் டாங்கமா' என்பதே அந்த வசனம். இது நகைச்சுவை மட்டுமல்ல; வேறு கோணத்திலும் பார்க்கலாம். ஒரு கொடிய நோய்க்கிருமி ஒருவரது உடலில் நுழைந்துவிடுகிறது. பிறகு அந்த கிருமி, "என்னடா இது... இவன் உடம்பை இவ்வளவு உறுதியாக வைத்திருக்கிறான். நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கிறான். இவனை நம்மால் எதுவும் செய்யமுடியாது போலிருக்கிறதே' என்று சொல்லி, அந்த கிருமி அவன் உடலைவிட்டு வெளியேறிவிடுகிறது. இதுதான் எதார்த்தம்.
ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியமென்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் யோசிக்கவேண்டும். பலரும் இதுபற்றி சிந்திப்பதில்லை. இதற்குக் காரணம் என்னவென்று சிந்தித்தோமானால், இதற்கு முன்னர் நம்மிடம் நிலவிவந்த கூட்டுக் குடும்பம் என்னும் அமைப்பு பெரும்பாலும் சிதைந்து விட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கின்றனர். அதனால் சமைக்கக்கூட நேரமில்லாமல், உணவகத்திற்குச் சென்று சாப்பிடத் தொடங்கினர். பின்பு அதையே பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர். இதற்குக் காரணம் சோம்பல்தான்.
இவ்வாறு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை இந்த கொரோனா நோய் வந்து மேலும் முழுநேர சோம்பல்வாதி களாக மாற்றிவிட்டது. எவ்வாறென்றால், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தாலும் எவரும் கடைக்குச் செல்வதில்லை. கேட்டால், "ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட அனுமதி யில்லை' என்று கூறிக்கொள்கிறார்கள். அதனால் என்னவாயிற்று என்று பார்த்தால், "ஆன்லைன் ஆர்டர்' என்று அலைபேசியில் பதிவு செய்துவிட்டு, படுத்துக்கொண்டே சாப்பிட்டு வயிறு பெருத்துப்போகிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சோம்பல்தனம்தான். வீட்டில் சும்மா இருக்கும்போதும் பழக்கத்தின் காரணமாக இவர்களுக்கு சமைக்கத் தோன்றுவதில்லை. சோம்பல் என்பதும் ஒரு கொடிய நோய். இதை திருவள்ளுவர்-
"மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து'
என்கிறார். அதாவது, அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடம் கொண்டிருக்கும் அறிவற்றவன் பிறந்த குடி (இனம்) அவனுக்கு முன்பாக அழிந்துவிடும் என்று கூறுகிறார்.
கொரோனா நோயின் அச்சுறுத்தலில், பலரும் மன அழுத்தம் எனும் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். கடவுள் இல்லையென்று சொன்னவர்கள் பலரும் 'எப்போது கோவிலைத் திறப்பார்கள்' என்று காத்துக் கிடக்கிறார்கள். உடலையும் மனதையும் தூய்மையாக வைத்திருப்பவர் உள்ளத்தில் இறைவன் குடிகொண்டு விடுவான்.
இந்த உண்மையை நாம் மறக்கக்கூடாது. சங்ககாலப் புலவர் ஔவையார் தனது ஔவைக் குறளில்-
"உணர்வு ஆவதெல்லாம் உடம்பின் பயனே
உணர்க உணர்வு டையார்'
என்கிறார். அறிவுடையவனாக ஆதலே மனித உடலின் பயனாகும் என்பதை மெய்ஞ்ஞான அறிவுடைய ஞானிகள் உணர்ந்துகொள்வார்கள் என்பது இதன் பொருள்.
ஆகவே ஒவ்வொருவரும் சுறுசுறுப்பானவராகவும், சோம்பல்தன்மை அற்றவராகவும், ஆரோக்கியம் மிகுந்தவராகவும், செயல்திறன் மிக்கவராகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்த வராகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அதைவிட்டு, 'நீ உன்னை அறிந்தால்... உலகை அறிந்தால்' என்று பேசிக்கொண்டிருப்பதில் எவ்விதப் பயனுமில்லை. முதலில் அவரவர் உடலைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். மருந்தில்லா மருத்துவ மேதை திருமூலர் தனது திருமந்திரத்தில்-
"விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு டையான்கழல் மேவலும் ஆமே'
என்கிறார். மனித உடலை அறியவும் உணரவும் உதவக்கூடியது அறிவாகிய விளக் காகும். இந்த அறிவொளி காட்டும் உடலைவிட்டு விலகிப்பிரிந்து (பிளந்து), உள்ளத்தினுள்ளே சுடர்விட்டுக்கொண்டிருக்கும் ஆன்ம ஒளி எனும் விளக்கை மேலும் தூண்டிப் பிரகாசிக்கச்செய்து, அந்த ஆன்ம ஒளியின் துணையுடன் சிவானந்தமாகிய செழுஞ்சுடரை மேலும் தூண்டி ஒளிவீசச் செய்து, சிவ ஒளியில் சீவனின் ஒளி விளங்கக் காண்பவர்களுக்கு, ஒளிதந்து உதவும் அருளாளனான அண்ட மெல்லாம் நிறைந்திருக்கும் பரம்பொருள் சிவபெருமானின் திருவடித் துணை கிட்டும்.
இனி, எத்தகைய நோயையும் எதிர்க்கும்- அழிக்கும் சில இயற்கை உணவுகளைக் காண்போம்.
நொச்சி இலை- 5; பூண்டுப் பல்- 2; மிளகு- 2 ஆகிய மூன்றையும் ஒன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து, காலை வேளையில் உணவுக்குப்பின் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்டுவர வேண்டும். இதனால் நுரையீரல் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். மூச்சுத்திணறல் சீராகும். தொடர் தும்மல் குணமாகும்.
பவளமல்லி இலை- 4; பூண்டுப் பல்- 3; மிளகு- 2; தோல்நீக்கிய இஞ்சி ஒரு துண்டு- இவற்றை ஒன்றாக இடித்துச் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். அது 300 மில்லி-ட்டராக சுண்டியபின் காலை, மாலை, இரவென்று மூன்றுவேளை உணவுக்குப்பின்பு அருந்திவர வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் அருந்தவும்.
இதனால் சுவாசப் பிரச்சினை குணமாகும். மிக முக்கியமாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த ஓட்டம் சீராகும். ஆக்சிஜன் அளவு சமநிலையில் இருக்கும். கிருமிகளால் உண்டாகும் காய்ச்சல் குணமாகும்.
மரிக்கொழுந்து மூன்று அல்லது நான்கு ஈர்க்குகளைத் துண்டுகளாகக் கிள்ளி, 100 மில்லிலிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அது முக்கால் பாகமாக சுண்டியவுடன் வடித்து, வெதுவெதுப்பான சூட்டில் வெறும் வயிற்றில் ஒரு வேளை குடித்தால் போதும். எந்த வகையான காய்ச்சலும் பத்து நிமிடங்களில் குணமாகும். உடல் வலிகள் தீரும். இது முக்கியமான அனுபவ உண்மையாகும். தேவைப்பட்டால் இரண்டு வேளை அருந்தலாம்.
ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர் ஆகிய இரண்டையும் நன்கு உலர்த்தி, சம அளவில் எடுத்து இடித்து சலித்து, இந்த சூரணத்தை அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டுவர இருமல், மூச்சுத் திணறல் சீராகும்.
பெரிய துண்டு இஞ்சி- 1; பூண்டுப்பல்- 8; சீரகம் ஒரு ஸ்பூன்; மஞ்சள் தூள் அரை ஸ்பூன்; நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்; கைப்பிடியளவு சரக்கொன்றைப் பூ- இவற்றுடன் பெரிய தக்காளி ஒன்று; பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கிச் சேர்த்து, தேவையான அளவு இந்துப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். ஒருமுறை இக்கலவையை மசித்து மீண்டும் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு தம்ளரில் 100 மில்லி-ட்டர் அளவு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பசுநெய் ஒரு ஸ்பூன், கருப்பு மிளகுத்தூள் மூன்று சிட்டிகை அளவில் கலந்து குடித்து வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கிருமிகளின் தாக்கத்தைத் தடுக்கும். பலவீனம் சரியாகும். சோர்வு நீங்கும். ஆக்சிஜன் அளவு மேம்படும். சரக்கொன்றைப் பூ ஒரு கிருமிமர்த்தினி ஆகும்.
ஒரு ரசம் (சூப்) வைக்கும்போது இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய், இந்துப்பு, பசுநெய் ஆகியவை பிரதானமாக இருக்கவேண்டும். இதனுடன் தூதுவளைக் கீரை அல்லது பிரண்டைக் கீரை அல்லது இரண்டு வெற்றிலை, கற்பூரவல்- இலை- 5, துளசி இலை 10 ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மேற்சொன்ன பொருட்களோடு சேர்த்து ரசம் தயாரித்து அருந்தி வர, நுரையீரல் தொற்று குணமாகி நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.
தெய்வீக மூலிகைகளைப் பயன்படுத்து வோம். கிருமிகளை விரட்டுவோம். ஆரோக்கி யம் காப்போம். ஆனந்தமான வாழ்வை அனுபவிப்போம். உணவென்னும் மருந்தைப் பயன்படுத்துவோம். ஈடிணையில்லா ஈசனின் அருளைப் பெறுவோம்!