சென்னை அண்ணா நகரில் கடந்த ஒரு வருட மாக "சிவா பியூபிள் டிரஸ்ட்' அறக் கட்டளை இயங்கி வருகிறது. ஏழை களுக்கு உதவிவரும், பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் இந்த அறக் கட்டளையை சிறப் பாக நடத்திவரும் செல்வி. விஜயலட்சுமி யை சந்தித்துப் பேசினோம்.
சேவை செய்வதற்காகவே தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டதாகக் கூறியவர், தங்கள் குடும்ப குலதெய்வம் மதுரைவீரன், தனது இஷ்டதெய்வம் சிவ பெருமான் என்றார். அதனால் தான் தனது சமூக சேவை அறக் கட்டளைக்கு "சிவா பியூபிள் பவுண்டேஷன்' என்று சிவன் பெயரை வைத்திருப்பதாகக் கூறினார்.
தனது குழந்தை, சிறுமி பருவம்முதல் இப்போது மங்கைப் பருவம்வரை சிவபெருமான் எப்படியெல்லாம் அருள்தந்து காத்து வருகிறார் என்பதை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
"நான், தினமும் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட ஏழைக் குடும்பத்தில், சென்னை கோடம்பாக்கம் அருகிலுள்ள சின்னஞ்சிறு குடிசையில்தான் பிறந்தேன்; வளர்ந்தேன். அப்பா கிரி, அம்மா மகாலட்சுமி. இருவருக்கும் ஒரே மகள் நான் மட்டுமே. அம்மாவின் பெயரிலிருந்த லட்சுமி வீட்டில் இல்லை. வறுமை கோரத்தாண்டவம் ஆடியது. நல்ல உடை, நல்ல உணவு, நல்ல வீடு மூன்றையும் நான் பார்க்காத காலம் அது.
ஆனால் என்மீது பாசமும் அன்பும் வைத்து, என்னை உயிராக நினைத்து, தாங்கள் பட்டினி கிடந்து எனக்கு மட்டும் சாப்பாடு தந்து காப்பாற்றிய என் தாய்- தந்தையே எனக்கு சிவன்- பார்வதியாகத் தெரிந்தார்கள். இப்போதும் ஈருயிர் ஓருடலாக வாழ்ந்த சிவசக்தியாகவே அவர்களைப் பூஜிக்கிறேன்.
என் தாய்- தந்தை எனக்கு சிவ வழிபாடு, சிவன் பாடல்களைக் கற்றுத்தந்ததால் சிறுமியாய் இருந்தது முதலே சிவவழிபாட்டுப் பாடல்களை இனிமையாகப் பாடி நல்ல குரல் வளத்தைப் பெற்று, குடியிருந்த குடிசையை சிவபெருமான் குடியிருக் கும் கோவிலாக்கிவிட்டேன்.
அக்கம்பக்கம் குடியிருந்தவர்கள் என்னைப் பாடவைத்துக் கேட்டு சிலிர்த்து மகிழ்ந்து செல்வார்கள்.
அந்த தீவிர சிவபக்திதான் என் தந்தை என்னை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்க வழிகாட்டியது. ஹோட்டல் வேலை, பிற உடல் உழைப்புப் பணி களை இரவு- பகலாகச் செய்து ஒரே மகளான என் எதிர்காலம், சிறக்கவேண்டு மென்ற எண்ணத் துடன் செயல்பட்டு வளர்த்தார். என் தந்தை. நான் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர வேண்டிய நேரம், என் தந்தை அளவுக்கு மீறி எனக்காக உழைத்த காரணத்தால் நாற்பத்தேழு வயதிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார்.
"சிவனே... ஏன் இந்த கொடிய சோதனை' என்று நானும் என் தாயும் இடிந்து மனம் நொறுங்கிப் போனோம். கணவனை இழந்து கலங்கிப்போன என் அம்மாவும், தந்தையை இழந்து தவித்துப்போன நானும், கல்லூரியில் படிக்க பணம் வேண்டுமே... என்ன செய்வதென்று கேட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சென்று மனமுருக வேண்டிச் சரணடைந்தோம்.
அப்போது என் அம்மாவின் மனதிற்குள் கற்பகாம்பாள் புகுந்துகொண்டதுபோல், என் நிலையறிந்து கபாலீஸ்வரர் தீர்வு சொன்னதுபோல், அப்பா இறக்கும்வரை எந்த வேலைக்கும் போய் சம்பாதிக்காமல் "ஹவுஸ் ஒய்ப்'-ஆக இருந்த என் அம்மா, இனி வீடுகளில் வேலைசெய்து என்னைப் படிக்கவைக்கப் போவதாக அந்த கோவிலில் சபதமே செய்தார். அதுபோலவே வேலை செய்து என்னை மாலைநேரக் கல்லூரியில் பி.காம் படிக்கவைத்தார். அப்பா இருக்கும் போதே என் தாய்க்கு உடல்நலம் அடிக்கடி பாதிக்கும். அப்பா மருந்துகள் வாங்கித் தந்து சரிசெய்வார். அப்படி உடல்நலம் குன்றிய நிலையிலும் என்னைப் பட்டதாரியாக்கி னார்.
பி.காம் பட்டம் பெற்றபின், சென்னை லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ படிக்க, "சிவபெருமானே, நீயே பொறுப்பு' என்று சேர்ந்தேன்.
அதேசமயம், அம்மாவிடமே முழுப் பொறுப்பும் தந்துவிடாமல், கல்லூரி நேரம் தவிர மாலை ஆறு மணிமுதல் இரவு பன்னிரண்டு மணிவரை மருந் துக் கடையில் பகுதிநேரமாகப் பணி புரிந்து, கல்லூரிக் கட்டணம் செலுத்தி எம்.பி.ஏ பட்டதாரி ஆனேன்.
எம்.பி.ஏ முடித்தவுடனேயே தனியார் நிறுவனத்தில் மேலாளர் வேலைக்குச் சேர்ந்து நன்றாக சம்பாதித்து, குடிசையிலிருந்து அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்க மாறினோம்.
"நீ எனக்காக மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்தது போதும். இனி உன்னை மகாராணிபோல் உட்காரவைத்து விரும்பியதை சாப்பிட வைத்து, நல்ல உடை அணியவைத்து வாழவைப்பேன்' என்று அம்மாவை ஆனந்தக் கண்ணீர் சிந்த வைத்தேன்.
என் அப்பா கிரி மனிதநேயம் மிக்கவர். குடிசையில் வாழ்ந்த போதும் தேடிவந்து உதவி கேட்டவர்களுக்கு தன் குடும்பத் திற்குத் தேவைப்பட்ட பணத்தைக் கூட கொடுத்து, ஏழ்மையிலும் ஈகை குணத்தோடு வாழ்ந்து மறைந்தவர்.
அவரைப் பார்த்து, நானும் வசதி வந்ததும் தந்தைபோல் ஏழைகளுக்கு உதவுவது மட்டுமே வாழ்வின் ஒரே லட்சியம் என்று சிறுவயதிலேயே முடிவு செய்திருந்ததால், பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, கடந்த ஒரு வருடத்திற்குமுன்பு சென்னை டிரஸ்ட்புரத்தில் "சிவா என்டர்பிரைசஸ்' துவங்கி, ஆன்லைன்மூலம் புடவைகள் விற்பனை செய்யும் தொழிலில் இறங்கி சம்பாதித்து, அதனை சமூக சேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறேன்.
சிவபெருமான் நான் வேண்டித் துதித்தபடி முன்னேற்றம் தந்துவிட்டார். கடந்த ஆண்டு சென்னை அண்ணாநகரில் அரசில் பதிவு செய்யப்பட்ட சிவா பியூபிள் பவுண்டேஷனைத் துவங்கிதேவி, மாலினி, ஷாலினி, பால் போன்ற சேவை உள்ளம்கொண்ட தன்னார்வத் தொண்டர்கள் உதவி யுடன் சேவைகளைச் செய்து வருகிறோம்.
கேரளா வயநாடு சென்று, நிலச்சரிவால் பாதிப்படைந்த மக்களுக்கு நிதியுதவி செய்தோம். இளமையில் வறுமை கொடியது என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால் 45 ஆதரவற்ற குழந்தைகளைத் தேர்வுசெய்து உதவி வருகிறோம். 15 மாற்றுத் திறனாளிகள், 25 முதியோர் மற்றும் 150 வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு உணவு, உடை, அரிசி, பலசரக்கு, மருந்துகள் போன்ற வாழ்வாதாரம் சார்ந்த உதவிகளைச் செய்துவருகிறோம். சமீபத்தில் சாலையோர ஏழைக் குழந்தைகளுக்கு கிருஷ்ண ஜெயந்தி யன்று கிருஷ்ணர் வேடம்போட்டு மகிழ்வித் தோம்.
சாலையோர நடைபாதையில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு தினமும் அன்னதானம் தருகிறோம். பெண்களுக்கு புடவைகள் தருகிறோம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிவருகிறோம். தர்ம சிந்தனை உள்ளவர்கள் தந்துவரும் ஆதரவுடன், சிவபெருமான் அருளுடன் சிறப்பாக சமூக சேவைகள் செய்துவருகிறோம்.'' சமூக சேவைகளில் சாதனைகள் படைத்து வரும் செல்வி விஜயலட்சுமியின் தொண்டு தொடர வாழ்த்தி விடைபெற்றோம்.
தொடர்பு கைபேசி எண்: 95008 83911.