சைவ சமயத்தின் சிகரமாக விளங்குவது பெரிய புராணமாகும்.தன்னல மற்ற சிவத்தொண்டை யும் எத்தனை இடர்கள் வந்தபோதிலும் எல்லாம் சிவமே என்று அடியவர்கள் சிவ பெருமானின் திருவடியையே பற்றிப்பரவி, என்றும் அழியாத இறவாப் புகழ்பெற்றதைக் கூறும் புனித நூலே பெரியபுராணமாகும். சிவத்தொண்டில் தோய்ந்து சிவபெருமானோடு இரண்டறக் கலந்திருக்கும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை நமக்குத் தந்து சைவத்துக்கு அருந்தொண்டாற்றியவர் தெய்வ சேக்கிழார் ஆவார்.
சேக்கிழார் பிறந்த ஊர் சென்னைக்கு அருகிலுள்ள குன்றத் தூர் ஆகும். பண்டைக் காலத்தில் தொண்டை மண்டலமாக இருந்த இப்பகுதியில், கி.பி. 12-ஆம் நூற்றாண் டில் சேக்கிழார் அவதரித்தார். அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயர்கொண்ட சேக்கிழார் இளமையிலேயே அபார ஞானத் துடனும் தீவிர சிவபக்தியுடனும் திகழ்ந்தார்.
சேக்கிழாரின் மதிநுட்பத்தையும், நேர்மையான நடத்தையையும் கண்ட மன்னன் அநபாய சோழன் அவரை சோழ நாட்டின் தலைமை அமைச்சராக நியமித்தார். மன்னன் வைத்த நம்பிக்கையாலும், மக்கள் மீதிருந்த கருணையாலும் தம் பணியை சிவத்தொண்டாகவே செய்து வந்தார் சேக்கிழார். நாடெங்கிலும் உள்ள சிவாலயங்களைச் சென்று தொழுவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். திருநாகேஸ்வரம் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தனது ஆத்மார்த்த நாதராக ஏற்று, ஆழ்ந்த பக்கியால் அடிக்கடி சென்று வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திருநாகேஸ்வரத்தில் உறையும் சிவபெருமானுக் குத் தான் பிறந்த ஊரான குன்றத்தூரிலும் ஆலயம் எழுப்ப விரும்பிய சேக்கிழார், அழகான சிவாலயம் கட்டி கும்பாபிஷேகமும் செய்துவைத்தார். இன்றும் அந்த ஆலயம் சிறப்புடன் திகழ்கிறது. சோழ மன்னன் அநபாயன் வேற்று சமயத்தின்மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தான். மன்னனின் இப்போக்கால் மனம் வருந்திய சேக்கிழார், அறுபத்துமூன்று நாயன்மார் களின் புனித வரலாற்றை மன்னனுக்குக் கூறினார்.
சிவ இன்பத்தில் திளைத்த மன்னன் நாயன்மார்களின் புனித சரித்திரம் உலகுக்கே பயன்படவேண்டும் என்ற நோக்கில், அதைத் தொகுத்து நூலாகத் தரவேண்டு மென்று சேக்கிழாரிடமே கேட்டுக்கொண்டார். சேக்கிழாரும் அதை சிவபெருமானின் ஆணையாகவே ஏற்றுக்கொண்டார்.
பெரியபுராணத்தை எந்த சொல்லை முதலாகக்கொண்டு துவங்குவது என்று யோசித்த அவர், சிதம்பரத் துக்குச் சென்று ஆடல் வல்லானின் முன்நின்று, கூத்தப் பெருமானே, உனது அடியவர்களின் புகழ் பாட முதல் அடியை எப்படித் துவங்குவது?' என்று வேண்டிப் பணிந்து நிற்க, சிவபெருமானே "உலகெலாம்' என்று முதலடியை அசரீரியாக எடுத்துக் கொடுத்தார். இதைக்கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் ஆடல் வல்லானின் அருளை யும், சேக்கிழாரின் பெருமையையும் வியந்து போற்றினர்.
சேக்கிழார் பெருமானும் ஈசன் கொடுத்த முதலடியையே பெரிய புராணத்துக்கு முதலடியாக வைத்து-
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்ம- வேண்யன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்'
என்று துவங்கினார்.
சுந்தமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டே சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை இயற்றினார். பெரியபுராணம் நிறைவுபெற்றதை அறிந்த அநபாய சோழன் தில்லைக்கே வந்து சேக்கிழாரைப் பணிந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து பெரிய புராணத்தை வாசித்து அதன் பொருளையும் அனைவருக்கும் உரைக்குமாறு வேண்டினான்.
அறுபத்துமூன்று நாயன்மார்களின் பெருமையைக் கேட்ட மன்னன் உட்பட அனைவரும் கண்ணீர் மல்க ஆடல்வல்லா னைத் தொழுது நின்றனர்.
சிவனடியாருக்குள் எந்த சாதிமத பேதமும் இல்லை.வைராக்கிய பக்தியாலும், தூய அன்பாலும் ஈசனை எளிமையாக அடையலாம் என்பதை வலிமையாக உணர்த்தியது பெரியபுராணம். அகம் மகிழ்ந்த மன்னன் அநபாய சோழன் திருத் தொண்டர்களின் பெருமையைச் சொல்லும் பெரியபுராணதை சைவ நெறி தழைக்க வந்த செந்தமிழ்ப் புராணம் என்று போற்றியதுடன், அந்த புராணத்தை யானைமீது வைத்து, சேக்கிழார் பெருமானையும் யானைமீது அமரவைத்து, உடன் தானும் அமர்ந்து தன் இரு கைகளாலும் சேக்கிழார் பெருமானுக்கு சாமரம் வீசியபடி தில்லை வீதியெங்கும் உலா வந்தான். உலா முடிந்து பெரியபுராணத்தை நடராஜப் பெருமானின் திருவடியில் வைத்து வழிபட்டனர். சான்றோர்கள் சூழ்ந்துநின்று வாழ்த்துரைக்க, "தொண்டர் சீர் பரவுவார்' என்ற திருப்பெயரை மன்னன் சேக்கிழாருக்குச் சூட்டினான். மேலும் பெரியபுராணம் முழுவதையும் செப்பேட்டில் பதிக்கச் செய்ததுடன் பதினோரு திருமுறைகளுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணத்தையும் சிவனருளால் சேர்த்து சிறப்பு செய்தான் மன்னன் அநயாய சோழன்.
அதன்பிறகு தில்லையிலேயே தங்கி அம்பல வாணனின் புகழைப்பாடி பக்திக்கடலில் திளைத்து வந்த சேக்கிழார் பெருமான், ஒரு வைகாசி பூசத்திருநாளன்று ஈசனடி சேர்ந்தார். இத்தகைய பெருமை வாய்ந்த சேக்கிழார் திருவடி போற்றுவோம். அவர் இயற்றிய பெரியபுராணத்தைப் படித்து, சிவத் தொண்டுக்காகவே தங்களை அர்ப்பணித்த அறுபத்துமூன்று நாயன்மார்களின் பெருமையை உணர்வோம். பிறவி வினைகள் அகன்று சிவபெருமானின் அருள் பெறுவோம்.