"தத் விஞானார்த்தம் ஸகுருமேவாபிக்சசேத் ஸமித்பாணி:
சுரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்.'
இந்த சுலோகம் "கடோபநிஷ'த்தில் உள்ளது. பிரம்மத்தை அறிந்து கொள்ள சாஸ்திரங்கள் பல படித்தபின்பு, பிரம்மநிஷ்டரான (பிரம்மத்துடன் அனுபூதி பெற்றவர்) சத்குருவை சீடன் தேடிப்பெற வேண்டுமென்பது இதன் பொருள். இவர்களே சிறந்த குருமார்கள் (அருளாளர்கள்) ஆவார்கள்.
"தெளிவு குருவின் திருமேனி
காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை
கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே'
என திருமூலர் குருவின் மகிமையைப் போற்றிப் பாடியுள்ளார். "ஆச்சார்யவான் புருஷோ வேத' என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதுபோல, குருவின் உபதேசத்தால் பெறப்படும் பிரம்மஞானம்தான் நமக்கு முக்தியைத் தரவல்லது. அந்தவகையில் இந்து சமயத்துக்குப் புத்துயிரூட்டியவர்களில் முக்கியமான மகான்தான் ஆதிசங்கரர். தமிழ்நாட்டில் சைவத் திருநெறியைச் செந்தமிழில் வளர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் என திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரைப் போற்றுவார்கள்.
அதேபோன்று வேத மார்க்கமாக இந்துமதத்தைக் காத்தவர்களில் முக்கியமானவர்கள் ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மும்மூர்த்திகள் ஆவார்கள். இவர்களில் முதன்மையானவர் ஆதிசங்கரர். உபநிஷத்தில் கூறப்பட்ட அத்வைத சித்தாந்தத்தை மக்களிடம் எடுத்துச்சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தி, இந்து மதத்தைக் காப்பாற்றியவர்.
சனாதனதர்ம நெறியைக் காப்பாற்றவேண்டுமென தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சிவபெருமான் சங்கரர் என்னும் பெயரில், மானிட வடிவில் சுமார் 1,200 ஆண்டுகளுக்குமுன்பு கேரள மாநிலம், காலடி எனும் கிராமத்தில் சிவகுரு- ஆரியாம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். "சம்போர் மூர்த்திச்சரதி புவனே சங்கராச்சார்ய ரூபா'- சிவன் வடிவில் தட்சிணாமூர்த்தி இவ்வுலகில் சங்கரர் உருவில் சஞ்சரிக்கி றார் என்னும் மாதவீய சங்கர விஜயத்தின் சுலோகப்படி அமைந்தது ஆதிசங்கரரின் அவதாரம். இம்மகான் மூன்று வயதில் குருகுலத்தின்மூலம் சமஸ்கிருத மொழியைக் கற்க ஆரம்பித்தார். ஐந்து வயதில் உபநயனச் சடங்கு நடைபெற்றது. வேத, சாஸ்திரங்களைக் கற்க ஆரம்பித்த பின்னர், நர்மதை நதிக்கரையில் கோவிந்த பகவத்பாதர் என்னும் குருமூலம் இளம்வயதிலேயே சந்நியாசமேற்றார். அவரு டைய சீடராக இருந்து தத்துவங்களை முறை யாகக் கற்றார்.
பிறருக்கு உதவுதல் சந்தியாச தர்மத்தில் ஒன்று. இந்த குணம் பாலகன் சங்கரருக்கு இளம்வயதிலேயே இயற்கை யாகவே அமைந்திருந்து என்பதற்கு ஒரு உதாரணம்...
அன்றைய வழக்கப்படி உபநயனம் முடிந்த பிரம்மச் சாரியானவர் தனக்கு வேண்டிய உணவை யாசித்துதான் (பிக்ஷை) பெறவேண்டும். ஐந்து வயது பாலகனான சங்கரர் காலடி அருகே வசித்துவந்த ஒரு இல்லத்தரசி வீட்டிற்குச் சென்று தனக்கு உணவு வேண்டுமென கேட்க, வறுமையால் வாடிய அந்தக் குடும்பத்தில் உணவு கொடுக்கமுடியாத சூழ்நிலையால், வீட்டிலிலிருந்த சில நெல்லிலிக்கனிகளை அந்தப் பெண்மணி அழுதவண்ணம் கொடுத்தாள். அவளது ஏழ்மை நிலைகண்டு வருந்திய சங்கரர் மகாலட்சுமியை நோக்கி "கனகதாரா ஸ்தோத்திரம்' பாடி, அவ்விடத்தில் தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பெய்யச்செய்தார். சிறு வயதிலேயே பிறர் துன்பப்படுவதைக் கண்டு மனமிரங்கும் நல்ல குணத்தைப் பெற்றிருந்தார்.
சங்கரர் தனது பதினாறு வயதிலேயே அறுதிப் பிரமாணமான நூல்கள் எனப்படும் "பிரஸ்தானத்ரய' நூல்களான பிரம்மசூத்திரம் (பகவான் வேத வியாசர் எழுதியது), பகவத்கீதை, உபநிஷத்துகளுக்கு விளக்கவுரையை (பாஷ்யம்) எழுதினார்.
இறைவழிபாட்டை முறைப்படுத்தி "ஆதித்யம், அம்பிகாம், விஷ்ணும், கணநாதம், மஹேச்வரம், ஸுப்ரஹ்மண்யம் ஸதா பகித்யா நமாமோபீஷ்ட ஸித்தயே' என்னும் சுலோகத்தின்படி ஆறுவகையான (ஷண்மதம்) சமயப்பிரிவை ஏற்படுத்தி, தினமும் துதிக்க பல்வேறு ஸ்தோத்திரங்களை பல்வேறு தேவதைகள் பெயரில் இயற்றினார். பாமர மக்களுக்கு இறையுணர்வையூட்டும் வண்ணம் "பஜகோவிந்தம்' என்னும் துதிப்பாடலை இயற்றினார்.
மீமாம்ஸ சாஸ்திரத்தில் பெரிய பண்டிதரான மண்டனமிச்ரர் என்பவரிடம் சமயவாதம் புரிந்து, அவரை வெற்றிக்கொண்டு, அவரைப் பின்னாளில் தமது சீடராக ஏற்றார். இவரைதான் சுரேஷ்வராசாரி யார் என அழைப்பார்கள். இவருடன் சேர்த்து பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் என நான்கு சீடர்கள் சங்கரருக்கு இருந்தனர். தமது சீடர்களுடன் பாரத தேசம் முழுவதும் பாதயாத்திரை மேற் கொண்ட ஆதிசங்கரர், அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்ட பாரததேசத்தில் நான்கு திசைகளில், நான்கு திருமடங்களை துவாரகை (மேற்கு), பத்ரி (வடக்கு), பூரி ஜகந்நாதம் (கிழக்கு), சிருங்கேரி (தெற்கு) ஆகிய இடங்களில் ஏற்படுத்தினார்.
காஷ்மீர் சாரதா ஆலயத்தில் சர்வக்ஞபீடம் ஏறி, தம்முடைய சித்தாந்ததை சமயவாதம்மூலம் நிலைநாட்டினார். தனது 32-ஆம் வயதில் கேதாரநாத் சென்று, அங்கிருந்து விண்ணுலகம் சென்றார் என்பர். இன்று உலகம் முழுவதும் இந்துமதம் பரவி, மக்கள் நல்வழியில் செல்வதற்கு மூலகாரணமாக இருந்த ஆதிசங்கரரை அவரது அவதார தினமான ஸ்ரீமத் சங்கர ஜெயந்தியன்று வணங்கி, அவர் உபதேசித்த சித்தாந்தத்தை ஏற்று, அதன்மூலம் ஞானமார்க்கத்தை அடைய முயற்சிப்போம்!