சிவன் கோவிலில் இறைவனை தரிசனம் செய்த பிறகு பிரசாதமாக விபூதி கொடுக்கப்படுகிறது. விபூதி கொடுத்து ஆசீர்வாதம் செய்வது காலங்கால மாய் நடைமுறையில் இருந்துவரும் ஒரு வழக்கம். இந்த விபூதியை அணிந்துகொள்பவர்களை தீமை களிலிருந்து காப்பாற்றும் கவசமாக இருந்து, பிரச்சினைகளைப் போக்கி செல்வத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.

விபூதியென்றால் ஐஸ்வர்ய மென்று பொருள். விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருளுண்டு. விபூதியை நாம் தரித்துக்ù காள்ளும்பொழுது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ அணிந்துகொள்ள வேண்டும். விபூதியை பவ்யமாக எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ள வேண்டும். காலையிலும், மாலையிலும், கோவிலுக்குச் செல்லும்பொழுதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி அணிந்துகொள்ளலாம்.

ss

வெள்ளைநிற விபூதி மட்டுமே பயன்படுத்தவேண்டும். நடந்துகொண்டோ, படுத்துக் கொண்டோ பயன்படுத்தக் கூடாது. ஆசாரியார், சிவனடி யார்களிடமிருந்து விபூதி வாங்கும்பொழுது அவர்களை வணங்கி வாங்கவேண்டும். வாயைத் திறந்துகொண்டும், பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது. நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து இறையருளை புகுத்தும் தன்மை விபூதிக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

விபூதியானது இரட்சை, சாரம், பஸ்மம், பசிதம், திருநீறு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. விபூதியை தண்ணீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்திலுள்ள நீர்வற்றி, பல வியாதிகள் தீருமென்பது இன்றுவரைக்கும் இருக்கக்கூடிய ஒரு நம்பிக்கை. திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டபொழுது, அவருடைய தமக்கையார் வயிற்றில் விபூதி பூசி குணமடையச் செய்த வரலாறு பெரிய புராணத் தில் உள்ளது.

விபூதியை உச்சியில் தரிப்பதன்மூலமாக கண்டத்துக்குமேல் செய்தபாவம் நீங்குமெனவும், நெற்றியில் தரிக்கும்பொழுது நான்முகனால் எழுதப்பட்ட தீய எழுத்துகளின் தோஷம் நீங்குமெனவும், மார்பில் தரிக்கும்பொழுது மனதினால் செய்த குற்றம் விலகுமெனவும், நாபியில் தரித்தால் பீஜத்தினால் செய்த தோஷம் நீங்குமெனவும் சொல்லப்படுகிறது.

விபூதியை முழந்தாள்களில் தரித்தால் கால்களால் செய்த பாவம் நீங்கும்; முதுகின் கீழுள்ள முச்சந்தியில் தரித்தால் சூதத்தினால் செய்த பாவம் விலகும்; புயங்களில் தரித்தால் அந்நிய மாதரிடம் தவறாக நடந்த பாவம் நீங்கும் என சொல்லப்படுகிறது.

நம் கையிலுள்ள கட்டை விரலால் மட்டும் விபூதியைத் தொட்டு அணியும்போது தீராத சிலவகை நோயானது நம்மிடம் வந்து சேருமென சொல்லப்படுகிறது. சுட்டுவிரல் மூலமாக விபூதியை எடுத்துப் பூசும்பொழுது பொருள்கள் நாசம் ஏற்படும் என்றும், நடுவிரல்கொண்டு விபூதி எடுத்துப் பூசும்பொழுது வாழ்க்கையில் நிம்மதியில்லாத சூழல் உண்டாகும் என்றும், சுண்டுவிரலைக்கொண்டு விபூதியை எடுத்துப் பூசும்பொழுது நமக்கு ஏற்படும் கிரக தோஷங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துமென்றும் சொல்லப்படுகிறது.

நம்முடைய மோதிரவிரல் மற்றும் கட்டைவிரலை சேர்த்தபடி விபூதி எடுத்துப் பூசும்பொழுது இந்த உலகம் நம்முடைய வசம்வரும்; நாம் செய்யக்கூடிய எந்தவொரு செயலும், முயற்சியும், முடிவும் மிகப்பெரிய வெற்றியாகும் எனப்படுகிறது. கோவிலில் இறைவனை தரிசித்ததும் விபூதி பிரசாதத்தை வாங்கும்போது இடக்கையைக் கீழே வைத்து வலக்கையை மேலேவைத்து வாங்கவேண்டும்.

விபூதியை இடக்கையால் வாங்கவோ அணியவோ கூடாது என்பது சாஸ்திரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விபூதியை இரு புருவங்களுக்கு இடையில் வைக்கும்பொழுது அது மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. அதிர்வுகளை உள்வாங்கும் சக்தி விபூதிக்கு உண்டு என சொல்லப்படுகிறது. மிகவும் சிறந்த கிருமி நாசினியாகவும், நெற்றியில் வடியும் வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் விபூதியைச் சொல்கிறார்கள்.

கிராமங்களில் பிறந்த குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டியதும் உச்சந்தலையில் விபூதி வைப்பார்கள். இப்படி வைக்கும்பொழுது அந்த விபூதி தலையிலிருக்கும் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும் என்பதை அன்றே கண்டறிந்து, அதை ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்திக் கொண்டுள்ளார்கள். திருமணமாகாத பெண்கள் விபூதியை கழுத்தில் பூசி வரும்பொழுது விரைவில் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் கிட்டுமென சொல்லப்படுகிறது.