மிழ்நாட்டிலுள்ள சீரும் சிறப்பும் பொருந்திய திருக்கோவில்கள் பலவற்றுள் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அம்மன் கோவில் படைவீட்டில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் திருக்கோவில் சக்தி தலங்களில் ஒன்றாகும். தனிச் சிறப்பு வாய்ந்த சக்தி பீடங்கள் அறுபத்து நான்கினுள் ஒன்றெனவும் பகரப்படுகிறது. இத்திருக்கோவில் அமைந்துள்ள படைவீடு எனும் இக்கிராமம், கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் (ஜவ்வாதுமலைத் தொடர்) அடிவாரத்தில் எழிலுற அமைந்துள்ளது.

சரித்திரச் சிறப்பு

சம்புவராய அரசர்கள் தமது ஆட்சிக்காலத்தில் படைவீட்டினைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களது காலத்தில் இவ்வூரில் யோக ராமச்சந்திர சுவாமி, வரதராஜப் பெருமாள், லட்சுமி நரசிம்ம சுவாமி, கோட்டைமலை வேணுகோபால சுவாமி ஆகிய திருக்கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டும், சிறிய கோட்டை, பெரிய கோட்டை என இரு கோட்டைகளும், அகழிகளும் கட்டப்பட்டுள்ளன. பிற்காலத்தில் கோட்டைகளும், அகழிகளும், சில கோவில்களும் அழிந்துவிட்டன. விஜயநகர நாயக்க மன்னர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளதால், அவர்களது தொடர்பும் அறியப்படுகிறது. கலைகள் மற்றும் மதத்தின்மீது சம்புவராய மன்னர்கள் கொண்டிருந்த பற்றினைப் படைவீட்டிலுள்ள தொல்பொருள் சிதைவுகள் பறைசாற்றுகின்றன.

தலச்சிறப்பு

Advertisment

தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும். அம்மன் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளதுடன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன்கொண்டு, பேருருக் கொண்டு உலகில் சக்தியே எல்லாமென எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகிறாள். இத்திருத்தலத்தில் ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றிருக்கிறார்கள். ஒரு காலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோவில் மற்றும் யோக ராமச்சந்திர சுவாமி திருக்கோவில் தவிர இதர திருக்கோவில்கள் இயற்கை சீற்றத்தால் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

திருநீற்றின் சிறப்பு

இவ்வூர் அருகே ஜமதக்னி முனிவர் யாகம்செய்த இடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் ஆனித் திருமஞ்சனத்தன்று வெட்டி எடுத்துவரப்படும் திருநீறுதான் இங்கு சந்நிதியில் வழங்கப்படுகிறது. இதனை அணிய பிணிகள் அகலும்.

Advertisment

கோவில் அமைப்பு

இத்திருக்கோவில் உட்பகுதியில் ஒரு திருச்சுற்றும், வெளிப்புறம் ஒரு திருச்சுற்றும், நான்கு மாடவீதியுடன் அமைந்துள்ளது. விநாயகர், ஆறுமுகர் தனித்தனி சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். திருச்சுற்றில் ரேணுகாம்பாள் சந்நிதிக்கருகில் உட்பிராகாரத்தில் சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் தனித்தனி சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். திருக்குளம் உட்பிராகாரத்தின் வடகிழக்கில் அமையப் பெற்றுள்ளது.

ss

கருவறையின் சிறப்பு

இத்திருக்கோவிலின் கருவறையில் வேறெங்கு மில்லாத வகையில் சிறப்பம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாக வும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தி கள் அரூபங்களுடனும் எழுந்தருளியுள்ளார்கள். மேலும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங் கமும், ஜனாகர்ஷண சக்கரமும், சிலா சிரசும், அத்திமரத்தினாலான அம்மன் முழுத்திருவுருவ மும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது. மும்மூர்த்தி களுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகாதேவியை வழிபட்டால் மும்மூர்த்தி களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

படைவீடு

படை+வீடு = படைவீடு. படைகள் தங்கியிருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து அருள்பாலித்ததாலும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கிப் போரிட்டதாலும் படைவீடு என பெயர் பெற்று நாளடைவில் படவேடு என மருவி வழங்கப்படுகிறது. அம்மன் கோவில் அமைந்துள்ள இடம் அம்மன் கோவில் படைவீடு (அ.கோ. படைவீடு) என தற்போது பெயர் பெற்றுள்ளது. படைவீடு எனும் ஊர் இங்கிருந்து மேற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

புராணச் சிறப்பு

ரேணுகாதேவி ரைவத மகாராஜனின் மகளாய்ப் பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து, பரசுராமர் உள்ளிட்ட நன்மக்களைப் பெற்றெடுத்தாள். ரேணுகாதேவி தன் கணவருக்குப் பணிவிடை செய்துவரும் நாளில், கணவரின் பூஜைக்கு நீர் முகந்திட கமண்டல நதிக்குச் சென்றாள். அச்சமயம் வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயைலை நீரில் கண்டு அவனழகையும், இளமையையும் எண்ணி ஆச்சரியப்பட, மட்குடம் உடைந்து அத்தண்ணீரால் ரேணுகாதேவியின் உடம்பு முழுவதும் நனைந்தது. இதை முனிவர் ஞானக்கண்ணால் கண்டார். கோபங்கொண்டு தன் மகன் பரசுராமனை அழைத்து, அன்னையின் சிரசைத் துண்டிக்க ஆணையிட, அதன்படி மகன் அன்னையை சிரச்சேதம் செய்கிறார். பின் தந்தையிடம், "தங்கள் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். தாங்கள் கோபத்தை அடக்கி தயை செய்யவேண்டும். பெற்ற தாயைக் கொன்ற என் கையையும் வெட்டிவிட்டேன்' என்று சொன்ன மகனிடம், வேண்டிய வரம் தருவதாகக் கூறினார் முனிவர். பரசுராமரோ பெற்ற தாயை மீண்டும் உயிர்ப்பித்துத் தர கோருகிறார். அவரும் மகன் விருப்பத்திற்கிணங்கி கமண்டல நீரை மந்திரித்துக் கொடுக்க, அவர் அதைப் பெற்றுக்கொண்டு தன் தாய் வெட்டுப்பட்ட இடத்திற்குச் சென்றார்.

காலகதியால் அங்கே வெட்டுப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலில் தவறுத லாக ரேணுகாதேவியின் தலையை ஒட்டும்படி வைத்து, நீரைத் தெளித்தவுடன் அன்னை உயிருடன் எழுந்து நின்று, தன் புதல்வனைப் பார்த்து தனக்கு நேர்ந்த வேறுபாட்டைச் சொன்னாள். பரசுராமர் தன் தந்தையின் முன்சென்று நடந்தவற்றை விவரித்தார். "இது தெய்வச்செயலால் வந்தது. இனி இதை மாற்றமுடியாது' எனக் கூறியதனால், அதுமுதல் அவ்வேறுபட்ட உடலுடன் ஜமதக்னி முனிவருக்கு அன்னை பணிவிடை செய்துவரும் நாளில், அங்குவந்த கார்த்தவீரிய அர்ச்சுனன், ஜமதக்னி முனிவரிடமிருந்த காமதேனுவைத் தனக்கு வழங்க வேண்டுகிறான். முனிவர் வழங்க மறுத்ததால், அவரைக் கொன்று காமதேனுவை கார்த்தவீரியன் அழைத்துச் சென்றுவிட்டான். கணவர் இறந்ததால் ரேணுகாதேவி கணவர் உடலுடன் உடன்கட்டை ஏறினாள். அவ்வமயம் தெய்வ வசத்தால் மழை பொழிந்தது. அம்மழை நீரால் சுடலை நெருப்பு அணைந்தது. அன்னை கொப்புளங்களுடன் ஆடையின்றி எழுந்து, வேப்பிலை ஆடையைக் கட்டிக்கொண்டு மகன் பரசுராமனை சிந்தித்தாள்.

உடனே பரசுராமர் வந்து நடந்தவற்றை அறிந்தார். மிகக் கோபத்துடன் சென்று கார்த்தவீரியனைக் கொன்றார். க்ஷத்திரிய குலம் முழுவதும் அழிக்க சாபமிடுகிறார். இதனைக்கண்ட சிவபெருமான், பிரம்மா, விஷ்ணுவுடன் தேவர்களோடு அவ்விடம் தோன்றி, கோபத்தை விட்டுவிடும்படியும், இக்காரியம் விதிப்பயனாலானது என்றும், யாராலும் தடுக்க முடியாது எனவும்கூறி சாந்தப்படுத்தினார்கள். பின்னர் ஜமதக்னி முனிவரை சிவபெருமான் உயிர்ப்பெற்றெழச் செய்தார். அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டியபடி சிரசு மட்டும் பிரதானமாகக்கொண்டு இப்பூவுலகில் பூஜைக்கு விளங்கவும், உடலின் மறுபகுதி முனிவருடன் சுவர்க்கத்துக்குச் செல்லவும் சிவபெருமான் அருள் வழங்கினார்.

அவ்வாறே அன்னை ரேணுகாதேவி பூவுலகில் சிரசை பிரதானமாகக்கொண்டு படைவீட்டில் அமர்ந்து அருள்பாளித்து வருகிறாள்.

அன்னை ரேணுகாதேவி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பதுடன், அம்மை, பில்லி சூன்யம் போன்ற பிணிகளை நீக்கி, அனைத்து செல்வங்களையும் அளித்து வருகிறாள்.

திருமணம் கைகூடுவதும், குழந்தை வரம் வேண்டுவோர் உரிய பலனைப் பெற்றுச்செல்வதும் கண்கூடாகும்.

இத்திருகோவிலில் காமிக ஆகம விதிப்படி தினசரி மூன்றுகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடிமாதத்தில் முதல் வெள்ளி தொடங்கி தொடர்ந்து ஏழு வெள்ளிகளில் ஆடிப்பெருவிழா நடைபெற்றுவருகிறது. இத்திருவிழாவே இத்திருத்தலத்தின் பெருந்திருவிழாவாகும்.

காலை 6.30 மணிமுதல் பகல் 1.30 மணிவரையிலும்; மாலை 3.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 6.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திருக்கோவில் திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் பூஜைக் காலங்கள் மாறுபடும்.

வேலூர்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து 32-ஆவது கிலோமீட்டரில், சந்தவாசல் எனும் ஊரின் சாலை சந்திப்பிலிருந்து ஏழு கிலோமீட்டர் மேற்கிலுள்ளது. ஆரணியிலிருந்து இருபது கிலோமீட்டரிலும், திருவண்ணாமலையிலிருந்து 55 கிலோமீட்டரிலும் உள்ளது இவ்வாலயம். தொடர்புக்கு: 94886 48346, 04181 299424.