"அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்
தகையவர் அறிவது தன்னையுணர் வதுவே.''
(சித்தர் ஞானம்)
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது முற்பிறவிகளில் மற்றவர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும், செய்த பாவ- சாப- புண்ணியங்களுக்கு தக்கபலன்களை அனுபவித்து வாழ்ந்து, கர்மவினைகளைத் தீர்த்து முடிக்கவே பிறக்கின்றார்கள். ஒருபிறவியில் செய்த நன்மை- தீமைக்குரிய பலன்களைஅனுபவித்து தீர்த்து முடிக்கும்வரை, அவர்களுக்கு இந்த பூமியில், பிறவிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்; பிறந்து கொண்டே இருப்பார்கள். முற்பிறவி பாவ- சாப- புண்ணியம் அனைத்தையும் தீர்த்து முடித்தால், பிறவி நிலை முடிந்து, இனி பிறவியில்லா மோட்ச நிலையை அடைவார்கள்.
ஒவ்வொரு மனிதனும், இப்பிறவி வாழ்வில் அனுபவிக்கும், பணம், பதவி, செல்வம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, அதேபோன்று வறுமை, தாழ்வு, நோய், கஷ்டம் போன்ற அனைத்தும், அவரவர் முற்பிறவியில் செய்த பாவ- சாப- புண்ணிய கணக்கின்படியே அனுபவித்து வாழ்கின்றார்கள். இந்த பிறவி வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமைகளை, அவரவரே தன் முற்பிறவி செயல்கள்மூலம் விதி பலனாக தீர்மானித்து பிறந்து அனுபவிக்கின்றார்கள்.
ஒரு மனிதன் வாழ்வில் அனுபவிக்கும் கஷ்டம், தடைகள், வறுமை என அனைத்தையும், குடும்ப உறவுகளாலோ, மற்ற மனிதர்களாலோ அல்லது தெய்வம், தேவதை, கடவுள் வழிபாடு, பூஜை, யாகம், ஹோமம், மந்திரம், தந்திரம், பூஜை தானம், தர்மம், ரிஷி, சித்தர்கள், குரு, மகான்களாலோ அல்லது அவர்கள் ஆசீர்வாதத்தினாலோ தீர்த்துவிட முடியாது; தீராது. இன்னும் சடங்கு, சம்பிராதாயம், பரிகாரம், சாஸ்திரம், ஆகம செயல்களால் தடுத்துவிடமுடியாது. எந்த சக்தியாலும் ஊழ்வினை விதியை மாற்றி அமைக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்வில் அனுபவிக்கும், வறுமை, நோய், குடும்பத்தில் குழப்பம், புத்திரத்தடை, திருமணத்தடை, உறவுகள் பகை, ஒதுக்கப்படுதல், பதவி இழப்பு போன்ற இன்னும் பல காரியங்களை ஏன் நமக்கு உண்டாகின்றது? தன் முற்பிறவி கர்மவினை என்ன? இந்த சிரமம் தடைகளை எவ்வாறு தீர்த்து, நல்ல உயர்வான வாழ்க்கை அடைவது? என்று காரண, காரியங்களை அறிவால் அறிந்து, தனக்கு நன்மையானது? தீமைகளை தருவது எது? என்று தன்னையே தானறிந்து, தன் வாழ்வின் உயர்விற்கு தடைகளையும், தீமைதரும் செயல்களைச் செய்யாமல், நடைமுறை வாழ்வில் நன்மை தரும் செயல்களை மட்டும் செய்து, தன்னையறிந்து வாழ்ந்தால் மட்டுமே, ஊழ்வினை பாதிப்பில் இருந்து நல்ல வாழ்வை அமையலாம். பிறர் நம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கொண்டோ, பிறரைச் சார்ந்து வாழ்ந்தால் வாழ்வில் உயர்வை அடையமுடியாது.
"தன்னையறிந்து வாழ தனக்
கொரு கேடில்லை'' என்பதை அறிந்து செயல்பட்டு வாழவேண்டும்.
அகத்தியர்:இந்த சபையில் கூடியிருக்கும், சர்வவல்லமையும், மகாசக்தியும் பெற்ற சைவ தமிழ் சித்தர் பெருமக்களே, நம்மிடையே காகபுசுண்டர், மனிதர்கள் வாழ்வில் அவரவர் குடும்ப உறவுகளுக்கும், சமுதாயத்தில் மக்களுக்கும் செய்யும், துரோக, வஞ்சக செயல்களால், பாவ- சாப- பதிவுகள் உண்டாகின்றது என்பதைப் பற்றிக் கூறிவருகின்றார். இன்றும் அவர் கூறுவதைக் கவனமாக கேட்போம். காகபுசுண்டரே, நீங்கள் கூறும் கருத்துகளைக் கூறுங்கள்.
"வஞ்சகரோடு, இணைந்து செய்த தோஷம்.' உலகமாந்தர்களை, சிந்தித்து, செயல்பட்டு வாழச்சொன்னவரே, ஒரு மனிதன், தன்னையறிந்து வாழ்ந்தால், தரணி புகழ வாழலாம், பகுத்தறிவும், தன்மானமும், தன் வலிமையும், தன்னையறியும் அறிவின் துணைக்கொண்டு வாழச் சொன்னவரே, தமிழன் வாழ்ந்தால் தமிழ் மொழியும் வளரும், வாழும் என்று எங்களுக்குப் போதித்தவரே, அகத்தியர் பெருமானே, உங்கள் திருவடிக்கு என் பணிவான வணக்கங்கள்.
நேற்று சித்தர் சபையில், உடல் பலம், பண பலம் கொண்டவர்கள் மற்ற மக்களுக்கு தீமைகள் செய்யும், வஞ்சகர்களைப் பற்றிக் கூறினேன். ஆசானே, இன்று மக்களிடம் உண்மைக்கு மாறான, பொய்யான கருத்துகளை கூறியும், பாடல்களைப் புணைந்து, கூறி, மற்றவர்களை ஏமாற்றி, பொருள் பறிப்பவர்களையும், சாதி, மதம், இனம் பேதக் கருத்துகளைக் கூறி மக்களிடையே ஒற்றுமையைக் குலைத்தும், அறிவுச்செயல்களில் ஈடுபட்டு, நாட்டிலும், மக்களின் வாழ்விலும் நிம்மதியைக் கெடுத்துவருகின்ற சில வஞ்சக குணம் கொண்டவர்களைப் பற்றிக் கூறி அடையாளம் காட்டுகின்றேன்.
இந்த உலகில் கடவுள், பக்தி, ஆன்மிகம் என தெய்வங்களின் பெயர்களைக் கூறியும், அவைகளைப் பற்றிய கதைகளையும் கூறி, பகுத்தறியும் அறிவு இல்லாமல், அறியாமையில் வாழும் மக்களிடம், தாங்கள் கூறுவதை உண்மை நம்பவைத்து, மக்களிடம் பணம் பறித்து வாழும் நபர்கள். இன்னும், நான் கடவுளின் தூதுவன், மக்களை காப்பாற்ற என்னை படைத்தார் என்று கூறி மடம், பீடங்களை அமைத்துக்கொண்டு, தன்னைக் குருவென்றும் தான் கூறுவதைக்கேட்டுஅதனைக் கடைப்பிடித்து வாழ்பவர்களை தன் சீடர்கள் எனக் கூறி வாழ்கின்றார்கள். இந்த போலி குருமார்களும், அவர்களின் சீடர்களும், தங்களை நாடி மடத்திற்கு வரும் மக்களிடம், குருவிற்கும், மடத்திற்கும், பணம், நிலம், தங்க நகைகள், தானியங்கள், பசு மாடு போன்று எது? உங்களிடம் உள்ளதோஅதனை தானமாகக் கொடுத்தால், குருவின் ஆசி உங்களையும், வம்ச வாரிசுகளையும் காப்பாற்றும். கர்மவினை பாதிப்புகள் நீங்கும், செல்வந்தனாவீர்கள் என்று வஞ்சகமாக கூறி, பணம், பொருளை பறித்துக் கொள்வார்கள். இந்த கலிகால குருமார்கள்.
"குருவென்றும், சீடரென்றும் இங்கு
சீவனத்திற் கல்லோ தெளிந்து காணே.'
குரு, சீடர்களாகிய நாங்கள்தான் கடவுளைக் காப்பாற்றுபவர்கள் என்று கூறி, மக்களிடம் இருந்து பணம், பொருட்களை பெறுவது, தங்களின் சுகமான வாழ்க்கைக்காகத்தான். இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களின் அகத்திலுள்ள ஆன்மாவை அறிவதும், அனைத்து ஆன்மாக்களையும், பாரபட்ச, பேதமின்றி இனம், மதம், சாதி, பாகுபடின்றி, நேசித்து வாழ்வதே ஆன்மிகம் ஆகும் அகத்திலுள்ள ஆன்மாவை அறிவதே, அதாவது தன்னையறிவதே "ஆன்மிகம்' ஆகும். கலிகாலத்தில் கடவுள், தெய்வம், தேவதை, ஹோமம், யாகம், வழிபாடு குரு, மடம், பீடம் என்று கூறிக்கொள்ளும் போலி குருமார்களும், இன்னும் தங்களை ஆன்மிக பக்திமான்கள் என்பவர்களும், கடவுளைப் பற்றி கதைகளைக் கூறி பிரசங்கம், கதாகாலட்சேபம் செய்பவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகள் அல்ல. மக்களிடமுள்ள ஆஸ்தி, பணம், பொருட்களை வஞ்சகமாக ஏமாற்றிப் பறிக்கும் ஆஸ்தீகவாதிகள். இவர்கள் எண்ணமெல்லாம் மற்றவர்களிடம் உள்ளதை எப்படியாவது பறித்துக்கொள்ளவேண்டும் என்பதுதான். இந்த போலியான ஆன்மிகவாதிகளை அறிந்து மக்கள் கவனமாக இருக்கவேண்டும். இவர்கள் கடவுளை மூலதனமாக வைத்து, வியாபாரம் செய்து, பொருள்பறிக்கும் கடவுள் வியாபாரிகள்.
ஆன்மிகம் என்று கூறி, பொருள் பறிக்கும் வஞ்சக குணம்கொண்ட ஆஸ்தீகர்களைப் போன்றே, நாடாளும் அரசர்களும், நாட்டு மக்களுக்கு நல்லதிட்டங்களை செயல்படுத்தி நாட்டை வளப்படுத்துவேன், மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவேன் என்று பதவி ஆசை கொண்ட வஞ்சகர்கள், பொய் சொல்வார்கள், ஏமாற்றுவார்கள். ஆனால் பார்ப்பதற்கு சாதுவான குணம் கொண்டவர்களைப் போன்று தோற்றமளிப்பார்கள். ஆனால் வஞ்சகனாக இருப்பார்கள்.
ஒரு நல்ல அரசன், தன் நாட்டுமக்கள் தரும் வரிப்பணத்தன்னைக்கொண்டு, நாட்டில் நீர்வளம், நிலவளம், காடு, வனங்களை பெருக்கி, அதன்மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவான். மக்கள் தரும் பணத்தை மக்கள் நலனுக்கே செலவு செய்வான். நல்ல கல்வியைத் தந்து, ஞானம், நல்லறிவால் மக்களை வாழவைப்பான். மக்களிடமுள்ள மதம், சாதி, இனம் என்ற பிரிவினையைப் போக்கி, மக்கள் அமைதியுடன் ஒற்றுமையாக வாழச்செய்வான்.
வஞ்சக குணம்கொண்ட அரசனோ, பணம், பதவிவெறி கொண்டவனாக இருப்பான். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று கூறி புதுப்புது வரிகளைப் போட்டு, தன் சொந்த நாட்டு மக்களின்மீதே போர் கொடுப்பான். சாதி, மதம், இனம் என்று கூறி, மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி மோதல் போக்கினை, உருவாக்கி நிம்மதியாக வாழ விடமாட்டான். தான் செய்யும் திருட்டினை, மக்கள் அறிந்துகொள்ளாமல் இருக்க, கடவுள் பெயரைச் சொல்வான். பண ஆசை,அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் எண்ணம் கொண்ட இவன் ஆட்சி, அதிகாரம் இவை உண்மையில் ஆன்மிக ஆட்சி அல்ல. ஆஸ்தீக ஆட்சிதான். பணம் சம்பாதிக்கவும், பதவி சுகத்தை அனுபவிக்கவும் அரசனாக இருப்பான்.
ஆஸ்தீக குழுவிற்கு எவ்வாறு சீடர்கள் உள்ளனரோ, ஆஸ்தீக அரசனுக்கு பணம், பெண், பொன், பூமி, நிலங்களில் ஆசை கொண்ட, ஒத்த குணம் கொண்ட அரசு அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், தொண்டர்களும், இணைந்து நாட்டு மக்களிடையே கொள்ளையடிப்பார்கள். நாட்டின் வளங்களை அபகரித்து, சுகமாக வாழ்வார்கள். அந்த வஞ்சக குணம்கொண்ட ஆஸ்தீக அரசனின், ஆட்சி காலத்தில், இயற்கையில் மாற்றங்கள் உண்டாகும். காலத்தே மழை பெய்யாது, பருவங்கள் மாறும். மழைவளம், நீர்வளம், பயிர்வளம் குறையும். நாட்டுமக்கள் மழை பெய்யுமா? என்று வானத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இது போன்ற நிகழ்வுகள் நாட்டில் நிகழும்போது, கொடிய ஆஸ்தீக அரசன் பதவி இழப்பான். அவன் ஆட்சி முடிவுக்கு வரும்.
அகத்தியர்: புசுண்டமுனிவரே, மனிதர்கள் வாழ்வில் உண்டாகும், சிரமம், வறுமை, தடைகளுக்கு காரணம் அவரவர் முற்பிறவி பாவ- சாபம்தான் காரணம் என்றுவிளக்கமாகக் கூறினீர்கள். இன்று சபை கலையும் நேரம் வந்துவிட்டது. நாளை மனிதர்கள் வாழ்வில், செல்வமும், செல்வாக்கும் பெற்று உயர்வான, வாழ்க்கையை அடையும் வழிமுறைகளைப் பற்றியும், தன்னையறியும், வழிமுறைகளைப் பற்றியும் அறிந்து கொள்வோம். இன்று சபை கலையலாம்.
ஆரம்பூண்ட மணிமார்பா அயோத்திக்கரசே அண்ணா கேள் ஈரமிருக்க மரமிருக்க இலைகள் உதிர்ந்த வாரேது.வாதம்செய்து வழக்குரைத்து மண்மேல் நின்று வலிபேசி ஓரம் சொன்ன அரசுபோல் உதிர்ந்து கிடக்கும் அரசுபோல் தம்பி
(விவேகசிந்தாமணி)
சொர்ண மாலையணிந்த, அழகிய மார்பையுடைய, அயோத்தி நாட்டை ஆட்சி செய்யும், மகாராஜனாகிய என் அண்ணா இராமனே, கேட்பாயாக, பூமியில் நீரின் ஈரமிருக்கின்றது. ஆனால் மரத்திலுள்ள இலைகள் மட்டும் உதிர்ந்து கீழே விழுகின் றது. இதற்கு காரணம் என்ன? என்று அண்ணன் இராமனிடம் தம்பி லட்சுமணன் கேட்கின்றான். தம்பி, இந்த பூமியில், கொடுங்கோல் மன்னனின் அரசாட்சியில், அரசன் நேர்மையான முறையில், ஆட்சி செய்யாமலும், மக்களிடையே உயர்வு, தாழ்வு, பிரிவினை, பேதங்களை உருவாக்கி, பிளவுபடுத்தி, அநியாயமான வரிகளை, வேண்டியவர், வேண்டாதவர் என்று பாகுபாடு பார்த்து, ஓரவஞ்சனையுடன் ஆட்சி செலுத்துவதினால், மக்கள் வறுமை, துன்பம், துயரமான வாழ்க்கையை அடைந்து வாழ்கின்றார்கள்.
நியாய மன்றங்களில், நியாயாதிபதிகள், நேர்மையான முறையில் வழக்கின் வாதங்களை கேட்டு விசாரிக்காமல், கையூட்டும் பெற்றுக்கொண்டு, தனக்கு வேண்டியவர்களுக்கு, பட்ச பாதமாக நியாயம் வழங்குவதால், மண்ணில் ஈரம் இருந்தும், மரத்தின் இலைகள் உதிர்வதுபோல், நேர்மையற்ற அரசனும், நியாயாதிபதிகளும் ஆட்சி, பதவி அதிகார பலம் இழப்பார்கள். அவர்களை விட்டு நல்லவர்கள் பிரிந்து செல்வார்கள்.அவர்களின் வம்ச வாரிசுகளின் வாழ்க்கையும், பிறர் தூற்றும் நிலையில் அமைந்துவிடும் என்பதனையே இலைகள் உதிர்வதற்கு உதாரணமாகும். எப்போது வனம், காடுகள் அழிந்து, மரம், தாவரங்கள் காய்ந்து போகின்றதோ, அப்போது நேர்மையில்லா கொடுங்கோல் அரசனின் ஆட்சி மறைந்து போகும்.
"ஓம் சரவணபவ' இதழில், கடந்த 82 மாதங்களாக, தொடராக வந்த "சித்தர்கள் அருளிய வாசியோகம்' கட்டுரை தொடரை, பிரசுரம் செய்த நக்கீரன் ஆசிரியர், பொறுப்பாசிரியர், நக்கீரன் நிர்வாகத்திற்கும், இதைத் தொடர்ந்து படித்த வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
"சித்தர்கள் அருளிய வாசியோகம்' தொடர் கட்டுரை இந்த இதழுடன் முடிவுறுகின்றது. மனிதர்கள் வாழ்வில் உண்டாகும் சிரமம், வறுமை, காரியத் தடைகளை தடுத்து, செல்வம், செல்வாக்கும், பதவி, புகழ் என அடைந்து வாழ அகத்தியர் முதலான 18 சித்தர்கள் கூறியுள்ள சூட்சும வழிகளை விரைவில் அடுத்த ஒரு தொடரில் அறிவோம். சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!