குடும்பம் என்பது பரந்து வளர்ந்த ஆலமரம். ஒரு தாய், தந்தை இருக்கிறார்கள். அவர்களுக்கு மகன், மகள் என்று வாரிசுகள் பிறந்து வளர்கிறார்கள். வளர்ந்தபின்பு அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறோம். அவர்களுக்கும் குழந்தை பிறக்கிறது. அதுவும் வளர்ந்து ஆளானபின்பு அவர்களுக்கும் குழந்தை பிறக்கிறது. இப்படி குடும்பம் வளர்ந்துகொண்டே போகிறது.
இப்படி வளரும் குடும்பத்தைத் தலைமுறை என்கிறோம். ஒரு கால கட்டத்தில் இவர்கள் இறைவனடி சேர்கிறார்கள். அவ்வாறு சேர்ந்தவர்களை பித்ருக்கள்- அதாவது மூதாதையர்கள் என்கிறோம். இந்த மூதாதையர்கள் மேலுலகத்திற்குச் சென்றுவிட்டபின், அங்கு வாழும் அவர்களுக்கு உணவளிக்கவேண்டியது நம் கடமை யென்று சாஸ்திரம் சொல்கிறது.
அவர்கள் பசியில் வாடினால் நாம் வாழ்க்கையில் பலவகையிலும் துன்பப்படுவோம் என்றும், அவர்களுக்குப் பசி தீர உணவு கொடுத்து திருப்திப்படுத்தினால் நமது வாழ்க்கை நலமாக இருக்குமென்றும் சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.
அமாவாசையன்று நமது மூன்று தலைமுறை மூதாதையர்களை நினைவுகூர்ந்து எள்ளும் தண்ணீருடனும் தர்ப்பைமூலம் தர்ப்பணம் விட்டால் அவர்களது பசி தீரும்; அவர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை மனமார ஆசீர்வதிப்பார்கள். அந்த ஆசீர்வாதமே நம்மை வாழ்க்கையில் மேல்நோக்கிச் செல்ல வழிவகுக்கு என்பது முன்னோர்களின் கருத்தாகும்.
அமாவாசையிலேயே மிகவும் அற்புதமானது மகாளய அமாவாசையாகும். அன்றைய நாளில் நமது மூதாதையர்கள் புண்ணிய நதிக்கரை, குளக்கரை, கடற்கரை- அதிலும் முக்கூடல் கரையோரங்களில் வந்து நாம் தரும் தர்ப்பணங்களை எதிர்நோக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. மகாளய அமாவாசை நாளில் மேற்கூறிய இடங்களில் ஏதோ ஓரிடத்திற்குச் சென்று, அதற்குரிய மந்திரங்களை ஒரு வைதீகர்மூலம் கேட்டு தர்ப்பணம்விட வேண்டும். இருக்கின்ற ஆசீர்வாதங்களிலேயே தலைசிறந்த ஆசீர்வாதம் மூதாதையர்கள் ஆசீர்வாதம்தான். அதேசமயம் இந்த ஆசீர்வாதத்தைப் பெறாமல் இருப்பவர்களின் குடும்பத்தில் குதூகலம் இருக்காது. எப்போதும் வறுமை இருந்துகொண்டே இருக்கும். குழந்தை பிறக்காது. பிறந்தாலும் உடல் அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்டதாக இருக்கும்.
தர்ப்பணம் விடும்போது, "இந்த வையகத்தில் நான் உங்கள் கருணையினால் பிறந்ததால்தான் இறைவனையும், உங்களையும் வணங்கித் துதிக்கின்ற பாக்கியத்தைப் பெற்றேன். அதற்காக உங்களை நான் நமஸ்கரிக்கிறேன்' என்று கூறி வணங்கவேண்டும்.
புண்ணிய நதிக்கரையில் மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் விட்டால், நல்ல குழந்தைகள் பிறக்கும்; செல்வம் சேரும்; செழிப்புடன் வாழலாம்.
இந்த நன்நாளில் இராமேஸ்வரம் கட-லும், கன்னியாகுமரி முக்கூட-லும், பவானி முக்கூடல் நதிக்கரையிலும், மதுரை மீனாட்சியம்மன் பொற்றாமரைக் குளத்திலும், சென்னை கபாலீஸ்வரர் குளக்கரையிலும் என, இன்னும் இதுபோன்ற சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று, தர்ப்பணம்விட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானமிட்டு, காக்கைக்கு அன்னமிட்டு, மூதாதையரை வணங்கித் துதித்தால் நமது குடும்பம் குதூகலமாக இருக்கும். சந்ததிகள் ஒரு குறையுமின்றி மகிழ்வுடன் வாழ்வார்கள்.