பக்தி வேறு; மூடநம்பிக்கை வேறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் நம் தாயின்மீதும் பக்தி செய்யமுடியும்; தந்தையின் மீதும் பக்தி செய்யமுடியும்; நமது குடும்பத்தின்மீதும் பக்தி செய்ய முடியும்; இறைவன்மீதும் பக்தி செய்ய முடியும். நமது குடும்பத்திற்கு ஒரு தேவை இருக்கும்பொழுது, "நான் அதைக் கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டேன்; கடவுள் அதைச் செய்துவிடுவார்' என்று நாம் உட்கார்ந்திருந்தால், அது மூடநம்பிக்கை. நமக்கான இந்தத் தேவை நமக்குக் கிடைக்கும் என்று அதன்மீது நாம் முழுமையாக நம்பிக்கை வைத்து, கடினமாக உழைக்கும்போது அத்தகைய நமது முயற்சியானது வீணாகாமல் நமக்கான வெற்றியை நிச்சயம் கொடுக்கும்.
இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது, நமது முயற்சியின்மீது நாம் கொண்டிருக்கும் உண்மையான, தெளிவான, தீவிரமான நம்பிக்கையே மிகச்சிறந்த பக்தியாகும். இதற்கு, இயற்கையாக இருக்கும் இறையாற்றல் நமக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து செய்து முடிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
பக்தி என்றால் உண்மையான அன்பு என்று பொருள். அன்பே சிவம். அதுவே தலைசிறந்த பக்தி. சிவம் என்றால் பேரறிவு என்று பொருள். அதாவது அறிவின் உச்சமே சிவமாகும். "உனது அறிவே கடவுள்' என்று திருமந்திரச் சிற்பி திருமூலர் கூறுகிறார். அறிவு குடியிருக்கும் இடம் நமது உடலாகும். அந்த உடலை நமது முன்னோர்களாகிய ஆகச்சிறந்த சான்றோர் கள், "கோவில்' என்று குறிப்பிடுகின்றனர். அப்போது உடலெனும் கோவிலை நாம் எப்படிப் பாதுகாக்கவேண்டும், என்பதை சற்று யோசிக்கவேண்டும் அதற்கு, அதனுள் இருக்கும் அறிவைப் பயன்படுத்தவேண்டும்.
ஆனால் இன்று உலகம் அறிவை மிக மோசமாக சீரழித்துக் கொண்டிருக்கி றது. ஏன் இப்படிச் சொல்கி றேன்? சமீபமாக நடந்து முடிந்த காவலர் தகுதித் தேர் வில் 11 இளைஞர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இது எவ்வளவு மோசமான ஆரோக்கியக் குறைபாடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதே வேளையில் மணிப்பூரில் ட்ரோன்மூலம் தாக்குதல், சிறிய ராக்கெட் தாக்குதல் என்று செய்திகள் வருகிறது. இது எதனால் ஏற்படுகிறதென்றால் மிக மோசமான அறிவுக் குறைபாடு என்றே பொருள். ஆறறிவுள்ள மனிதன், சக மனிதனுக்குத் துன்பத்தைத் தரும் செயல்களைச் செய்வதோ, உயிரிழப்பை உண்டாக்கும் செயல் களில் ஈடுபடுவதோ அறிவற்ற மூடநம்பிக்கை யாகும். அறிவுள்ள மனிதன், தனது இனத்தையும் நேசித்து, பிற உயிர்களையும் காப்பாற்றுவதே மிகச் சிறந்த பக்தி என்னும் நம்பிக்கையாகும்.
இப்படி மனித அறிவைத் தாண்டி இன்று உலகம் முழுவதும், இயற்கைப் பெருவெள்ளம், எரிமலை வெடிப்பு, பூகம்பம், சூறாவளி புயல்! சில நாட்களுக்குமுன்பு இயற்கையின் கடும் சீற்றத்தால் வடகொரியாவில் வரலாறு காணாத வெள்ளம். அதன் காரணமாக சுமார் ஆயிரம் உயிர்கள் பலியாகிவிட்டன. இதற்கு அரசாங்கம், அதிகாரிகள்தான் காரணமென்று சொல்லி சுமார் 30 அதிகாரிகளைத் தூக்கிலிட் டுக் கொன்றுவிட்டது. இயற்கையானது தனது தாக்குதல்களில் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் மனித இனமோ தனது அறிவை மழுங்கச் செய்யும் மூடநம்பிக்கை யில் ஈடுபடுகிறது. இயற்கையை மீறி இங்கு எந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட முடியாது.
அப்படியிருப்பினும் அது தற்காலிகமானதாகவே இருக்கும்.
ரூபாய் நோட்டுக்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்கிறார்கள். பல லட்சங்களை செலவுசெய்து பல்வேறுவிதமான விநாயகரின் உருவங்களை சிலைகளாக வடிவமைத்து அதை இறுதியில் கடலில் கொண்டு கரைத்துவிடுகிறார் கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? உண்டி (உணவு) கொடுத்தவன் உயிர் கொடுத்தவனாகி றான். எழுத்தறிவித்தவன் இறைவனாகிறான்.
இங்குதான் நாம் ஒவ்வொருவரும் மூடநம்பிக்கை யையும், ஆறறிவு எனும் பகுத்தறிவையும் புரிந்து கொள்ளவேண்டும். இயற்கை எனும் இறைவனின் அறிவு வேறு; இயற்கை மனித இனத்திற்குக் கொடையாக கொடுத்துள்ள ஆறறிவு என்பது வேறு. அந்த அறிவு, இயற்கையோடு இணைந்த அறிவாக இருப்பின் அது இறையறிவாக மாறிவிடும். இறையறிவே பகுத்தறிவாகும்.
"நில்லாது சீவன் நிலையன்றென் றெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனிதர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகம் செய்வாரே.'
என்கிறார் திருமூலர்.
உடலில் பொருந்தியுள்ள உயிரானது எப்போதும் அதிலேயே நிலைத்து நிற்காது. இதனை உணர்ந்த, கல்வி கேள்விகளில் சிறந்த அறிவுடைய பெரியோர்கள் அறச் செயல்களில் ஈடுபடவும், தவம் செய்யவும், நற்செயல்கள் செய்யவும் முயல்வார்கள். கல்வி அறிவற்ற மூடர்களோ, கீழ்மக்களாக உலகில் வாழ்ந்துகொண்டு, பிறவித் துயருக்குக் காரணமான சிற்றின்பச் செயல்களில் ஈடுபட்டு பாவத்தைப் பெருக்கிக்கொண்டிருப்பார்கள்.
மனிதனாகப் பிறந்தவன் ஆறறிவில் ஆகச் சிறந்தவனாகவும், பகுத்தறிவில் உயர்ந்தவனாக வும் இருக்கவேண்டும். இதுதான் சமூகத்தில் நற்பெயரை சம்பாதிக்கவும், சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கவும் வழிவகுக் கும். அதற்குப் பெரியோர்களை நாம் அரவணைத்துச் செல்லவேண்டும் கற்றறிந்த சான்றோர்களான பெரியோர்களை நாம் துணையாகக் கொள்ளுதல்வேண்டும்.
அதைப் பற்றி வாழ்வியல் ஞானி திருவள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்.
"பல்லார் பகைகொளலின் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல்.'
நல்லவராகிய பெரியோர்களின் தொடர்பைக் கைவிடுதல் என்பது, பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிட பத்து மடங்கு தீமையைத் தரக்கூடியதாகும்.
பெரியோர்களைக் குறை சொல்லக்கூடாது என்பதற்காகவும் பின்வரும் திருக்குறள் எளிமையாக உணர்த்துகிறது.
"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.'
தாம் மேற்கொண்ட செயல்களையெல்லாம் வெற்றியாக முடிக்கக்கூடிய பெரியோரின் ஆற்றலை இகழாதிருத்தல் வேண்டும். அதுவே தமக்குக் கேடு வராமல் காத்துக்கொள்பவர் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் தலைமையானதாகும்.
இதற்கெல்லாம் அறிவு மேம்படவேண்டும். இதனைப் பற்றி திருமந்திரச் சிற்பி கூறுவதைப் பார்ப்போம்.
"கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.'
ஞானமாகிய கல்வியறிவைப் பெறாத வர்கள் மூடர்கள். இவர்களை நாம் காணவும் கூடாது. கற்றறியாத மூடர்கள் கூறும் சொற்களைக் கேட்கவேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அறிவற்ற மூடர்களுக்கு அவர்களைப் போன்று அறிவில்லாத அசடர்களே (மூடர்) நல்லவராக, நண்பராகத் தெரிவார்கள். ஏனெனில் கல்லாத- அதாவது கல்வியறிவில்லாத மூடர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாது. இருவரும் ஒத்துப்போவார்கள். ஒருவர் சொல்வதை மற்றவர் ஏற்றுக்கொள்வர். எனவேதான் கல்லாத அறிவற்ற மூடர்களுக்கு, கல்லாத வரே நல்லவராகத் தெரிகின்றனர்.
பக்தி என்றால் அன்பு. ஒருவரின் அன்பைப் பயன்படுத்தி, அவரிடம் மூட நம்பிக்கையை வளர்க்கக்கூடாது. அவரின் அறிவை மேம்படுத்தும் அறச்செயல்களில் ஈடுபட, அவரிடமுள்ள அறிவாற்றலைத் தூண்டவேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் போற்றும் பண்பாற்றலை வளர்த்தெடுக்க வேண்டும். மற்றவர்கள் முகம் சுளிக்காத வகையில் இனிய சொற்களைக் கூறுதல் வேண்டும்.
இதைப்பற்றி திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.
"துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு.'
யாரிடத்திலும் இன்பம் பயக்கும் இனிமையான சொற்களைச் சொல்பவருக்கு, ஒருபோதும் துன்புறுத்தும் வறுமை என்பதே இல்லையாம்.
இவ்வாறு ஒருவன் தன்னை நற்செயல் களிலும், நற்சிந்தனைகளிலும் ஈடுபடுத்திக் கொள்ளும்பொழுது இறைபக்தி என்பது தன் எழுச்சியாகவே அவனுக்குக் கிடைத்துவிடும். ஞானநிலையில் உள்ளவர்களிடம் "எதற்காக பக்தி செய்யவேண்டும்?' என்னும் ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கு "முக்தி, மோட்சம்' என்ற பதில் கிடைத்துவிடும். இது சாமானியனுக்கு அவ்வளவு எளிதானதா என்றால், இல்லை என்றே சொல்லவேண்டும். சாதாரண நிலையில் உள்ளவன் எப்படி முக்தியடைவது? முக்தியடைய முயற்சி தேவை. நிகழ்கால சுகபோக மாய வாழ்க்கையில் உள்ளவனுக்கு அது புரியாது.
வாழும்வரை இறைவன் எனும் இயற்கை வசிக்கும், பஞ்சபூதங்கள் ஆட்சிசெய்யும் நமது மானிட உடல் எனும் வீட்டை, மனிதக் கூட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் அது நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
ஆனந்தத்தையும் கொடுக்கும். இயற்கையான இறைவன் மனிதனைப் படைத்து அதனுள் அறிவையும், உயிர் என்ற உயர்ந்த பொருளை யும் வைத்துள்ளான். நமது அறிவைப் பயன் படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், நமது ஆயுள், ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நாம் சாதிக்க நினைத்ததை எளிமையாக சாதிக்கமுடியும்.
ஆரோக்கியமாக வாழ விரும்பும் ஒவ்வொருவரும் யோக மார்க்கத்தில்- அதாவது யோகப் பயிற்சியில் தன்னை ஈடு படுத்திக்கொள்ளவேண்டும். அப்போது விரும்பிய நல்லவை எல்லாம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இத்தகைய ஆரோக்கிய வாழ்விற்கு பக்தி எப்படி செய்யவேண்டும் என்பதை திருவள்ளுவர் இயற்கையாக விளக்குகிறார். ஏனென்றால் இயற்கையே இறைவன்!
"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.'
விருப்பமும் வெறுப்பும் இல்லாமல் இயற்கையாக இருக்கும் இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்ப வருக்கு எந்த இடத்திலும் எந்த காலத்திலும் துன்பம் என்பதே இல்லை.
எனவே நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சப் பேராற்றல் எனும் பிராணசக்தியை, உயிர் சக்தியை உள்ளன்போடு பிரார்த்தனை செய் வோம். உயரிய ஞான ஆற்றலைப் பெறுவோம்.
ஒளியே தெய்வம்; உலகே சுபிட்சம்.