பித்ருக்கள் தோஷம் போக்கும் எள்சாதம் பிரார்த்தனை; குழந்தை பாக்கியம் தரும் ராமநாதேஸ்வரர்; கந்தசஷ்டி விரதம் முதன்முதலில் தொடங்கிய கோவில்; பாம்பன் சுவாமிகள் திருப்பணி செய்த சிவாலயம்; இலங்கை இளவரசி ஊமைப் பெண்ணை பேசவைத்த மாணிக்கவாசகர்; இலங்கையிலிருந்து வந்த பௌத்தர்களிடமிருந்து மாணிக்கவாசகப் பெருமான் மீட்டெடுத்த ஆலயம்... இவ்வளவு சிறப்புமிக்க ஆலயம் எங்கே இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில், சின்னஞ் சிறு கிராமமான பின்னத்தூர் என்ற ஊரில் தான் உள்ளது.
இந்த ஆலயத்தில் மாணிக்கவாசகர் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esan_13.jpg)
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற ஒருவர் தான்போய் அமருமிடம் எல்லாம், "பொன்னம்பலம் பொன்னம்பலம்' எனக் கூறிவருவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.
இதைக்கண்ட சிங்கள பௌத்தர்களும், பௌத்த குருமார்களும் பொன்னம்பலம் என்றால் என்னவென்று விசாரித்தனர். அது சிதம்பரத்தில் நடராஜர் நடனமாடும் பொற்சபை என்பதைத் தெரிந்துகொண்டனர்.
நாம் சிதம்பரத்திற்குப் போய் அந்த பொன்னம்பலத்தை பௌத்த கோவிலாக மாற்றுவோம் எனக் கூறிப் புறப்பட்டனர்.
இவர்களுடன் இலங்கை அரசனும் அவனுடைய ஊமைப் பெண்ணாகிய இளவரசியும் தில்லைக்கு வந்துசேர்ந்தனர்.
தில்லைவாழ் அந்தணர்களை பௌத்த சமயவாதிகள் வாதப்போர் செய்ய அழைத்தனர். தில்லைவாழ் அந்தணர்களோ செய்வதறியாது கலங்கினர்.
அப்போது அசரீரியாய் ஒரு குரல், "தில்லையின் வடபால் தங்கியிருக்கும் நம்முடைய அன்பன் மாணிக்கவாசகனை அழைத்துவந்து இவர் களுடன் வாதப்போரில் ஈடுபட வையுங்கள். அவன் வெல்வான்' என்று ஒலித்தது. அவ்வாறே மாணிக்கவாசகரை அழைத்துவந்தனர்.
தில்லைக்குக் கிழக்கே இருக்கும் இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் பின்னத் தூர். அங்கு பௌத்த குருமார்கள் போதிமரக் கிளையொன்றை நட்டு, "இதை வீழ்த்துபவர்கள் எம்மோடு சமய வாதத்திற்கு வரலாம்' என்று அறிவித்தனர்.
போதிமரக் கிளையை தில்லைவாழ் அந்தணர்கள் வீழ்த்தினர். பிறகு, மாணிக்க வாசகரைக் கொண்டு வாதத்தை நிகழ்த்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esan1_11.jpg)
மாணிக்கவாசகரின் வாதத்திற்குமுன் நிற்க ஆற்றலில்லாத பௌத்தர்கள், மனம் ஏற்காத வாதங்களை எடுத்துவைத்தனர். இதனால் கோபம்கொண்ட மாணிக்க வாசகப் பெருமான், அவர் களை ஊமைகளாகப் போகும்படி சபித்தார். பௌத்தர்கள் ஊமையாகி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
மாணிக்கவாசகரிடம் இலங்கை மன்னன், "பேச் சாற்றல் மிக்க பௌத்தர்களை ஊமைகளாக்கிய நீர், எனது ஊமைப் பெண்ணை பேசுமாறு செய்தருள வேண்டும்'' என்று வேண்டி னான். தவறை உணர்ந்த இலங்கை மன்னனின் கோரிக் கையை ஏற்று மாணிக்க வாசகர், பௌத்தர்களை மீண்டும் பேசுமாறு செய்து, அவர்கள் கேட்ட வினாக் களுக்கு மன்னனின் மகளா கிய ஊமைப் பெண்ணையும் வைத்து அவர்களுக்கு பதில் சொல்லுமாறு செய்தார். இறுதியில் பௌத்தர்களை வாதத்தில் வென்றார் மாணிக்கவாசகர். அனைவரும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு இலங்கை திரும்பினர்.
ஊமைப் பெண்ணின் பின்னமான நாவை சரிசெய்து பேசவைத்த இடமென்பதால் இவ்வூர் பின்னத்தூர் என்று பெயர் பெற்றதாக சான்றுகள் கூறுகின்றன.
இவ்வூரிலிருந்த ஆலய சிவன் பண்டைய காலத்தில் மாணிக்கவாசகர் சுவாமி என்றும், அம்பாள் மாணிக் காம்பிகை என்றும் அழைக் கப்பட்டு வந்ததாகக் கூறப் படுகிறது.
பிற்காலத்தில் இந்த ஆலயம் சிதிலமடைந்து போனதால் மண்மேடாய்க் காட்சியளித்தது. சின்னஞ் சிறிய கிராமம் என்பதால், இவ்வளவு பெரிய ஆலயத்தை எங்களால் எப்படி கட்டமுடியுமென்று மக்கள் மன்றாடினர் ஈசனிடம்.
பாம்பன் சுவாமிகள் இவ்வாலயத்திற்கு வந்து ஈசனை தரிசித்துவிட்டு, ஓரிரு ஆண்டுகள் ஆலயத்தின் பின்னாலிருக்கும் வேப்ப மரத்தடியில் தியானம் மேற்கொண்டதாகக் கூறப் படுகிறது. அப்பொழுது சிதிலமடைந்த ஆலயத்திலிருக்கும் சிலைகளை மீட்டெடுத்து, ஒரு சிறிய ஆலயமாகக் கட்டி, அதற்கு ராமநாதேஸ்வரர்- பர்வத வர்த்தினி என திருநாமத்தை சூட்டியதாகக் கூறப்படு கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esan2_8.jpg)
கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கட்டப் பட்டதென்றும், எந்த வருடம் கட்டப்பட்டது என்பதற்கான சான்றும், முதன்முதலில் யாரால் கட்டப்பட்டது என்பதற் கான சான்றுமில்லை. இனி கோவிலின் அமைப்புபற்றிப் பார்ப்போம்.
இக்கோவில் மேற்கு நோக்கி உள்ளது. பொதுவாக சிவாலயங்கள் கிழக்கு நோக்கியே இருக்கும். முதலில் முன்மண்டபம்; அதில் நந்தி, பலிபீடம் உள்ளது.
அடுத்தது மகாமண்டபம். இதன்மேலே சிவன்- பார்வதி ரிஷப வாகனத்திலும், பதஞ்சலி, வியாக்ரபாதர் இருபுறமும் வணங்கி நிற்பது அற்புதக் காட்சி.
தெற்குதிசை நோக்கி பர்வதவர்த்தினி அம்பாள் நான்கு திருக்கரங்களோடு காட்சிதருகிறாள். விநாயகர், முருகன், மாணிக்கவாசகப் பெருமான் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
அர்த்த மண்டபத்தினுள்ளே உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேற்குதிசை நோக்கிய கருவறையில் ராமநாதேஸ்வரர் பாண லிங்கமாய் நாகாபரணம் சூடி காட்சிதருகிறார்.
கோஷ்டத்தில் துர்க்கை, அண்ணா மலையார், பிரம்மா, தட்சணாமூர்த்தி சந்நிதிகள் அமைந்துள்ளன. வெளிப் பிராகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச் சந்நிதியில், முன்னால் பாம்பன் சுவாமிகளோடு அற்புதமாய்க் காட்சிதருகிறார். காலபைரவர், சண்டிகேஸ்வரர், காமேஸ்வரர், கஜகணபதி சந்நிதிகளும் அமைந்துள்ளன.
கோவிலுக்குப் பின்புறம் 500 மீட்டர் தூரத்தில் பாம்பன் சுவாமிகள் தவமிருந்த வேப்பமரமும் தியான மண்டபமும் அமைந்துள்ளன.
பித்ருக்கள் தோஷம் நீங்க காசி செல்லமுடியவில்லையே- இராமேஸ்வரம் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் உங்களிடம் உள்ளதா? இனி அந்தக் கவலைவேண்டாம். பின்னத்தூரில் இருக்கும் ராமநாதேஸ்வரர் ஆலயத்திலிருக்கும் ராமநாதேஸ்வரரை வணங்கி உங்கள் குறையை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
பித்ருக்கள் தோஷம் நீங்க ராமநாதேஸ்வரருக்கு எள்சாதம் நிவேதனமாக வைத்துப் பிரார்த்தனை செய்து, காக்கைகள் மற்றும் பசுக்களுக்கு வைத்து முன்னோர்களை வணங்கினால், பித்ருக்கள் தோஷங்கள் நீங்கி, முன்னோர்கள் நம் வாழ்க்கைக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகள் இவ்வாலயத்திற்கு வந்து ஒன்பது வியாழக்கிழமைகளில் மகேசனுக்கு மனம் குளிர அபிஷேகம் செய்து, தயிர்சாதம் நிவேதனமாகப் படைத்து அதை பக்தர்களுக்குக் கொடுத்தால், மகேசன் மழலைச் செல்வம் பெற அருளுவான். மகேசனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, இவ்வாலயத்திற்கு முன்னாலிருக் கும் முன்மண்டபத்தில் குழந்தைக்குப் பெயர் சூட்டும் வைபவத்தை நடத்துகின்றனர்.
திருமணத் தடையுள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சம்பங்கி மலர்களால் அர்ச்சனைசெய்து, அரளிப் பூமாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடப்பதாக பலனடைந்த பக்தர்கள் கூறுகின்றனர்.
மனக்கவலை, கண்திருஷ்டி, வீட்டில் நிம்மதியின்மை, வீட்டுக்குள் வந்தால் ஏதேதோ பிரச்சினைகள் என உங்கள் மனம் அல்லாடிக்கொண்டிருக்கிறதா? உங்கள் குறைகளைத் தீர்க்க கந்தனின் தந்தை காத்துக்கொண்டிருக்கிறார்.
ராமநாதேஸ்வரருக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்து, அதிலிருந்து ஒரு பழத்தை மட்டும் எடுத்து பக்தர்களுக்குக் கொடுப்பார்கள். அவர்கள் அதை வீட்டின் முதல் வாசற்படியில் கட்டிவிடவேண்டும். அப்படிச் செய்தால் கண்திருஷ்டி நீங்கும். எந்தவிதமான தீயசக்திக்கும் நம் வீட்டுக்குள் அண்டாது என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
கல்வியில் சிறக்க, படித்த கல்விக்கு நல்ல வேலை கிடைக்க, இவ்வாலயத்திலிருக்கும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு வாசனைப் பூக்களால் மாலை தொடுத்து அணிவித்து பிரார்த்தனை செய்தால், கல்வியிலும் சிறந்து விளங்கலாம். படித்த கல்விக்குரிய வேலையும் கிடைக்கும் என்று பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமியன்று இவ்வாலய காலபைரவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. அதுசமயம் வியாபாரிகள் தங்கள் நிறுவனத்தின் சாவியை வைத்து, நிறுவனம் செழிக்கவேண்டும்- நிறைய லாபம் ஈட்டவேண்டுமென்று பிரார்த் தனை செய்கின்றனர். அதுமட்டுமல்ல; கடன் பிரச்சினையில் இருப்பவர்கள் நெய்தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்.
அவரவர் பிரார்த்தனைக்கான நற்பலன்களை காலபைரவர் அளிப்பதாகக் கூறுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் சஷ்டியன்று சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. கந்தசஷ்டி விரதம் முதன்முதலில் தொடங்கிய கோவில் இதுவே என்றும் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் ஏழாம் தேதிமுதல் 13-ஆம்தேதிவரை சூரிய பிரார்த்தனை நடைபெறுகிறது. மாலை 5.00 மணிக்கு சூரிய ஒளி மூலவரான ராமநாதேஸ்வரர்மீதுபடும் அற்புதக் காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பரவசத்துடன் பார்த்து வணங்கிச் செல்கின்றனர்.
சித்ரா பௌர்ணமியன்று சுவாமி, அம்பாள் மற்றும் அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அனைத்து சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் காட்சிதருவார்கள்.
தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய இரு நிகழ்விலும் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பலவிதமான காவடிகளை பக்தர்கள் சுமந்து உள்பிராகாரம் வலம்வருவார்கள். காவடிகள் வந்தவுடன் மகா தீபாராதனையும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
சிவராத்திரியன்று நான்குகால பூஜைகள் நடைபெறும். கோவில் இரவு முழுவதும் திறந் திருக்கும் கோவிலின் முன்மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் கண்மூடி "ஓம் நமசிவாயா' என மனதுக்குள் உச்சரித்து தியானத்தில் இருப்பார்கள்.
மார்கழி மாதம் பாம்பன் சுவாமிகளின் மயூரவாகன சேவை நடைபெறும். கந்த சஷ்டி மூன்று நாள் உற்சவம் நடைபெறும்.
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் இன்னும் நிறைய திருப்பணி வேலைகள் செய்யவேண்டியுள்ளன. இறையருளாலும் இறையன்பர்களின் உதவிகள் கிடைக்கப்பெற்றும் அதுவும் முழுமைபெற வேண்டும்.
கோவில் இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து கொடிப்பள்ளம் வழியாக பிச்சாவரம் செல்லும் பேருந்தில் பயணித்தால், ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பின்னத் தூர் பேருந்து நிறுத்தத்தை அடையலாம். அங்கிருந்து ஆலயத்திற்கு ஒரு கிலோமீட்டர். வாடகை வாகனத்தில்தான் செல்லவேண்டும். பேருந்து வசதி அடிக்கடி இல்லை.
காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு மற்றும் திருப்பணி சம்பந்தமான தொடர்பு களுக்கு: கோவில் நிர்வாகிகள் எஸ். பழனிவேல், 94426 15681; ஆர். வேல்முருகன், 98657 02738.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/esan-t.jpg)