"அன்பின் வழியது உயிர்நிலை',

"அன்புடையார் எல்லாம் உடையார்' என்கி றார் வள்ளுவர்.

குகையைவிட்டு கம்பீரமாக வெளியே வந்தது சிங்கம். "இன்று நன்றாக சாப்பிடவேண்டும். எந்த விலங்கு அகப்பட் டாலும் விடக்கூடாது' என எண்ணியபடியே நடந்தது.

அன்று எந்த விலங்கும் தென்படவில்லை. மிகவும் கவலையடைந்தது சிங்கம். அலைந்து அலைந்து சோர்ந்துபோய் மாலையில் ஒரு நதிக்கரையை அடைந்தது.

Advertisment

kovil

"உணவுதான் கிடைக்கவில்லை; தண்ணீரைக் குடித்தாவது வயிற்றை நிரப்பிக்கொள்ளலாம்' என்ற முடிவுடன் நதியில் இறங்கி தண்ணீரைக் குடிக்கத் துவங்கியது.

அந்நேரத்தில் மிகவும் சோர்வுடன் வந்துகொண்டிருந்தது ஒரு மான்.

Advertisment

அதைத் கண்டதும் நாவில் எச்சில் ஊற, "எப்படியாவது அடித்து சாப்பிட வேண்டும்' என முடிவு செய்தது சிங்கம்.

சிங்கத்தைப் பார்த்துவிட்டது மான். தன்னைக் கண்டதும் ஓடிவிடுமென்று எண்ணியது சிங்கம். ஆனால் மான் எந்த சலனமும் காட்டவில்லை. அமைதியாக நெருங்கி வந்து, ""சிங்க ராஜாவே... நீங்கள் பசியுடன் இருப்பதாகத் தெரிகிறது; என்னை தாராளமாக சாப்பிடலாம். தயாராக இருக்கிறேன்'' என்று பணிவுடன் கூறியது.

மானின் பேச்சு சிங்கத்திற்கு வியப்பை ஏற்படுத்தியது. "பார்த்த மாத்திரத்திலேயே எந்த விலங்கையும் துரத்திச்சென்று அடித்துச் சாப்பிடுவேன். ஆனால் இந்த மானின் பேச்சு இரக்கத்தையல்லவா ஏற்படுத்துகிறது? இதைக் கொல்லும் எண்ணமே ஏற்படவில்லை... இது ஏன்' என குழப்பத்துடன் நோக்கியது சிங்கம்.

""ஏன் தயங்குகிறீர்கள்? நீங்கள் இந்த காட்டிற்கு ராஜா! பசியுடன் இருக்கலாமா... அது காட்டிற்கே அவமானமாயிற்றே! அதனால், என்னை அடித்து சாப்பிடுங் கள்'' என்றது மான்.

""என்னைக் கண்டவுடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விலங்குகள் எல்லாம் பாய்ந்தோடி தப்பமுயலும்; நீ மட்டும் தைரியத்துடன் முன்வந்து பணிவுடன் நடந்துகொள்கிறாய்.

உன் தைரியமும் பணிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்போது என் பசி பறந்துபோய்விட்டது'' என்று சொல்லி குகைக்குத் திரும்பியது சிங்கம்.

துணிந்து நின்ற மான் மகிழ்வுடன் துள்ளியோடியது.

அன்பான வார்த்தை பலம்நிறைந்த சிங்கத்தை மாற்றிவிட்டதுபோல், அன்பையும் பணிவையும் கடைப்பிடித்தால் எதிரியைக்கூட நம் காலடியில் விழவைக்கமுடியும். அதேசமயம் ஆணவமிகுதியால், தான் செய்வதுதான் சரியென்று வாழ்பவர்களை இறைவனே தண்டிப்பார் என்பதனை உணர்த்துகிற உன்னதமான திருத்தலம்தான் திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் இறைவன்: வீரட்டேஸ்வரர், தட்சபுரீஸ்வரர்.

kovil

இறைவி: இளங்கொம்பனையாள், பாலாம்பிகை.

விசேஷமூர்த்தி: தக்ஷ சம்ஹாரமூர்த்தி.

பூஜைமுறை: காரணாகமம்.

புராணப் பெயர்: திருப்பறியலூர்.

ஊர்: பரசலூர், கீழப்பரசலூர்.

தலவிருட்சம்: பலா மரம், வில்வமரம்.

தீர்த்தம்: உத்திரவேதி, சிவகங்கைத் தீர்த்தம், சந்திர புட்கரணி தீர்த்தம்.

திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட இவ்வாலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிவனின் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 41-ஆவது தலமாகவும், அருணகிரிநாதரால் திருப்புகழில் வைப்புத்தலமாகவும், அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக வும், மூர்த்தி, தலம் தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்பு களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளையும் பெற்றது தான் திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில்.

"வளங்கொள் மலர்மேல்

அயனோத வண்ணன்

துளங்கும் மனத்தார்

தொழத்தழ லாய் நின்றான்

இளங்கொம்பனாளோடு

இணைந்தும் பிணைந்தும்

விளங்குந் திருப்பறியல்

வீரட்டத்தானே.'

-திருஞானசம்பந்தர்

தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தை தண்டனைமூலம் பறித்ததால் பறியலூர் என்று பெயர் பெற்றது. தட்சன் யாகம் செய்த தலமாதலால் தக்ஷபுரம் என்றும் வழங்கலாயிற்று.

புராண வரலாறு

பிரம்மாவின் மூத்தகுமார னாகிய தட்சன் தவமிருந்து, வானவர்களும் தானவர் களும் தனக்கு அடிபணிய வேண்டுமென்று வரம் பெற்றான். அந்த ஆணவத்தால் அண்டசராசரங்களையும் ஆட்டிப்படைத்தான். உமையம்மையை மகளாக அடைந்து, சிவபெருமானுக்குத் திருமணமும் செய்து கொடுத்தான். இருந்தும் ஈசனுடன் பகைமை கொண்டான்.

ஈசனை அவமானப் படுத்துவதற்காக யாகம் ஒன்றைத் துவங்கினான். அந்த வேள்விக்கு ஈசன், ஈஸ்வரியைத் தவிர மற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தான். தட்சனின் இந்த ஆணவப் போக்கை ததீசி முனிவர் வன்மையாகக் கண்டித்தார். உமையாள் தந்தையிடம் வாதிட்டாள். உமையவளின் வாதத்தை தட்சன் ஏற்கவில்லை. அவனது இந்த அவமதிப்பால் அன்னை அக்னிப்பிரவேசம் செய்துகொண்டாள். சினம் கொண்ட சிவனார் எட்டுக்கரங்கள் கொண்ட வீரபத்திரரைத் தோற்றுவித்து, அவரை ஏவி தட்சனின் தலையைக்கொய்து யாகத்தையும் அழித்தார்.

kovil

தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய அந்த யாகத்தில் கலந்துகொண்ட தேவர்களையெல்லாம் சிவபெருமான் தண்டித்தார். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால்தான் சூரியன் இத்தலத்தில் தனியாக வீற்றிருந்து சிவபெருமானை தினமும் வணங்கிவருகிறார்.

எனவே, இத்தலத்தில் நவகிரகங்களுக்கென்று தனிச்சந்நிதி கிடையாது.

சிறப்பம்சங்கள்

= இறைவன் வீரட்டேஸ் வரர் மேற்குநோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் பெரிய திருமேனியுடன் விளங்குகிறார். சதுர ஆவுடை யாரின் கோமுகம் மாறியுள்ளது.

= இறைவி இளங்கொம்பனையாள் தெற்குநோக்கி நின்றநிலையில், இகபர சுகங்களைத் தரும்வகையில் மங்கலம் அருள்பவளாகத் திகழ்கிறாள்.

= இவ்வாலயத்தில் காலபூஜைகள் நன்கு நடைபெறுவதுடன், பைரவருக்கு அர்த்தசாமப் பூஜை நடத்தப்பட்டுவருகிறது. (தற்போது பாதுகாப்புக் கருதி நிறுத்தப்பட்டுள்ளது.)

= தட்சபுரம், பறியலூர் என்று ஊர்ப்பெயர் இருந்தாலும், தற்போது பரசலூர் என்றே அழைக்கிறார்கள். சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலக் கல்வெட்டில் இத்தலம் "ஜயங்கொண்ட சோழவளநாட்டு வீழைநாட்டு ராஜநாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர்' என்றும்; இறைவன் நாமம் திருவீரட்டானமுடையார், தக்ஷேஸ்வரமுடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

= திருப்புகழ் வைப்புத்தலமாக விளங்கும் திருப்பறியலூரில் முருகப்பெருமான் ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிலிப்பது சிறப்பு.

= யாக சம்ஹாரமூர்த்திக் குத் தமிழ் வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஐப்பசிப் பிறப்பு, புரட்டாசி சதுர்த்தி, தை முதல் தேதி, வைகாசித் திருவோணம் ஆகிய நாட்களில் ஆறுமுறை அபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சிவன் வீதியுலா வரும்போது ஊரே திருவிழாக்கோலம் காணும்.

= தருமை ஆதீனத்திற்குச் சொந்த மானதும் திருக்கடவூர் அமிர்த கடேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தோடு இணைந்ததுமான திருப்பறியலூர் வீரட்டம், தட்சனின் மனைவி வேதவல்லிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளிய தலமாதலால், இங்கும் சஷ்டியப்தப் பூர்த்தி, சதாபிஷேக விழா வைபவங்கள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

= இந்த உலகிலேயே புதியதாக ஒரு வேத மந்திரம் (ஸ்ரீசமகம்) தோன்றிய தலமாகவும், ஸ்ரீருத்ர யாகம் தோன்றிய தலமாகவும் சிறந்து விளங்குகிறது.

வயல்வெளிகளுக்கு நடுவில், நாற்புறமும் அழகிய மதில்கள் சூழ, ஐந்துநிலை ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அதனையடுத்து மூன்றுநிலை உள்கோபுரம் மற்றும் இரண்டு பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது.

சிவாலயத்துக்குரிய பரிவாரமூர்த்தி களின் சந்நிதிகள் யாவும் சிறப்பாக அமைந்துள்ளன.

கருவறைச் சுவரில் தட்சன் ஆட்டுத்தலையுடன் சிவலிங்கத்தைப் பூஜிப்பது போன்ற சிற்பம் உள்ளது. வீரபத்திரர் தெற்கு நோக்கி எட்டுக் கரங்களுடன் உள்ளார். இம்மூர்த்தி யின் திருவடியில் தட்சன் வீழ்ந்து கிடப்பதைப்போன்ற சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. சம்ஹாரமூர்த்தியின் பக்கத்தில் நடராஜர் சபை உள்ளது.

இறைவன் தன் மாமனாரான தட்சனையும், அவனது யாகத்தையும் அழித்து நீதியை நிலைநாட்டிய தலமாம்- தட்சனின் மனைவி பிரசூதியின் (பிரசூதி- வடமொழிச்சொல்; தமிழில் வேதவல்லிலி) மாங்கல்யப் பிரார்த்தனையை ஏற்று, தட்சனுக்கு ஆட்டின் தலையைப்பொருத்தி உயிரோடு எழுப்பி, அவளுடைய மாங்கல்யத்தை மீண்டும் வழங்கிய தலமாம்- இவ்வுலகில் வீரபத்திரசுவாமியின் முதல் கோவிலாகத் திகழ்ந்து, எடுத்த காரியத்தில் வெற்றியைத் தந்து எதிரித்தொல்லைகள், பில்லிலி, சூனியம் முதலிலிய மாந்த்ரீகத் தொல்லைகள், கண்திருஷ்டி போன்றவற்றைப் போக்கி, வழக்கு வாதங்களில் வெற்றியைத் தந்து, நன்றி மறந்தவர்களை தண்டித்து, இழந்தவற்றை மீண்டும் பெற்றுத் தந்து, மூன்று ஜென்மங்களில் செய்த பாவங்களை நீக்கும் வீரபத்திரர் அருள்கிற தலமாம்- பாவங்களைப் பறித்துப் பன்மடங்குப் பலனருளும் பரமன் அருள்கிற தலமாம் பறியலூர் தலத்தைத் தொழுவோம்.

குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிற இக்காலகட்டத்தில், மேற்கு நோக்கி சுயம்புவாய் உறையும் இளம்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர், வீரபத்திர சுவாமியின் அடிபணிவோம். வலம்வந்து வழிபட்டு வளம் பெற்று வாழ்வோம்.

காலை 8.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு:

சுந்தர சிவாச்சார்யார்,

வீரட்டேஸ்வரர் திருக்கோவில்,

பரசலூர், கீழப்பரசலூர் (அஞ்சல்),

செம்பனார்கோவில் (வழி),

தரங்கம்பாடி வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம்- 609 309.

தொடர்புக்கு: அலைபேசி- 94437 85616, 99433 48035.