1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதத்தின் முற்பகுதி உங்களை சற்று குழப்பமடைய வைக்கும். எனவே மாதத்தின் முதல் 15 நாட்கள் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கவேண்டாம். மேலும் பண வரவும் திருப்திகரமாக இராது. வரவேண்டிய இடத்திலிருந்து பணம் வராது. கேட்ட இடத்திலும் கைவிரித்துவிடுவார்கள். அரசியல் நிலையும் மதில்மேல் பூனையாக இருக்கும். உங்கள் ஞாபகசக்தி சற்று தடுமாறும். உங்களிடம் வேலைசெய்பவர்கள், உங்கள் தொழில், வேலை, அரசியல் அனுதாபிகள் மாத முற்பகுதியில் உங்களுக்கு எதிராக வேலைசெய்யும் நிலையுண்டு. கவனம் தேவை. வீடு, வாகனம் பழுதுபார்க்க நேரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். ஒருசிலர் கடன்வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணையுடன் சிறு சச்சரவு உண்டாகும். மாதமுற்பகுதியில் நிலவும் பதட்டம், மனஸ்தாபம், பரிதவிப்பு என இவையெல்லாமே மாதப் பிற்பகுதியில் மறைந்து மிக மேன்மையான பலன்களைத் தரும். உங்களுக்கு அதிர்ஷ்டம் பொங்கிப் பெருகும். எதைத் தொட்டாலும் பொன்னா கும். கேட்ட இடத்திலிருந்து பணத்தை அவர்களாகவே கொண்டுவந்து தருவர். உங்களிடம் பணிபுரிந்தவர்கள், உங்கள் அனுதாபிகள் உங்களிடமே திரும்பவந்து உங்கள் வெற்றிக்குப் பாடுபடுவர். மாதப் பிற்பகுதியில் நீங்கள் நினைத்ததெல்லாம் மிக நன்மையாக நடக்கும். அது குடும்பம், தொழில், அரசியல், பணம் என எதுவாக இருப்பினும் நல்ல பலனைத் தரும். வெளியூர், வெளிநாடு சம்பந்தப்பட்ட அதிர்ஷ்ட நிகழ்வை இந்த மாதம் 15-ஆம் தேதிக்குப்பிறகு எதிர்பார்க்கலாம். திருமணம்பற்றி சிறப்பாகச் சொல்ல இயலாது. தொழில், அரசியல், விவசாயம் ஆகியவை மாதப் பிற்பகுதியில் நன்றாக அமைவதால் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிற மனிதர்கள சந்திக்கும்போது கவனமாக இருத்தல் அவசியம். அதுபோல பங்குதாரர்களிடம் நாசூக்காக நடந்துகொள்ளவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: உங்களது அதிர்ஷ்ட மூலிகை வில்வம். அவதிப்படும் அந்தணர்களுக்கு உதவுங்கள்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நல்ல அதிர்ஷ்டம் தரும் மாதமாக இருக்கும். எனினும் இந்த அதிர்ஷ்ட நிகழ்வுகள் நடக்கும்போது சில இடையூறுகளும் ஏற்படும். ஆயினும் அதனைக் கடந்து நல்லவை எல்லாம் கிடைக்கும். அதிலும் மாதப் பிற்பகுதியில் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். அது அரசு வகையில் வரும். சில மோசமான தொழிலாளர்கள் உங்களைவிட்டு விலகுவதும், அவர்களுக்கு பதிலாக நல்ல வேலையாட்கள் கிடைப்பதும் நடக்கும். கடை, தொழில் சார்ந்து இடம் வாங்குவீர்கள். அல்லது ஃப்ளாட் ஒன்றுக்கு அட்வான்ஸ் கொடுப்பீர்கள். உங்களில் சிலருக்கு மருமகன், மருமகள் வரும் நேரமிது. மாதப் பிற்பகுதியில் உங்கள் வாரிசுகள் வெளியூர் செல்வர். அரசியல் ஈடுபாடு உள்ளோருக்கு இந்த மாதம் அதிர்ஷ்ட மாதம் என்று சொல்லலாம். வாழ்க்கைத்துணையோடு கொஞ்சம் சச்சரவு வரலாம். உங்களில் சிலருக்கு எதிர்பாராத நல்ல வேலை கிடைக்கும். சிலர் தங்களது கடனை அடைப்பர். தாய்மாமன் அனுசரணை உண்டு. தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். சிலருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். மாதப் பிற்பகுதியில் சிலர் பூர்வீக நிலத்தை விற்கக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் மாதப் பிற்பகுதியில் கவனமாக இருக்கவேண்டும். விவசாயிகளுக்கு இந்த மாதம் மிக மேன்மையான காரியம் வந்தடையும். அது அரசு கொடுக்கும் பண உதவியால் நடக்கும். கலைத்துறையினர் எண்ணியவை ஈடேறும். சற்று அலைச்சலும் உண்டு. சில கலைத்துறையினருக்கு அரசியல் சம்பந்தம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பாராத யோகம் பெறுவர். வியாபாரம் ஏற்ற- இறக்கமாக நடக்கும். ஒருசிலருக்கு வயிறு சார்ந்த பிரச்சினை வரலாம். பெற்றோரால் லாபம் உண்டு. ஒப்பந்தம் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பாராத லாபம் பெறுவர். பெண் அரசியல்வாதிகள் மிக நம்பிக்கை பெறுவர். தெய்வீகத் தோற்றமுள்ள ஒருவரிடம் இந்த மாதம் கவனமாக இருக்கவும். உங்களின் பேச்சுவண்மை கௌரவம் சேர்க்கும். தீய பழக்கம் அணுகாமல் கவனமாக இருக்கவேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: அதிர்ஷ்ட மூலிகை வெள்ளெருக்கு. உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருந்து வாங்கித் தரவும். நல்லவர்கள்போல் நடிக்கும் நபர்களிடம் கவனமாக இருக்கவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பணப்புழக்கம் சீராக இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் நிச்சயம் உண்டு. அல்லது வீடு, மனை விற்பனை செய்வீர்கள். அதன்பொருட்டு தரகருக்கு கமிஷன் கொடுப்பீர்கள். வெப்பத்தால் தலைபாரமாகி இம்சை தரும்.
அரசியல்வாதிகள் தங்கள் சொந்த இடத்தில் சேவை செய்வார்கள். அதன்காரணமாக அலைச்சல் உண்டு. வீடுவாங்க அரசு கடன் கிடைக்கும். சிலர் வீட்டை விற்றுக் கடனை அடைப்பர். இனிப்பான பழங்கள், நறுமண மலர்கள்மூலம் விவசாயிகள் லாபம் பெறுவர். அரசு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைதுணைக்கு, சில இடர்ப்பாடுகளுக்குப்பிறகு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சம்பந்த வேலை கிடைக்கும். இதனால் சற்று பயணப்படும் சூழல் வரும். மாதப் பிற்பகுதியில் உங்களில் சிலர் தந்தையாகும் வாய்ப்புண்டு. அரசியலில் உங்களது அபரிமிதமான யோசனைகள் அளவில்லா ஆதாயம் கொண்டுவரும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தேர்தலில் வேட்பாளராக நின்றால் வெற்றி நிச்சயம். அதுவும் உங்களது பூர்வீக இடத்தில் வெற்றி வெகுநிச்சயம்! மாதப் பிற்பகுதியில் இந்நிலை உண்டு. தொழிலில் பழைய கூட்டாளிகள் மறுபடியும் சேர்ந்துகொள்வர். வியாபாரம், தொழில் நம்பிக்கையின் பேரில் கிளைபரப்பும். நம்பிக்கை கடன் வாங்கித் தரும். மாதப் பிற்பகுதியில் மாணவர்களின் கல்வி சார்ந்த சிந்தனை சீரடையும். தந்தையின் நிலை புகழடையும். தாயார் நிலை சற்று கவலைதரும். மாதப் பிற்பகுதியில் பேச்சில் சற்று காரம் கூடும்; கவனம் தேவை. உங்கள் மருமகளின் யோசனைகள் வளம் சேர்க்கும். மைத்துனர், மாமியாரின் யோசனைகள் அரசியல் வெற்றியை நோக்கி நகர்த்தும். மூத்த சகோதரி உதவிசெய்வார். இந்த மாதம் உங்கள் குடும்பத்தினர் உங்களது வெற்றி, முன்னேற்றத்திற்குப் பாடுபடுவர். உங்களது எதிரிகள் உங்களைக் கவிழ்க்க சதி செய்யலாம். கவனமாக இருத்தல் அவசியம். விலை உயர்ந்த நகை, பொருட்களை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: உங்கள் அதிர்ஷ்ட மூலிகை குப்பைமேனி. இந்த மாதம் சாது, சித்தர் மடங்களுக்கு தாராளமாக நன்கொடை வழங்கவும். திருட்டு சம்பந்தமான விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் பண வரவும் செலவும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். "வரவு எட்டணா; செலவும் எட்டணா' என்ற நிலையில் இருக்கும். திருமண விஷயங்கள் சார்ந்து அலைச்சலும் செலவும் உண்டு. அது உங்கள் திருமணமாகவும் இருக்கலாம் அல்லது உங்கள் வாரிசுகளின் திருமணமாகவும் இருக்கலாம். அலைச்சலும் செலவும் உறுதி. வீடு, வாகனம், வயல், தோட்ட விஷயங்கள் நீங்கள் நினைத்தபடி அமைவதால், அதன்பொருட்டு முதலீடு செய்வீர்கள்.
அவை சுபச்செலவுகளாகவே இருக்கும். மாதப் பிற்பகுதியில் சிலர் பூர்வீகத் தோட்டத்தை விற்கக்கூடும். சிலருக்கு வேலை கிடைக்கும். அது அரசு சார்புடைய வேலையாக அமையும். ஏற்கெனவே அரசுப் பதவி வகிப்பவர்கள் இந்த மாதம் இடைவிடாத அலைச்சலுடன் கூடிய பணிகளை மேற்கொள்ள நேரும். உங்கள் தொழில் பங்குதாரர் வகையில் கணக்கில் வராத பணப் பங்கீடு நடக்கும். அதனால் உங்களுக்கு நஷ்டம் இருக்காது. சிலர் இந்த மாதம் கள்ளப் பணத்தை அதிகம் கையாள்வார்கள். அரசியல்வாதிகள் அதிக செலவை ஏற்கவேண்டி வரும். தேர்தலில் நிற்காமல் அரசியல் நிகழ்வுகளில் பங்குபெறும் மனிதர்கள் அதிக பணப்புழக்கத்தை அனுபவிப்பர். எவ்வளவு அலைகிறீர்களோ அவ்வளவு பணம்பெற இயலும். அதிக உஷ்ணத்தால் சிறுநீர் சார்ந்த தொல்லைகள் வரலாம். கர்ப்பம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். உங்களில் சிலருக்கு மாத முற்பகுதியில் மிக உயரிய வேலை கிடைத்தாலும், மாதப் பிற்பகுதியில் கைகழுவ வாய்ப்புள்ளது. ஏற்றுமதி- இறக்குமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் வெளியூர்ப் பயணம் செல்ல நேரிட்டால் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். கலைத்துறையினருக்கு ஏற்ற- இறக்கமாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: அதிர்ஷ்ட மூலிகை மரிக்கொழுந்து. பிற இன, மத இளைஞர் களிடம் கவனம் தேவை. குலதெய்வக் கோவிலுக்கு, அதன் அர்ச்சகருக்குத் தேவையறிந்து உதவவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நன்மை- தீமைகள் மாறிமாறி நடைபெறும். எதிர்பார்த்த செயல்கள் தாமதமாகும்; எதிர்பாராத செயல்கள் நடக்கும். மாத முற்பகுதியில் பணவரவு தாராளமாக அமைய, மாதப் பிற்பகுதியில் சற்று தொய்வாகக் காணப்படும். வரும் தகவல்கள் மிரளச் செய்யும். வேலை செய்பவர்கள் உங்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தலாம். இதனால் தொழில், வியாபார வேகம் தடைப்படும். வீடு, வாகனத்தைக்கொண்டு கடன்வாங்க நேரிடும். அது குழந்தைகள் அல்லது ஆரோக்கியம் சம்பந்தமாக இருக்கும். திருமணம் பேசி முடிந்தபிறகு செலவுக் கணக்கால் சற்று வில்லங்கம் ஏற்படும். தம்பதிகளுக்குள் பிணக்கு வரலாம். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. சிலரது கௌரவம் பாதிக்கப்படலாம். கருவுற்ற பெண்கள் தங்கள் உடல்நலனை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலரது வாழ்க்கைத்துணைக்கு வேலை விஷயமாக இடமாறுதல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு விபரீதமாக ஏதாவது நடந்து அதில் வெற்றிவாய்ப்பு கிடைத்தால்தான் உண்டு. விவசாயிகளின் நிலை சுமார்தான். கலைத்துறையினர் மாத முற்பகுதியில் மேன்மையான பலன்களைக் காண்பர். பின் சற்றே வாய்ப்புகள் இழுபறியாகும். குத்தகை, ஒப்பந்ததாரர்களுக்கு சற்று இடையூறுகளுடன் தொழில் ஓடும். ரியல் எஸ்டேட், வீடு விற்பனையாளர்கள் கடன்மூலம் தொழில் நடத்துவர். நீங்கள் எந்த நிலையில், எந்தவித தொழில் செய்பவராக இருப்பினும் சற்று கவனமாக இருக்கவும். வேலைசெய்யும் பணியாளர்கள், ஒப்பந்தமுறை தொழில் தொடர்புள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாதப் பிற்பகுதியில் பேச்சில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: அதிர்ஷ்ட மூலிகை துளசி. உங்களை சந்திக்க வரும் நபர்களிடம் கவனமாக இருக்கவும். பள்ளி மாணவர்களுக்கு உதவுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நிறைய நல்லவை நடக்கும். அவை எதிர்பாராத இனிய அதிர்ச்சிகளாக இருக்கும். அரசியல்வாதிகள் வெற்றிமீது சற்று சந்தேகம் கொண்டிருந்தாலும், உங்களது வெகுஜன சந்திப்புகள் வெற்றியை உறுதி செய்யும். சிலருக்கு அரசு அல்லது அரசு சார்ந்த வேலை கிடைக்கும். இந்த மாதம் எவ்வளவு அலைந்தாலும், எவ்வளவு செலவழித்தாலும் எப்பாடுபட்டாவது வேலையை வாங்கிவிடுவீர்கள். ஏனெனில் இப்போது கிடைக்கும் வேலை நல்ல எதிர் காலத்தைத் தரும். உங்கள் வாரிசுகளுக்கு மிக உயரிய இடத்தில் திருமணம் நிச்சயமாகும். சிலரது திருமணம் மாத முற்பகுதியில் வில்லங்கமாகி, மாதப் பிற்பகுதியில் நல்ல விதமாக நடக்கும். இந்த மாதம் பேச்சு, பண விஷயத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு அடிபட வாய்ப்புண்டு. கணுக் காலில் வலி ஏற்படும். மாத முற்பகுதியில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஏற்படும் சங்கடங்கள், பிற்பகுதியில் சற்று செலவுமூலம் சரிசெய்யப்படும். வியாபாரம், தொழிலில் நிறைய லஞ்சம் கொடுக்க நேரலாம். கலைத்துறையினருக்கு அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பும், அதன்மூலம் நல்ல புகழும் கிட்டும். நிறைய அலைச்சலும் இருக்கும். ரசிகர்களின் சந்திப்பு நிகழும். உங்கள் தாயார் ஒரே இடத்தில் இருக்க, உங்கள் தந்தை அலைச்சலை மேற்கொள்வார். வாரிசுகள் வகையில் கடன்வாங்க நேரிடும். மாத ஆரம்பத்தில் வாகனங்களில் பயணம் செய்யும்போதும், வயலில் வேலை செய்யும்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மாமனாரின் உடல்நிலை சற்று பாதிப்படையும். உங்கள் வாழ்க்கைத் துணையும் அவரது இளைய சகோதரரும் பணம் கொடுக்கல்- வாங்கலில் ஈடுபடுவர். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை மேம்பாடு அடையும். மறுமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த மாதப் பிற்பகுதி யில் பொருத்தமான நல்ல வரன் கிடைக்கப் பெறுவர். தம்பதிகளுக்குள் சிறுசிறு விஷயங் களில் பிணக்கு ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: அதிர்ஷ்ட மூலிகை செந்நாயுருவி. காயம்பட்ட யாருக்கேனும் உதவவும். உங்கள் வேலையின்போது கவனமாக இருக்கவேண்டும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாத முற்பகுதியில் வேலைவிஷயமாக நிறைய ஆட்களை சந்திப்பீர்கள். சிலசமயம் வெளிநாடு சம்பந்தம் அல்லது வேற்று மத அதிகாரிகளை சந்திக்கக்கூடும். மாதப் பிற்பகுதியில் இது சார்ந்த சிக்கல், மனத்தளர்வு நீங்கி எதிர்பாராத ஒரு நல்ல நிகழ்வு நடக்கும். பவ்யமான பணியாட்கள் கிடைப்பர். வீடு மாற்றம் உண்டு. அல்லது இடம்மாறும் யோசனைகள் தோன்றும். வாரிசுகளின் திருமணப் பேச்சு வேகமெடுக்கும். சிலருக்கு பாதவலி பாடாய்ப்படுத்தும். உங்கள் பிள்ளைகள் அரசு கௌரவத்தைப் பெறுவர். வெளிநாட்டு வர்த்தகம், ஒப்பந்தம், வேலை, பயணம் சம்பந்தமாக புது நம்பிக்கை பிறக் கும். அதற்கான ஏற்பாடுகளை விரைவாக முன்னெடுப்பீர்கள். விரும்பிய பெண்ணை மணமுடிக்க ஆவன செய்வீர்கள். சிலர் பூர்வீக வீட்டை அழகுபடுத்துவர். அரசு அல்லது அரசு சார்புடைய வேலை மாதப் பிற்பகுதியில் கண்டிப்பாகக் கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிக உழைப்புடன் அதிக அலைச்சலையும் மேற்கொள்வர். இந்த அலைச்சலும் மக்கள் சந்திப்புகளும் இவர்களுக்கு கௌரவத்தையும் மிகப்பெரிய வெற்றியையும் தேடித்தரும். நீங்கள் தொழில், வியாபாரம், வேலை என எதில் ஈடுபட்டாலும் ஒரு எதிர்பாராத நல்ல யோகத்தை, பெரிய முன்னேற்றத்தை, பெரிய நன்மையை, வெற்றியை மாதப் பிற்பகுதியில் அடைவீர்கள். இதன்மூலம் உங்கள்மீதுள்ள பழி, அபவாதம் மறையும். விவசாயம் அரசின் சட்டம்மூலம் லாபம் காணும். கலைஞர்கள் மாத முற்பகுதியில் நற்பலன் பெறுவர். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பர். அரசின் ஏதோ ஒரு சட்டம் அல்லது உதவியால் உங்களது கடன் தீரும். உங்கள் தந்தை அரசியல், வேலை அல்லது சேவையில் மும்முரமாக இருப்பார்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: அதிர்ஷ்ட மூலிகை அறுகம் புல். பிறமொழி பேசும் நபர்களுடன் ஏற்படும் சந்திப்பின்போது கவனம் தேவை. பக்தர்களுக்குத் தேவையான ஆன்மிகப் புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வரவும் செலவும் சமமாக இருக்கும். சிலசமயங்களில் செலவு அதிகமாகவும் வாய்ப்புண்டு. உங்களில் பலருக்கு இந்த மாதம் தகவல் பரிமாற்றம், கைபேசி, கேபிள் வர்த்தகம், பங்கு வர்த்தகம், விளையாட்டு, செய்திப்பிரிவு, மக்கள் தொடர்பு, சபைக் கூட்டங்கள் அமைத்தல், அறிவிப்பு செய்தல், தரவுகள் வினியோகம், பேனர் அமைப்பது என இதுபோன்ற மக்கள் தொடர்பு சேவைத் தொழில்கள் ஓஹோவென்று நடக்கும். குழந்தைகள்மூலம் புகழ் கிடைக்கும். வாரிசுகளின் திருமணம் சற்று கலப்பாக அமையும். மாதப் பிற்பகுதியில் வீடு சம்பந்தமான மாறுதல் நடக்கும். அது நீங்கள் முற்றிலும் எதிர்பாராததாக இருக்கும் அல்லது பயணங்களில் சற்று இடர்பாடு ஏற்படும். சிலர் வீட்டின்மீது கடன் வாங்குவார்கள். சிலருக்கு களவுபோக நேரும்; கவனம் தேவை. மாத முற்பகுதியில் கலைஞர்கள் பிரசித்தமாக, ஏகபோகமாக இருக்க, பிற்பகுதி சிலருக்கு அவமானத்தைத் தரக்கூடும் அல்லது அலைச்சல் ஏற்படும். பெற்றோருக்கு இடமாற்றம் அல்லது மருத்துவச் செலவு ஏற்படலாம். விவசாயிகள் ஒரு வயலின் கடனை அடைத்து, மறு கடனில் வேறொரு விவசாய நிலம் வாங்குவார்கள். சிலருக்கு கழுத்து, தோளில் வலி வரக்கூடும். மாத முற்பகுதியில் குத்தகை, ஒப்பந்தம் போன்றவற்றை முடித்துவிடவும். முக்கியமாக அரசு சம்பந்தமான ஒப்பந்தத்தை மாத முற்பகுதியில் முடித்துவிடவேண்டும். பிற்பகுதி காலை வாரிவிடும். கர்ப்பம் சம்பந்தமான மருத்துவ ஆலோசனைகளை மாத முதலிரண்டு வாரங்களில் செய்யவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: அதிர்ஷ்ட மூலிகை யானை வணங்கி. அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர் களிடம் அதிக கவனம் தேவை. நிலம், தோட்டம் சம்பந்தமான உபகரணங்கள் தானம் செய்வது நன்று.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சிலர் மாத முற்பகுதியில் சற்று அசட்டுத் தனமாகப் பேசுவர். மாதப் பிற்பகுதியில் அறிவார்ந்த பேச்சாக மாற்றிக்கொள்வர். வெளியூர், வெளிநாடு, பிற இன, மத சார்பு பண நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். பணியாளர்கள் சிலர் வேலையைவிட்டு விலகக் கூடும். பிள்ளைகளால் முதலில் செலவும், பின்பு மிக கௌரவமும் கிடைக்கும். கலைஞர்கள், பொதுமக்கள் சந்திப்புக்காக அலைச்சலை எதிர்கொள்வர். இதன் பொருட்டு கிடைக்கும் பணத்தை முதலீடும் செய்துகொள்வர். பங்கு வர்த்தக முதலீடு அதிகரிக்கும். கடன் வெகுவாகத் தீர்ந்துவிடும். இந்த காலகட்டத்தில் சிலருக்கு அமையும் மனைவி வெளியூர் அல்லது வெளிநாட்டில் பிரபலமாக, நல்ல செல்வாக்குடன் அமைவார். தந்தையின் செலவு உங்களுக்கு லாபமாக அமையும். அரசியல்வாதிகள் மாதப் பிற்பகுதியில் தங்களது பூர்வீக இடத்தில் பெரும் வெற்றிபெறுவர். உங்களைப் பற்றிய எதிர்மறை செய்திகள் மறைவதால் வெற்றி உங்கள் வசப்படும். எதிர்பாராத அரசு சார்ந்த- தகவல் தொடர்பு அல்லது ஆசிரியர் பணி கிடைக்கும். வியாபாரத்தில் மிக நல்ல முதலீடும், மேன்மையான முன்னேற்றமும் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக அமையும். அரசு சார்ந்த குத்தகை, ஒப்பந்தம், சாலை அமைக்கும் வேலை என இவை போன்ற வேலைகள் கிடைக்கும். சிலரது திருமணம் ஊரே வியக்கும்படி நடக்கும். குழந்தைப் பிறப்பு சம்பந்தமான நற்செய்தி கிடைக்கும். பூர்வீகம் புகழ் தரும். நல்லன எல்லாம் தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: அதிர்ஷ்ட மூலிகை தலைச் சுருளி. இந்த மாதம் பேச்சில் பொறுமை தேவை. மூத்த சகோதரர் வயதில் உள்ளவர் களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள்.
செல்: 94449 61845