"நல்லாற்றான் நாடியருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.'
-திருவள்ளுவர்
நல்ல வழியில் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்கவேண்டும். பல வழிகளில் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
பூவுலகில் உயிர்நீத்த வித்யநாதர் என்பவரை சிவதூதர்கள் கயிலைக்கு அழைத்து வந்தனர். ஈசன் அவரை கட்டியணைக்க, வித்யநாதர் சிவனுடன் இரண்டறக் கலந்தார். அப்போது பத்மராஜர் என்னும் மன்னர் சிவபெருமானை தரிசிக்க வந்திருந்தார். v நினைத்த நேரத்திலெல்லாம் பூவுலகிலிருந்து கயிலை வந்து சிவனை தரிசிக்கும் வரம்பெற்றவர் அவர்.
""சுவாமி, இந்த மனிதர் உங்களுடன் கலந்து விட்டாரே- அது எப்படி?'' என்று கேட்டார்.
""உலகிலேயே சிறந்த தர்மத்தைக் கடைப்பிடித்தவர் இவர். வேத சாஸ்திரங்களில் வல்லவரான இவர், தனது அறிவைப் பணமாக்க வாய்ப்பு கிடைத்தும் அதைப் பொருட்படுத்தவில்லை. சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதைக் கடமையாக் கொண்டிருந்தார். ஏழ்மையில் இருந்தாலும் தனது வருமானத்தில் ஒரு பகுதியை தானமளித்தார். பிறர் நன்மைக்காக வாழ்வதே சிறந்த தர்மம். அதைக் கடைப்பிடிப்பவர் யாராக இருந்தாலும் அவர் என்னுடன் இணைந்து விடுவார்'' என்றார் சிவபெருமான்.
பத்மராஜர் பூவுலகம் திரும்பினார். தான் கண்ட உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்தார். மன்னரின் வழிகாட்டுதலின்படி மக்கள் பிறருக்கு சேவை செய்தனர். நாட்டில் பாவம் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போனது. மகிழ்ந்த சிவபெருமான் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் மோட்சமளித்தார்.
நளகூபன், மணிக்கிரீவன் ஆகிய இருவரும் குபேரனின் மகன்கள். மது, மாதுப் பிரியர்களான அவர்கள் தந்தையின் செல்வத்தைத் தாறுமாறாக செலவழித்து வந்தனர். ஒருநாள் மது அருந்திவிட்டு கந்தர்வப் பெண்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பக்கமாக நாரதர் வந்துகொண்டிருந்தார். அவர் வருவதைக்கண்டு கந்தர்வப் பெண்கள் அங்கிருந்து விரைவாக அகன்றனர். மது மயக்கத்திலிருந்த குபேர மைந்தர்களுக்கு நாரதரை அடையாளம் தெரியவில்லை. யாரோ ஒருவர் என எண்ணி, ""உனக்கு என்ன தைரியமிருந்தால் எங்கள் மகிழ்ச்சியைக் கெடுப்பாய்? உடனே அந்தப் பெண்களை அழைத்து வராவிட்டால் உன்னை தண்டிப்போம்'' என கோபப்பட்டனர்.
""என்னை அவமதித்ததால் நீங்கள் மருத மரங்களாக மாறுங்கள்'' என சபித்தார் நாரதர். அதன்பின்தான் தங்கள்முன் நிற்பவர் நாரதர் என்ற உண்மை அவர் களுக்குப் புரிந்து சாப விமோசனம் கேட்டனர்.
அதற்கு நாரதர், ""மகாவிஷ்ணு பூமியில் கிருஷ்ணராக அவதரிக்கவுள்ளார். அப்போது உங்களது சாபம் நிவர்த்தியாகும்'' என்று சொல்லி மறைந்தார்.
அதன்படியே பூவுலகில் கண்ணனின் அவதாரம் நிகழ்ந்தது. ஒரு நாள் கண்ணனின் குறும்பைத் தாளாத தாய் யசோதா, அவனை உரலில் கட்டினாள்.
அதைக் கண்ணன் இழுத்துச் சென்றபோது இரு மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் பலமாக இழுக்க மரங்கள் சாய்ந்தன.
அப்போது நளகூபனும் மணிக் கிரீவனும் சுயவடிவம் பெற்று கண்ணனை வணங்கினர். பின்னர் மனம்திருந்தி குபேர லோகம் வந்து ஈசனை வழிபட்டு ஒழுக்கமுடன் வாழத் தொடங்கினர்.
குபேரனின் மகன்களைப்போல் ஒழுக்கமின்றி வாழாமல், மன்னர் பத்மராஜர்போல் தர்மநெறியில் வாழ்பவர்களுக்கு தெய்வ அருள் துணைநிற்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்ற திருத்தலம்தான் வட குரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: தயாநிதீஸ்வரர்.
உற்சவர்: குலைவணங்கிநாதர்.
இறைவி: ஜடாமகுட நாயகி.
(அழகுசடைமுடி அம்பிகை).
ஊர்: வட குரங்காடுதுறை.
தலவிருட்சம்: தென்னைமரம்.
தீர்த்தம்: காவிரி தீர்த்தம்.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத் திற்கு உட்பட்ட தும், தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப் பாட்டிலும் இயங்குகின்ற இவ்வாலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. திருஞான சம்பந்தரால் பதிகங்கள் பாடப்பெற்று, காவிரி வடகரைத் தலங்களில் 49-ஆவது தலமாக விளங்குகிறது.
"முத்துமா மணியொடு முழைவளர்
ஆரமும் முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை
யடை குரங்காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி
சடைமுடி யடிகள்தம்
சித்தலமாம் அடியவர் சிவகதி
பெறுவது திண்ணமன்றே.'
-திருஞானசம்பந்தர்
இது இராமாயண காலத்தில் வாலியால் வழிபடப்பட்ட தலம். கும்ப கோணம்- மயிலாடுதுறை சாலையில், திருவிடைமருதூர் அருகே சுக்ரீவன் வழிபட்ட இன்னொரு தலம் குரங்காடுதுறை என்ற பெயரில் இருப்பதாலும், இந்தத் தலத்திற்கு அருகே பெருமாள் கோவில் என்னும் ஊர் இருப்பதாலும், இரண்டையும் வேறுபடுத்துவதற்காக இத்தலம் வட குரங்காடுதுறை என்று அழைக்கப்படுகிறது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் இத்தலத்தைச் சார்ந்த பகுதியில் ஒரு கர்ப்பிணிப் பெண் நல்ல வெய்யிலில் நடந்து வந்துகொண்டிருந்தாள். அவளுக்கு தாகமும் களைப்பும் மேலிட மயக்கமுற்றாள். திருச்சியில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அருள் புரிந்தாரல்லவா இறைவன் தாயுமானவர்? அதுபோல இங்கு கோவில் கொண்டிருக்கு இறைவன் அந்தப் பெண் மயக்கமுற்றிருந்த இடத்திலிருந்த தென்னங் குலைகளை வளைத்தார். அந்தப் பெண் இளநீர் அருந்த வழிசெய்து கொடுத்தார். இறைவனருளால் அவள் தாகம் நீங்கி புத்துணர்வு பெற்றாள். தென்னங்குலைகளை வளைத்து அருள்புரிந்ததால் இத்தல இறைவன் குலைவணங்குநாதர் எனப் பெயர்பெற்றார்.
சில பாவங்கள் நீங்க அனுமனும் இங்கு பூஜை செய்துள்ளார். அனுமன் சிவ வழிபாடு செய்த ஐந்து முக்கிய தலங்களில் வட குரங்காடுதுறையும் ஒன்று. சிவபெருமான் தனது லீலைகளைப் பல இடங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். அந்தவகையில் வாலிக்கு வால் வளர அருள் செய்த இடமே குரங்காடுதுறையாகும். வாலிக்கு வால் அறுந்தது எப்போது என்ற கேள்வி எழலாம். வாலியைக் கண்டு இராவணனே நடுங்கியிருக்கிறான். இராவணனை வாலி தன் வாலால் அடிக்கும்போது அது அறுபட்டது. அதனால் வாலி வட குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது.
இறைவன் சந்நிதி முன்னுள்ள மண்டபத் தூண் ஒன்றில் சிவலிங்கத்தை வழிபடும் ஆஞ்சனேயர் சிற்பத்தைக் காணலாம். இந்தத் தூண் ஆஞ்சனேயர் ஒரு பிரார்த்தனா மூர்த்தி. இவரிடம் என்ன நேர்ந்துகொண்டாலும் அது உடனடியாக நிறைவேறுகிறது என்பது பக்தர்களின் கூற்று.
சிறப்பம்சங்கள்
= இத்தல இறைவன் தயாநிதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். வாலிக்கு அருளியதால் வாலீஸ்வரர் என்றும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு தாகத்தைத் தீர்த்தமையால் குலைவணங்குநாதர் என்றும், சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்ததால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் பல காரணப்பெயர்கள் இத்தல இறைவனுக்கு உள்ளன.
=பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் கோவிலுக்குச் செல்லமாட்டார்கள். ஆனால் அவர்கள் வணங்கவேண்டிய தலமாக வட குரங்காடுதுறை விளங்குகிறது.
=பங்குனி உத்திர விழா, நவராத்திரி பத்து நாட்கள் விழா, கார்த்திகையில் இத்தல அம்பிகை ஜடாமகுட நாயகியை 108 முறை, 1,008 முறை வலம்வருவது, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
=நடராஜர்- சிவகாமி அம்மையாரின் கல்சிற்பம் வெகு நேர்த்தியாக இருப்பது சிறப்புவாய்ந்தது.
=இங்குள்ள விஷ்ணுதுர்க்கை கைகளில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறாள். எட்டு கரங்கள் கொண்ட இந்த துர்க்கைக்கு பாலாபிஷேகம் செய்தால், பால் நீலநிறமாகக் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். வேறெந்த துர்க்கை தலத்திலும் இதுபோன்ற அதிசய நிகழ்வு நடப்பதாகத் தெரியவில்லை. நவராத்திரி காலத்தில் இந்த துர்க்கையை வழிபட்டால் மன தைரியம் அதிகரிக்கும்.
= பொதுவாக மூலவருக்குப் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் அங்கு அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். இவரது கற்சிலை மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
=இத்தலத்தில் இரட்டை பைரவர் அருள்பாலிப்பதும் சிறப்பு. தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகின்றன.
=சிவாலயத்திற்குரிய அனைத்து விழாக்களும் முறைப்படி நடத்தப்படும் இவ்வாலயத்தில், மூல நட்சத்திர நாளில் பிரார்த்தனா மூர்த்தி ஆஞ்சனேயருக்கு மகா தீபாராதனை நடைபெறும்.
= இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தேவசேனா வுடன் நின்றநிலையில் அருள்புரிகிறார். இத்தல முருகப் பெருமான்மீது அருணகிரிநாதர் தனது திருப்புகழில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்.
= இத்தல இறைவி அழகு சடைமுடி அம்பிகை தன் தலையில் உயர்ந்த சடாமுடியுடன் அழகாகக் காட்சியளிக்கிறாள். ""பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் சிறப்பாக இருக்கும். பௌர்ணமியன்று மாலை வேளையில், ஒன்பது மஞ்சள் கொண்டு மாலைதொடுத்து அம்பிகைக்கு அணிவிப்பதைப் பார்த்தால் குடும்பம் சுபிட்சமாக விளங்குவதுடன், கர்ப்பிணிப் பெண்களுக்கு எவ்விதத் தொல்லையுமின்றி சுகப்பிரசவம் நடக்கும்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர் தியாகராஜர் சிவாச்சாரியார்.
இத்தலத்தில் நவ கிரகங்கள் இருந்தாலும், சனி பகவான் பொங்கு சனீஸ்வரராக தனியே அருள்பாலிக்கிறார். நடப்பு சார்வரி வருடம், மார்கழி மாதத்தில் 26-12-2020 அன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியானார் சனி பகவான்.
மேஷ ராசிக்கு ஜீவனச் சனி, மிதுன ராசிக்கு அஷ்டமச்சனி, கடக ராசிக்கு கண்டகச்சனி, கன்னி ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி, துலா ராசிக்கு அர்த்தாஷ்டமச்சனி, தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி, மகர ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி, கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி என வருவதால், மேற்கண்ட ராசி அன்பர்கள் இத்தல பொங்கு சனீஸ்வரரை வழிபடுவதன் மூலம் சனியின் தாக்கம் குறைந்து வளர்ச்சி காணலாம். மற்ற ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகியவை நன்மை பெறும் ராசிகளாக விளங்குகின்றன.
திருக்கோவில் அமைப்பு
காவிரி பாய்ந்தோடும் தஞ்சைத் தரணியில், வயல் வெளிகளுக்கு நடுவே, குறைந்த அளவே குடும்பங்கள் வாழும் சிற்றூராகத் திகழ்ன்ற வட குரங்காடுதுறையில், நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது ஆலயம். இரண்டு பிராகாரங்கள் உள்ளன.
கோபுர வாயில்வழியே உள்ளே நுழைந்தால் வலப்புறம் பழைய வாகன மண்டபம், அதற்கு மேற்கே நவகிரக சந்நிதி, அதற்கு மேற்கே அம்பாள் சந்நிதி, மூலவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் நுழைவாயிலுக்கு எதிரே பிரதோஷ நந்தி ஆகியவை அமைந்துள்ளன. இவற்றைத் தவிர வெளிப்பிராகாரத்தில் வேறு சந்நிதிகள் இல்லை. ஒரு பகுதியில் பசுமடம், மடப்பள்ளி உள்ளன.
முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகளுடன்கூடிய சந்நிதியில் நுழைந்தால் மூலவர் தயாநிதீஸ்வரர் கிழக்குநோக்கி அருள்பாலிக்கி றார். தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை, லிங்கோத்பவர் உள்ள இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையை வலம்வரும்போது, மூலவர் சந்நிதியின் தெற்குச் சுவரும் மேற்குச் சுவரும் சந்திக்குமிடத்தில், சிவபெருமானை வழிபடும் வாலியின் சுதைச்சிற்பம் வெகுநேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குச் சுற்றில் சனிபகவான், பைரவர், தேவாரம் பாடிய மூவர் சிற்பங்கள், அடுத்து கர்ப்பிணிப் பெண் சிற்பமும் உள்ளது.
இவ்வாலய இறைவனை வணங்கிவிட்டு வெளியே வரும்போது, சுமையை இறக்கிவைத்தாற்போன்ற நிம்மதியான உணர்வு ஏற்படுகிறது என்பது பக்தர்களின் கூற்று. பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்னும் முதுமொழிக்கேற்ப, எந்தவொரு பூஜைசெய்தாலும் விநாயகரில் ஆரம்பித்து ஆஞ்சனேயரில் முடிக்கவேண்டும். அந்தவகையில் க்ஷேத்திர விநாயகரை வணங்கி, மற்ற அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, இறுதியில் தூணில் அருள்பாலிக்கும் ஆஞ்சனேயரை வணங்கி வெளியே வரலாம்- நடப்பவையெல்லாம் நமச்சிவாய செயல் என்று! வம்சவிருத்தியோடு வளமுடன் வாழ அருள்புரியும் வட குரங்காடுதுறை தயாநிதீஸ் வரரை வணங்கி வளம் பெறுவோம்.
காலை 6.30 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 3.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு:
தியாகராஜ சிவாச்சாரியார்,
தயாநிதீஸ்வரர் திருக்கோயில்,
வடகுரங்காடுதுறை,
உள்ளிக்கடை அஞ்சல்,
கணபதி அக்ரஹாரம் வழி,
பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம்- 614202.
அலைபேசி: 96887 26690, 63796 99254.
அமைவிடம்: கும்ப கோணம்- திருவையாறு சாலையில் சுவாமிமலை, கபிஸ் தலம் ஊர்களைக் கடந்து உள்ளிக்கடை நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது வடகுரங்காடுதுறை. கும்பகோணத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், திருவையாறிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதியுண்டு.
படங்கள்: போட்டோ கருணா