செயற்கரிய சாதனைகள் புரிந்த பலரையும் பார்த்தால் நமக்கு வியப்பு ஏற்படும். "இவரா இந்த மாபெரும் சாதனை யைப் புரிந்தார்!' என்று ஆச்சரியப்படத் தோன்றும். இவர்களால் மட்டும் எப்படி இந்த மகத்தான சாதனையைப் புரியமுடிந்தது?
வேதங்கள் சொல்கின்றன- "எதை நாம் உள்ளத்தால் அழுத்தம் திருத்தமாக எண்ணுகிறோமோ, அது நம்மை நோக்கி வரும்' என்று.
முடியுமா என்ற சந்தேகமும், அவ நம்பிக்கையும் எண்ணத்தில் வராமல் இருப்பதே நேர்மறையானது.
எண்ணத்தில் முழுமையில்லாத நிலையில், செயலில் முழுமை ஏற்படாது.
ஒரு குழந்தை சமுதாயத்திற்கு நன்மைபுரியும் மனிதராக வளர, பெற்றோ ரின் கடமை மிக முக்கியமான ஒன்று. "விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பார்கள். தெரியும் மட்டுமல்ல; தெரிய வும் வேண்டும்.
ஒவ்வொரு தாயும் தன் குழந்தை யைக் கருவில் சுமக்கும்போதே தொலைக் காட்சி, கணினி உலகிலிருந்து வெளி வந்து, நம் கலாச்சாரத்தின் பல அம்சங்களை- கதைகள், பாடல்கள், இசை, ஓவியம்மூலம் மென்மையாக வாசித்து, பாடி, இசைத்து வாஞ்சையுடன் உரையாடவும் வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் அதே உணர்வுடன் கருவிலுள்ள குழந்தையுடன் நடந்து கொள்ளவேண்டும். தாயின், உறவுகளின் அன்புக்குரல், ஸ்பரிசம் கருவிலேயே உணரும் வண்ணம் அந்தப் பிஞ்சுடன் மனதார இணையவேண்டும்.
குழந்தை பிறந்தபிறகு தாய்ப்பாலுடன் நல்ல பண்புகளையும், லட்சியங்களையும், இறையுணர்வையும், அஞ்சாமையும் சேர்த்துப் புகட்ட வேண்டும்.
குழந்தை வளர்ந்த பின்னர் பள்ளி, கல்வி, நம் அன்றாட வேலைகள் என ஐக்கியமாகிவிடுவோம். ஆகவே, குழந்தைப்பேறு காலத்தில் ஒரு தவம்போல், கருவில் சுமக்கும்போது துவங்கி, குழந்தை நடைபயிலவும் பேசவும் ஆரம்பிக்கும்வரை, நம்மையும் சூழ்நிலையையும் புனிதமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
எத்தனை படித்தாலும், பெற்றோரிட மிருந்து ஒரு குழந்தை கற்கும் கல்வியே மிகப்பெரிய படிப்பு. அதுதான் அதன் வாழ்க்கையின் அடித்தளம். உலகில் மற்ற எந்த உறவுகளையும்விட தாய்மை மிகவும் போற்றப்படுவதற்குக் காரணமென்ன? சில மாதங்களுக்குத்தான் என்றாலும், மற்றொரு உயிரைத் தன்னுடைய ஒரு பகுதியாகவே ஏற்று, தன் உயிராகத் தனக் குள்ளேயே இணைத்துக்கொள்ளும் உன்னதம் அந்த உறவு. கர்ப்ப காலத்தில் பெண்கள் மிக அழகாக மிளிர்வதற்குக் காரணம் இந்த உணர்வுதான்.
இன்னொரு உயிரைத் தன்னுயிராக ஏற்பதும் ஒரு யோக நிலைதான். ஒவ்வொரு தாயும் தானறியாமலேயே யோகநிலையில் திளைக்க இயற்கை தந்த வரமது. ஒரு அழகான கதை உண்டு.
கடற்கரை ஓரமாக வளர்ந்திருந்த பெரிய மரத்தின் கிளையொன்று, மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக்கொண்டிருந்தது.
அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடுகட்டி, அதனுள் நான்கைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும், பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. அலைகள் பெரிதும் பொங்கி எழுந்தன. கிளையி லிருந்த கூடு நழுவிக் கடலில் விழுந்து மூழ்கியது.
குருவிகள் மனம்பதறிக் கதறின. கடல்நீரில் கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக "கீச் கீச்' என்று கத்தியபடியே சுற்றிச்சுற்றி வந்தன.
தாய்க்குருவி மனமுடைந்து சொன்னது:
"எப்படியாவது முட்டை
களை மீண்டும் நான் காண
வேண்டும். இல்லையேல் உயிர்வாழ மாட்டேன்.''
தந்தைக் குருவி சொன்னது:
"அவசப்படாதே. ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத்தான் விழுந்து மூழ்கியுள்ளது. கூட்டுடன் விழுந்ததால் முட்டைகள் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள நீரை வற்றச் செய்துவிட்டால் போதும்; முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.''
"கடலை எப்படி வற்றச் செய்வது?'
' "முட்டைகள் பொரிந்து நமது குஞ்சுகள் வெளிவர இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
எனவே நாம் இடைவிடாமல் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துச் சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும்... மறுபடியும் செய்வோம். இப்படியே தொடர்ந்து செய்தால், கடல்நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.''
இதையடுத்து இரண்டு குருவிகளும் ஊக்கத்துடன் செயலில் இறங்கின.
அந்தக் கடற்கரையோரமாக மகாசக்தி நிரம்பிய முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். ஆளில்லாத அந்த அத்துவானப் பகுதியில் "கீச் கீச்' என்ற சப்தம் கேட்கவும், அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் "கீச் கீச்' சப்தம். குருவிகள் கடலுக்கு மேலே பறந்தன. நீரை அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும் முனிவருக்கு வியப்பு. "கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே' என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார்.
உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் நிகழ்ச்சிகள் அனைத்தும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும், கடலையே வற்றச் செய்தாவது முட்டைகளை மீட்க வேண்டு மென்ற அவற்றின் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவபலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட் டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்து டன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டை களைப் பற்றிக்கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
"நான் அப்போதே சொன்னேன் பார்த் தாயா? ஒருநாள் உழைப்பில் கடல்நீரைக் குறைத்து முட்டைகளை மீட்டுவிட்டோம் பார்த்தாயா?'' என்றது ஆண்குருவி பெருமித மாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார்.
இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால்தான். ஆனால் அந்த குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ, தவவலிமை என்றால் என்ன என்பது பற்றியோ எதுவுமே தெரியாது.
அதேசமயம் குருவிகள் மட்டும் கடல்நீரை அள்ளிச் சென்று ஊற்றிக்கொண்டிருக்கா விட்டால் முனிவர் தன் வழியே போயிருப் பார். அவரை மனம் நெகிழ வைத்தது குருவி களின் அபார முயற்சிதான்.
ஆக, இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளாலும்தான்; முனிவராலும்தான்.
நோக்கம் நியாயமானதாக இருந்து, நமது முழு ஆற்றலையும் பிரயோகித்து, பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கி னால் இறையருளே பக்கபலமாக நின்று அந்த மகத்தான சாதனையை நிகழ்த்த உறுதுணை செய்யும்.
இத்தகைய மகத்துவமான தாய்மை, குழந்தை வளர்வதற்கான சரியான சூழலை அமைத்துத்தர எந்த நிலையிலும் தவறிவிடக் கூடாது.
குடிப்பழக்கம் உள்ள தந்தை நிதம் வீடு வந்து தாயையும், அக்காள், தங்கையையும் தகாத வார்த்தைகள் பேசி அடித்து உதைப் பதை தினம் பார்க்கும் மகன், பெண்களை மதிக்கத் தெரியாதவனாய் வளர்கிறான்.
அவன் எதிர்காலமே அழிந்து போவதுடன், அவனால் பாதிக்கப்பட்ட பெண்- ஆண் களின் வாழ்க்கையும் பறிபோகிறது.
நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். சில குடும்பத் தலைவிகள் சீட்டுத் தொழில் செய்வர். சில இடங்களில் கணவருக்குத் தெரிந்தும் சில இடங்களில் தெரியாமலும் செய்வர். கொடுக்கல்- வாங்கலில் அந்தத் தாய் நிலைமையை சமாளிக்க தன் மகனையும் உதவிக்கு வைத்துக்கொள்வார். தனி ஊக்கத் தொகை மகனுக்கு உண்டு.
அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா சீட்டுத்தொழில் செய்வது, அதற்கு மகன் துணைக்கு இருப்பது, படிக்கும் வயதிலேயே பிறரை மிரட்டி பணம் வசூல் செய்வது, கைச் செலவுக்கு கிடைக்கும் பணம்- இவை தரும் தைரியம் அவன் படிப்பைக் கெடுக்கிறது.
குடி, போதைமருந்து, ரவுடித்தனம் என எல்லா தகுதிகளும் வரப்பெற்று, மகன் எல்லை மீறிய தலைவலியாய் மாறுகிறான். தாய் கண்டிக்கும்போது அவன் "அப்பாவிடம் சொல்லிவிடுவேன்' என்று மிரட்டவும் செய்கிறான். கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?
ஒவ்வொரு குழந்தையும் தன் தாய்- தந்தை மற்றும் மூத்த குடும்ப உறுப்பினர் வீட்டில் உருவாக்கும் சூழ்நிலை ஆகியவற்றிலிருந்து தான் அடிப்படைப் பாடங்களைக் கற்றுக் கொள்ளும்.
தொலைக்காட்சி, கணினி, கைபேசி என நாம் அமர்ந்திருந்தால், குழந்தையும் அதைத்தான் விரும்பும். அவர்களின் விளையாட்டுப் பொருட்களுடன் அமர்ந்து குழந்தையுடன் குழந்தையாக விளையாடிப் பாருங்கள். நம் மனமும் எண்ணங்களும் உடலும் எவ்வளவு புத்துணர்வாக- ஆரோக் கியமானதாக இருக்கிறதென்று புரியும்.
என் அம்மா, மாலை வேளைகளில் சாமியறையில் விளக்கேற்றி விநாயகர் அகவல், சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற துதிகள் பாடுவார். எத்தனைத் தேர்வுகள் அடுத்த நாள் பள்ளியில் இருந்தாலும், கண்டிப்பாக அந்த அரைமணி நேரம் நாங்கள் சாமியறையில் அவருடன் அமர்ந்து கூடவே பாடல்களைப் பாடவேண்டும். என் அம்மாவுக்கு மனனமாகத் தெரியும் என்றாலும், எங்களுக்காக புத்தகம் வைத்துப் படிப்பார்; பாடுவார். நாங்களும் இன்று எங்கள் குழந்தைகளுக்கு சாமிமுன் நின்று சொல்லித்தர முடிகிறதென்றால் அன்று எங்கள் தாய் எங்களுக்கு ஏற்படுத்தித் தந்த வரமே அது.
நல்லொழுக்கம், விடாமுயற்சி, கடவுள் நம்பிக்கை- இவை ஒரு குழந்தை தன் பெற்றோரி டமிருந்து கற்கும் பாடமாக அமைய வேண்டும்.
இதுபோன்ற ஆரோக்கியமான சூழ்நிலை யில் வளரும்- வளர்க்கப்படும் குழந்தையே எப்போதும் தூயவராக, சுயமரியாதை இழக்காதவராக, அடுத்தவர் சுயமரியாதையை மதிப்பவராக வாழக்கூடும். தாயும் தந்தையும் குழந்தைகள் முன்னால் தர்க்கம் செய்வதையோ, அவரவர் பிறந்த வீட்டை உயர்த்தி, தாழ்த்திப் பேசுவதையோ, புறம் பேசுவதையோ, பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதையோ செய்யாதிருப்போம். நாம் புனிதப்படுவதுடன் நம் குழந்தைகளின் வாழ்க்கையும் புனிதப்படும். யாருட னும் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்காதிருப் போம். இது உயர்வு- இது தாழ்வென்று பார்க்கத் துவங்கும்போதே பிரச்சினையும் துவங்கிவிடும். கடல் கீழே இருப்பதால், உயரமாக இருக்கும் மலையைவிட தாழ்ந்ததல்ல.
சேவை, தொண்டு, பக்தி என உடலால் செய்யப்படுவதும்; தியானம், தவம், யோகம் என மனதினால் செய்யப்படுவதுமான இரு வழிகளுமே சிறந்தவை.
தாய்ப்பூனை தன் வாயால் குட்டியின் கழுத்தைக் கவ்வி எடுத்துச் செல்லும். எனினும் குட்டியின் உடலில் சிறுவடுகூட இருக்காது. பத்திரமான இடத்தில் அதைக் கொண்டுசேர்க்கும்.
குரங்கு தன் குட்டியைப் பற்றிக் கவலைப்படாமல் மரத்துக்கு மரம் தாவிச் செல்லும். இங்கே குட்டிதான் தன்னுடைய தாயின் அடிவயிற்றை இறுகப் பற்றிக்கொண்டிருக்கும்.
தாய்மை எனும் சக்தி அழுத்தமான நம்பிக்கையுடன், நடத்தமுடியாத சாதனைகளை எல்லாம் நடத்திக் காட்டக் கூடியது.
விளையும் பயிராம் நம் குழந்தைகளை, அவர்களால் உலகம் நலமடைய வேண்டும் என்றும், உயர்ந்த பிறவியான மானிடப்பிறவி பெற்ற அவர்கள் நல்லவிதமாக வாழ வேண்டும்; சிறந்த நிலையை அடைய வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்து, இறையருளை ஊட்டி வளர்ப்போம்.
அவனருளாலே, அவன் தாள் வணங்கி உயர்ந்தெழுவோம்!