மகான்களும் ஞானிகளும் தாங்கள் வாழ்ந்த காலங்களில் சிறப்புற்று வாழ்ந்தாலும், அவர்களைப் பிடிக்காதவர்களால் தொல்லைகளையும் சந்தித்தனர். எனினும் அவர்கள் எதிரிகளிடமும் பரிவுடன் இருந்த னர். சிவ பெருமானின் மறு அவதாரமாகப் பிறந்தவர் ஆதிசங்கரர்; சிவபெருமானின் அம்சமாகப் பிறந்தவர் ஸ்ரீமத் அப்பய்யர். ஆம்; தில்லை நடராஜப் பெருமானே அர்ச்சகர் உருவில்வந்து, அபிஷேகப் பழ ரசத்தை வழங்கப் பிறந்தவர்தான் அப்பய்யர்.
ஐந்து வயதிலேயே எழுத்து ஞானம், சாஹித்யம் செய்யும் திறமை பெற்றார்.
அப்பய்யரின் தந்தை ஸ்ரீரங்கராஜத்வரி, வேலூர் சின்னபொம்ம அரசவையில் பணியாற்றியவர். அவர் ஈசனின் திருவடியை அடைந்தபோது அப்பய்யருக்கு பதினாறு வயது. சின்னபொம்ம அரசர், அப்பய்யரையும், அவருடைய தம்பி ஆச்சார்யாவையும் தன் அவையில் சேர்த்துக்கொண்டு ஆதரித்து வந்தார்.
அந்த அரசவையில், வைணவப் பண்டிதர் தாதாச்சாரியார் பணியாற்றி வந்தார். அவர் சிவ நிந்தனையும், சிவபக்தி செய்பவர்களிடம் வெறுப்பும் கொண்டவர். எனவே, ஆரம்பம் முதலே அப்பய்யரிடம் வெறுப்பு. மேலும், அப்பய்யர், தம் திறமையால் அரசரை சிவபக்தராக்கிவிடுவாரோ என்ற அச்சம் வேறு. இதன்காரணமாக அப்பய்யருக்குப் பல தொல்லைகள் கொடுத்தார். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
அப்பய்யரின் புகழ் பெருகப்பெருக, தாதாச்சாரியாரால் பொறுக்க முடியாமல், அப்பய்யருக்கும், அதன்வழி அரசருக்கும் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார். ஆபிசாரக் கிரியைமூலம், மக்கள் அனைவருக்கும் விஷஜுரத்தை ஏற்படுத்தினார்.
அக்கால வழக்கப்படி மணி, மந்திரம், ஔஷதம் என்ற முறைகளில் சிகிச்சைகள் மேற்கொண்டும் பயனில்லை. அரசர் அப்பய்ய தீட்சிதரை நாடினார். அவர் வேத மந்திரத் தால் ஒரு ஹோமத்தைச் செய்து சிவனருளால் நோயைப் போக்க, அரசர் மனம் மகிழ்ந்து அப்பய்யரை வெகுவாகப் பாராட்டினார்.
அதேசமயம், தான் செய்த செயல் அப்பய்யர் மேலும் புகழ்பெறக் காரணமாக அமைந்துவிட்டதே என்று, தாதாச்சாரியார் கோபமடைந்தார். அடுத்த திட்டத்தைத் தீட்டினார். அதன்படி, துர்தேவதை உபாசகர்மூலம், அப்பய்யரின் வீட்டில் பூஜையறை அருகே இறைச்சி, ரத்தம் போன்ற பொருள்களைப் போட்டு அசுத்தம் செய்ய வைத்தார். இதைக்கண்ட அப்பய்யர் மிகவும் வருந்தி ருத்ரஜெபம் செய்ய, ஒரு சிவபூதம் தோன்றி அசுத்தங்களை அகற்றியது.
அசுத்தம் செய்தவனும் வியாதியால் பீடிக்கப்பட் டான். இதையடுத்து, தாதாச்சாரியாரின் கோபம் இன்னும் அதிகரித்தது.
அப்பய்யர் தீவிர சிவபக்தர் என்றாலும், மற்ற பிரிவினர்மீது துவேஷமில்லாதவர். அவர் அத்வைதம் மட்டுமின்றி, த்வைதம், விசிஷ்டாத்வைதம் தொடர்பான நூல்களையும் இயற்றியுள்ளார். அந் நூல்கள் அந்தந்த பிரிவைச் சார்ந்த அறிஞர்களால் பாராட்டப் பெற்றவையாகும். அப்பய்யர் சிவனையும் பூஜிப்பார்; விஷ்ணுவையும் பூஜிப்பார்.
ஒருமுறை அப்பய்யர் சிவதரிசனம் செய்து விட்டு, விஷ்ணுவையும் தரிசிக்க வந்தபோது, தாதாச் சாரியாரின் முன்னேற்பாட்டின்படி, விஷம் கலக்கப் பட்ட தீர்த்தப் பிரசாதத்தை அர்ச்சகர் கொடுத்தார். அவ்வாறு. கொடுக்கும்போது, அர்ச்சகரின் கை நடுங்கிற்று. இதை அப்பய்யர் கண்டார். எனினும் எவ்வித மறுப்புமின்றி, சிவபெருமானை தியானித்து தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டார். இம்முறையும் தாதாச்சாரியாருக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அவர், மற்றொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்.
ஒருமுறை தாதாச்சாரியார் அரசரிடம், ""சிவப் பிரசாதம் கொள்பவர்கள் அசுத்தர்கள்'' என்றார்.
அரசர் இதற்கான விளக்கத்தை அப்பய்யரிடம் கேட்டார். ""கங்கைநீர் உட்பட எல்லா ஔஷதிகளும் சிவ நிர்மால்யமே. சிவபக்தி செய்து, சிவ நிர்மால்யம் எடுத்துக்கொள்ளலாம்'' என்று அப்பய்யர் விளக்கமளிக்க, அரசர் ஆறுதல் பெற்றார். ஆக, இம் முறையும் தாதாச்சாரியாரின் வாதம் அரசரிடம் எடுபடவில்லை.
அடுத்து ஏதாவது செய்து, அப்பய்யருக்குக் களங்கம் கற்பிக்கச் சிந்தித்தார். அப்போது அவருக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அப்பய்யர் எப்போதும் இடக்கையால் ஆசிர்வதிப்பார். இதையே ஊதிப் பெரிதாக்க தாதாச்சாரியார் திட்ட மிட்டார். ""நாடாளும் அரசரை இடக்கையால் ஆசிர் வதிப்பது, அரசருக்கு அவமரியாதை செய்வது மட்டு மின்றி, அப்பய்யரின் ஆணவத்தையும் காட்டுகிறது'' என்று அரசரிடம் கூறினார். வழக்கம்போல அரசவையில் இதைப்பற்றி வினவ, அரசவையில் இருந்தவர்கள் இப் பிரச்சினை எப்படி முடியுமோவென்று யோசித்த வண்ணமிருந்தனர். ""உண்மையான பிராமணர்களின் வலக்கையில் அக்னி உள்ளது. ஆகவே, இடக்கையால் ஆசிர்வாதம் செய்கிறோம்'' என்றார் அப்பய்யர். மேலும் இதை நிரூபிக்க வேண்டி, அரசரின் படத்தைத் துணியில் வரைந்து எடுத்துவருமாறு கூற, அவ்வாறு வந்த படத்தை அப்பய்யர் தமது வலக்கையால் ஆசிர்வதிக்க, படம் எரிந்து சாம்பலாயிற்று.
அவையில் இருந்தோர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். அரசருக்கு அப்பய்யரிடம் பக்தி அதிகமாயிற்று. தாதாச்சாரியாரோ மிகவும் நொந்து போனார். அடுத்து என்ன செய்வ தென்று யோசிக்கலானார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva_49.jpg)
அதற்கேற்றவாறு அவருக்கு ஒரு தகவல் கிடைத்தது. முன்வினை காரணமாக, அப்பய்யர் சிறிதுகாலம் குன்மவலிலியால் அவதிப்பட வேண்டியிருந்தது. அரசுப்பணிகளைச் செய்யும்போதும், சீடர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கும்போதும், தியானம் செய்யும்போதும் தம்மிட முள்ள வலிலியை மந்திர உச்சாடணம் செய்து தர்ப்பைப்புல், துணி, மான் தோல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மாற்றிவிடுவார். பணிமுடிந்ததும் மீண்டும் மந்திர உச்சாடணம் செய்து, வலியை ஏற்றுக்கொண்டு அனுபவிக்கத் தயாராகிவிடுவார். இதில், முற்பகுதியை மட்டும் அறிந்துகொண்ட தாதாச்சாரியார் அரசரிடம் சென்று, ""கொடிய நோயுள்ளவர் கள் அரசரைப் பார்ப்பதோ, அரசுப் பணிகளில் ஈடுபடுவதோ கூடாது'' என்றார். இதன் உண்மையை அறியும்பொருட்டு அரசர், தாதாச்சாரியாரையும் அழைத்துக்கொண்டு, அப்பய்யர் இருப்பிடம் சென்றார்.
அப்போது அப்பய்யர் மான்தோலில் அமர்ந்து சீடர்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார்.
அரசரையும் தாதாச்சாரியாரையும் வரவேற்று கலந்துரையாடல் செய்தார்.
அப்பய்யர் அமர்ந்திருந்த மான் தோல் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அரசர், ""ஜடப் பொருளும் குதித்துக்கொண்டிருக்கி றதே'' என்றார். அரசர் வந்த நோக்கத்தை அப்பய்யர் உணர்ந்துகொண்டு, ""அரசே, என் முன்வினைப் பயனாக எனக்கு வந்துள்ள நோயை சிறிது காலத்திற்கு அனுபவிக்க வேண்டியுள்ளது. எனினும், முக்கியப் பணிகளில் ஈடுபடும்போது நோயை மான்தோலிலில் விட்டுவிடுவேன். பணிகள் முடிந்ததும் நோயை உடலுக்குள் மாற்றிக்கொண்டு அனுபவிப்பேன்'' என்றார். இதைக் கேட்டதும் அரசர் மிகவும் வருந்தி, ""நோய்க்கான மருத்துவம் செய்துகொள்ளுங்கள்'' என்றார்.
அப்பய்யரோ, ""அரசே, முன்வினைப் பயனை முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்க விரும்புகிறேன். சிறிது காலத்திற்குப்பிறகு எல்லாம் சரியாகிவிடும். எனவே மருத்துவம் தேவையில்லை'' என்றார். அரசருக்கு அப்பய்யரின்பால் கொண்ட அன்பு பெருகியது. தாதாச்சாரியாருக்கோ அடுத்து என்ன செய்வதென்ற சிந்தனை.
ஒருசமயம், சின்னபொம்ம அரசரிடம் தாதாச்சாரியார், ""உங்கள் நலம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு உங்களுடன் உள்ளேன். தாங்களோ தீட்சிதரிடம் கொண்டுள்ள பேரன்பு காரணமாக, உங்கள் பரம்பரை குருவையும் ஒழுக்க நன்நெறியை யும் விட்டுவிடுவீர்களோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. தீட்சிதருக்கு தாங்களும் மற்ற அரசர்களும் பொன்னும் பொருளும் கொடுத்து நல்ல நிலையில் இருக்கச் செய்தாலும், அவர் மிகவும் எளிமையான கோலத்திலேயே இருக்கக் காரணம் என்ன? வேஷம் போடுகிறார்'' என்றார். ஒரு கணம் யோசித்த அரசர் இதைப்பற்றி அப்பய்யரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாமென்று தீர்மானித்தார்.
அவ்வமயம், தஞ்சாவூர் அரசருடன் தீட்சிதர் காளஹாஸ்திக்கு வரவிருக்கிறார் என்ற தகவலறிந்து, உரிய நாளில் தாதாச்சாரிய ருடன் காளஹஸ்தி சென்றார் சின்னபொம்ம அரசர். அங்கு அப்பய்யரிடம். அரசர் தம் ஐயத்தைத் தெரிவித்தார். தீட்சிதர், "அரசர் கள் எமக்களித்த பொருள்கள் யாவற்றையும் உமக்கே அர்ப்பணித்துவிட்டேன் என்பதை சிவபெருமானே, நீரே எடுத்துக் கூறவேண்டும்' என மனமுருக வேண்டினார். அப்போது குண்டத்திலிருந்து அபிஷேக திரவியங்கள், அரசர்கள் அளித்த பட்டாடைகள், மணிகள், ரத்தினங்கள் போன்றவை ஒவ்வொன்றாக வெளிவர, அரசர்களும் மற்றவர்களும் பார்த்துப் பரவசமாகி ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். தீட்சதரின் தன்னலமற்ற செய்கையை அனைவரும் அறிந்தனர். தீட்சிதரின் பெருமை பன்மடங்காகியது.
தாதாச்சாரியார் கற்றுணர்ந்த பண்டிதர். எனினும் சிவ நிந்தனை, சிவனை ஆராதிப் பவர்கள்மீதான வெறுப்பு போன்றவற்றால் மனம் மாசடைந்து, வெறுப்பின் எல்லைக்கே சென்றுவிட்டார். ஆம்; தீட்சிதரைக் கொலை செய்யவும் தீர்மானித்து, அதற்கேற்ற வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார். முதலிலில் அரசு முத்திரையைத் திருடி போலியான ஆணையை உருவாக்கினார். குறிப்பிட்ட நாளில் அப்பய்யரை இரண்டாம் ஜாமத்தின்போது அரசரைப் பார்க்க அரண்மனைக்கு வரவழைத்து, அச்சமயத்தில் அவரைக் கொல்ல திட்டமிட்டார்.
அரசரைக் காணவருமாறு அப்பய்யருக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அவரும் தமக்கு வருவிருக்கும் ஆபத்தை அறியாது, "அரசர் இந்த வேளையில் வரச்செல்லியிருக்கிறாரே, அரசருக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது' என்று எண்ணிக்கொண்டே தம் குல தெய்வமான மார்க்கசகாயரை மனமுருக வேண்டிக்கொண்டு வரும் வழியில், அரண்மனை வீரர்கள் வாளை உருவிக் கொண்டு நிற்பதைப் பார்த்தும், எவ்வித ஐயமும் கொள்ளாமல் அரசரைச் சென்று பார்த்தார். அரசரிடம் பேசியபோது, அவர் தம்மை அழைக்கவில்லை என்பது தெரிந்தது. இது தாதாச்சாரியாரின் வேலைதான் என்றுணர்ந்து. வழக்கம்போல் அரசரை ஆசிர்வதித்து, ""நாளைக் காலையில் எல்லா விவரங்களும் தெரியவரும்'' என்று கூறிவிட்டு இல்லம் திரும்பினார்.
மறுநாள் காலை அரண்மனை வாயிலில், சேனாதிபதியும் வீரர்களும் கைகளில் வாட்களைப் பிடித்துக்கொண்டு சிலைகள்போல் அசைவற்று நிற்பதை அரசர் கண்டார். உடனே தீட்சிதர் இல்லத்திற்குச் சென்று செய்தியைக் கூறினார்.
அரசருடன் அரண்மனைக்கு வந்த தீட்சிதர் ஈசனை மனமுருக வேண்ட, சேனாதிபதி யும் வீரர்களும் உணர்வு பெற்றனர். அவர்கள் மன்னரிடம், ""தாதாச்சாரியார் கட்டளைப் படி தீட்சிதரைக் கொல்ல இரவு நேரத்தில் ஆயத்தமாக இருந்தோம். தீட்சிதருடன் வந்த மாவீரர்களைப் பார்த்து மிரண்டு போனோம். பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை அரசே'' என்றனர். தாதாச்சாரியார்மீது கடுங்கோபம் கொண்ட மன்னர் அவரைக் கடுமையாக தண்டிக்க எண்ணினார். ஆனால், தீட்சிதர் பெருந்தன்மையுடன் தடுத்து விட்டார்.
மற்றொரு சமயம், தீட்சிதர் தம் குல தெய்வமான மார்க்கசகாயர் கோவில் திருவிழாவினைக் கண்டுவிட்டு, பல்லக்கில் தம் இல்லம் திரும்பியபோது, தாதாச்சாரியார் ஏற்பாட்டின்படி ஆட்கள் பல்லக்கை நிறுத்தி, தீட்சிதரைத் துன்புறுத்தத் தொடங்கினர்.
இதைக்கண்டு தீட்சிதர் மனமுருக மார்க்கசகாயரை வேண்டி, "நிக்ரஹாஷ்டகம்' என்னும் எட்டு சுலோகங்களைச் சொல்ல ஆரம்பித்தார். எட்டாவது சுலோகத்தைச் சொல்லிலி முடித்தபோது, வானில் பேரொளி, பேரோசையுடன் இடி உண்டாகி கொலை யாளிகளை வீழ்த்தியது. அனைவரும் மூர்ச்சையாகினர். இதைக் கண்ணுற்றதும் தீட்சிதர் மனம் கலங்கி, அனைவரும் விழித்தெழ ஈசனை மீண்டும் வேண்டினார்.
அற்புதம் நிகழ்ந்தது. அனைவரும் உயிர் பெற்றெழுந்தனர்.
கொலையாளிகளின் நடுவிலிருந்த தாதாச்சாரியார் கைகூப்பியவாறு தீட்சிதரைப் பார்த்து, ""இதுவரை சிவநிந்தனை செய்து, சிவபக்தரான தங்களுக்குப் பல தொல்லைகள் தந்துவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள்'' என்று வேண்டினார்.
கருணையுள்ளம் கொண்ட தீட்சிதரும் அவரை மன்னித்து, நட்பு பாராட்டி, ஒன்றாக அரசவைக்குச் சென்றனர். இதைக் கண்ணுற்ற அரசர் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.
தாதாச்சாரியார் தீட்சிதரிடம் தாம் செய்த கொடுமைகளுக்குப் பிராயச்சித்தம் வேண்டி நின்றார். தீட்சிதரும் அவரை "பட்சி தீர்த்தம்' என்னும் திருக்கழுக்குன்றம் சென்று ஒரு மண்டல காலம் தங்கி சிவபூஜை செய்து வரப் பணித்தார். அவரும் அவ்வாறே செய்து, கோவிலைத் தம் சொந்த செலவில் புதுப் பித்தார். மேலும் தன் பெயரில் தாதாச்சாரி யார் கோபுரம் ஒன்றையும் நிறுவினார். தம்மைச் சார்ந்தவர்களை சிவபெருமானின் கைங்கர்யத்திற்கு நியமித்தார். இப்பணிக்கென நிலங்களையும் எழுதிவைத்தார். இவ்வாறாக தாதாச்சாரியாரும் புனிதரானார். தீட்சிதரின் பெருமை இத்தகையது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/siva_t.jpg)