தலைமுறை தலைமுறையாக இறைவனை அலங்காரம் செய்யும் சேவையில் தம்மை அர்ப்பணித்துவரும் பரம்பரை உண்டு. அந்த தலைமுறையில் வந்த சௌந்தர்ராஜன் என்பவரது மகன் கௌதம் தனது தலைமுறையின் சேவையில் தன்னை இணைத்துக்கொண்டார். இன்ஜினியரிங் பட்டதாரியான கௌதம் இறைவனுக்கு அலங்காரப் பணியாற்றி வருகிறார். இவர் இந்தியா மட்டுமின்றி உலகநாடுகளில் பலவற்றுக்கும் பயணம் செய்து, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறுவகையான இறையலங்காரம் செய்துள்ளார்.
அலங்காரம் செய்யப்பட்ட இறைவனைப் பிரார்த்தித்தால் அகங்காரம் ஒழிந்து மனதில் நிம்மதியும் சாந்தமும் தோன்றும். மனதை இறைசிந்தனையை நோக்கி அழைத்துச் செல்லும். மனதிலிருக்கும் இறைவனை விதவிதமாக அலங்கரித்துப் பார்ப்பதில் தனியாத தாகம் மனிதனுக்குண்டு. அதை முறைப் படுத்த- வழிநடத்த இந்த தொகுப்பு வாசகர்களுக்கு உதவும்.
கடவுள்தேடல் குறித்து நரேந்திரனுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அதற்காக ராமகிருஷ்ணர் தந்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை. மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்பினான்.
அதற்கு ராமகிருஷ்ணர், "கேள்வி மட்டும் போதாது; இறைவனை உணரவேண்டும். அதற்கு நீ காளியிடம் சென்று, முழு இறைநம்பிக்கையும் இறைவனை உணரும் ஆற்றலும் கிடைக்கவேண்டுமென்று மனதார வழிபடு'' என அனுப்பி வைத்தார்.
நரேந்திரன் குளித்து புத்தாடை அணிந்து காளியின்முன் சென்று நின்றான். காளியைப் பார்த்தான்- பார்த்தான்- நீண்டநேரம் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு பின் வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்ததும்தான் நரேந்திரனின் நினைவுக்கு வந்தது- 'நாம் காளியிடம் எதுவும் வேண்டவேயில்லையே' என்று! மறுநாளும் அதே நிலைதான். இப்படி யாக இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்தன.
காளியைப் பார்த்தானே தவிர வேண்டவில்லை.
ராமகிருஷ்ணர், "காளியிடம் வேண்டினாயா?'' என்று கேட்டார். அதற்கு நரேந்திரன், "நான் காளியின் முன்னால் சென்று நின்றேனே தவிர எதுவும் வேண்டவேயில்லை. காளியை வணங்கக்கூட இல்லை" என்றான்.
ராமகிருஷ்ணர் புன்னகைத்தார்.
நரேந்திரன் கேட்டான்: "ஏன்... என்னால் காளியை வழிபடமுடியாதா?''
அதற்கு ராமகிருஷ்ணர், "நீ காளியை வழிபாடுதான் செய்திருக்கிறாய். காளியிடம் சரணடைந்துவிட்டாய். அதனால்தான் உன்னால் காளியிடம் உனக்காக எதுவும் கேட்கக்கூட முடியவில்லை" என்றார்.
நரேந்திரன் மனதில் பதிந்தது காளியின் அழகு; தெய்வத்தன்மை!
அதற்குக் காரணம் காளியின் அலங் காரம். அந்த நரேந்திரன்தான் பிற்காலத் தில் சிகாகோவுக்குச் சென்று இந்து மதத்தின் பெருமைகளை உலகமே வியக்கும்வகையில் பேசிய சுவாமி விவேகானந்தர்.
விநாயகர் என்றால் மூஞ்சூறு.
சிவன் என்றால் லிங்கம்.
அம்பாள் என்றால் சூலம்.
பெருமாள் என்றால் திருநாமம், சங்கு, சக்கரம்.
முருகன் என்றால் வேல்.
ஸ்ரீரங்கம் என்றால் பெருமாளின் பள்ளிகொண்ட தோற்றம்.
இவ்வாறு ஒவ்வொரு இறைவனுக்கும் ஒரு பிம்பம் நம் மனதில் பதிந்துவிடுகிறது. அதற்குக் காரணம் அலங்காரம். மீனாட்சியைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால் அவள் அழகு நீண்டநேரம் மனதில் பதிந்து நிற்கிறது. அதனால்தான் நாம் கோவிலுக்குச் சென்றபின் வீட்டிற்கு வரவேண்டும்; வேறெங்கும் செல்லக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென் றால் இறைவனை வணங்கிவிட்டு வீட்டுக்கு வந்தபின்பும் அந்தச் சிந்தனை நம் மனதில் தொடரவேண்டும். "இன்றைக்கு அம்பாள் எவ்வளவு அழகாக இருந்தாள். பெருமாள் எவ்வளவு அழகாக இருந்தார்' என்ற நினைவுகள் நமது மனதைச் சுற்றிச்சுற்றி வர, இறைசிந்தனை எப்போதும் வீட்டில் நிறைந்தே இருக்கும். அதற்குக் காரணம் இறைவனுக்கு செய்யப்பட்டிருக்கும் அலங்காரம்.
அதேபோன்ற அலங் காரத்தை நமது வீட்டில் வைத்திருக் கும் விக்ரகங்களுக்கும் செய்து பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கிருஷ்ணஜெயந்தி போன்ற விசேஷ தினங்களில் மிகவும் எளிமையாக செய்து மகிழ, எனது ஐந்து தலைமுறை அனுபவங்களை இந்தத் தொகுப்பில் கொடுக்கவிருக்கிறேன். இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ள விளக்கங்கள் யாவும் நாங்கள் செய்துபார்த்தது; எங்கள் அனுபவம்.
இக்கலியுகத்தில் நாம் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று சிறப்புடன் வாழ்வதற்கு ஒரேவழி பகவானின் பாதக் கமலங்களைச் சரணாகதி அடைவதுதான். இந்த சரணாகதிக்கு பக்தி மட்டும் இருந்தால் போதாது; இறைவனிடம் பரிபூரண நம்பிக்கையும் வேண்டும்.
இத்தகைய உயர்ந்த சரணாகதிக்கு நம்மை பக்குவப்படுத்திக் கொள்வதற்கு உறுதுணையாக அமைவதுதான் அவனது திவ்யமான அலங்காரம்.
இந்த கட்டுரையில் சொல்லப்படும் ஆண்ட வனின் வடிவங்களையும், அமைப்பையும் படிக்கப்படிக்க நமது உள்ளத்தில் நல்ல பக்தியுணர்வு ஏற்படுவதோடு, நிலையான மன அமைதியும் கிடைக்குமென்பது உண்மை.
உயர்ந்தோரிடம் கொள்ளும் அன்பே பக்தி. அது மாத்ருபக்தி, பித்ருபக்தி, குருபக்தி என்பதாகப் பிரிக்கப்படுகிறது. ஆனால் வெறும் பக்தி என்ற சொல்லால் குறிக்கப்படுவதோ இறைவனிடம் கொண்டுள்ள அன்பேயாகும்.
பரம்பொருளின் பல்வேறு மூர்த்தங்களும், தன் மனம் விரும்பி ஈடுபடும் ஒன்றைத் தன் இஷ்ட மூர்த்தியாகக் கொண்டு பக்திசெய்வது; அவருக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்து பார்ப்பது என்று பல பக்த சிகாமணிகள் செய்திருக்கி றார்கள். அவர்கள் ரசித்து மகிழ்ந்த சில விஷயங்கள் மற்றும் சுவாமி அலங்காரத்தில் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்- உதாரணத்திற்கு பகவானின் அளவுகள், ஆயுதங்கள், ஹஸ்தங் கள் (முத்திரைகள்), வாகனங்கள் மற்றும் எந்த ஆயுதம், எத்தனை கைகள், எந்த வாகனத் தில் பகவான் எழுந்தருள வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களும் மற்றும் பலவித மான அலங்கார வகைகளின் விளக்கங்களும் இடம்பெறவுள்ளன. கோவில்,வீடுகள் போன்ற இடங்களில் எப்படி அலங்காரங் கள் செய்யவேண்டும் என்றும் மிக எளிமை யாக இந்த தொடரில் இடம் பெறும்.
(இந்தத் தொடர் கட்டுரை மூன்று வருடங்களாக கௌதம் ஆராய்ந்து தொகுத்தது. இதைப் படித்து இறைவனுக்கு அலங்காரம் செய்துபாருங்கள். உங்கள் வீடு, கோவில் இறைவனை அலங்காரம் செய்து மகிழுங்கள். சந்தேகம் இருப்பின் கௌதம் அவர்களை 73584 77073 என்னும் கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.)
(அலங்காரம் தொடரும்)
தொகுப்பு, படங்கள்: விஜயா கண்ணன்
(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள இறைத் திருமேனிகளின் அலங்காரங்களைச் செய்தவர் கௌதம்)