சோழ வளநாட்டின் சரித்திரத்தில், சமய நிலையினை விளக்கும் இறைவன்- இறைவி குடிகொண்டுள்ள எண்ணிலடங்கா திருத்தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் அனைவரது உள்ளத்திலும் இடம்பெற்றுள்ள திருக் கோவில்களில் திருக்கடையூர் எனும் திருக்கடவூர் அமிர்த கடேஸ்வரர்- அபிராமி அம்மை ஆலயமும் ஒன்றாகும்.
இறைவன் இங்கு தோன்றுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று- மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மதேவன் சிவபெருமானிடம் ஞானோபதேசம் பெறவிரும்பி இறைவனை வழிபட்டார். அப்போது இறைவன் தோன்றி ஒரு வில்வ விதையினை பிரம்மனிடம் கொடுத்து, "இது எந்த இடத்தில் விதைக்கும்போது ஒரு முகூர்த்த நேரத்தில் முளைவிடுகிறதோ, அங்கு தங்கி எம்மை வழிபடுக' என்று கட்டளையிட்டார். அந்த விதையை இந்த தலம் அமைந்துள்ள இடத்தில் விதைத்தார் பிரம்மன். அது குறித்த காலத்திற்குள் முளைத்தது. அதுகண்டு மகிழ்ச்சியுற்ற பிரம்மன் இறைவனைப் பூஜித்துவர, அவருக்குக் காட்சிகொடுத்த சிவபெருமான் பிரம்மனுக்கு ஞானோ பதேசம் அளித்தார். அதனால் இத்தல இறைவனுக்கு வில்வவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
தேவர்களும் அசுரர்களும் கூடி அமுதம்பெற திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது உண்டாகிய அமிர்தத்தை ஒரு கடத்தில் அடைத்து, அதை மறைத்து வைத்துவிட்டு அனைவரும் நீராடச் சென்றனர். திரும்பி வந்த தேவர்கள் அமிர்த கடத்தை எடுக்க முயன்றனர். ஆனால் அந்தக் கடம் பூமிமுதல் பாதாளம்வரை ஊடுருவி சுயம்புமூர்த்தியான சிவலிங்கமாக மாறி நின்றுவிட்டது. கடலில் கடைந்தெடுத்த அமுதமே சிவனாகி நின்றதால் இறைவனுக்கு அமிர்தலிங்கம் என்றும்; இவ்வூருக்கு கடவூர் என்றும் பெயர்கள் உருவாயின. பிறகு அது மருவி திருக்கடை யூர் என தற்போது அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில் அருள்பாலிக்கும் விநாயகருக்கு கள்ளவாரணப் பிள்ளை யார் என்ற பெயர் உண்டு. அமிர்தம் கடைந்தெடுத்த இந்திரன் முதலிய தேவர்களிடம் சிவபெருமான், "ஞானா மிர்தத்தை இங்குள்ள ஞானவாவியில் வைத்துள்ளோம். நீங்கள் அனைவரும் அங்கு சென்று அருந்தலாம்' என கூற, அவர்கள் அமிர்தத்தைப் பருக ஞானவாவியைத் தேடிச்சென்றனர். ஆனால் அமிர்தகலசம் அங்கே இல்லை. இதுகுறித்து தேவர்கள் பிரம்மனிடம் கேட்க, அவர், "முழுமுதற்கடவுளான கணபதியை வணங்குங்கள்' என்று கூறினார். அதன்படி தேவர்கள் அனைவரும் கணபதியை வணங்கினர். அப்போது விநாயகர் காட்சி தந்து, "எம்மை முதலில் நீங்கள் வழிபடாத காரணத்தால் அமிர்த கலசத்தை மறைத்து வைத்தோம். ஆண்டவன் அருளிய அமுதம் கிடைக்காதவர்கள் பயப்பட வேண்டாம். மீண்டும் அவ்விடத்தில் சென்று, அமிர்தகலசத்தில் இருக்கும் அமிர்தத்தை எடுத்து அருந்துங்கள்' என்று அனுமதியளித்தார். அதன் காரணமாகவே இங்குள்ள விநாயகருக்கு கள்ளவாரணப் பிள்ளையார் என பெயர் உருவானது.
இவ்வாலயத்தில் இறைவன் தோன்றுவதற்கு முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று. மிருகண்டு முனிவரும் அவரது மனைவியும் பிள்ளைவரம் வேண்டித் தவமிருந்தனர். "அறிவுள்ள புதல்வன் வேண்டும்' என்று மிருகண்டு முனிவர் இறைவனிடம் கேட்க, 16 வயது ஆயுளுள்ள அறிவுள்ள மகன் உனக் குப் பிறப்பான். பிறகு எமனுலகம் செல்வான்' என்று வரமளித்தார் சிவபெருமான். அதன்படி 16 வயது பூர்த்தியடைந்த மார்க்கண்டேயன், தமது ஆயுள் முடியப்போகிறது என்பதை தாய்- தந்தையர்மூலம் அறிந்து, இத்தலம் வந்தான். அவனது இறுதிநேரம் நெருங்கியது. எமன் மார்க்கண்டேயனைத் தேடிவந்து பாசக் கயிற்றை வீச, மார்க்கண்டேயன் தான் பூஜித்த சிவலிங்கத்தை இறுகப் பற்றிக்கொண்டான். எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து இறுக்கியது. இதைக்கண்டு கோபமுற்ற சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு எமனைக் காலால் உதைத்து, தனது பக்தனான மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று வரமளித்த தலம் இது!
இங்கு காலசம்ஹார மூர்த்தியாக கோவிலின் வடபகுதியில் இறைவன் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறார்.
இதற்கு சான்றாக மார்க்கண்டேயர் தன் தாய்- தந்தையோடு தங்கியிருந்த இடம், திருக்கடையூருக்குத் தென்மேற்கு திசையில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூர் மணல்மேடு என்று அழைக்கப்படுகிறது. மார்க்கண்டேயன் மடம் அமைந்திருந்த இடத்தில் இறைவனுக்கு ஒரு ஆலயம் உள்ளது. மார்க்கண்டேயன் சிலையும் உள்ளது. இங்குள்ள இறைவனின் மிருகண்டீஸ்வரர் எனவும், அம்பாள் மருத்துவதி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
மேலும் அறுபத்துமூன்று நாயன் மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனார் அவதரித்த ஊர் இது. இவர் இத்தலத்து எம்பெருமானுக்கு நாள்தோறும் குங்குலியப் புகைபோடும் பணியைச் செய்துவந்தார். இறைவன் திருவிளையாடலால் இவரது குடும்பம் நாளுக்கு நாள் வறுமையை சந்தித்தது. ஒருநாள் இவரது குடும்பத்தினர் வறுமையின் உச்சகட்டத்திற்கே சென்றனர். சாப்பாட்டுக்கே வழியின்றி வாடினர். நாயனா ரின் மனைவி தம்மிடம் எஞ்சியிருந்த தாலியை (மாங்கல்யம்) நாயனாரிடம் கொடுத்து, அதை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் அரிசி உட்பட மளிகைப் பொருட்களை வாங்கிவருமாறு கூறி அனுப்பினார்.
மனைவியின் தாலியோடு தெருவில் போய்க்கொண்டிருந்தார் நாயனார். எதிரில் வணிகன் ஒருவன் குங்கிலிய மூட்டையை சுமந்துகொண்டு வருவதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தார். குடும்ப வறுமை அவரது மனதிலிருந்து மறைந்துபோனது. குங்கிலிய வியாபாரியிடம் தமது மனைவி கொடுத்த தங்கத் தாலியைக் கொடுத்து, அதற்கு பதிலாக குங்குலிய மூட்டையை வாங்கிச் சுமந்துகொண்டு திருக்கோவிலுக்குச் சென்றார். இறைவனுக்கு குங்கிலியப் புகைபோட்டு நறுமணம் கமழச்செய்தார்.
இந்த நிலையில் குங்கிலியக்கலய நாயனாருடைய வீடு முழுவதும் நெல்லும் அரிசியும் பொன்னும் மணியும் ஆடைகளும் ஆபரணமும் நிறைவதாக கனவில்கண்ட நாயனாரின் மனைவி, கனவு கலைந்து எழுந்து பார்த்தபோது வீடு முழுக்க பொன்னும் பொருளும் அரிசியும் பருப்பும் என உண்மையாகவே நிறைந்து கிடந்தது. இது இறைவனின் திருவருளால் மட்டுமே சாத்தியம் என்றெண்ணி வியந்த அவர், கணவர், பிள்ளைகள் சாப்பிடுவதற்கு சமைக்கத் தொடங்கினார்.
அதேநேரத்தில் ஆலயத்தில் குங்கிலியப் புகைபோட்டு விசிறிமூலம் வீசிக் கொண்டிருந்த நாயனார்முன் இறைவன் தோன்றி, "அன்பனே, நீ வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுப் பசியாறு' என்று கூறி மறைந் தார். இறைவனின் கட்டளையைக் கண்டு ஒருவித கலக்கத்துடனும் தயக்கத்துடனும் வீட்டுக்குச்சென்ற குங்குலியக்கலய நாயனார்,
அங்கே கண்ட காட்சி அவரை வியப்பில் ஆழ்த்தியது. இறைவனின் திருவருளால் வீடுநிறைய ஆடை, ஆபரணங்களும் தானியங்களும் பொன்னும் பொருளும் நிறைந்து கிடப்பதைக்கண்டு, "என்னே இறைவனின் மகிமை!' என்று, கணவனும் மனைவியும் அவரது சுற்றத்தினர் உட்பட அனைவரும் வியந்து போற்றினார்கள்.
அப்படிப்பட்ட குங்கிலியக்கலய நாயனார் தோன்றிய ஊர் திருக்கடவூர்.
மேலும் அபிராமி அந்தாதி உருவாகக் காரணமாக அமைந்த தலமும் இதுவே. இறைவனின் அவதாரத் தலமான திருக்கடவூரில் அந்தணர் மரபில் பிறந்தவர் அபிராம பட்டர்.
ஒரு அமாவாசை தினத்தில் ஆலயத்துக்கு வந்த சரபோஜி மன்னர் பட்டரிடம் "இன்று என்ன திதி?' என்று கேட்க, அம்பாளின் முக எழிலில் திளைத்திருத்த பட்டர் "பௌர்ணமி' என்று கூறினார். கோபம்கொண்ட மன்னர் அதை நிரூபிக்குமாறு ஆணையிட்டார்.
அபிராமி அம்மனின் சந்நிதியின்முன் ஆழமான குழிவெட்டி, அதில் விறகை அடுக்கி நெருப்பு மூட்டினர். அதற்குமேல் நூறு கயிறுகளால் கட்டப்பட்ட ஒரு விட்டம் தயார் செய்து, அதில் அமரவைக்கப்பட்டார் பட்டர். "அம்பிகையின் அருளால் தான் கூறியபடி இன்று பௌர்ணமி நாளாக மாறவேண்டும். அப்படி அம்பாளின் அருள் கிடைக்காவிட்டால் கீழே எரியும் நெருப்பில் விழுந்து உயிர்துறப்பேன்' என சபதமிட்ட பட்டர், அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஊஞ்சலின் கயிற்றை ஒவ்வொன்றாக அறுத்துக்கொண்டே வந்தார். 79-ஆவது பாடலை-
"விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு..'
என பாட... அப்போது அம்பாள் வானவெளியில் தோன்றி, தனது காதிலிருந்த தாடங்கம் எனும் காதணியைக் கழற்றி வானில் வீச, அது பௌர்ணமி நிலவாகப் பிரகாசித்தது! தொடர்ந்து 100 பாடல்கள் பாடினார். அப்படி அபிராம பட்டர் பாடிய பாடல்கள்தான் "அபிராமி அந்தாதி' என பெயர் பெற்றது.
முதலாம் இராஜராஜன் முதல் மூன்றாம் ராஜராஜன் வரை சோழ மன்னர்கள் ஒன்பது பேரும், அடுத்து பாண்டிய மன்னர் களின் வாரிசுகளான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகியோரும், இவர்களையடுத்து விஜயநகர வேந்தரான கிருஷ்ணதேவராயரும் என பலரும் அவரவருக்குரிய ஆட்சிக்காலத்தில் இக்கோவிலைப் புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலய இறைவனையும் அபிராமி அம்மையையும் நாடி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி, கடல்கடந்த நாடுகளிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளனர்.
தருமபுரம் ஆதீனத்தின் கண்காணிப்பில் 27 திருக்கோவில்கள் உள்ளன. அதில் ஒன்றாக விளங்குகிறது அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான இவ்வாலயம்.
அறுபது வயதைக் கடக்கும் தம்பதிகள் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்வுகளைத் தங்கள் உற்றார்- உறவினர்கள் புடைசூழ வந்து இறைவன் சந்நிதியில் நடத்தி, இறைவன்- இறைவி தரிசனம் பெற்றுச் செல்கிறார் கள். இதன்மூலம் நீண்ட ஆயுளையும் வாழ்வில் வளத்தையும் பெறுகிறார்கள்.
இவ்வாலயத்தில் அறுபதாம் திருமணம் நடத்த வருகைதந்திருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்த அய்யப்பா- தைலம்மா தம்பதிகளிடம் இவ்வாலயத்தின் மகிமை குறித்துக் கேட்டோம். "கர்மப் பலன் என்பது நாம் செய்த தீவினை- நல்வினையைப் பொருத்தே அமையும். இவற்றுக்கு ஏற்றவாறு நமது செல்வம், உடல்நலம், சுற்றம், நட்பு, பிள்ளைகள், குடும்பம் அமையும். நமது வாழ்க்கையில் இன்பம்- துன்பம் என அனைத்தையும் சந்திக்கவைத்து, நமக்கு நல்ல அனுபவங்களை ஏற்படுத்துபவன் இறைவன். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் குறைகளைக் களைந்து நிறைவடையவேண்டும். அதற்கு இறையுணர்வு பெருகிட வேண்டும்.
அவரவர் தகுதிக்கேற்ப ஏழை எளியவர் களுக்கு நேரம் காலம் கருதாமல் உதவிகள் செய்திடவேண்டும். எண்ணங்கள் தூய்மைபெற வேண்டும். நோயின்றி நல்ல உடல்நலத்துடன் வாழ, நீண்ட ஆயுளைப் பெற நமது உடல், பொருள், ஆவியை இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்கினால் போதும். அவரது திருவருள் நம்மை என்றும் காப்பாற்றும். அந்த அடிப்படையில் எங்களது அறுபதாவது வயது திருமண நிகழ்வை இவ்வாலய இறைவனிடம் சமர்ப்பணம் செய்து நடத்தியுள்ளோம்'' என்றனர்.
தருமபுர ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறைவனின் திருவருள் பெற திருக்கடையூர் வருக.
குறிப்பு: ஆலயத் திருப்பணி செய்து குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்துவதற்காக தருமபுர ஆதீன நிர்வாகம் கடந்த 20-8-2020 அன்று பாலாலயம் நடத்தி, ஆலயப் திருபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமைவிடம்: சீர்காழி- நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ளது திருக்கடையூர் திருத்தலம்.