"கொரோனா' எனும் கொடிய வைரஸ் மனித இனத்தோடு இரண்டறக் கலந்து பத்து மாதங்கள் ஓடிவிட்டன. இரண்டு மாத காலமாக இயல்புநிலைக்குத் திரும்ப மனிதனின் ஆறாவது அறிவு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே "நிவர்' எனும் புயல் குறிப்பிட்ட சில பகுதிகளைப் பதம் பார்த்துவிட்டது. விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி, விளைப் பொருட்கள் சூறையாடப்பட்டன. புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உள்ள பிரச்சினைகளை, பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ளவர்கள், "இது யாருக்கோ நடந்தது; நமக்கானது அல்ல' என்று, தொலைக்காட்சிகளில் அதை ஒரு செய்தியாகப் பார்த்துவிட்டு, தங்களது அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
எந்தவொரு பிரச்சினையையும் பொதுவாகப் பார்க்கும் மனநிலையிலிருந்து விலகி, "இது யாருக்கோ நடந்தது; நாம் ஏன் கவலைப்பட வேண்டும்' என்னும் மனநிலையே பலரிடமும் உள்ளது. சுத்தத்தையும் சுற்றத்தையும் மறந்த மனித இனத்திற்கு, ஒரு கண்ணுக்குத் தெரியாத கிருமி பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.
ஒருவர் தன்வீட்டுக் குப்பையைக்கூட அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போடுவதில்லை. தொலைவில் இருந்தபடியே குப்பையுள்ள பையை குப்பைத்தொட்டியை நோக்கி வீசியெறிகிறார்.
அது குப்பைத் தொட்டியில் விழாமல் வெளியே விழுகிறது. குப்பைகள் சுற்றிலும் சிதறுகின்றன. அந்த மனிதர் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சென்று விடுகிறார். மற்றவருக்கு உதவி செய்யவில்லை என்றாலும், இடையூறு செய்யக்கூடாது என்னும் மனநிலை நமக்கு வரவேண்டும். நம்மைப்போன்ற சக மனிதர்தான் நாம் வீசியெறிந்த குப்பைக் கழிவுகளை சேகரித்து, அதை உரிய இடத்திற்குக் கொண்டு சேர்க்கிறார்.
இங்கே எனக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன். எனது இரு சக்கர வாகனத்தில் எப்போதும்போல சீரான வேகத்தில் சென்று கொண்டி ருந்தேன். ஒரு இடத்தில் திரும்ப வேண்டியிருந்தது. அப்போது தான் கவனித்தேன்- அந்த திருப்பத் திலுள்ள சாலையில் ஏதோ ஒரு எண்ணெய் கொட்டி சிதறிக் கிடந்தது. நான் சுதாரிப்பதற்குள் எனது வாகனம் எண்ணெய் மேலேறி வழுக்கி கீழே சாய்ந்தது. வண்டியோடு நானும் சேர்ந்து விழுந்தேன். சுதாரித்து எழுந்தேன். அப்போது எனக்குப் பின்புறம் ஒரு பலமான சிரிப்பு சத்தம் கேட்டது. நான் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சிரிப்பு வந்த திசையை நோக்கினேன். சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிரித்தபடி என்னருகில் வந்தார். ""என்னண்ணே, அடி பலமா பட்டுடுச்சா' என்று கேட்டுவிட்டு சிரிப்பை அடக்கமுடியாமல், ""இதோட இந்த இடத்தில ஏழுபேர் விழுந்துட்டாங்க. நீங்க எட்டாவது ஆளு'' என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார்.
இதுதான் நவீன இந்தியாவின் இன்றைய நிலை. எங்கோ ஒரு சாலையில்தானே பிரச்சினை- அது நமக்கல்ல என்ற எண்ணம்; எங்கோ ஒரு வயலில்தானே பிரச்சினை- அது நமக்கல்ல என்ற எண்ணம்; எங்கோ ஒருவரது வாழ்வாதாரத்தில்தானே பிரச்சினை- இதுவும் நமக்கானது அல்ல என்ற எண்ணம்... இது மிகக் கொடூரமான சுயநல எண்ணமாகும். மகாத்மா காந்தி சுயநலத்தோடு செயல் பட்டிருந்தால் (முரண்பாடுகளைத் தவிர்ப்போம்) இன்று நாம் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டி ருக்க முடியாது. சுயநலத்தோடு செயல்படும்போது, பொது நலத்தில் மிகப் பெரும் கருணையாளனான இறைவனின் அருட்பேராற்றலை அனுபவிக்கமுடியாது; பெறவும் முடியாது.
மகான்களும் சித்தர்களும் தியாகிகளும் வாழ்ந்த இந்த மண்ணிலா இத்தகைய நிகழ்வு கள் நடக்கின்றன? மக்களின் அறியாமையும், அதன்விளைவாக உண்டாகும் ஒழுக்கக்கேடும் வளமான, நலமான வாழ்க்கையை சிதைத்துவிடும். இங்கு முல்லாவின் கதை ஒன்றைப் பார்ப்போம்.
முல்லா மிகுந்த ஞானமுள்ள அறிஞர். அவர் வசித்த ஊரில் ஊருக்கு வரக்கூடிய ஒற்றையடிப்பாதை ஒன்று இருந்தது. ஒருசமயம் அவர் ஒரு முள்செடியை வெட்டி அந்த பாதையின் குறுக்கே போட்டார். பின்னர் அருகிலிருந்த ஒரு பாறையின்மீது அமர்ந்துகொண்டு அவ்வழியே நடந்து செல்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். முல்லா அங்கு தனியாக அமர்ந் திருப்பது கண்டு அவ்வழியே செல்வோர் ஆச்சரியப்பட்டனர். சிலர் அவரைப் பார்த்து, ""முல்லா அவர்களே, யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?"" என்று கேட்டார்கள். அதற்கு முல்லா, ""நான் ஒரு மனிதரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் இங்கே அமர்ந்திருக்கிறேன்'' என்று சொன்னார். வழிப் போக்கர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நேரம் மாலை யாகிவிட்டது. யாராவது, ""ஏன் தனியாக அமர்ந்திருக் கிறீர்கள்"" என்று கேட்டால், ""நான் ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் இன்னும் கண்களுக்குத் தென்பட வில்லை. அவ்வாறு ஒருவரைப் பார்க்கும்வரை நான் இங்கேயே இருக்கப் போகிறேன்'' என்று சொன்னார்.
இதைக் கேள்விப்பட்ட ஊர்மக்கள் கூட்டம் கூட்டமாக முல்லாவை வந்து பார்த்தவண்ணம் இருந்தனர். அவர்களுள் ஒருவன் முல்லாவைப் பார்த்து, ""குறிப்பாக எந்த மனிதரை நீங்கள் தேடுகிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?'' என்று கேட்டான். அதற்கு முல்லா, ""குறிப்பாக எந்த மனிதரையும் தேடவில்லை. மனிதர் என்று பொதுவாக சொல்லக்கூடிய ஒருவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்'' என்றார். ""நூற்றுக்கணக்கானோர் இவ் வழியே சென்றுவருகின்றனர். அவர்களுள் ஒருவர்கூட மனிதராக உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?'' என்று இன்னொருவர் கேட்டார்.
அதற்கு முல்லா, ""நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் மனிதன் என்னும் தகுதிபடைத்த ஒருவரையும் இன்னும் நான் பார்க்கவில்லை. யாராவது ஒருவர்கூடவா தென்படமாட்டார்? பார்க்கலாம்'' என்று கூறியபடி அங்கேயே அமர்ந்திருந்தார்.
முல்லா எனும் ஞானி மனிதனைத் தேடிக்கொண்டிருக்கும் செய்தி பாதுஷாவுக்கு எட்டியது. அவரும் அந்த அதிசயத்தைப் பார்க்க எண்ணி அரண்மனையிலிருந்து புறப் பட்டு முல்லா அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்.
முல்லாவைச் சுற்றி மக்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர். பாதுஷா வந்ததைக் கண்டு அனைவரும் எழுந்து வணக்கம் தெரிவித்தனர். முல்லாவும் எழுந்துநின்று பாதுஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். பாதுஷாவும் முல்லாவுக்கு வணக்கம் கூறி, ""என்ன முல்லா அவர்களே, நீங்கள் ஏதோ ஒரு மனிதரைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். இன்னுமா அவர் கிடைக்கவில்லை?'' என்று கேட்டார். ""ஆம் பாதுஷா அவர்களே. இந்த நிமிடம் வரை என்னால் ஒரு மனிதரையும் பார்க்க முடியவில்லை'' என்று முல்லா கூறினார்.
பாதுஷா மிகவும் ஆச்சரியத்துடன், ""இந்த ஒற்றையடிப் பாதையின் வழியாக பலரும் போவதும் வருவதுமாக இருக் கின்றனர். இவர்களில் ஒருவர்கூட உமது கண்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் மனித னாகத் தெரியவில்லையா?'' என கேட்டார். முல்லாவும், ""ஆம்'' என்றார். ""அப்படியென் றால் நீங்கள் யாரைத்தான் மனிதராக மதிப்பீர்கள்?'' என்று கேட்ட பாதுஷா, ""என்னைக்கூட உங்களால் மனிதனாகப் பார்க்கமுடியவில்லையா?'' என்றார்.
அதற்கு முல்லா, ""பாதுஷா அவர்களே, அதை நான் இப்போது சொல்லமுடியாது. நீங்கள் வேண்டுமானால் இந்த ஒற்றையடிப் பாதையில் சிறிதுதூரம் நடந்துசென்று திரும்பிவாருங்கள். அதன்பிறகுதான் நான் ஒரு முடிவுக்கு வரமுடியும்'' என்றார்.
சரி என்று ஒப்புக்கொண்ட பாதுஷா, அந்த ஒற்றையடிப் பாதையின் வழியே நடந்தார். வழியில் முல்லா வெட்டிப்போட்டி ருந்த முள்செடி அவர் பார்வையில் பட்டது. அந்த செடியைத் தூக்கி ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு நடக்கத் தொடங்கினார். இதை கவனித்த முல்லா மகிழ்ச்சியோடு கைதட்டி, ""நான் மிகச்சிறந்த ஒரு மனிதரைப் பார்த்துவிட்டேன்'' என்று ஆனந்தத்தில் துள்ளி குதித்தார்.
இதை கவனித்த பாதுஷா முல்லாவிடம் வந்து, ""என்னைதான் மனிதர் என்கிறீர்களா? மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு அப்படி யென்ன என்னிடம் உள்ளது? நான் பாதுஷா வாக இருப்பதால் என்னைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக என்னைப் பொய்யாகப் பாராட்டுகிறீர்களா?'' என்று கேட்டார்.
அப்போது முல்லா பாதுஷாவை வணங்கி, ""நான் முகஸ்துதி செய்பவனல்ல என்பதை தாங்கள் அறிவீர்கள். நான் தங்களைப் பாராட்ட நியாயமான காரண முண்டு. இந்த ஒற்றையடிப் பாதையின் குறுக்கே நான்தான் ஒரு முள்செடியைப் போட்டுவைத்தேன். இவ்வழியாக வந்த ஒருவர்கூட, வழியில் இடையூறாகக் கிடக்கும் முள்செடியை அகற்றவேண்டுமென்ற எண்ணம் கொஞ்சமுமின்றி அதைக் கடந்துசென்றார்கள். தாங்கள் ஒருவர்தான் பாதையின் குறுக்கே நடப்பதற்கு இடையூறாக இருந்த முள்செடியை அகற்றிவிட்டு நடந்துசென்றீர்கள். இதனால்தான் என் மனதில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.
நாம் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் போது ஏதோ ஒரு இடையூறு இருப்பின், அது யாரையும் பாதிக்கக்கூடாது என்று நினைத்து, அந்த இடையூறைக் களைந்து சரிசெய்ய முயல்பவரே சுயநலமற்றவராக இருக்கமுடியும். பொதுநலன்மீது அக்கறைகொண்ட நீங்களே என் கண்களுக்கு சிறந்த மனிதராகத் தெரிகிறீர்கள்'' என்று முல்லா கூறியதைக் கேட்ட பாதுஷா முல்லாவைக் கட்டியணைத்துப் பாராட்டினார்.
இது ஒரு கதையாக இருக்கலாம். ஆனால் இதிலுள்ள பொருள் எதை உணர்த்துகிறது என்பதே முக்கியம். ஒவ்வொருவரும் தர்மநெறி தவறாமல், எந்தச் செயலாலும் யாருக்கும் எவ்விதத் தீங்கும் நேராமல் நடக்கவேண்டுமென்பதே இறை விருப்பமாகும். மனித இனத்தின் குணநலன் எவ்வாறிருக்க வேண்டுமென்பதைத் திருமூலர் கூற்றுமூலம் அறியலாம்.
"தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமும்செய்யும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதவ் வேந்தன் கடனே.'
அவரவர் சமயத் தகுதிகளுக்கும் (மெய்ப்பொருள் சிந்தனை) கோட்பாடு, குறிக்கோள்களுக்குமேற்ப, அவற்றை மேற்கொண்டு அதன்படி நடக்காதவர்களை சிவப்பரம்பொருள் எத்தகைய தண்டனை வேண்டுமானாலும் தந்து அதன் பயனான துன்பத்தை அடையச்செய்வான். இது அடுத்துவரும் பிறவியில் நடக்கப்போவது. எனவே, இந்தப் பிறவியில் சமயநெறிப்படி நின்றொழுகா நீசர்களுக்கு உடல் வருந்தச் செய்யும் தண்டனையைத் தருவது அரசனுடைய கடமையாகும்.
மெய்ப்பொருள் சிந்தனையுடன், குறிக்கோளுடன் பகுத்தறிவுள்ள ஒவ்வொரு வரும் நடக்கவேண்டும். "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு' எனும் வரிகள் எத்தகைய உண்மையுடையன என்பதை சிந்திக்கவேண்டும். ஒரு துன்பத்தை அல்லது ஏதேனும் ஒரு இடையூறை, இது நமக்கல்ல என நினைப்பது தீங்காக முடியும். சுய ஒழுக்கத்துடன், ஆன்மிக அறத்துடன் நடக்கும்போது நிச்சயம் நமக்கு நன்மையே நடக்கும். இங்கு தர்மசிந்தனை மேலோங்க வேண்டும்.
ஒவ்வொருவரும் மனிதனுக்கான சுயத்தை இழக்கக்கூடாது. சுயமே சிவம். சிவம் என்பது மிகப்பெரும் கருணையாகும். சிவத்தில் திளைக்கும்போது அறத்தில் வெல்லும் நிலை உண்டாகும். மனம் அழுக்கில்லாமல் இருந்தால் வினையானது எதுவும் செய்யாது. அறத்தையும் தர்மத்தையும் செய்ய நேரம் காலம் கிடையாது.
"அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
இழிக்கன்று என்செய்வீர் ஏழை நெஞ்சீரே'
என்கிறார் திருமூலர். ஆணவமாகிய மன அழுக்கைப் போக்கும் அறிவால் உங்கள் மனதை நிறைத்துக்கொள்ளாமல் இருக்கின்றீர்களே! புகழ், செல்வம், இளமை, வசதி இவையெல்லாம் நிறைந்திருக்க, வளம் உங்களைத் தழுவிநின்ற அந்தநாளில் தர்மங்களைச் செய்யத் தவறிவிட்டீர்களே! நோய்நொடிகளால் மனிதவாழ்வு குறைவதை, மறைவதைக் கண்ணைத் திறந்து பார்க்கத்தான் செய்கிறீர்கள். அப்படியொரு நிலை உங்களுக்கு வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? ஒருநாள் நோய்க்கொடுமை அல்லது வினைக்கொடுமை மிகுந்து உங்களைக் கீழே தள்ளுமே. அன்று உங்களால் என்ன செய்யமுடியும்? பாவம் மனமே, எண்ணிப்பார்! இப்போதே நல்லதைச் செய்ய நாட்டம் கொள்.
ஒழுக்கத்தில் உயர்வோம். அறத்தை சிந்திப் போம். அரனைத் துதிப்போம். பொதுநலமே ஒவ்வொருவரின் சுயநலமாக இருக்க வேண்டும். பரம்பொருளின் பாதங்களைப் பற்றிக்கொண்டு நல்லதையே நினைப்போம். நல்லதே செய்வோம். நன்மையே நடக்கும்.