யல், இசை, நாடகம், கல்வி, கலை, நாவண்மை ஆகியவற்றில் பல்வேறு மனிதர்கள் சிறந்து விளங்கக் காரணமானவள் அன்னை சரஸ்வதிதேவி. இவளுக்கு கலைவாணி, கலைமகள், நாமகள், இசைவாணி, சாரதா, காயத்ரி என பல்வேறு பெயர்கள் உள்ளன. தமிழகத்தில் பூந்தோட்டம் அருகேயுள்ள கூத்தனூரில், கலைமகளான

அன்னை சரஸ்வதிதேவி தனிக்கோவில்கொண்டு அருளாட்சி செய்துவருகிறாள். கலைமகளுக்கு இங்கு எப்படி தனி ஆலயம் உருவானது- அவளது கீர்த்தி என்ன என்பதை ஆன்மிக அன்பர்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும். பூவுலகத்தில் சிறந்த பூமி நமது பாரத பூமி. இங்கு ஞானமும் ஆன்மிகமும் சிறந்து விளங்குவதால் உலகத்தாரால் போற்றப்படுகிறோம்.

சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, குலதெய்வ வழிபாடு என பலவித வழிபாடுகள் உள்ளன. அதில் சக்தி வழிபாடென்பது இன்றியமையாதது. சக்தி வடிவில் அன்னை அருள்புரியும் வடிவங்கள் பலப்பல. அப்படிப்பட்ட சக்தியின் அம்சங்களில் ஒன்றாக விளங்குபவள் அன்னை சரஸ்வதி. ஒவ்வொரு உயிரும் பிறப்பதற்குக் காரணமாக இருப்பவள் தாய். அந்தத் தாய் தன் இன்பங்களை தான் பெற்றெடுத்த குழந்தைகளுக்காகத் தியாகம்செய்து, குழந்தைகளை வளர்த்து சிறப்படையச் செய்கிறார். அப்படித்தான் படைப்புக் கடவுளாகிய பிரம்மாவின் துணைவியாகிய அன்னை சரஸ்வதி நம்மைப் பல்வேறு கலைகளிலும் சிறந்துவிளங்கச் செய்துவருகிறாள்.

ஒருமுறை சரஸ்வதிதேவி சிவனை நினைத்து தவம்செய்தாள். அதற்கு அவள் தேர்ந்தெடுத்த இடம் கூத்தனூர் பகுதி. சரஸ்வதிதேவி தவம்புரிந்த இடமென்பதால் இந்த ஊருக்கு அம்பாள்புரி என்ற பெயரும் உண்டு. கலைவாணி கோவில்கொண்டுள்ள இந்த ஊருக்கு கூத்தனூர் என்ற பெயர் வர காரணமென்ன?

Advertisment

ஒட்டக்கூத்தர் கவிபாடும் திறன்வேண்டி சரஸ்வதியை பூஜைசெய்ய எண்ணினார். அதற்காக அவர் இப்பகுதியில் ஓடும் அரசலாற்றங்கரையில் குடில் ஒன்றை அமைத்து, அரசலாற்றிலிருந்து தண்ணீர் எடுத்து தினசரி சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்துவந்தார். அவர் உருவாக்கிய பூந்தோட்டத்தில் பூக்கும் பூக்களைக்கொண்டு பூஜைகளைச் செய்துவந்தார். ஒட்டக்கூத்தரின் பூஜையில் மகிழ்ந்த அன்னை சரஸ்வதி தனது வாயில் மென்ற தாம்பூலத்தை எடுத்து ஒட்டக் கூத்தருக்குக் கொடுத்தாள். அதை சாப்பிட்ட ஒட்டக்கூத்தர் பெரும் புலவராக உருவானார் என்பது கோவில் தல வரலாறு. தனக்கு கவிபாட அருள்புரிந்த சரஸ்வதியை ஒட்டக்கூத்தர் "ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய' என்று போற்றிப் பாடியுள்ளார்.

ஒட்டக்கூத்தரின் கவித்திறமை எங்கும் பரவியது. அப்போது தஞ்சை வளநாட்டை ஆட்சிசெய்த இரண்டாம் குலோத்துங்க சோழன் ஒட்டக்கூத்தரை அழைத்து அரசவையில் கவிபாடச் சொன்னார். அவரது கவித் திறமையைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மன்னர் இந்த ஊரையும் இதைச் சார்ந்த மேலும் சில கிராமங்களையும் கூத்தருக்கு தானமாக அளித்தார். அதன்காரணமாக இந்த ஊருக்கு கூத்தனூர் என்று பெயர் உருவானது.

ஒட்டக்கூத்தர் தமிழ்நாட்டில் திருச்சி பகுதியில், தற்போது திருவெறும்பூர் என்றழைக்கப்படும் பகுதியில் பிறந்தவர் என்றும், செங்குந்த கைக்கோளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவர் கவித் திறமையால் புலம்பெயர்ந்து பூந்தோட்டம்- கூத்தனூர் பகுதியில் அன்னை சரஸ்வதிதேவிக்கு ஆலயம் அமைத்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டக்கூத்தர் சரஸ்வதிதேவியின் பூரண அருளைப் பெற்றவர் என்பதற்கு பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.

Advertisment

இவர் பிறந்த சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஒட்டக்கூத்தரை சந்தித்தனர். அவர்கள் தாங்கள் பிறந்த சமுதாயத்தை உயர்த்திப் பாட வேண்டுமென்று ஒட்டக்கூத்தரிடம் விரும்பிக் கேட்டனர்.

"அன்னை சரஸ்வதியைப் பாடும் வாயால் மற்றவர்களைப் பாடமாட்டேன்' என்று மறுத்துவிட்டார். அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். அப்போது கூத்தர், "ஒவ்வொரு பாட்டு அடிகளுக்கும் ஒரு பிள்ளையின் தலையை வழங்க வேண்டும்' என்று நிபந்தனை விதித்தார் அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

அதன்படி ஒட்டக்கூத்தர் பாடப்பாட, ஒவ்வொரு குழந்தையின் தலையாக ஆயிரம் தலைகளை காணிக்கையாக செலுத்தினர். இதையடுத்து அன்னை சரஸ்வதிதேவியை வேண்டி, தலை வேறு- உடல் வேறாகக் கிடக்கும் பிள்ளைகளை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு மனமுருகிப் பாடினார். அதிசயம் நிகழ்ந்தது. அனைத்துத் தலைகளும் அதன் உடல்களோடு ஒட்டிக் கொண்டன. அதன்காரணமாக புலவருக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் உருவானதாகக் கூறுகின்றனர்.

குலோத்துங்க சோழன் உட்பட மூன்று சோழ அரசர்களிடம் அவைப் புலவராக ஒட்டக்கூத்தர் இருந்துள்ளார். ஒட்டக்கூத்தரின் கவிதையில் அரசர்கள் மதிமயங்கிப் போவார்களாம். ஒருமுறை குலோத்துங்க சோழனின் மனைவி அரசரின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தாள். புலவரின் கவியில் மயங்கிய அரசன் அந்தப்புரம் செல்லவேண்டும் என்பதை மறந்து போனான். இரவு நெடுநேரமானது. தன்னைக்கூட மறந்து அரசர் புலவரின் கவியில் மயங்கியிருந்ததைக் கண்டு கோபமுற்றாள் அரசி. எப்போதும் அந்தப்புர கதவிற்கு இரவில் ஒரு தாழ்ப்பாள் மட்டும் போடும் அரசி, அன்று இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டாள். இதன் அடிப்படையில்தான் "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற பழமொழியே உருவாகி', இன்றுவரை அது மக்கள் பேச்சு வழக்கத்தில் உள்ளது.

அப்படிப்பட்ட புலவர் ஒட்டக்கூத்தரால் இவ்வாலயம் முதன்முதலில் உருவானதாகக் கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவருக்கு ஒட்டக்கூத்தர், அம்பலக்கூத்தர், ஆனந்தக்கூத்தர், கவிச்சக்கரவர்த்தி, கவிராச்சகன், காளக்கவி, கௌடப் புலவர், சர்வஞ்சனக்கவி என பல பட்டப்பெயர்கள் உண்டு. விக்ரம சோழனின் மகன் இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சிக்காலமான 1120-1163 வரை அரசவையில் தலைமை அவைப் புலவராக இருந்துள்ளார்.

திருவெறும்பூரில் பிறந்த கூத்தர், சோழ அரசவையில் புலவராக இருந்து, பிறகு கூத்தனூரில் சரஸ்வதிதேவியை வழிபட்டு வாழ்ந்து, பிறகு சீர்காழியில் இறுதிக் காலத்தைக் கழித்துள்ளார். இதற்கு சான்றாக சரஸ்வதிதேவியின் கோவில் முகப்பில் ஒட்டக்கூத்தரின் சிலை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டக்கூத்தர், காங்கேயன் நான்காயிரம் கோவை, மூவர் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், ஈட்டி எழுபது, அரும்பை தொள்ளாயிரம், தக்கயாகப் பரணி, எழுபது எழுபது, நான்காயிரம் கோவை, இராமாயண உத்தரகாண்டப் பகுதி, கலிங்கப்பரணி, எதிர்நூல் என பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார்.

சரஸ்வதிதேவி இங்கே கோவில்கொண்டதற்கு வேறொரு காரணமும் கூறப்படுகிறது பிரம்மதேவரும் மனைவி சரஸ்வதி தேவியும் சத்தியலோகத்தில் இருந்தபடி படைப்புத் தொழிலை செய்துவந்தனர். அப்போது சரஸ்வதி, "அனைவருக்கும் கல்வியும் ஞானமும் வழங்கும் நானே உயர்ந்தவள்' என்றாள். பிரம்ம தேவர் "நான் படைத்தபிறகுதான் நீ அவர்களுக்குக் கல்வி ஞானத்தை வழங்குகிறாய். அதனால் நான்தான் உயர்ந்தவன்' என்று கூறினார். இருவருக்கும் யார் பெரியவர் என்று விவாதம் ஏற்பட்டது. இருவரும் கோபமடைந்து ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர். அதன்காரணமாக அவர்கள் இருவரும் சோழநாட்டில் வாழ்ந்துவந்த புண்ணியகீர்த்தி- சோபனை என்ற தம்பதிகளுக்கு குழந்தைகளாகப் பிறந்தனர்.

ஆண் குழந்தைக்கு பசுகாந்தன் என்றும், பெண் குழந்தைக்கு சிரத்தை என்றும் பெயரிட்டு வளர்த்துவந்தனர். இருவரும் திருமண வயதை அடைந்தனர். பெற்றோர் இவர்களுக்கேற்ற துணையைத் தேடினார்கள். அப்போதுதான் அவர்கள் இருவரும் தாங்கள் யார் என்பதை உணர்ந்தனர். தாங்கள் இருவரும் கணவன்- மனைவியாக இருந்தும், பூவுலகில் ஒரு தாயின் குழந்தைகளாகப் பிறந்து சகோதரமுறையில் வளர்ந்தோம். மேலும் வேறொருவரைத் திருமணம் செய்துகொள்வதும் முறையற்ற செயல். ஆலோசனை செய்த இருவரும் சிவபெருமானை வேண்டித் தவம்செய்தனர்.

அவர்களுக்கு காட்சிகொடுத்த சிவபெருமானிடம் தங்களின் தர்மசங்கடமான நிலைமையைக் கூறினர். அப்போது சிவபெருமான், "நீங்கள் திருமணம் செய்துகொள்வது முறையல்ல. எனவே சரஸ்வதி மட்டும் இங்கே தனியாக, மக்கள் வழிபடும் தெய்வமாக இருந்து மக்களுக்கு 64 கலைச் செல்வங்களையும் வழங்கட்டும்'' என்று வரமளித்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் சரஸ்வதிக்கான தனிக்கோவில் இங்கு உருவானது.

ss

இவ்வாலயத்தில் சரஸ்வதிதேவி வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்துள் ளாள். வலது மேல்கரத்தில் அட்சரமாலை, வலது கீழ்க்கரத்தில் சின்முத்திரை, இடது மேல்கரத்தில் அமிர்த கலசம், இடது கீழ்க்கரத்தில் புத்தகமும் கொண்டு எழில்மிகுந்த கோலத்தில் காட்சிதருகிறாள்.

கும்பகோணத்தைச் சேர்ந்த சாரங்கபாணி தீட்சிதரின் மகன் புருஷோத்தமன். இவர் பிறவி ஊமை. இதனால் செய்வதறியாது வருந்திய அவரது தந்தை கவலையில் இருந்தார். சிலர் புருஷோத்தமன் கூத்தனூரிலுள்ள சரஸ்வதி கோவிலுக்குச் சென்று வேண்டி வணங்கினால் பேசும் சக்தி கிடைக்கு மென்று கூறினர். அதன்படி கூத்தனூருக்கு புருஷோத்த மனை அழைத்துவந்தனர் அவனது பெற்றோர்கள். ஞான சரஸ்வதியின் திருவடிகளை வணங்கிய புருஷோத்தமன், அங்கேயே தங்கியிருந்து தேவிக்குப் பூஜை செய்துவந்தான். அவனது பூஜையில் மகிழ்ந்த அன்னை சரஸ்வதிதேவி, தன் வாயில் மென்ற தாம்பூலத்தை புருஷோத்தமனுக்குக் கொடுத்து பேசும் சக்தியை அளித்தாள். அதன்பிறகு புருஷோத்தமன் பேச மட்டுமல்ல; கவி பாடவும்செய்து பெரும் புலவரானார்.

இவருக்கு புருஷோத்தம பாரதி என்ற பெயரும் உருவானது. புருஷோத்தம பாரதி தன்னுடைய காணிக்கையாக கலைவாணியின் கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துள்ளார் என்று கல்வெட்டு ஆய்வுகள் கூறுன்றன.

வாய் பேசாதவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள் இங்கு வந்து தேவியை பூஜைசெய்து பலனடைந்து வருகிறார்கள். மேலும் மாணவர்கள் தேர்வுக்குச் செல்வதற்குமுன்பு இவ்வாலயம் வந்து பேனா, நோட்டு போன்ற கல்வி உபகரணங்களை அன்னையின் மடியில் வைத்து அர்ச்சனை செய்து வாங்கிச்சென்று தேர்வெழுதி வெற்றிபெறுகிறார்கள்.

சிறந்த உபன்யாச வித்தகர் என்று பெயர்பெற்ற சிருங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகள் இந்த ஊரில் பிறந்தவர். கர்நாடக இசையில் பேரும் புகழும் பெற்று விளங்கிய திருமதி எம்.எல். வசந்தகுமாரியின் பூர்வீகமும் இந்த கூத்தனூர்தான். இப்படி ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் பக்தர்களுக்கு வழங்கி வரும் அன்னை சரஸ்வதிதேவி கல்விக்கு அதிபதி. மகாவிஷ்ணுவின் அம்சமான ஹயக்ரீவரே சரஸ்வதிதேவிக்கு ஞானபோதனை அளித்து, கலைகளின் தலைமகளாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்குமாறு தேவிக்கு வரமளித்தார் என்பது புராணச் செய்தி விஜயதசமியன்று புருஷோத்தமனுக்கு பேசும் சக்தியை அளித்ததால், ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் தேவியின் பாதங்களில் தாங்களே மலர்களைத் தூவிப் பூஜிக்கிறார்கள். விஜயதசமி யன்று தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்துவந்து நெல்லைப் பரப்பி அதில் எழுதக் கற்றுக்கொடுக் கிறார்கள். அதன்பிறகு தேவியை வழிபட்டு, கல்விகற்க பிள்ளைகளைக் கொண்டுசென்று சேர்க்கிறார்கள்.

ஆலயத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 12 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, பூ அலங்காரம் என பல்வேறு அலங்காரங்களில் தேவி தினசரி பக்தர்களுக்குக் காட்சிதருகிறாள்.

இவ்வாலய சரஸ்வதிதேவியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல; பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தங்கள் குழந்தைகளோடு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள மேல நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் தனது தங்கை செல்வராணி, அவரது மகள் செந்தமிழ் யாஸ்வின் ஆகியோருடன் வந்து சரஸ்வதிதேவியை வழிபட்டார். அவரிடம் கேட்டபோது, "எனது தங்கை மகள் நீட் தேர்வில் வெற்றிபெறவேண்டும் என்று சரஸ்வதிதேவியிடம் வேண்டிக்கொண்டோம். கலைவாணியின் அருளால் அவர் வெற்றிபெற்று, அரசு ஒதுக்கீட்டில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்துள்ளது.

அவரை கல்லூரியில் சேர்ப்பதற்காகச் செல்கிறோம். கல்விக் கடவுளான சரஸ்வதியை வணங்கிச் செல்ல வந்துள்ளோம்'' என்றார்.

"கூத்தனூர் சரஸ்வதிதேவியை வணங்குவோர்க்கு கைமேல் பலன் கிட்டும். இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி சிறக்க வேண்டுதல் செய்து அர்ச்சனை செய்கிறார்கள். மேலும் பரதநாட்டியம் கற்றவர்கள், இங்குவந்து அரங்கேற்றம் நடத்துகிறார்கள். இயல், இசை போன்ற கலைத்துறையில் கற்றுத் தேர்ந்தவர்கள் இங்குவந்து தேவியின்முன்பு தங்கள் கலைத் திறமைகளை செயல்முறையில் செய்துகாட்டி அன்னையின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.

சரஸ்வதிதேவிக்குரிய புதன்கிழமையன்றும், பௌர்ணமியன்றும் தேவிக்கு தேனும் பாலும் அபிஷேகம் செய்து, கலைகளில் வல்லமை பெற்று பேரும் புகழுடன் திகழ்கிறார்கள்.'' என்று விவரிக்கிறார்கள் கோவில் அர்ச்சகர்கள்.

தேவி தனித்துக் கோவில்கொண்டுள்ள கூத்தனூர் மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் சாலையில், பூந்தோட்டம் பஸ் நிறுத்தத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

காலை 7.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.