கடந்த இதழில் அருணகிரிநாதர் அருளிய "கந்தரனுபூதி'யின் விநாயகர் துதிக்கான விளக்கம் கண்டோம். இனி, 52 அட்சரங்களைக் குறிக்கும் 51 பாடல்களைத் தொடர்ந்து காண்போம்.
செய்யுள்- 1
ஆன்மிக வாழ்வின் முதல் படியில் தொடங்கி, இறைவனை உணர்ந்து கலப்பதுவரை ஒவ்வொரு படியாக பக்தனுக்கு விளக்கி, அவன் வாழ்வையும் வளத்தையும் உயர்த்து வது கந்தரனுபூதி. இதையே மற்ற சமய நூல்களும் செய்யும். முதல் படியாக ஒவ்வொரு பக்தனுக்கும் அவனுடைய குரு இறைவனின் நாமத்தை உபதேசிக்கிறார். சமயங்கள் மாறினாலும் இந்த வழக்கம் மாறாது. நாம ஜபத்தை முதற்கொண்டு பூஜை, யோகம், முடிவாக ஞானம் என்ற படிக்கு இட்டுச்செல்வதே முதற்படியான மந்திரோபதேசத்தின் வேலை..
"ஆடும்பரி வேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே.'
பொருள்: கஜமுகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற யானைமுகப் பெருமானின் சகோதரனே, ஆடுகிற மயில், வேல், அழகான சேவல் என்று உன்னைப் பாடும் பணியையே என்வாழ்வு முழுதும் நான் செய்யும் பணியாக அருள்வாய்.
முதற்பாடலில் விநாயகரைத் துதி செய்து அவரருள் பெற்று, இலக்கிய மரபை யும் பூர்த்திசெய்தபின், பாட்டுடைத் தலைவனான முருகப் பெருமானை எடுத்ததும் பாடாமல், மறுபடியும் கணேசரை ஏன் பாடுகிறார்? மேலும், முருகனைப் பாடாமல் முருகனின் மயில், வேல் மற்றும் சேவலை ஏன் பாட வேண்டும்? இதிலிருந்தே நமக்குத் தெரிவது, முதலாம் பாடலில் பரப் பிரம்மத்தை கணேசர்மூலம் காட்டி, அந்த பிரம்மம் முருகனே என்று கூறி, இரண்டாம் பாடலில் மரபோடு இயைந்து கணேசரைப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்.
ஆடும் என்ற சொல்லே அ-கார, உ-கார, ம-கார சப்தம்கொண்டு "ஓம்' என்னும் பிரணவத்தை ஒளித்துவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும், வேல் மற்றும் மயில் சேர்ந்து "ஓம் வேலுமயிலு' அல்லது "ஓம் வேலும் மயிலும் துணை' என்ற மந்திரத்தின் உட்பொருளே இச்செய்யுளின் முதல் வரி. இந்தக் கருத்தையே "வாதினை அடர்ந்த' என்ற திருப்புகழில் "ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப தறியேனே'- மயிலை தனி மந்திர ரூபநிலை எனக் கூறுகிறார். "ஓம்' என்கிற பிரணவத்தை மட்டுமே தனி மந்திரமாக ஜபம்செய்ய முடியும். மற்ற மந்திரங்களை "ஓம்' இன்றி ஜபம்செய்யக் கூடாது என்ற விதியும் உண்டு. அதனாலேயே தோகை விரித்தாடும் மயிலான ஓம்காரம், பரப்பிரம்ம ரூபமான முருகனின் வாகனமாக அமைகிறது.
திருமூலர் கீழ்க்கண்ட பாடலில் "சிவ நாமங்கள் ஓதியே' என்று நாம ஜபத்தின் மகிமையை உணர்த்துகிறார். நாம ஜபத்தினாலேயேதான் பராசக்தியின் கணவனான சிவனைச் சேர்ந்திருந்தேன் எனவும் சொல்கிறார். மேலும், ஓதியே என்ற வார்த்தைமூலம் அவர் வேதமந்திரங்களையும் ஓதி சிவபெருமானை வழிபட்டது தெரிகிறது.
"சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே'
இனி, நாம் லலிதா சகஸ்ரநாமம் உருவான விதம் பற்றிப் பார்க்கலாம்.
மகா திரிபுரசுந்தரி தன்னுடைய தர்பாரில் ஒருநாள், வாக்தேவிகளான வசினி, காமேஸ்வரி, அருணா, விமலா, ஜெயினி, மோதினி, சர்வேஸ்வரி, கௌலினி ஆகியோரை நோக்கி, தமக்குப்ரீத்தி ஏற்படும்படி தம் நாமங்களைப் பாடச் சொல்கிறாள். இங்கு நாம் ஒரு விஷயத்தை கவனிக் வேண்டும்- சாக்தத்தில் பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பராசக்தி- தாமே எல்லாமுமாக இருப்பவளை யார் ப்ரீத்திசெய்ய முடியும்? அவளை நாமங்கள் சொல்லி இந்த பிரபஞ்சம் வணங்கினால், வணங்குவோர்க்குப்ரீத்தி ஏற்படுமன்றி, அவள் எப்போதுமே திருப்தியாக "நித்ய திருப்த்தா' என்றிருக்கிறாள். அவளுக்கு யாரிடமும் எதுவும் வாங்கவும் தேவையில்லை அதையே "நிஷ் பரிக்ரஹா' என்ற நாமத்தில் அறியமுடிகிறது.
பின் எதற்கு இவ்வளவு பெரிய சபை? அச்சபையில் எட்டு வாக்தேவிகள், கலைமகளே எட்டு வடிவம்கொண்டு பாடியதுபோல சகஸ்ர நாமத்தைப் பாடவேண்டும்? இது அனைத்தும் பக்தர்களுக்காகத் தான். நாம ஜபத்தில் ஆரம்பிக்கவேண்டும் என்ற முறையில், தம் நாமங்களை பக்தனுக்காக அவளே பாடச்சொல்லிக் கேட்டு வாங்கிக் கொடுக்கிறாள். அதிலும், அந்த நாமங்கள் அவளின் ரூபலாவண்ய வர்ணனையில் ஆரம்பித்து, அவளின் வீரச்செயல்களைக் கூறி, தந்திர முறைப்படி யோகப்பயிற்சிகளை விளக்கி, ஞான மார்க்கத்தில் முடிவுபெறும். இதைப் பல்வேறு லலிதையின் நாமங்களில் அறியலாம். மேலும், லலிதை நாமங்களைக் கூறுவதில் மகிழ்ச்சியடைகி றாள் என்று "நாம பாராயண ப்ரீத்தா' என்ற பதத்திலும் அறியமுடிகிறது.
லலிதையை தேவர்கள், முனிவர்கள் மந்திர ஜபம்செய்து வழிபட்டுள்ளனர்.
இதை "மனு வித்யா'- மனுவினால் வழிபடப்பட்டவள்; "சந்திர வித்யா'- சந்திர னால் வழிபடப்பட்டவள்; "புதார்ச்சிதா'- புதனால் அர்ச்சிக்கப்பெற்றவள்;
"சிவாராத்யா'- சிவனால் ஆராதிக்கப் பட்டவள்; "மஹா வித்யா'- இருக்கும் மந்திரங்களில் தாமே மகா மந்திரமாக இருப்பவள்; "சர்வமந்த்ர ஸ்வரூபிணி' - எல்லா மந்திரங்களின் உட்பொருளாக இருப்பவள் ஆகிய நாமங்களில் அறியமுடிகிறது. சகஸ்ர நாமத்தின்மூலமே நாம ஜபத்தின் மகிமை கூறியது மட்டுமல்லாமல், அவ்வாறு யார் யார் அந்த மந்திரங்களைக்கூறி வழிபட்டனர் என்று, மனு தொடங்கி சிவபெருமான்வரை அனைவரையும் பட்டியலிடுகிறது லலிதையின் ரகசியமான ஆயிரம் நாமங்கள்.
பொதுவாக, ஒருவர் ஆன்மிக வாழ்வில் நுழையும்போது, எத்தனையோ கேள்விகளும், குழப்பங்களும் இருக்கும். அவ்வாறு பல தத்துவங்களைத் தம் இனம், மொழி, நாடு, சூழ்நிலைக்கேற்பக் கற்பிக்கப்பட்டிருப்பர். இந்த செயற்கையான கற்பித்தல்கள் உண்மையான ஆன்மிகத்தில் நுழையும்போது தவிடுபொடியாகும். ஒரு நல்ல குரு இந்தச் செயலை சீடனுக்கு வலிக்காமல்செய்து அவனை முன்னேற் றுவார். இந்த தவறான, செயற்கையான, வாழ்க்கையின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட வாழ்வியல் முறைகளுக்கு ஆன்மிகம் வாயிலாக விடைதேட பலர் முயல்வர். ஆன்மிக வாழ்வே இயற்கையாக இறைவனைச் சென்றடைய ஒருவழி என்பதை மறந்து, வாழ்வுக்கு எந்தவொரு விதத்திலும் உதவாத, கஷ்டம் மட்டுமே தரும் பழக்க வழக்கங்களுக்கும் ஆன்மிகத்தில் விடைதேட முயல்வர். அவ்வாறு முயலும்போதுதான் ஒருவர் எவ்வளவு தூரம் மாயையான வாழ்வில் சிக்கியிருக்கிறார் என்பது தெரியும். இதைப் பறைசாற்றுவதுபோலவே "தத்துவக் குப்பைகளை மறந்திட செய்திடப்பா' என்று கந்தகுரு கவசத்தில் ஒரு வேண்டுதல் வருகிறது. இந்த தேவையில்லா தத்துவ விசாரணை விலகி, உண்மை தெரிய ஆரம்பிக்கவே நாமஜபம் உதவும்.
சைவத்தில் திருமூலரும், சாக்தத்தில் பராசக்தியும், வைணவத்தில் ஆண்டாள் நாச்சியார் தம் திருப்பாவையில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி' என்றும் நாம ஜபத்தின் மகிமையை விளக்கி, நாம ஜபமே ஆன்மிக வாழ்வின் ஆரம்பம் என்று முதற்படி எடுத்துக்கொடுக்கின்றனர்.
இதையே முருகப் பெருமானும் அருண கிரிநாதரை ஆட்கொண்டபின் தம் புகழ் பாடுமாறு கூறுகிறார். அப்படியிருக்க, அருண கிரிநாதர் ஏன் திரும்பவும் "பாடும் பணியே பணியாய் அருள்வாய்' என்று கேட்க வேண்டும்? இந்த வேண்டுதல் நமக்காகத்தான்.
அனுபூதி படிக்கும் ஒவ்வொருவரும் இதைப் படிக்கப் படிக்க, இறைநாமத்தை எடுத்து உபதேசம்செய்ய ஒரு நல்ல குரு அமைவார். அவரே இறைவன் நம்மீது வைத்துள்ள அன்பையும், கந்தர னுபூதியின் பலனையும் நமக்குக் காட்டுவார்.
செய்யுள்- 2
ஆன்மிக வாழ்க்கையில் முதல்படியாகிய நாம ஜபத்தில் ஆரம்பித்து, கடைசியில் இறைவனுடன் ஒரு ஆன்மாவை இணைப்பதே கந்தரனுபூதியின் ஐம்பத்தொரு பாடல்களும். முதல் பாடலில் நாம ஜபத்தை ஒரு பக்தனுக்கு அறிமுகம்செய்த அருணகிரிநாதர், இரண்டாம் பாடலில் பக்தனுக்கு ஆறு ஆதாரங்களையும் விளக்கி, பரப்பிரம்மத்தின் ஆறு குணங்களையும் கூறி, அந்த குணங்கள் எவ்வாறு பக்தனை ஒரு இறையனுபவ நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்று விளக்கி, அந்த அனுபவத்தின் ஒரு முன்னோட்டம் எவ்வாறிருக்கும் எனவும் விளக்குகிறார். அந்த அனுபவத்தையும் குகப் பரப்பிரம்மத்திடம் நிரந்தரமாக எப்போது தருவாய் எனவும் வேண்டுதலாக வைக்கிறார்.
"உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாமற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.'
பொருள்: தேவலோகத் தலைவனான முருகப் பெருமானே பேரின்பமாயும், துன்ப மில்லா நிலையருள்பவனும், என்றும் யோக நிலையில் இருப்பவனும், எல்லாருக்கும் நல்லதையே செய்பவனும், அன்பாகப் பேசுபவனும், எப்போதும் அதியற்புதங்கள் புரிபவனுமான நீ, நான் எனும் அகங்காரம் அழிய உபதேசம்செய்து எனக்கு நலத்தைச் செய்வாயோ?
அருணகிரிநாதர், மேற்கண்ட பாடலில் ஆறு குணங்களை மட்டும் கூறவில்லை. மேலும், ஒரு பக்தனுக்கு சூட்சும உடலிலுள்ள ஆறு ஆதாரங்களையும் விளக்குகிறார்.
எந்த பக்தன் ஆறு சக்கரங்களையும் கடந்து செல்கிறானோ, அவன் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிடுகிறான். அவ்வாறு அவன் கலக்கும்பொழுது, தான், தனது, தன்னாலே செய்யப்பட்டது என்ற எண்ணங்கள் அழிந்து, தனது அகங்காரத்தை இழக்கிறான். அதையே அருணகிரிநாதர் "எல்லாம் அற இழந்த நலம்' என்கிறார்.
இனி, இந்தப் பாடலில் லலிதையின் நாமங்கள் எவ்வாறு சேர்ந்து பொருள் கொடுக்கின்றன எனப் பார்க்கலாம்.
உல்லாசம்- பேரின்பம்
இறைவன் பேரின்ப வடிவானவன்.
அவனே சச்சிதானந்தமாக இருக்கிறான். ஸத்- எங்கும் நிறைந்திருக்கும் தன்மை. சித் -
அவனே எல்லாரையும் இயக்கும் ஓர் பேரறிவு. அவனே எல்லாருள்ளும் இருக்கும் ஒரே உண்மையான விழிப்புணர்வு. ஆனந் தம்- எப்பொழுதும் ஆனந்த மையமாக இருப்பவன். இந்த ஸ்வரூபத்தையே "சச்சிதானந்த ரூபிணி' என்று லலிதையின் நாமம் பிரம்ம ஸ்வரூபமாக விளக்குகிறது.
நிராகுல
இறைவன் குலங்கள் அற்றவன். ஆகுலம் என்ற சமஸ்கிருத பதத்திற்கு குழப்பம், நிலையற்ற தன்மை என்று பொருள் வரும். இறைவன் எப்பொழுதும் நடுநிலையோடு, குழப்பங்களற்று இருப்பதால் அவன் நிராகுலனாகிறான். அதேபோல் நிராகுலன் என்றால் துன்பங்கள் அற்றவன். யாரொருவன் நடுநிலையோடு இருக்கக் கற்கிறானோ, அவனை இன்பதுன்பங்கள் அணுகுவதில்லை. இதையே பகவான் கிருஷ்ணன் "ஸ்தித ப்ரக்ஞன்' என்று கீதையில் கூறுகிறார். இறைவன் பேரின்ப வடிவாக இருப்பதால், அவர் எப்போதும் துன்பங்களற்று இருப்பதையே இந்த நிராகுலப் பண்பு விளக்குகிறது.
யோக
இறைவன் எப்பொழுதுமே யோகத்தில் அமர்ந்து யோகீஸ்வரனாக இருக்கிறான். அதனாலேயே அவன் எப்பொழுதுமே ஆனந்தமாக இருக்கிறான். யோகம் என்பது உடல், மனம், ஆன்மா மூன்றும் ஒன்றிணைந்து இறைவனையடைய முயலும் ஒரு யுக்தியாகும். இதையே லலிதையின் நாமமான "யோகினி' விளக்குகிறது. மேலும், உடலில் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு யோகினி இருந்து நம்மை வழிநடத்திச் செல்வதையும் இந்த நாமம் குறிக்கும்.
இதம்
இறைவன் எல்லாருக்குமே நலத்தை மட்டுமே விரும்புகிறார். அவர் நல்லவை- தீயவை என்ற த்வைத சித்தாந்தங்களுக்கு அப்பாலிருப்பதால், அவர் எது, யாருக்கு இதமா அதை மட்டுமே செய்கிறார். லலிதையின் நாமங்களான "சுக கரி, சுக ப்ரியா'- லலிதை எனும் பரம்பொருள் இதத்தை தம் பக்தர்களுக்கு எப்பொழுதுமே விரும்புகிறது என்று தெளிவாக்குகிறது.
சல்லாபன்
இறைவன் எப்பொழுதுமே அன்பாகப் பேசுகிறார். அவருடைய அன்பானது குருவாக வந்து உபதேசம்செய்து, பக்தனை மேலெழச் செய்யும்ளவுக்கு அவருடைய அளவிடமுடியாததாக இருக்கிறது. "நிஜ சல்லாப மாதுர்ய வினிர் பர்சித்த கச்சப்பி' என்ற லலிதையின் நாமம், இறைவனின் பேச்சானது சரஸ்வதியின் வீணையான கச்சபியைவிட மிகவும் இனிமையாக இருக்கிறது என்று பறைசாற்றுகிறது.
விநோதன்
அற்புதங்களை அநாயசமாகச் செய்பவ னாகவும், தன்னையே பலவாகப் பிரித்து, மாயையால் தன்னைத்தானே மறைத்து, முடிவில் மாயையை விளக்கி, எங்கும் தாமே நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையை பக்தனுக்குப் புரியவைத்து, முடிவில் தம்மோடு இணைக்கிறார். இந்த செயலே விநோதமான ஒரு அற்புதமும்கூட. லலிதையின் நாமமான "லீலா வினோதினி' - பரம்பொருள் இந்த உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய வேலைகளை ஒரு லீலையாக அநாயாசமாகச் செய்வதும், அதுவும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் செய்து முடிப்பவள் என்றும் சொல்கிறது. இந்த அர்த்தம் பொதியும்விதமாக "உன்மேஷ நிமிஷாத்பன்ன விப்பன புவனா வளி' என்ற நாமம் உணர்த்துகிறது.
இவ்வாறு இறைவன் அறுகுணங்களைக் கொண்டு, அதோடு ஆறு ஆதாரங்களில் இணைந்து, ஒவ்வொரு படியாக பக்தனை அழைத்துச் செல்கிறான். முடிவாக சகஸ்ராரம் என்ற இடத்தில் எல்லாப் பற்றுகளும் அற்ற நிலையில், அவனுடைய ஆன்மாவைத் தம்முடன் இணைத்துக்கொள்கிறார். இவ்வாறு நிரந்தரமாக இணையும்பொழுது அது சாயுஜ்ய முக்தி எனப்படும். ஆனால், மந்திர யோகத்தில் முன்னேறும் ஒருவர் அவ்வப்போது இந்த நிலையை அடைவது சமாதி எனப்படும். சமாதியும் பலவகைப்படும். இவ்வாறு சமாதி கைவரப் பெற்ற ஒருவர் அவ்வப்போது இறைவனை அடைந்தாலும், மீண்டும் தாம்கொண்ட கர்மவினைக்கேற்ப மறுபடியும் உடலில் இருந்து இயங்குவார். அது உலக நன்மைக்காகவும் பலநேரங்களில் இருக்கும். முடிவாக நீண்டநாட்கள் சமாதி நிலையில் தம்மை இருத்திக்கொள்ளும் ஒருவர், இறைவனுடன் நிரந்தரமாகக் கலப்பார்.
இவ்வாறான சமாதி யோகமானது மந்திர ஜபம் முழுமை பெறும்போது ஈடேறும்.
அப்போது "தான்' எனும் பொருள் அழிந்து, நமக்குநாமே விதித்துக்கொண்டுள்ள பல கட்டுகள் அவிழும். இந்த கட்டுகள் நீங்குவதே "எல்லாமற என்னை இழந்த நலம்' என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.
மேலும், ஆறு ஆதாரங்களுக்கும் தலைவனாக இருப்பவன் அந்த முருகப் பரம்பொருளே என்று "சுர பூபதி' என்ற பதத்தில் கூறுகிறார். ஆறு ஆதாரங்களின் தலைவனாக சைவத்தில் சிவனும், வைணவத்தில் விஷ்ணுவும், சாக்தத்தில் சக்தியும் ஆதாரங்களுக்கு தலைவராகின்ற னர். இவ்வாறு கௌமாரத்தின் தலைவனான முருகப்பெருமான் ஆறு இடங்களில் ஆறு ஆதாரங்களைக் குறிக்கும்வகையில் கோவில் கொண்டுள்ளான். அவை:
1. திருப்பரங்குன்றம்: மதுரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
2. திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்): திருநெல்வேலிக்கு கிழக்கே கடற்கரையில் உள்ளது.
3. பழனி (திருவாவினங்குடி): திண்டுக்கல் நகருக்கு மேற்கே உள்ளது.
4. சுவாமிமலை (திருவேரகம்): கும்பகோணம் அருகிலுள்ளது.
5. திருத்தணி: அரக்கோணம் அருகிலுள்ளது.
6. பழமுதிர்ச்சோலை: மதுரைக்கு அருகிலுள்ளது.
இந்தக் கோவில்கள் யோக மார்க்கத்தில் ஒவ்வொரு ஆதாரத்தையும் ஒரு பக்தன் கடந்து செல்லவேண்டிய தத்துவங்களை உணர்த்தி, அவனுடைய ஆன்மிக முன்னேற் றத்திற்கு வழிசெய்யும்.
(அனுபூதி தொடரும்)