aani uthram

ஒவ்வொரு தமிழ் மாதமும், ஒவ்வொரு சிறப்பான விழாக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனி மாதம் நடைபெறும் ஆனி உத்ர திருவிழா விசேஷமானது.

Advertisment

உத்ரம் நட்சத்திரம் என்பது ஒரு சூரிய சார நட்சத்திரம். இது ஒரு முக்கியமான நட்சத்திரம் ஆகும். அதன்காரணம். இந்த உத்ர நட்சத்திரம், சிம்மத்தில் தொடங்குகிறது. சிம்மம் என்பது சூரியனின் வீடு. சூரியனின் வீட்டில் ஒரு சூரிய சார நட்சத்திரம் என்பது எத்தனை விசேஷம்.

ஆனி உத்ர நாளில், சந்திரன் உத்ர நட்சத்திரத்தில் பயணம் மேற்கொள்வார். இங்கு ஒரு அம்மையப்பன் இணைவு உண்டாகிறது அல்லவா! உத்ரம் எனும் அப்பன் நட்சத்திரத்தில், சந்திரன் எனும் அம்மை இணைகிறாள்.

Advertisment

உத்ரம் 1-ஆம் பாதம் சிம்மத்திலும், மற்ற மூன்று பாதங்கள் கன்னியிலும் பரவியுள்ளது. இதில் சிம்மம் சூரியனின் வீடு. ஓ.கே. ஆனால் கன்னியிலும் சூரிய நட்சத்திரம் தனது பெரும்பாலான பாதங்களைகொண்டுள்ளதே. பிறகேன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; யோசியுங்கள்.

கன்னி என்பது காலபுருசனின் 6-ஆம் வீடு. இதன் அதிபதி புதன். அவர் இங்கு உச்சமடைவார். இந்த கன்னியில் சந்திரன் செல்லும்போது, அங்கு சூரியன்+ சந்திரன்+ புதன் எனும் இணைவு ஏற்படுகிறது. இந்த இணைவு ஏற்படுவது ஒரு நோய் ஸ்தானத்தில் எனில் அந்த நோய் தாக்கத்தை அழிக்க வல்ல ஒரு தெய்வத்தை, குறிப்பிட்ட நாளில் வணங்குவது சாலச் சிறந்தது என நமது முனிவர்களும், முன்னோர்களும் முடிவெடுத்துள்ளனர்.

சூரியன் சிவனைக் குறிப்பார். 6-ஆமிட கன்னியில் நோயை அழிக்கவல்ல, வலிமையான, தெய்வமான நடராஜரை வணங்கும்படி ஆக்ஞை இட்டனர்.நடராஜரின் சிறப்பென்ன? இந்த பிரபஞ்சத்தின், ஆக்கல், அழித்தல், படைத்தல், காத்தல், மறைத்தல் என ஐம்பெரும் செயல்பாடுகளை தன்னுள் அடக்கி கொண்டுள்ளார். அவர் தனது வலது கையில் ஏந்தி இருக்கும் உடுக்கை, படைப்பைக் குறிக்கிறது. அபய ஹஸ்தம், வலதுகை பாதுகாப்பை குறிப்பிடுகிறது. அவரது இடதுகை நெருப்பை பிடித்திருக்கிறது. இது அழிவை குறிக்கிறது. உறுதியான பாதம் மறைப்பதை உணர்த்துகிறது. மற்றொரு உயர்த்தப்பட்ட கால் இரட்சிப்பதைக் குறிக்கிறது.

எனவேதான் கன்னி எனும் காலபுருசனின் 6-ஆமிடத்தில் சந்திரன் செல்லும்போது, நடராஜரை வணங்குவது ஏற்புடையது.

சரி, இம்மாதம் சூரியன் எங்கிருப்பார். இந்த கன்னி எனும் 6-ஆமிடத்திற்கு, 10-ஆமிடத்தில், சூரியன் நிலை கொண்டி ருப்பார். நோயினால் ஏற்படும் கர்மத்தை அவர் தொலைக்கிறார் எனக் கொள்ளலாம்.

இந்த ஆனி உத்ர விழா எவ்விதம் கொண்டாடப்படுகிறது. கன்னியில் அமர்ந்த, நடராஜர் சற்றே உஷ்ணமாக இருப்பதால், அவருக்கு மிகச் சிறப்பாக மிக விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. எனவே இதனை ஆனி திருமஞ்சனம் என அழைக்கின்றனர்.

சிவனுக்கு அபிஷேகப் பிரியர் என்று கூறுவர். பெருமாளை அலங்கார ப்ரியர் என்பர். சிவலிங்கத்துக்குமேல் ஜல கலசம் போல் வைத்து, அதிலிருந்து தண்ணீர் விழுவதுபோல் அமைத்திருப்பர். அபிஷேகத்திற்கு நிறைய வஸ்த்துக்களை பயன்படுத்துவர். நாமும் சிவனின் திருமஞ்சனத்திற்கு தேவையான பொருட்களை உள்ளன்புடன் காணிக்கை செலுத்த வேண்டும்.

அபிஷேகப் பொருட்களும், பலன்களும்

பால்- ஆயுள் பலம்.

தயிர்- சந்ததி கிடைக்கும்.

விபூதி- ஞானம் பெருகும்.

தேன்- நல்ல குரல் வளம் உண்டாகும்.

இளநீர்- நல்ல சுகமான வாழ்க்கை.

சந்தனம்- நல்ல மறுபிறவி கிடைக்கும்.

பஞ்சாமிர்தப் பொருட்கள்- எதிரிகள் மறைவர்.

பன்னீர்- பொருள், புகழ்.

மஞ்சள்- மங்கல வாழ்வு.

அன்னாபிஷேக அரிசி- பிறவி கிடையாது.

இது மட்டுமல்லாது, நடராஜருக்கு வாசனைப் பொருள், எல்லா விதமான மலர்கள், வில்வ தளம், அனைத்து பழச்சாறுகள், கரும்புச் சாறு என அனேக விதவிதமான திருமஞ்சனம் நடக்கும். அதனை காண கண்கோடி வேண்டும். கொடுப்பினை இருந்தால் திருமஞ்சன நடராஜரை தரிசிக்கலாம்.

ஆனி உத்ரம் தோன்றிய புராண வரலாறு மாணிக்கவாசகர், 63 நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவர் பூர்வ வாழ்வில் அரிமர்தன பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்தார். ஒருமுறைஅரசு சார்பில் குதிரைகள் வாங்க புறப்பட்டார். அப்போது வழியில் ஒரு குருந்தை மரத்தடியில், பஞ்சாட்சர மந்திரம் கேட்டது. அங்கு ஒரு குரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரால் ஈர்க்கப்பட்ட மாணிக்கவாசகர், அவர் பாதத்தடியில் அமர்ந்து, உபதேசம் பெற்றார். அவர் உபதேசலயத்தில் ஆழ்ந்துவிட, மெய் மறந்தார். பின் வெகுநேரம் கழித்து, கண் திறந்து பார்த்தபோது, அங்கு அந்த குருவை காணவில்லை. பின், வந்தது சிவனே என புரிந்துகொண்டார். அவர் குதிரை வாங்க வைத்திருந்த பணத்தில் ஒரு கோவில் கட்டினார். அரசர் குதிரையைக் காணாமல் தேட, அவருக்கு மாணிக்கவாசகர் கட்டிய கோவில் பற்றி தெரியவந்துள்ளது. இதனால் வெகுண்ட அரசர், மாணிக்கவாசகரை பலவாறாக துன்புறுத்தினார். இறைவன் தன் திருவருளால் காத்து அருளினார். இந்தக் கோவில் புதுக்கோட்டை ஆத்மநாதர் கோவில் ஆகும். இங்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது; லிங்கம் கிடையாது. இந்தநாள் ஆனி உத்ரமாகக் கொண்டாடப்படுகிறது. மாணிக்கவாசகர், திருவாசகத்தை எழுதினார்.

ஆனி உத்தரத்தன்று, சிதம்பரம் மூலவர் நடராஜர், சிவகாமி அம்மையுடன் வீதியுலா வந்து, ஆனந்த நடனம் ஆடுவார். ஆனி உத்ரம் தினத்தன்று, விரதம் இருந்து பூஜை செய்வதும், நடராஜர் திருமஞ்சனம் காண்பதும் ரொம்ப நல்லது.

நிறைய மனிதர்கள் நோய் தாக்கத்தால் அவதிபடுகின்றனர். சிலருக்கு என்னவித நோய் என்று மருத்துவரால் அறியமுடிய வில்லை. இவர்கள், ஆனி உத்ர விரதமிருந்து பூஜித்தால், நோயிலிருந்து அந்த ஈசன் காத்து ரட்சிப்பார்.சூரியன், புதன் சேர்க்கை, புதாத்திய யோகம் எனப்படும். இது சிறப்பான அறிவுக்கும் குறிப்பான கல்விக்கும் உகந்தது. சில குறிப்பிட்ட கல்விதான் கற்பேன் என அடம்பிடிக்கும் மாணவர்கள், இந்த ஆனி உத்ரநாளில் விரதமிருங்கள். சீரான கல்வி சிறப்பு கிடைக்கும்.

மருத்துவம் சம்பந்தம் கொண்டோர் ஆனி உத்ர விரதமிருக்கலாம்.

எதிரிகள் தொல்லையுடையோர் ஆனி உத்ர விரதமெடுங்கள். இந்த மாதம் 2024 ஜூலை 12 அன்று ஆனி உத்ர தர்சனம். அதற்கு முந்தயநாள் ஜூலை 11 நடராஜர் அபிஷேகமும் நடக்கிறது.