மிதிலை மன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி திருமால் எடுத்த மச்சாவதாரத்தை விளக்கியபின், கூர்மாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.

வங்கக் கடல் கடைந்த மாதவன்

கூர்மாவதாரம் (ஆமை)

நீள்கடல் வண்ணனாக தன் கீழ் வலது கையில் கௌமேதகி என்ற கதாயுதத்தையும், கீழ் இடது கையில் பத்மத்தையும், மேல் வலது கையில் சுதர்சன சக்கரத்தையும், மேல் இடது கையில் பாஞ்சஜன்யத்தையும் தரித்து, நாபிக்கமலத்தில் பிரம்மனைத் தாங்கி, அல்லியம் பூங்கோதையோடு, கொடி அணி நெடுமதிள் கோபுரம் இலங்கும் வைகுந்தத்தில் ஸ்ரீமத் நாராயணர் சேவை சாதித்துக்கொண்டிருந்தார். அவ்வமயம், கலைகளில் சிறப்புற்று விளங்கிய வித்யாதரப் பெண் திருமாலையும் லட்சுமியையும் துதித்துப் பாடி வீணைமீட்டினாள்.

Advertisment

kannan

இசையின் இனிமையில் மனம் மகிழ்ந்த லட்சுமி தேவி, தான் சூடியிருந்த மணம் மிகுந்த மாலையை அவளுக்குப் பரிசாக வழங்கி னாள். அவள் அதைத் தன் குருவாகிய துர்வாச முனிவருக்குக் காணிக்கையாக்கினாள். துர்வாச முனிவர் சிறிதுதூரம் சென்றபோது, எதிரில் யானையின்மீது வஜ்ராயுதத்தைத் தாங்கிய இந்திரன் வந்துகொண்டிருந்தான். செல்வம் தரும் மாலை தேவேந்திரனிடம் இருப்பதே சிறந்தது என்றெண்ணினார். இந்திரனிடம் அந்த மாலையைக் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக யானையின் மத்தகத்தின்மீது வீசினான். மாலை கீழேவிழுந்து யானையின் காலடியில் மிதிபட்டது.

அதைப் பார்த்ததும் கோபமுற்ற துர்வாசர், ""தேவேந்திரா! புகழின் அகம்பாவத்தால், நான் அளித்த புனிதமான மாலையின் பெருமையை உணராமல் யானை மீது வீசிவிட்டாய். அது தரையில் விழுந்து புனிதம் கெட்டுவிட்டது. இந்த அலட்சிய மனோபாவத்திற் காக நீயும், தேவர்களும் உங்கள் பலத்தை இழந்து துன்புறுவீர்கள்'' என்று சாபமிட்டார். பலமிழந்த இந்திரனும், தேவர்களும் அசுரர்களிடம் சிக்கி அல்லல் பட்டனர். தன் பழி நீங்கி, உய்வு பெறுவதற்கு வழிதேடி இந்திரன் வைகுந்தம் விரைந்தான்.

சூழ்விசும்பின் பனிமுகிலும், வான்திகழும் சோலையும் எழில் சேர்த்தது. நெடுவரைத் தோரணம் நிறைந்து, அதிர்குரல் முரசொலியும், அலைகடல் முழக்கமும் ஒலித்தன. கின்னரர், கிம்புருடர்கள் கீதங்கள் இசைத்தனர். விரைகமழ் நறும்புகை சூழ வேதநல் வாயவர் வேள்வி மடுத்தனர். மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்.

விதிவகைப் புகுந்தோருக்கு மட்டுமே வாய்க்கும் நல் வைகுந்தத் தில், தொடுகடல் கிடந்த கேசவனின் திருவடி பங்கய மாமலர் பாதங் களை இந்திரன் தொழுதான்.

தேவேந்திரன் அங்கு வந்த காரணத்தின் குறிப்பறிந்த ஜகந்நாதர், ""பாற்கடலைக் கடைந்து, அதில் வரும் அமுதத்தைப் பருகி னால் மட்டுமே தேவர்கள் தாங்கள் இழந்த வலிமையை மீண்டும் பெறமுடியும். ஆபத்துக் காலத்தில் பகைவனையும் நண்பனாக்கிக் கொள்ள வேண்டுமென்பதால், அசுரர்களுடன் சேர்ந்து பாற் கடலைக் கடைவதே உத்தமம்'' என்றொரு உபாயத்தை உபதேசித் தார்.

தேவேந்திரன் அதல, விதல லோகங்களிலிருந்த அரக்கர்களை உதவிக்கு அழைத்தான். அரக்கர் களுக்கும் அமுதத்தில் சமபங்கு தருவதாகக் கூறியதால் ஒப்புக் கொண்டனர். அசுரரும் தேவரும் மேருமலையை மத்தாக வைத்து, வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலை சமுத்திர மந்தனம் செய்தார்கள். தேவர்கள் பாம்பின் வாலையும், அசுரர்கள் தலையையும் பிடித்துப் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தர மலை பாற்கடலில் அமிழ்ந்து மூழ்கத்தொடங்கியது. செய்வதறி யாது திகைத்த தேவர்கள், ஆபத்பாந்தவனாகிய ஆராவமு தனை வேண்டிப் பணிந்தனர்.

வார்குழல் வானாக, நெடுநிலம் கழலாக நின்ற நெடியோனை தேவர்கள், தொழுது அழுதனர்.

தேவர்களைக் காக்க வேண்டி, அரங்கன் ஆமையாக அவதார மெடுத்து மந்தர மலையைத் தாங்கினார். வாசுகிப் பாம்பைக் கயிறாக்கிக் கடைந்தபோது வெளிப் பட்ட அமுதத்துடன் வெளிவந்த நச்சு அமுதத்தில் கலந்துவிடாமல் இருப்பதற்காக, சிவன் அதை எடுத்துப் பருகினார். பார்வதி தேவி அதைத் தடுக்கும் பொருட்டு சிவனின் கழுத்தில் அழுத்த, விட மானது அத்தோடு நின்றுவிட்ட தால், சிவன் நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.

விஷத்தின் துன்பம் நீங்கியதும், மீண்டும் பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், வேண்டியதைத் தரும் வல்லமை படைத்த காமதேனு என்ற பசு வெளிப்பட்டது. இது பார்வதியிடம் சேர்ந்தது.

அடுத்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் என்ற குதிரை தோன்றியது. இந்த குதிரை பறக்கும் ஆற்றல் கொண்டது. அதற்கு அடுத்ததாக, ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை நிற யானை தோன்றியது. இது இந்திரனது வாகனமானது. இதனையடுத்து, ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிவந்தன. பஞ்ச தருக்கள் எனச் சொல்லப்படும் அவை அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகும். கேட்பதைக் கொடுக்கும் சக்திகொண்ட கற்பகமரத்தின்கீழ் இந்திரன் அமர்ந்தான்.

அடுத்து, அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடிய கவுஸ்துபம் என்ற மணிமாலை தோன்றியது. இதனை திருமால் அணிந்தார். அதற்குப்பின் ஜேஷ்டாதேவி என்ற மூதேவி தோன்றினாள். இவளை யாரும் ஏற்காததால் பாவிகளைத் தேடி பூலோகம் சென்றாள். இவளுக் கடுத்து, மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினர். இவர்களை தேவர்கள் ஏற்றுக்கொண்டனர். அடுத்து தோன்றியது மது. இந்த மது தோன்றும்போது அதன் அதிதேவதையான சுராதேவியுடனும், மதியை மயக்கும் அழகு மங்கையர் கணக்கற்ற தோழியர்களுடனும் தோன்றியது. அவர்களை அசுரர்கள் ஏற்றுக்கொண்டனர். இதற்குப்பின் தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப் படும் மகாலட்சுமி. மலர்மாலையை ஏந்தியவளாக அவதரித்த இவள், தனக்குத்தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனையறிந்து, மகாவிஷ்ணுவுக்கு மாலையணிவித்து திருமாலின் தேவியானாள்.

அடுத்து, விஷக்கொடுமையை நீக்கும் மூலிகையுடன் சந்திரன் வெளிப்பட்டான். மேலும், அவன் கைகளில் நீலோற்பவ மலரும், மோக சாஸ்திரச் சுவடிகளும் இருந்தன.

அடுத்து, ஸ்யமந்தகமணி என்ற சிந்தாமணி தோன்றியது. அதை சூரியன் ஏற்றான். கடைசியில் அவதரித்தவர் தன்வந்திரி. நான்கு கரங்களுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந் தார். இவர் மருத்துவர்களின் தேவதை.யானார்.

தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்த கலசத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பலத்த போட்டியிருந்தது. அசுரர்கள் வேகமாகச் சென்று தேவர்களை முந்திக்கொண்டு அக்கலசத்தைப் பறித்துக்கொண்டனர்.

அமிர்தத்தை தேவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டுமென்பதற்காகவும், அசுரர்களுக்கு இறப்பில்லாத் தன்மை கிடைத்தால் அது ஆபத்தானதாகிவிடும் என்பதற்காகவும், அதை அசுரர்களுக்குக் கொடுக்காமல் இருப்பதற்காக விஷ்ணு 'மோகினி' ரூபமெடுத்தார்.

அந்த மோகினியின் நடையழகில் நாணல்கூட நாணிக்கோணியது. மோகினி தானே அந்த அமிர்தத்தைப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினாள். மோகினியின் அழகில் கட்டுண்ட அசுரர்களும் அதற் கிணங்கினார்கள். மோகினி தேவர்களை ஒரு பந்தியாகவும், அசுரர்களை ஒரு பந்தியாகவும் அமர்த்தினாள். அனைவரும் தர்ப்பாசனத்தில் அமர்ந்திருந்தனர்.

அசுரர்கள் கிழக்குமுகமாகவும், தேவர்கள் மேற்குமுகமாகவும் அமர்ந்து அமுதத்தை அருந்தத் தயாரானார்கள்.

மோகினி தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்கும்படி செய்துகொண்டிருந்தாள்.

அசுரர்கள் அனைவரும் மயக்கத்திலிருந்ததால் அவர்களுக்கு இந்த சூழ்ச்சி தெரியவில்லை. ஆனால், அசுரர்களில் ஸ்வர்பானு என்பவன் மட்டும் இந்த சூழ்ச்சியைத் தெரிந்து கொண்டான். தேவர்கள்போல் உருமாறி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்துகொண்டு அமிர்தத்தை அருந்திவிட்டான். இந்த விஷயத்தை அறிந்த மோகினி (மகாவிஷ்ணு) தனது கையிலிருந்த சட்டுவத்தால் ராகுவின் தலையை வெட்டியெறிந்தார். அமுது உண்டதால் தலையும் அழியவில்லை; உடலும் அழியவில்லை. இதைப் பார்த்த பிரம்மன் துண்டிக்கப்பட்ட தலையோடு ஒரு சர்ப்ப உடலைப் பொருத்தினார். துண்டிக்கப்பட்ட உடலோடு ஒரு பாம்பின் தலையைப் பொருத்தி இணைத்தார்.

அவையிரண்டும் ராகு- கேது என்ற பெயருடன் கிரகப் பதவி பெற்றன.

இதற்குப்பின், கோபமுற்ற அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் மூண்டது. அமுதபானம் உண்ட தேவர்களை அசுரர்களால் அழிக்க முடியவில்லை. தேவர்கள் அசுரர்களை பாதாள லோகத்திற்குத் துரத்தினார்கள்.

(அமுதம் பெருகும்)