மிதிலை மன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி, "ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம்' என்றுரைத்தார். திருமால் எடுத்த பரசுராமாவதாரத்தை விளக்கியப்பின், இராமாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.
ஒரு சொல்- ஓர் அம்பு- ஏகபத்தினி விரதம்!
(இராமாவதாரம்)
அயோத்தியை ஆண்டுவந்த தசரத மன்னன் நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் வருந்தினார். அதனால் தன் மந்திரி சுமந்திரர் மற்றும் தன் குலகுருவான வசிட்டரின் அறிவுரைப்படி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார்.
அப்போது மகாவிஷ்ணு தோன்றி, ஓர் தங்கத்திலான பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து, அதிலிருக்கும் புனித மான அமிர்தத்தை தசரதனின் மனைவியரைப் பருகும்படி கூறினார். அதன்படி தசரதரும் தன் மனைவியரான கௌசல்யா, சுமித்திரை மற்றும் கைகேயியிடம் அந்த அமிர்த்ததைப் பகிர்ந்தளித்தார். விரைவிலேயே கௌசல்யாவுக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இரட்டையரான இலக்குவன் மற்றும் சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர்.
சிறிது காலத்திற்குப்பின்பு நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.
இந்நிலையில் விசுவாமித்திர முனிவர் அயோத்தியை அடைந்து, தசரதரிடம் தன் யாகங்களுக்கு சில ராட்சதர் களால் இடையூறு ஏற்படுவதால், அவர்களை அழிக்க இராமனைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், இலட்சுமணனையும் அவருடன் அனுப்பிவைத்தார். விசுவாமித்திரர் முதலில் இருவரையும் தமது ஆசிரமத்திற்கு அழைத்துச்சென்றார். இருவருக்கும் வேத மந்திரங்கள் அனைத்தையும் உபதேசித்து அருளினார். தாங்கள் செய்யும் யாகத்திற்கு, அரக்கர்களால் ஏற்படும் தொல்லையை நீக்கு மாறு விண்ணப்பித்தார். சகோதரர்கள் இருவரும், யாகத் திற்குத் தடையாயிருந்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்து வேள்வியைக் காத்தனர். மனம் மகிழ்ந்த விசுவாமித்தி ரர் அவர்களுக்கு சில அஸ்திரங்களை அருளி ஆசிர்வதித்தார்.
விசுவாமித்திரர் இராமனையும், இலட்சுமணனையும் ஜனகர் என்னும் அரசர் ஆட்சிசெய்த விதேக நாட்டின் தலைநகரமான மிதிலைக்கு அழைத்துச் சென்றார்.
ஜனகருடைய மகள் சீதை. அவளுக்குத் திருமணம் செய்வதற்காக அரசர் போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தார். பல இளவரசர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் வென்ற இராமர், சீதையைத் திருமணம் செய்து கொண்டு அயோத்திக்கு மீண்டான். இராமருக்கும் சீதைக்கும் திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும், வயதான தசரதர், இராமருக்கு மகுடம் சூட்ட முடிவு செய்தார். மாபெரும் நிகழ்வின் முந்தைய நாளில், மந்தரை என்னும் பொல்லாத பெண்ணால் கைகேயியின் பொறாமை தூண்டப்பட்டது. இராமரை பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு அனுப்புமாறும், தனது மகன் பரதன் நாடாள வேண்டுமென்றும் தசரதனிடம் கைகேயி கோரினாள். இதனால் மனமுடைந்த அரசர் வேறு வழியின்றி, கைகேயியின் கோரிக்கைகளுக்கு இணங்கி னார். இராமர் தனது தந்தையின் ஆணையை ஏற்று தன் மனைவி சீதை யுடனும், சகோதரன் இலட்சு மணனுடனும் இணைந்து கானகம் ஏகினார்.
இராமர் வெளியேறிய பிறகு தசரத மன்னர், துக்கத்தைத் தாங்கமுடியாமல் காலமானார். இதற்கிடையில் தனது நாட்டிற்குத் திரும்பிய பரதன், அயோத்தியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொண்டான். பரதன் தனது தாயின் பொல்லாத சூழ்ச்சியறிந்து அரியணை ஏற மறுத்து, காட்டில் இராமரை சந்தித்தான். பரதன் ராமரிடம் திரும்பிவந்து ஆட்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டான். ஆனால் தனது தந்தையின் கட்டளைகளை நிறைவேற்ற தீர்மானித்த இராமர், நாடு திரும்ப மறுத்தார். ""தந்தையின் உத்தரவை ஏற்று காட்டில் வாழும் நான், நாடாளும் பொறுப்பை ஏற்றால் தந்தையை அவமதிப் பதாகிவிடும்'' என தெரிவித்து, தம்பியை அமைதிப்படுத்த அறிவுரைகள் கூறினார்.
இராமர் மறுக்கவே, அயோத் திக்குச் சென்று இராமரின் பாதுகைகளை அரியணை யில் வைத்து, இராமர் காட்டிலிருந்து மீளும்வரை அவருக்காக பரதன் ஆட்சியை நடத்தினான்.
இராமரும், சீதையும், இலட்சுமணனும் காட்டில் வாழ்ந்துவந்தபோது, அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை என்பவள் இராமன்மீது ஆசைகொண்டாள். இலட்சு மணன் அவளது மூக்கை அறுத்துத் துரத்திவிட்டான். சூர்ப்பனகை உடனே தன் சகோதரன் இராவணனின் பாதுகாப்பை வேண்டி இலங்கைக்குச் சென்றாள். சூர்ப்பனகையின் பரிதாபமான தோற்றத்தைக்கண்டு இராவணன் மிகவும் கோபமுற்றான். இராமர், சீதை, இலட்சுமணன் மூவரும் பஞ்சவடியில் எந்தப் பாதுகாப்புமின்றி வசிப்பதாகவும், பூலோகத் தில் சீதையே பேரழகி என்றும் தாடகை கூறினாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலை கண்டு சினம்கொண்ட இராவணன், இராமரைப் பழிவாங்க எண்ணிச் சீதை யைக் கவர்ந்து வந்து இலங்கை யில், அசோகவனத்தில் சிறைவைத்தான். சீதையின் அழகில் மயங்கிய அவன், தன்னை மணந்துகொள்ளுமாறு அவளை வற்புறுத்தினான்.
சீதையைத்தேடி அலைந்த இராமருக்கு, வானரர்களின் அரசனான சுக்ரீவனின் நட்பு கிடைத்தது. கிஷ்கிந்தையின் அரசனான வாலிக் கும் அவனது இளைய சகோதரனான சுக்ரீவனுக் கும் மனவேறுபாட்டால் யுத்தம் நிகழ்ந்தது. சுக்ரீவனின் சமாதானத்தை வாலி ஏற்க மறுத்தான். வாலியின் கோபம் சற்றும் தணிய வில்லை. சுக்ரீவனுடைய மனைவி, சொத்துகள் உட்பட அனைத்தையும் பறித்துவிட்டு, உடுத்தி யிருந்த ஒரே உடையுடன் அவனை நாட்டை விட்டே வெளியேற்றினான். குற்றமற்ற சுக்ரீவனுக்கு வாலி இழைத்த அநீதியானது சுக்ரீவனை இராமரிடம் சரணடையச் செய்தது. வாலியைக்கொன்று சுக்ரீவனின் மனைவியை மீட்டுத்தருவதாக இராமர் சுக்ரீவனிடம் உறுதியளித்தார். அதற்குப் பிரதிபலனாக சீதையைத் தேடுவதில் தானும் வானர சேனை களும் தங்களுக்கு உதவுவோம் என்று சுக்கிரீவன் இராமரிடம் உறுதியளித்தான்.
அதன்விளைவாக பகவான் இராமர், மாற்றான் மனைவியைக் கவர்ந்த வாலியை வதம்செய்து நீதியை நிலைநாட்டினார். சுக்ரீவ னின் அமைச்சனாகிய அனுமன் இராமரிடம் பெரும்பக்தி கொண்டிருந்தான். இராமரின் ஆணைக்கு அடிபணிந்த அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றான். இலங்கைக் குள் நுழைந்தபிறகு, இலங்கை முழுவதையும் பாதுகாக்கும் லங்கினி என்ற அரக்கியைக் கண்டான். அனுமன் அவளுடன் சண்டையிட்டு இலங்கைக்குள் செல்வதற்காக அவளை அடி பணியச் செய்தான். லங்கினியைத் தோற்கடித்த தால் இலங்கையின் முடிவு நெருங்குகிறது என்ற ரகசியத்தை லங்கினி எடுத்துரைத்தாள். அனுமன் அரக்கர்களின் நாட்டை ஆராய்ந்து இராவணனை வேவு பார்த்தான்.
அனுமன் சீதையை அசோக வனத்தில் கண்டான். தான் இராமரின் தூதன் என்று ரைத்து, நம்பிக்கையின் அடையாளமாக இராமரின் மோதிரத்தைக் கொடுத்து அனுமன் சீதைக்கு ஆறுதலளித்தான். அவன் சீதையை மீண்டும் இராமரிடம் கொண்டுசெல்ல முன் வந்தான். ஆனால் சீதாதேவி அதை மறுத்து விட்டாள். அது தர்மமல்ல என்றும், இராமரின் வீரத்திற்கு இழுக்காக அமையுமென்றும் எடுத்துரைந்தாள். தான் சிறைப்படுத்தப்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்க இராமரே வர வேண்டும் என்று சீதை கூறினாள். அனுமன் பின்னர் இலங்கையில் மரங்களையும் கட்டடங் களையும் அழித்து, இராவணனின் வீரர்களைக் கொன்றதன்மூலம் அழிவை ஏற்படுத்தினான்.
இராவணனின் வீரர்கள் தன்னைப் பிடித்து இராவணனிடம் அழைத்துச்செல்ல அனுமதித் தான். சீதையை விடுவிக்க இராவணனுக்கு தர்மத்தை உபதேசித்தான். சொல்லின் வல்லா னாகிய அனுமனின் சொல்லை ஏற்கமறுத்த இராவணன், அனுமனைக் கட்டி இழுத்து, அவனது வாலுக்குத் தீவைத்தான். ஆனால் அனுமன் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு, இராவணனின் கோட்டைக்குத் தீவைத்துவிட்டு, தீவிலிருந்து பறந்து சென்றான். மகிழ்ச்சியான செய்திகளுடன் கிஷ்கிந்தைக்குத் திரும்பினான்.
அனுமன்மூலம் சீதை இருக்குமிடத்தை அறிந்துகொண்ட இராமன், வானரப் படைகளின் உதவியோடு இலங்கைக்குச் சென்றார். இராவணனின் தம்பியான விபீடணன், சீதையை விட்டுவிடுமாறு இராவணனுக்கு ஆலோசனை கூறியும் அவன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவவிரும்பாத விபீடணன், இராமரை சரணாகதி அடைந்து அவருக்கு உதவினான். போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமர் விபீடணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டினார்.
இராமர் சீதையை மீட்டார். எனினும், சீதையின் தூய்மையை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. இவ்வேளையில் இராமருக்கு விதிக்கப்பட்ட நாடுகடந்த வாழ்க்கைக் காலமான பதினான்கு ஆண்டுகள் முடிவடைந்தன. இராமர், சீதை, இலட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு மீண்டனர். இராமர் அரசனாக முடிசூட்டிக் கொண்டார். அதன்பின்பு இராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சிசெய்தார்.
மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகா விஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம்தான் இராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இராமர் அவதரித்தார்.
(அமுதம் பெருகும்)