மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். மாதத் தொடக்கத்திலேயே (ஜூன்-2) அஸ்தமன குரு உதயமாகிறார். கடந்த மாதம் நிலவிய அலைச்சல்கள் குறையும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட தடுமாற்றம் விலகும். சந்திரனுடைய சாரத்தில் குரு சஞ்சரிப்பதால் குரு சந்திரயோகமும் உங்களுக்கு அமைகிறது. தனவரவு உண்டாகும். கடன் வாங்கும் சூழ்நிலைகளும் உருவாகும். அது சுபக்கடனாகவும் அல்லது தொழில் முதலீட்டுக் கடனாகவும் அமையும். ராசிநாதன் 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஒருசிலர் பூமி, மனை வாங்கலாம் அல்லது வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்டும் முயற்சியில் இறங்கலாம். மேற்கூறிய கடன் அதற்காகவும் ஏற்படலாம். சனி 11-ல் ஆட்சிபெற்றாலும் ராகு சாரத்தில் சஞ்சாரம். ஒருசில நேரம் உங்கள் முயற்சி, செயல்பாட்டில் உங்களுக்கே சந்தேகம் தோன்றினாலும் முடிவில் காரிய அனுகூலம் உண்டாகும். மாத பிற்பாதியில் பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலவினாலும் தேவைகள் பூர்த்தியாகும். தேகநலன் நலம்பெறும். செவ்வாய்க்கிழமை துர்க்கையம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஜூன் 13 வரை ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 11-க்குடைய குருவும் ஜென்ம ராசியில் சஞ்சாரம். ஜூன் 2-ல் அஸ்தமான உதயம். பொதுவாக ஜென்ம குரு சீரழிக்கும் என்பது ஜோதிட மொழியாக இருந்தாலும் இங்கு குரு 11-க்குடையவர். அவர் பார்க்கும் இடங்கள் 5, 7, 9 ஆகிய ஸ்தானங்கள் நல்ல ஸ்தானங்கள் ஆகும். பிள்ளைகள் வகையில் சுபகாரிய நிகழ்வுகள் அமையும். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தைவழியில் மகிழ்ச்சி உண்டாகும். ராசிநாதன் சுக்கிரனும் ஆட்சி என்பதால் முயற்சிகளில் அனுகூலத்தை எதிர்பார்க்கலாம். அதேசமயம் அதிகப் பரியத்தனம் தேவைப்படும். ஒருசில நேரம் செலவுகள் ஒன்றுக்கு இரண்டாக அமைந்தாலும் செயல்பாடுகள் பூர்த்தியாவதால் மனது ஆறுதலடையும். 10-ல் சனி ஆட்சி, வேலை, உத்தியோகம் இவற்றில் சங்கடங்களுக்கு இடமில்லை. ஒருசிலர் வேலை இடமாற்றத்தை சந்திக்கலாம். ஒருசிலர் உத்தியோக உயர்வும் எதிர்பார்க்கலாம். 11-ஆமிடத்து ராகு மூத்த சகோதரவகையில் நற்பலன்களைத் தருவார். 9-ஆம் தேதி 2-ல் புதன் ஆட்சி. அதன்பிறகு வரவு- செலவு திருப்தியாக அமையும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு உத்தமம்.
மிதுனம்
மாதத் தொடக்கத்தில் மிதுன ராசிநாதன் புதன் 12-ல் மறைவு. அவருடன் 7, 10-க்குடைய குருவும் 12-ல் மறைவு. 3-க்குடைய சூரியனும் 12-ல் மறைவு. சுக்கிரன் 12-ல் ஆட்சி என்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. எனவே இப்படிப்பட்ட கிரக அமைப்புகளால் செயல்களில் தாமதம், முயற்சிகளில் தேக்கம் போன்ற பலன்களைச் சந்திக்க நேரும். 12-ல் வந்திருக்கும் குரு விரயங்களையும் இடமாற்றத்தையும் தரும். ஒருசிலருக்கு உத்தியோக வகையில் இடமாற்றத்தைத் தரும். சிலருக்கு உடன்பிறந்தவர்கள் வகையில் மனக்ககிலேசம் அல்லது சச்சரவு, சண்டை ஏற்படலாம். எது எப்படிப் போனாலும் வழக்கு, வியாஜ்ஜியங்களுக்கு இடம் தராமல் சுமூகமாக உங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வது நல்லது. 19-ஆம் தேதிமுதல் 9-ல் உள்ள சனி வக்ரம் பெறுகிறார். பூர்வீகச் சொத்து அல்லது தகப்பனார்வகையில் சங்கடங்களை உண்டாகும். 4-ல் உள்ள கேது தேக சுகத்தில் ஆரோக்கியக் குறைவை உண்டாக்குவார். 6-க்குடைய செவ்வாய் 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் கடன் சுமை ஏற்படும். கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று ரிணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு அட்டமத்துச்சனி ஒருபுறம் வாட்டி வதைக்கிறது. எந்த வேலையையும் ஒரு முறைக்கு இருமுறை செய்யவேண்டிய நிலை. சிப்பந்திகள் பிரச்சினை செலவும் ஒட்டிக்கு ரெட்டியாக சந்திக்கவேண்டிய நிலை போன்ற சங்கடங்கள் ஏற்படும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் உருவாகும். தொழில்துறையினருக்கும் சிரமங்கள் ஏற்படும். ஜூன் 2 முதல் 11-ல் நிற்கும் குரு அஸ்தமன உதயமாகுதல் என்பது ஒரு ஆறுதல். 13-ஆம் தேதி வரை 11-ல் சுக்கிரன் ஆட்சி. போராடினாலும் நிறைவில் காரிய அனுகூலம் என்பது ஒரு திருப்தி. 10-ல் செவ்வாய் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் பளு அதிக மானாலும் உத்தியோக பாதிப்புக்கு இடமில்லை. ஒருசிலர் வெளியூர் அல்லது வெளிமாநில வேலைக்கு முயற்சிக்கலாம். அதேபோல வெளிநாட்டு வேலைக்கு முயற்சிபோருக்கு முயற்சிகள் கைகூடும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் சூழ்நிலை உருவாகும். 9-ல் உள்ள ராகு தகப்பனாருக்கு மருத்துவச் செலவுகளை உருவாக்கும். 3-ல் உள்ள கேதுவும் அவரைப் பார்க்கும் ராகுவும் தைரிய தன்னம்பிக்கைகளை அதிகப்படுத்துவார். கால பைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதியில் 10-ல் திக்பலம் பெறுகிறார். 10-ல் குரு, சுக்கிரன், புதன் சேர்க்கை. 10-ஆமிடத்துக் குரு பதிமாறச் செய்யும் என்பது பாடல். சிலருக்கு உத்தியோக மாற்றம் ஏற்படலாம். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு குடும்பத்தில் குழப்பங்கள் நிவர்த்தியாகும். தனவரவும் உண்டாகும். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வீடு, வாகனவகையிலும் சுபச்செலவுகள் ஏற்படுத்தும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். ஒரு சிலர் புதிய வீடோ அல்லது பழைய வீட்டை வாங்கி சீர்திருத்தம் செய்யலாம். அதற்கு வங்கிக்கடனும் ஏற்படும். 7-ல் சனி இருப்பது தோஷம் என்றாலும் அது அவரது சொந்தவீடு என்பதால் தோஷம் பாதிக்காது. திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமண வாய்ப்புகள் கைகூடும். 19-ஆம் தேதிக்குப் பிறகு சனி வக்ரம் ஆரம்பம். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அல்லது கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவச் செலவுகளைச் சந்திக்கலாம். சுயதொழிலில் கூட்டுச்சேர்ந்து தொழில் செய்யும் பார்ட்னர்களுக்கு மத்தியில் சங்கடம் தோன்றலாம். லட்சுமி நரசிம்மரை வழிபட தொழிற்சங்கடங்கள் விலகும்.
கன்னி
மாதத் தொடக்கத்தில் கன்னி ராசிநாதன் புதன் 9-ல் சஞ்சாரம். புதன் 10-க்குடையவர் என்பதால் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 9-ல் குரு நின்று ராசிக்கு குருபார்வை கிடைக்கிறது. இதுவரை பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு இந்த குருபார்வை நற்பதில் தரும். ஜூன் 9-ஆம் தேதிக்கு பிறகு புதன் 10-ல் ஆட்சி. வேலை, தொழில், உத்தியோகம், வாழ்க்கை இவற்றில் நிறைவயும் நிம்மதியையும் எதிர்பார்க்கலாம். ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் ஏற்படுத்தும் காயங்களுக்கு 9-ல் உள்ள குரு மருந்திட்டு ஆறுதல் தருவார். 6-ல் சனி ஆட்சி. 19-ஆம் தேதிமுதல் சனி வக்ரம் ஆரம்பம். அது ஒரு பலம். வக்ரத்தில் உக்ரபலம். ருணம், ரோகம், சத்ருவகையில் சாதகமான பலன்கள் உண்டாகும். 7-ல் உள்ள ராகு கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சச்சரவுகளைத் தோற்றுவித்தாலும். 7-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லும் அமைப்புகள் உண்டாகும். 8-க்கு உடையவர் 8-ல் ஆட்சி என்பதால் வாகனவகையில் செலவுகள் ஏற்படும். வீண்விரயச் செலவாக அமையும். செவ்வாய்க்கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
துலாம்
துலா ராசிநாதன் ஜூன் 18 வரை ரிஷபத்தில் ஆட்சி. பொதுவாக ஆட்சி, உச்சம்பெற்ற கிரகங்களுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. 6-க்குடைய குருவும் 8-ல் மறைவு. எனினும் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 11-க்குடைய சூரியன் 15-ஆம் தேதிவரை 8-ல் மறைவு. ஆக, இத்தனை கிரகங்கள் மறைவு பெற்றதால் உங்கள் காரியங்களிலும் முயற்சிகளிலும் தாமதம் உண்டாகும். ஆனால் தடைப்படாது. 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு நிலம், கட்டடம் சம்பந்தப்பட்ட தொழில்துறையினருக்கு புதிய வாய்ப்புகளைத் தருவார். சொந்த வீடு கட்டும் எண்ணம் உள்ளவர்களுக்கும் முயற்சிகள் கைகூடும். 5-ஆமிடத்தில் ஆட்சிபெற்ற சனி துலா ராசிக்கு ராஜயோகாதிபதி என்பதால் உங்கள் திட்டங்களை செயல் வடிவமாக்குவார். சூரியன் திரிகோணம் பெற்றபிறகு அரசு சம்பந்தப்பட்ட விஷயங் களில் அனுகூலம் ஏற்படும். 12-ஆமிடத்துக் கேது 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வெளிமாநில அல்லது வெளியூர் தொழில் அமைப்புகளுக்கு வித்திடுவர். 6-ஆமிடத்து ராகு போட்டி, பொறாமைகளை விலக்குவார். 7-ல் உள்ள செவ்வாய் திருமண முயற்சியில் தாமதப் பலனைத் தரும். கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில்சென்று கல்கருடரை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 7-ல் உள்ள குரு ஜூன் 2-ஆம் தேதிமுதல் அஸ்தமன உதயமாகிறார்; ராசியைப் பார்க்கி றார். உங்கள் திறமைகளை வெளிக்கொணர இந்த தருணம் சிறப்பாக அமையும். உங்கள் செயல்பாடுகளில் தெளிவும் புதிய அணுகுமுறையும் உண்டாகும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும். 4-ல் சனி. ஜனன ஜாதகத்தில் பாகதமான தசாபுக்திகள் நடைபெற்றால் மருத்துவச் செலவுகள், கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றும். நீண்டநாட்களாக பிள்ளைகள்வகையில் சங்கடங்களை அனுபவித்தவர்கள் இந்த மாதம் குரு கருணையால் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். 11-ஆமிடத்தை குரு பார்ப்பதால் உத்தியோகம் மற்றும் தொழில் துறையினருக்கு அனுகூலமும் முன்னேற்றத்தையும் தரும். ராசிநாதன் 6-ல் மறைவு பெற்றாலும் ராசியைப் பார்ப்பது ஒரு பலம். 15-ஆம் தேதிமுதல் 10-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. அக்காலகட்டம் அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் ஒருசில காரியங்கள் தள்ளிப் போகலாம். எது எப்படி இருந்தாலும் குரு பார்வை ராசிக்கு கிடைப்பது எதையும் சமாளிக்கும் ஆற்றல் தோன்றும். செவ்வாயன்று முருகனை வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 6-ல் மறைவு. 9-க்குடைய சூரியனும் 6-ல் மறைவு. 7-க்குடைய புதனும் 6-ல் மறைவு. 6-க்குடைய சுக்கிரன் ஆட்சி. ஆக, இத்தனை கிரகங்கள் மறைவுபெற்றாலும் தனுசு ராசிக்காரர்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழக்காமல் நம்பிக்கையுடன் போராடி வெற்றிபெறும் அமைப்பை 3 ஆமிடத்து சனி தருவார். குரு 12-ஆமிடத்தைப் பார்த்தாலும் 2-ஆமிடமான தன ஸ்தானத்தையும் பார்ப்பதால் வரவுக்கும் குறையவில்லை. செலவுக்கும் குறைவில்லை. 4-ஆமிடத்து ராகு சனியின் சாரத்தில் சஞ்சரிப்பதால் தேகநலனில் கால் அல்லது நரம்பு சம்பந்தப்பட்டவகையில் பாதிப்பு, மருத்துவச்செலவு போன்றவை ஏற்படும். 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நற்பெயரும் பாராட்டும் தருவார். ஜனன ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் பதவி உயர்வும் உண்டாகும். 5-ல் செவ்வாய் ஆட்சிபெறுவதால் உங்களது நீண்டகாலத் திட்டங்கள் செயல்வடிவம் பெறும் சூழ்நிலையும் உருவாகும். 3-ல் சனி ஜூன் 19 முதல் வக்ரம் பெறுகிறார். உடன்பிறந்த வர்கள்வகையில் தேவையற்ற மனவருத்தம் உருவாகும். உங்களின் அவசரத்தனமும் அதற்கு காரணமாக அமையும். வியாழயன்று குருபகவானை வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் இதுவரை பட்ட கஷ்ட நஷ்டங்களையெல்லாம் சரி செய்யும்வகையில் கடந்தமாதம் நடைபெற்ற குருப்பெயர்ச்சி இருக்கும் என்று நம்பியவர்கள் எல்லாம் ஏமாந்ததுதான் மிச்சம். காரணம் 5-ல் நின்று ராசியைப் பார்க்கும் குரு ஜூன்வரை அஸ்தமனமாக இருந்ததுதான். ஜூன் 2 முதல் உதயமாகிறார். 2-ல் சனி ஆட்சி. எனவே இப்படி ஆட்சிபெற்ற கிரகங்கள் உங்கள் செயல்களில் வேகத் தன்மையையும், தெளிவான திட்டமிடுதலையும் தருவார்கள். 9-ஆமிடத்தை பார்க்கும் குரு பூர்வீகச் சொத்து சம்பந்தமாக நிலவிய பிரச்சினைகளில் சுமூகமான தீர்வையும் வழக்கு, வியாஜ்ஜியங்களில் சாதகமான பலன்களையும் தரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றா மலிருந்தவர்களுக்கு அப்பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உருவாகும். 2-ல் உள்ள சனி உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க விடமாட்டார். பொறுமையுடன் தெய்வ வழிபாட்டால் நிதானப் பேச்சை கடைப்பிடிக்க பழகுங்கள். காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் ஆட்சி என்றாலும் ஏழரையில் ஜென்மச்சனி நடக்கிறது. ஜென்மத்தில் சனியிலிருந்தாலும் சரி- குரு இருந்தாலும் சரி பாடாய்ப்படுத்தி விடுவார்கள் என்பது ஜோதிட கருத்து. என்றாலும் இங்கு சனி ராசிநாதன் என்பதால் ஓரளவு சலுகை காட்டலாம் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம் 2-ல் உள்ள ராகு குடும்பத்தில் வீண் குழப்பம், சங்கடம், வாக்குவாதம், பிரச்சினைகள் போன்றவற்றை உருவாக்குவார். 3-க்குடைய செவ்வாய் 3-ல் ஆட்சி என்பதால் மேற்கண்ட விஷயங் களில் சாதுர்யமாக சமாளித்துச் செல்லலாம். 4-ல் உள்ள குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஒரு புறம் வரவு வந்துகொண்டிருந்தாலும் மறுபுறம் செலவும் இருந்துகொண்டுதான் இருக்கும். 10-ஆமிடத்தை குரு பார்ப்பதால் உத்தி யோகத்தில் பிரச்சினைகளுக்கு இடமில்லை. மற்றவர்களுக்காக ஜாமீன் பொறுப்பு ஏற்பதைத் தவிர்க்கவும். 8-ஆமிடத்தையும் குரு பார்ப்பதால் வாகனவகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விபத்து, சங்கடம் போன்றவை உருவாகலாம். திடீர் விபரீத ராஜயோகத்திற்கும் இடமுண்டு. சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயரை வழிபடவும்.
மீனம்
மீன ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. விரயங்களை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்குதல், மன சங்கடம், மனக்குமுறல், வாழ்க்கையை நினைத்து கற்பனை பயம், வாழ்வா- சாவா என்ற மனக்குழப்பம் போன்றவற்றைச் சந்திக்கலாம். ராசிநாதன் குரு 3-ல் மறைவு என்றாலும் அவர் பார்க்கும் இடங்கள். 7, 9, 11 ஆகிய நல்ல இடங்கள். திருமணமாகாத இளைஞர்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகளுக்கு ஒற்றுமையும்அன்யோன்யமும் அதிகாரிக்கும். 6-க்குடைய சூரியன் 3-ல் மறைவது நன்மைதான். ஜூன் 9-ல் புதன் 4-ல் ஆட்சி. குடியிருப்புவகையில் இடமாற்றம் அல்லது சொந்தவீடாக இருந்தால் சீர்திருத்தம் போன்ற முயற்சியில் இறங்கலாம். 9-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தகப்பனார் வழியில் கிடைத்த பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலனையும் எதிர் பார்க்கலாம். உடன் பிறந்த வர்களால் நிலவிய கற்பனை பயமும் அகலும். தொழில், உத்தியோகம் அமைப்பிலும் முன்னேற்றம் ஏற்படும் என்றாலும் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். பொன்னமராவதிலிருந்து புதுக்கோட்டை பாதையில் செவலூர் சென்று வழிபடவும்.
அலைபேசி: 99440 02365